தொடர் மோசடிகள் எண்ணற்ற தகுதியான விண்ணப்பதாரர்களின் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது மற்றும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நம்பிக்கை என்பது எந்தவொரு சமூகத்தின் செயல்பாட்டிற்கும் அடிப்படை ஆகும். ஒரு சமூகத்தின் செல்வம், அந்த சமூகத்தின் குடிமக்கள் தங்களை ஆளும் அமைப்புகள் மீது கொண்டுள்ள நம்பிக்கையில் பிரதிபலிக்கிறது. நம்பிக்கை என்பது நிலைத்தன்மையை உருவாக்குகிறது, ஒத்துழைப்பை வளர்க்கிறது மற்றும் சொந்தமானவை என்ற உணர்வை வளர்க்கிறது. இது குடிமக்களை அரசுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது. தங்கள் தலைவர்களை பொறுப்பேற்கவும், நீதி மற்றும் வாய்ப்புக்காக அரசு நிறுவனங்களைச் சார்ந்திருக்கவும் அனுமதிக்கிறது.
அதிகாரத்தின் மீதான கோபம் அடிக்கடி வன்முறைப் போராட்டங்களாக வெளிப்படும் இந்த காலகட்டத்தில், நம்பிக்கையை மீட்டெடுப்பது வெறும் பக்தியான நம்பிக்கையல்ல; இது இந்தியாவின் வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இன்றியமையாத ஒரு தேவையாகும். இன்றும், மில்லியன் கணக்கான இளம் இந்தியர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும், அரசு வேலை என்பது பொருளாதார பாதுகாப்பு மற்றும் சமூக உயர்வுக்கு மிகச் சிறந்த வழியாகக் கருதப்படுகிறது. ஆகவே, மத்திய மற்றும் மாநில அளவிலான பொது சேவை ஆணையங்கள், மில்லியன் கணக்கான இளம், திறமையான மற்றும் பின்தங்கிய இந்தியர்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கங்களாகக் கருதப்படுவது ஆச்சரியமல்ல. இந்த நிறுவனங்கள், தகுதி அடிப்படையிலான முறையையும் சமூக நீதியையும் வெளிப்படையாகவும், திறமையாகவும், பாரபட்சமின்றியும் உறுதிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை.
இருப்பினும், இந்த நம்பிக்கையின் நேர்மை கடந்த பத்தாண்டுகளாக கடுமையாக சோதிக்கப்பட்டுள்ளது மற்றும் பெரும்பாலும் பற்றாக்குறையாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த தோல்வி மத்திய அளவிலான ஆணையங்களுக்கு குறைவாக தெரிகிறது. ஆனால், மாநிலங்களின் ஆணையங்களுக்கு இது ஒரு தீவிரமான கவலையாகத் தோன்றுகிறது. ஒரு காலத்தில் நியாயம் மற்றும் வெளிப்படைத்தன்மையின் புகலிடமாக பார்க்கப்பட்ட பொதுப்பணி ஆட்சேர்ப்பு துறை, தொடர்ச்சியான மோசடிகளால் பாதிக்கப்பட்டுள்ளது (marred).
எடுத்துக்காட்டாக, 2023-ஆம் ஆண்டில், பீகார் காவல்துறை ஆட்சேர்ப்பு தேர்வில், விண்ணப்பதாரர்கள் அவர்களுக்கு பதிலாக போலியான நபர்களை பயன்படுத்தினர் மற்றும் தேர்வு வினாத்தாள்கள் கசிந்தன என்று வெளிப்பட்டது. பஞ்சாபில், பஞ்சாப் பொதுப்பணி ஆணையத்தின் (Punjab Public Service Commission (PPSC)) 2021ஆம் ஆண்டு ஊழல், அமைப்புசார் தோல்விகள் எவ்வாறு கேள்வித்தாள்கள் கசிவுக்கு வழிவகுத்தன என்பதை காட்டியது. உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் நடந்த தேர்வு முறைகேடுகள் பற்றிய அறிக்கைகள், தகுதியைவிட சாதாரணமானவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட போக்கை எடுத்துக்காட்டுகின்றன. உத்தரகாண்ட் மாநிலத்தில் இளநிலை பதவிகளுக்கான மாநில பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்பட்ட தேர்வில், வினாத்தாள் கசிவு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பொதுமக்களின் கோபத்திற்குப் பிறகு, இந்த விவகாரத்தில் ஒன்றிய புலனாய்வு முகமை விசாரணைக்கு முதலமைச்சர் பரிந்துரைத்துள்ளார். இந்த சம்பவங்கள் அனைத்தும் பயனுள்ள மற்றும் அவசர கொள்கை தலையீடுகளின் தேவையை எடுத்துக்காட்டுகின்றன.
தொடர்ச்சியான மோசடிகள் எண்ணற்றத் தகுதியான விண்ணப்பதாரர்களின் எதிர்காலத்தைப் பாதித்துள்ளன. மேலும், ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் தேர்வுகளுக்குத் தயாராக நேரம், பணம் மற்றும் உணர்ச்சிரீதியான இழப்பைச் சந்தித்த ஒரு தலைமுறை, இப்போது அமைப்பு சரியாக வேலை செய்யாததால் பாதிக்கப்பட்டுள்ளது. தேர்வுச் செயல்பாட்டில் நம்பிக்கையை சரிசெய்து மீண்டும் மீட்டெடுப்பது மிகவும் முக்கியம். பல அவசர நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.
முதலாவதாக, நாம் நியமன முறையை (appointment system) கவனமாக பார்க்க வேண்டும். பல மாநிலங்களில், இந்த ஆணையங்களுக்கான நியமனங்கள், மிகவும் அர்ப்பணிப்புள்ள நிபுணர்களைத் தேர்ந்தெடுப்பதைவிட, தங்களுக்கு ஆதரவாக செயல்படும் நபர்களுக்கு வெகுமதி அளிப்பதற்கு முன்னுரிமை அளிக்கின்றன. இத்தகைய ஆணையங்களின் உறுப்பினர்கள் முறைகேடுகளில் குற்றவாளிகள் என கண்டறியப்பட்ட ஏராளமான சம்பவங்கள் உள்ளன. சீர்திருத்தத்தில் எந்தவொரு தீவிரமான முயற்சியும் இந்த கவலையை கவனிக்க வேண்டும். இந்த ஆணையங்களுக்கான நியமனங்களில் வெளிப்படைத்தன்மை, ஆட்சேர்ப்பு செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மையுடன் இணைந்து செயல்பட வேண்டும். இதில் தேர்வு பாடத்திட்டம், மதிப்பீட்டு முறைகள், மற்றும் விண்ணப்பதாரர்களின் செயல்திறன் புள்ளிவிவரங்களை அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அணுகக்கூடிய வகையில் வெளியிடுவது அடங்கும். ஒரு வெளிப்படையான அமைப்பு முறைகேடுகளுக்கு எதிரான சிறந்த தடுப்பாக செயல்படுகிறது.
சமீபத்தில், உள்துறை அமைச்சர் ஆட்சேர்ப்பு துறையை மாற்றுவதற்கு புதுமையான வழிகளில் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். உயிரியல் அடையாளம் (biometric identification) அல்லது தனித்துவமான அடையாள எண்களைப் பயன்படுத்துவது, மற்றவர்கள் தங்கள் இடத்தில் தேர்வு எழுதுவதைத் தடுக்க உதவும். பாதுகாப்பான, மறைகுறியாக்கப்பட்ட முறையில் வினாத்தாள்களை அனுப்புவது கசிவுகளைத் தடுக்க உதவும். தேர்வு முறைகேடுகளை சுற்றியுள்ள சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவதும் முக்கியமானது. தேர்வு தொடர்பான மோசடி வழக்குகளைக் கையாள சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் நீதி விரைவாகவும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இருப்பதை உறுதிசெய்யும். 2022-ஆம் ஆண்டில் மிகவும் கடுமையான மோசடி எதிர்ப்புச் சட்டத்தை இயற்றுவதன் மூலம் வலுவான நடவடிக்கை எடுத்த முதல் மாநிலம் உத்தரகாண்ட் ஆகும்.
இந்த மோசடிகள் தொடர்ந்து நடப்பதால், மாநிலங்கள் தங்கள் ஆட்சேர்ப்புத் தேர்வுகளை எவ்வாறு நடத்துகின்றன என்பதை சரிபார்க்கவும் நிர்வகிக்கவும் தேசிய அளவிலான ஒரு அமைப்பு இருக்க வேண்டும். ஒருவேளை ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission (UPSC)) இந்த ஆணையை ஒப்படைக்கலாம் அல்லது இந்திய அரசாங்கம் ஒரு தனி அமைப்பை அமைக்க பரிசீலிக்கலாம். ஒரு தன்னிச்சையான ஒழுங்குமுறை அமைப்பை அமைப்பது புறநிலைத்தன்மையை பராமரிக்க உதவும். இந்த அமைப்புகளுக்கு தேர்வுகள் மற்றும் ஆட்சேர்ப்பு செயல்முறைகளை தணிக்கை செய்ய அதிகாரம் வழங்கப்பட வேண்டும் மற்றும் அவை புகார்களை விசாரிக்கும் அதிகாரத்தையும் கொண்டிருக்க வேண்டும்.
நாடு முழுவதும் உள்ள பொதுப்பணி ஆணையங்கள் தன்னிச்சையாக செயல்படுகின்றன. ஆணையத்தில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு அதிக அதிகாரமும் சலுகைகளும் உள்ளன. நியாயமான ஆட்சேர்ப்பை உறுதி செய்வதற்காக, தவறுகளுக்கு அதிகாரிகளை பொறுப்பேற்க வைக்கும் ஒரு அமைப்பு இருக்க வேண்டும். மதிப்பாய்வு குழுக்கள் போன்ற முடிவுகளை பதிவு செய்து கண்காணிக்கும் அமைப்புகள், ஆட்சேர்ப்பு செயல்முறையின் நேர்மையை மதிப்பீடு செய்ய உதவும். அரசாங்க நிறுவனங்கள் மற்றும் குடிமை சமூக அமைப்புகளுக்கு இடையே ஒத்துழைப்பை ஊக்குவிப்பதும் உதவியாக இருக்கும். கண்காணிப்பு நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வது மற்றும் ஆட்சேர்ப்பு மேற்பார்வையில் குடிமக்கள் பிரதிநிதித்துவத்தை அனுமதிப்பது நம்பகத்தன்மையை மேம்படுத்தலாம்.
ஆட்சேர்ப்பு மோசடிகளின் மீண்டும் மீண்டும் வரும் நிகழ்வுகள் அரசாங்க அமைப்புகளின் மீதான நம்பிக்கையை களங்கப்படுத்தியுள்ளன மற்றும் பொது போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளன. இப்போது தேவைப்படுவது, விண்ணப்பதாரர்கள் மற்றும் குடிமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க மற்றும் ஆட்சேர்ப்பு செயல்முறையின் புனிதத்தன்மையை நிலைநிறுத்த ஒரு ஒருங்கிணைந்த, பன்முக அணுகுமுறை ஆகும்.
நாட்டிற்கு சேவை செய்ய விரும்பும் ஒவ்வொரு குடிமகனுக்கும் நியாயமான மற்றும் திறந்த ஆட்சேர்ப்பு முறை ஒரு அடிப்படை உரிமையாகும். நம்பகத்தன்மையை மீண்டும் பெறுவதற்கான பயணம் சிக்கலானது. வலுவான விருப்பமும் தெளிவான திட்டமும் இருந்தால், திறமை மற்றும் வெற்றிபெற முயற்சிப்பவர்களை மதிக்கும், நம்பிக்கையை மீட்டெடுக்கும் ஒரு அமைப்பை நாம் உருவாக்க முடியும் - இது இந்தியாவிற்கு இப்போது தேவைப்படுகிறது.