இந்திய நீதிமன்றங்களில் உள்ள மற்றொரு பெரும் நிலுவை: 'நிறைவேற்று ஆணையைப் பெறுவதற்கு ஏன் பல ஆண்டுகள் ஆகலாம்? -வினீத் பல்லா

 நீதித்துறை அமைப்பில் ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு பிரச்சனை குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. பல வருடங்களாக தங்கள் வழக்குகளை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடி வரும் மக்கள், நீதிமன்றம் தங்களுக்குச் சட்டப்பூர்வமாகக் கடன்பட்டிருப்பதைப் பெறுவதற்கான இரண்டாவது போராட்டத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.


கடந்த வாரம், உச்ச நீதிமன்றம் நாட்டின் கீழ்நிலை நீதிமன்றங்களில் உள்ள நிலைமையை மிகவும் ஏமாற்றமளிக்கிறது என்று விவரித்தது. வழக்குகளில் வெற்றி பெற்றிருந்தாலும், நீதிமன்றம் அவர்களுக்கு வழங்கிய தீர்ப்பை இன்னும் பெறாமல் காத்திருக்கும் பல வழக்குகளை குறிப்பிட்டது.


அக்டோபர் 16 தேதியிட்ட ஒரு உத்தரவில், நீதிபதிகள் ஜேபி பர்திவாலா மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு, அதன் வழிகாட்டுதலின் பேரில் நாடு முழுவதும் உள்ள சேகரிக்கப்பட்ட தரவுகளை மதிப்பாய்வு செய்து, புள்ளிவிவரங்கள் "ஆபத்தானது" (alarming) என்று கண்டறிந்தது - மாவட்ட நீதிமன்றங்களில் 8.82 லட்சத்திற்கும் அதிகமான நிறைவேற்றல் மனுக்கள் நிலுவையில் உள்ளன.


இந்த நிலை நீதியை பயனற்றதாக ஆக்குகிறது என்று உத்தரவில் குறிப்பிட்டது. "தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு, அந்த தீர்ப்பை நிறைவேற்ற பல ஆண்டுகள் எடுத்தால், நீதி அர்த்தமற்றதாகிவிடும் என்றும், வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எந்த அர்த்தமும் இல்லை. அது நீதி அமைப்பின் முழுமையான தோல்வியாக இருக்கும் என்றும் நீதிமன்றம் கூறியது.


நீதிமன்றத்தின் கவலை இந்தியாவின் நீதித்துறை அமைப்பில் ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு பிரச்சனையை சுட்டிக்காட்டுகிறது. இதில் ஒரு வழக்கில் கிடைக்கும் வெற்றி, சரியான நேரத்தில் அதை நடைமுறைப்படுத்தாமல் போனால் அது வெற்று வெற்றியாக உணரப்படும்.

நிறைவேற்று மனு (execution petition) என்றால் என்ன?


ஒரு குடிமை வழக்கின் முடிவில் (civil lawsuit,), நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்குகிறது. இது சம்பந்தப்பட்ட மக்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை அதிகாரப்பூர்வமாக குறிப்பிடுகிறது. வழக்கில் வெற்றி பெற்று இந்த தீர்ப்பை பெறுவது முதல் படியாகும்.


நிறைவேற்று மனு என்பது ஒரு தீர்ப்பாணையை நடைமுறைப்படுத்த பயன்படுத்தப்படும் சட்ட கருவியாகும். ஆனால், வழக்குகள் நிலுவையில் இருப்பதால், ஏற்கனவே பல வருடங்களாகவும், வளங்களையும் செலவழித்து, வழக்குகளை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடிய லட்சக்கணக்கான மக்கள், நீதிமன்றம் தங்களுக்குச் சட்டப்பூர்வமாகக் கொடுக்க வேண்டியதைப் பெறுவதற்கான இரண்டாவது கட்டத்தில் சில நேரங்களில் நீண்ட போராட்டத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.


டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் அன்ஷுல் குப்தா, ஏற்கனவே வென்ற ஒரு வழக்கிற்காக மீண்டும் போராட வேண்டியிருப்பது இரண்டாவது வழக்கு இருப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்றும், அது நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்கிறது என்றும் கூறினார்.


நிறைவேற்று மனுக்கள் ஏன் தேக்கம் அடைந்து இருக்கின்றன?


தேசிய நீதித்துறை தரவு கட்டத்தின் (National Judicial Data Grid (NJDG)) தரவுகளின்படி, சராசரியாக ஒரு குடிமை வழக்கிற்கு தீர்ப்பு வழங்க 4.91 ஆண்டுகள் ஆகும்போது, ஒரு நிறைவேற்று மனு முடிக்க கூடுதலாக 3.97 ஆண்டுகள் எடுக்கிறது. குடிமை நீதிமன்றங்கள் முழுவதும் நிலுவையில் உள்ள அனைத்து நிறைவேற்று மனுக்களில் 47.2% 2020-க்கு முன் தாக்கல் செய்யப்பட்டவை.


தரவுத்தளம் நிறைவேற்று மனுக்கள் தீர்வில் தாமதத்திற்கான காரணங்களையும் பட்டியலிடுகிறது. இவற்றில் முக்கியமானது சட்ட ஆலோசகர் கிடைக்காமல் இருப்பது அனைத்து நிலுவையில் உள்ள நிறைவேற்று மனுக்களில் 38.9% தாமதத்திற்கு காரணமாக இருந்தது. நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு விதிக்கப்படும் தடை 17%-ஆக உள்ளது மற்றும் ஆவணங்களுக்காக காத்திருப்பது 12%-ஆக உள்ளது


இந்த காரணிகள் நடைமுறை தடைகள், அமைப்பு ரீதியான திறமையின்மை மற்றும் இலக்கு வைக்கப்பட்ட தீர்வுகளை வகுக்க குறிப்பிட்ட தரவு இல்லாமை ஆகியவற்றின் கலவையிலிருந்து உருவாகின்றன என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பேசிய நிபுணர்கள் தெரிவித்தனர்.


நடைமுறையில், சட்டமே பல கட்டங்களில் தாமதங்கள் ஏற்பட முக்கியக் காரணியாக இருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தும்போதுகூட, தோல்வியுற்ற தரப்பினருக்கு ஆட்சேபனைகளை எழுப்ப ஒரு வாய்ப்பு அளிக்கிறது என்று குடிமை நடைமுறைச் சட்டம் (Civil Procedure Code) கூறுகிறது. இந்த செயல்முறை, எல்லாம் சரியாக நடந்தாலும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகலாம் என்று குப்தா கூறுகிறார். நீதிமன்றம் மற்றொருதரப்புக்கு பலமுறை பேச  வாய்ப்பு அளிக்கிறது. பின்னர், அவர்கள் ஆட்சேபனைகளை தாக்கல் செய்கிறார்கள். அவர்களின் வாதங்கள் கேட்கப்படுகின்றன. அதன், பிறகே நீதிமன்றம் அடுத்த கட்ட உத்தரவுகளை வழங்குகிறது. ஒவ்வொரு அடியும் மற்றொரு விசாரணையை குறிக்கிறது. இது குறிப்பிட்ட மாத இடைவெளியில் நடைபெறுகிறது.


பொதுவான காரணங்கள் அறியப்பட்டாலும், குறிப்பிட்ட தரவு இல்லாமை மற்றொரு பிரச்சனை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதிக எண்ணிக்கையிலான நிறைவேற்று ஆணைகள் நிலுவையில் உள்ளன என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், எந்த வகையான நிறைவேற்று ஆணைகள் வழக்குகளில் சிக்கிக் கொள்கின்றன என்பது எங்களுக்குத் தெரியவில்லை என்று விதி சட்டக் கொள்கை மையத்தின் மூத்த நிபுணர் ஸ்ருதி நாயக் கூறினார். அசையா சொத்துக்களை விற்பனை செய்வது சிக்கலான செயல்முறையா அல்லது எளிமையான ஒன்றா? துல்லியமான தரவு இல்லாமல், சிக்கலைக் கண்டறிந்து சீர்திருத்தங்களை மேற்கொள்வது கடினமாக உள்ளதாக ஸ்ருதி நாயக் கூறினார்.


மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் விகிதாச்சாரத்தில் அதிக நிலுவையில் (disproportionately high pendency,) உள்ள வழக்குகளுடன், நீதித்துறை உள்கட்டமைப்பு முதல் வணிக பிரச்சனைகளின் அளவு வரை உள்ளூர் காரணிகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இதனால், மாநிலத்திற்கு மாநிலம் அதிக அளவில் இருப்பதாகவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் எவ்வாறு செயல்பட்டது?


தீர்ப்புகளை நிறைவேற்றுவதில் ஏற்படும் தாமதங்களை நிவர்த்தி செய்ய உச்ச நீதிமன்றம் தலையிடுவது இது முதல் முறை அல்ல. 2021ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில், அப்போதைய இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, அனைத்து விசாரணை நீதிமன்றங்களுக்கும் 14 கட்டாய வழிகாட்டுதல்களை உருவாக்கியிருந்தது. இதில் நிறைவேற்று நடவடிக்கைகளை முடிப்பதற்கான (execution proceedings) ஆறு மாத காலக்கெடுவும் அடங்கும்.


இந்தப் பிரச்சினை தொடர்ந்து நீடித்ததால், மார்ச் 2025-ல் பல ஆண்டுகளாக நீடித்த சொத்து தகராறில் தீர்ப்பளித்ததன்மூலம் நீதிமன்றத்தின் கவனம் புதுப்பிக்கப்பட்டது. நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு, நிறைவேற்றல் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை நாடு தழுவிய கண்காணிப்புப் பயிற்சிக்கு உத்தரவிட இந்த வழக்கைப் பயன்படுத்தியது.


தீர்ப்பின் தொடக்க வரிகளில், ஒரு வழக்கறிஞரின் அவலநிலையை, 1998-ஆம் ஆண்டு தீர்ப்பை மேற்கோள் காட்டி, ‘வழக்கில் வெற்றி பெற்ற பிறகும், நீதிமன்றம் தீர்ப்பளித்ததைப் பெறுவதற்கு அவர்கள் நீண்ட, கடினமான நடைமுறைகளை எதிர்கொள்வதாக’ அமர்வு குறிப்பிட்டது.


இதற்கு தீர்வு காண, மார்ச் மாத தீர்ப்பில் நீதிமன்றம் இந்தியா முழுவதும் ஒரு விரிவான உத்தரவை பிறப்பித்தது. நிலுவையில் உள்ள நிறைவேற்று மனுக்கள் குறித்த தரவுகளை அந்தந்த மாவட்ட நீதிமன்றங்களிலிருந்து சேகரிக்குமாறு அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உத்தரவிட்டது. மேலும், ஆறு மாதங்களுக்குள் அந்த மனுக்களுக்கு தீர்ப்பை வழங்குமாறு உத்தரவிட்டது.




தரவு என்ன காட்டியது?


அக்டோபர் 16-ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பு, மார்ச் மாதத்தில் வழங்கப்பட்ட வழிகாட்டுதலுக்கு பின்தொடர்தலாக இருந்தது. நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து ஆறு மாதங்களில் 3,38,685 நிறைவேற்றல்  தொடர்பான மனுக்கள் மீது தீர்ப்பு வழங்கப்பட்டாலும், மொத்த நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை 8,82,578 மனுக்களாக இருப்பதாக அது குறிப்பிட்டது. இந்த உத்தரவில், ஒவ்வொரு உயர்நீதிமன்றத்தின் கீழ் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் ஆறு மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ள நிறைவேற்றல் மனுக்களின் ஒருங்கிணைந்த பட்டியல் அடங்கும்.


மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்கள், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் தமன் மற்றும் தீவ் யூனியன் பிரதேசத்தை உள்ளடக்கிய பம்பாய் உயர் நீதிமன்றம், 3.4 லட்சத்திற்கும் அதிகமான மனுக்களுடன் நிலுவையில் உள்ளது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கிய சென்னை உயர்நீதிமன்றத்தில் 86,000-க்கும் மேற்பட்ட மனுக்களுடன் நிலுவையில் உள்ளது. அதைத் தொடர்ந்து லட்சத்தீவுகளையும் உள்ளடக்கிய கேரள உயர்நீதிமன்றத்தில் 83,000 மனுக்களுடன் நிலுவையில் உள்ளது.


இப்போது என்ன நடக்கிறது?


உச்சநீதிமன்றம் தற்போது அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் தங்கள் மாவட்ட நீதிமன்றங்களைப் பின்தொடர்ந்து விசாரணைகளை விரைவுபடுத்த கூடுதலாக ஆறு மாத கால அவகாசம் வழங்கியுள்ளது.


கர்நாடக உயர் நீதிமன்றம் தனது உத்தரவைப் பின்பற்றாததற்காக நீதிமன்றம் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியது . இரண்டு வாரங்களுக்குள் தரவு ஏன் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதை விளக்குமாறு பதிவாளருக்கு நீதிமன்றம் கூறியது. இந்தப் பிரச்சினையின் முன்னேற்றத்தை உச்சநீதிமன்றம் ஏப்ரல் 10, 2026 அன்று மீண்டும் சரிபார்க்கும்.



Original article:

Share: