தெலங்கானாவின் 42% இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றத்தின் தடை, விரிவான சீர்திருத்தத்தின் தேவையை உணர்த்துகிறது -சாய் கணேஷ் அகராபு

 மாநிலத்தின் சாதிவாரி கணக்கெடுப்பு உச்சநீதிமன்றம் நிர்ணயித்த முதல் இரண்டு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்கிறது. இருப்பினும், நீதிமன்றங்கள் 50 சதவீத உச்சவரம்பை முழுமையானதாகக் கருதி, மக்கள்தொகை உண்மைகளை புறக்கணித்துக் கொண்டிருக்கின்றன.


செப்டம்பர் மாதம், தெலுங்கானா அரசு, அதன் சாதி கணக்கெடுப்பின் முடிவுகளின் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (Other Backward Classes (OBCs)) ஒதுக்கீட்டை 42 சதவீதமாக உயர்த்துவதற்காக அரசாணை ஒன்றை வெளியிட்டது. இதர பிற்படுத்தப்பட்டோர் மாநில மக்கள்தொகையில் 56.33 சதவீதம் உள்ளனர் என்று கணக்கெடுப்பு வெளிப்படுத்தியது. இது விகிதாச்சார பிரதிநிதித்துவத்திற்கான தெளிவான நியாயத்தை நிறுவுகிறது. இருப்பினும், இந்த நடவடிக்கை நீதித்துறை எதிர்ப்பை (judicial resistance) சந்தித்தது. உயர் நீதிமன்றம் தடை விதித்தது. அக்டோபர் 16 அன்று உச்சநீதிமன்றம் அந்த தடையை நீக்க  மறுத்துவிட்டது. முன்னுதாரணங்களை மேற்கோள் காட்டி 50 சதவீத உச்சவரம்பை மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்த சட்டத் தடை, சாதி, சமத்துவம் மற்றும் உறுதியான நடவடிக்கையின் அரசியலமைப்பு வரம்புகள் குறித்த அடிப்படை விவாதத்தை மீண்டும் உருவாக்குகிறது.


இந்த உச்சவரம்பு 1992-ல் இந்திரா சாவ்னி vs இந்திய ஒன்றிய அரசு (Indra Sawhney v. Union of India) வழக்கில் தொடங்குகிறது. இந்த வழக்கில் சமத்துவத்தை (equality) பாதுகாக்க ஒதுக்கீடு 50 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்றம் இடஒதுக்கீட்டை முறையான சமத்துவம் என்ற பொதுவான கொள்கைக்கு விதிவிலக்காக வடிவமைத்தது. இந்தக் கட்டமைப்பு 30 ஆண்டுகளுக்கும் மேலாக,  நீதித்துறையை (jurisprudence) வடிவமைத்து வருகிறது.  சாதி அடிப்படையிலான விலக்கை அகற்றுவதற்கான அரசியலமைப்பு உறுதிப்பாட்டைவிட உறுதியான நடவடிக்கையை ஒரு விதிவிலக்காகக் கருதுகிறது.


ஆனால், இடஒதுக்கீடு ஒரு சலுகை அல்ல. இது உண்மையான சமத்துவத்தின் (substantive equality) அரசியலமைப்பு கருவியாகும். காலம் காலமாக தொடர்ந்துவரும் சமூக படிநிலைகளை அகற்றி சம வாய்ப்பை ஊக்குவிக்க இடஒதுக்கீடு வடிவமைக்கப்பட்டது. சட்டபிரிவுகள் 15 மற்றும் 16 உறுதிமொழி நடவடிக்கையை விலகலாகக் கருதவில்லை. சாதியால் ஒழுங்கமைக்கப்பட்ட சமூகத்தில் உண்மையான சமத்துவத்தை அடைவதற்கான கட்டமைப்பு கருவியாக அவை இதை கருதுகின்றன. இருப்பினும், நீதித்துறை விளக்கங்கள் (judicial interpretations) பெரும்பாலும் இந்த விதிகளை முறையான நடவடிக்கைகளாகவே குறைக்கின்றன.


கே. கிருஷ்ணமூர்த்தி vs இந்திய ஒன்றிய அரசு (K Krishnamurthy v. Union of India) வழக்கில், அளவிடக்கூடிய தரவுகள் (quantifiable data) பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவத்தை ஆதரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது. விகாஸ் கிஷன்ராவ் கவாலி vs மகாராஷ்டிரா மாநில அரசு (Vikas Kishanrao Gawali v. State of Maharashtra) வழக்கில், இது மூன்று சோதனைகளை முன்வைத்தது: தன்னிச்சையாக செயல்படக்கூடிய ஒரு ஆணையம், போதுமான பிரதிநிதித்துவத்தின் மதிப்பீடு, மற்றும் 50 சதவீத உச்சவரம்பை கடைபிடிப்பது, இரண்டு நீதிமன்ற தீர்ப்புகளும் கொள்கைகளை உருவாக்குவதற்கு தரவுகளைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன, ஆனால் அவை சாதி பாகுபாட்டின் உண்மையான பிரச்சினைகளுடன் பொருந்தாத இடஒதுக்கீடுகளுக்கு இன்னும் ஒரு வரம்பை வைத்திருக்கின்றன. இடஒதுக்கீட்டை ஒரு குறுகிய கட்டமைப்பிற்குள் கட்டுப்படுத்துவது, சமூக மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான அரசியலமைப்பின் வாக்குறுதியை புறக்கணிப்பது போன்றதாகும்.


தெலங்கானாவின் கொள்கை கவாலி மற்றும் கிருஷ்ணமூர்த்தி வழக்குகளில் அமைக்கப்பட்ட கொள்கைகளுடன் ஒத்துப்போகிறது. மாநிலத்தின் சாதிவாரி கணக்கெடுப்பு மூன்று சோதனை நிபந்தனைகளில் முதல் இரண்டு நிபந்தனைகளை பூர்த்தி செய்கிறது. இருப்பினும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பெரும்பான்மையாக இருக்கும் மக்கள்தொகை உண்மைகளை புறக்கணித்து, நீதிமன்றங்கள் 50 சதவீத உச்சவரம்பை ஏறக்குறைய முழுமையானதாக கருதுகின்றன. இதற்கிடையில், பொருளாதாரரீதியாக நலிவடைந்த பிரிவினர்களுக்கான (Economically Weaker Sections (EWS)) ஒதுக்கீடு நீதித்துறை எதிர்ப்பு இல்லாமல் இந்த உச்சவரம்பை மீறுகிறது. நியாயமற்ற முறையில் விதிகளைப் பயன்படுத்துவது, இந்த அமைப்பு உயர் சாதியினருக்கு சாதகமாக இருப்பதைக் காட்டுகிறது.


தமிழ்நாடு தெளிவான வேறுபாட்டைக் காட்டுகிறது. மாநிலம் நீண்டகாலமாக 69 சதவீத இடஒதுக்கீடு கொள்கையை பாதுகாத்து வருகிறது. சட்டத்தை 9-வது அட்டவணையில் (Ninth Schedule) வைப்பதன் மூலம் இடஒதுக்கீடு பாதுகாக்கப்படுகிறது. இந்த சட்டத்தை நீதித்துறை ஆய்வில் இருந்து பாதுகாக்கிறது. தெலங்கானாவும் அதன் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்படுவதைப் பாதுகாக்க இதேபோன்ற நடவடிக்கையை முயற்சிக்கலாம். இருப்பினும், இதற்கு ஒன்றிய அரசின் ஆதரவு தேவைப்படுகிறது, ஒன்றிய அரசு நினைத்தால் மட்டுமே நாடாளுமன்றத்தின் மூலம் சட்டங்களை 9-வது அட்டவணையில் வைக்க முடியும். கேசவானந்த பாரதி மற்றும் ஐ.ஆர். கோயல்ஹோ (Kesavananda Bharati and I R Coelho) வழக்குகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இத்தகைய பாதுகாப்பு முழுமையானது அல்ல என்பதை தெளிவுபடுத்துகின்றன.


 ஒரு சட்டம் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறினால், அது தள்ளுபடி செய்யப்படும் அபாயம் உள்ளது. கோட்பாட்டின் தெளிவற்ற தன்மை, மீறல் என்ன என்பதை தீர்மானிக்க நீதிமன்றத்தின் விளக்கத்திற்கு விடப்படுகிறது. சட்டங்களை 9-வது அட்டவணையில் சேர்ப்பது எப்போதும் அவற்றைப் பாதுகாக்காது. ஏனெனில், நீதிமன்றம் அத்தகைய சட்டங்கள் அடிப்படைக் கட்டமைப்பை மீறுவதாக இன்னும் தீர்ப்பளிக்க முடியும். இது அரசியலமைப்பில் பெரிய மாற்றங்களின் அவசியத்தைக் காட்டுகிறது. மாநில சட்டங்களைப் பாதுகாக்கவும், நியாயமான, நெகிழ்வான அமைப்பை உருவாக்க ஒன்றிய அரசின் மீது அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்


சீர்திருத்தங்களில், வெளிப்படையான சமூக-பொருளாதார தரவுகளால் பொருளாதார தரவுகளின் ஆதரவுடன், மாநிலங்கள் தங்கள் உண்மையான மக்கள்தொகைகளுக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை மாற்றியமைக்க அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பு திருத்தங்கள் சேர்க்கப்பட வேண்டும் சட்ட சீர்திருத்தம் மட்டும் போதுமானதாக இருக்காது. இந்தியாவின் நீதித்துறை ஆழமாக சமமற்றதாக உள்ளது. உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கடுமையாக குறைவாக பிரதிநிதித்துவம் பெறுகின்றனர். இந்த ஏற்றத்தாழ்வு, நீதிபதிகளை சாதிப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை குறைக்கச் செய்கிறது மற்றும் உண்மையான சமூக பன்முகத்தன்மையுடன் பொருந்தாத கடுமையான வரம்புகளை வைத்திருக்கிறது. நீதித்துறையை ஜனநாயகமயமாக்குவது மிகவும் முக்கியமான நடவடிக்கையாகும். நியாயமான தீர்ப்புகளுக்காக மட்டும் மட்டுமல்ல, பயனுள்ள சமத்துவத்தின் குறிக்கோள்களுடன் விளக்கத்தை சீரமைப்பதாகும்.


நீதித்துறையை மட்டுமல்ல, அரசியல், சட்டம் மற்றும் ஊடகங்கள் போன்ற முக்கிய நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவது முக்கியம். இந்த நிறுவனங்கள்மீது கட்டுப்பாடு இல்லாமல், ஓரங்கட்டப்பட்ட சமூகங்கள் அரசியல்ரீதியாக பின்தங்கியே இருக்கும். மேலும், இடஒதுக்கீடு மட்டுமே முறையான விலக்கை அகற்ற முடியாது. அனைத்து மட்டங்களிலும் அரசு அதிகாரத்தின்மீது பின்தங்கிய வகுப்புகள் உண்மையான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும்போது மட்டுமே, அவர்கள் தங்கள் நலன்களைப் பிரதிபலிக்கும் கொள்கைகளைச் செயல்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.


பி.ஆர். அம்பேத்கர், சமூக மற்றும் பொருளாதார உரிமைகளை திறப்பதற்கான முதன்மைத் திறவுகோல் அரசியல் அதிகாரமாகும் (political power) என்று கூறினார். தெலுங்கானாவின் இடஒதுக்கீடு மோதல் என்பது, கடினமான சட்ட மரபுகள் மற்றும் வேரூன்றிய படிநிலைகளை சவால் செய்யும், சேர்க்கைக்கான பரந்த ஜனநாயக போராட்டமாகும்.


தெலங்காணாவில் உள்ளூர் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டது இந்த முட்டுக்கட்டையை தீர்க்க வேண்டிய அவசரத்தை வலியுறுத்துகிறது. மாநிலத்தின் 42 சதவீத பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு, தரவுகளால் ஆதரிக்கப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது மற்றும் நீதிமன்ற உத்தரவுகளால் தடைபட்டுள்ளது, இது ஒரு கொள்கை முன்மொழிவுக்கு மேல் உள்ளது. இது வரலாற்று நீதியில் வேரூன்றிய அரசியல் உறுதிமொழி ஆகும். இந்த முட்டுக்கட்டை, அரசியலமைப்பின் கடுமையான தன்மைக்கும் இந்தியாவின் பரிணாம வளர்ச்சியடைந்து வரும் சமூக யதார்த்தங்களுக்கும் இடையே விரிவடையும் இடைவெளியை வெளிப்படுத்துகிறது.


சுருக்கமாக, உண்மையான சமத்துவத்திற்கு ஒரு விரிவான உத்தி தேவைப்படுகிறது. இதில் சமூக-மக்கள்தொகை தரவுகளின் அடிப்படையில் நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கும் அரசியலமைப்பு திருத்தங்கள்; தன்னிச்சையான நிபுணர் ஆணையங்களால் மேற்பார்வை செய்யப்படும் வெளிப்படையான கொள்கை உருவாக்கம்; இந்தியாவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் நீதித்துறை நியமனங்களை ஜனநாயகமாக்குதல் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உறுதியான அரசியல் எழுச்சி மற்றும் மாநில அதிகாரத்தை கைப்பற்றுதல் ஆகியவை அடங்கும்.


இந்த முழுமையான அணுகுமுறையின் மூலம் மட்டுமே நமது நாட்டின் நீதி மற்றும் சமத்துவத்தின் தனது அரசியலமைப்பு வாக்குறுதியை நிறைவேற்ற முடியும். வரலாற்று ரீதியாக அரசியல், சமூக மற்றும் பொருளாதார சேர்க்கை மறுக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைகளை நிறைவேற்ற முடியும்.


எழுத்தாளர் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் கொள்கை ஆராய்ச்சி மையத்தில் ஆய்வாளராக உள்ளார்.



Original article:

Share: