உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 7 அன்று, பாதசாரிகளைப் பாதுகாப்பது, தலைக்கவசம் தொடர்பாக விதிகளை அமல்படுத்துவது, தவறான பாதையில் வாகனம் ஓட்டுவதைத் தடுப்பது மற்றும் கண்கவர் LED ஹெட்லைட்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மிகையொலிப்பான்களைக் (unauthorised hooters) கட்டுப்படுத்துவது போன்றவற்றை நோக்கமாகக் கொண்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
இந்தியாவில் அதிகரித்துவரும் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளைக் கருத்தில் கொண்டு, உச்சநீதிமன்றம் செவ்வாய்கிழமை (அக்டோபர் 7) பாதசாரிகளைப் பாதுகாப்பது, தலைக்கவசம் தொடர்பாக விதிகளை அமல்படுத்துவது, தவறான பாதையில் வாகனம் ஓட்டுவதைத் தடுப்பது மற்றும் கண்கவர் LED ஹெட்லைட்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மிகையொலிப்பான்களைக் கட்டுப்படுத்துவது போன்ற வழிகாட்டுதல்களை வழங்கியது.
பாதசாரிகளின் நடமாட்டத்திற்கு பாதுகாப்பான மற்றும் ஆக்கிரமிப்பு இல்லாத நடைபாதைகள் மிகவும் இன்றியமையாதவை என்பதை உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ளது என்று நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு கூறியது. எனவே, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highway Authority of India (NHAI)), மாநில அரசுகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் நடைபாதைகள் சரியான முறையில் கட்டப்படுவதையும், பாதசாரிகள் தெருக்களைக் கடக்க பாதுகாப்பான வாய்ப்புகளை வழங்குவதையும் உறுதி செய்ய வேண்டிய கடமை உள்ளது.
சாலை விபத்துக்களில் ஏற்படும் மொத்த இறப்புகளில் 20 சதவீதத்திற்கும் அதிகமானோர் பாதசாரிகள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சாலையைப் பயன்படுத்துபவர்களில் ஒருவராவர். சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் (MoRTH) சமீபத்திய அறிக்கையின்படி “இந்தியாவில் சாலை விபத்துகள்”, 2023-ல் சாலை விபத்துகளில் இறந்த 172,890 பேரில், மொத்தம் 35,221 பேர் பாதசாரிகள் ஆவர். இது மட்டுமின்றி, சாலை விபத்துக்களில் ஏற்படும் பாதசாரிகளின் இறப்பு விகிதம் இரட்டிப்பாகியுள்ளது. இது 2016-ல் 10.44 சதவீதத்திலிருந்து 2023-ல் 20.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதில் 54,000-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகன ஓட்டிகள் அல்லது பயணிகள் தலைக்கவசம் அணியாததால் இறந்ததாகவும் MoRTH அறிக்கை காட்டுகிறது.
உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் என்ன?
ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட முதல் 50 நகரங்களில் தற்போதுள்ள நடைபாதைகளை தணிக்கை செய்யத் தொடங்குமாறு சாலை உரிமையாளர் நிறுவனங்கள் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு (NHAI) நீதிமன்றம் உத்தரவிட்டது. 2023-ம் ஆண்டில் இந்த நகரங்களில் 4,604 பாதசாரிகள் கொல்லப்பட்டதாக தரவு காட்டுகிறது. இந்த நகரங்களில் டெல்லி, சென்னை, மும்பை, போபால், லக்னோ, கொல்கத்தா, வாரணாசி, விசாகப்பட்டினம் மற்றும் பிற நகரங்களும் அடங்கும்.
சந்தைகள், இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மத இடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற நெரிசலான பகுதிகளிலிருந்து அவை தொடங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. இவை அதிக பாதசாரி நெரிசல் (pedestrian traffic) உள்ள இடங்களாகும். தணிக்கை செய்யும் போது, கடந்த 2-3 ஆண்டுகளில் பாதசாரிகள் காயமடைந்த அல்லது இறந்த, குறைந்தது 15-20 இடங்களில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். தணிக்கை தற்போதுள்ள நடைபாதைகளில் உள்ள சிக்கல்களை அடையாளம் காணவேண்டும். இதில் அவற்றின் அகலம், உயரம் மற்றும் மேற்பரப்பை சரிபார்ப்பதும் அடங்கும். இந்த சிக்கல்களை சரிசெய்ய தேவையான நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டும்.
பாதசாரிகள் பாதுகாப்புக்கான இந்திய சாலைகள் காங்கிரஸ் (Indian Roads Congress (IRC)) அமைப்பின் வழிகாட்டுதல்களை (IRC 103-2022) நீதிமன்றம் அங்கீகரித்தது. இந்திய சாலைகள் காங்கிரஸ் (IRC) என்பது சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் (MoRTH) கீழ் உள்ள ஒரு தொழில்நுட்ப அமைப்பாகும். பாதசாரிகள் கடக்கும் பாதைகள் IRC வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. இந்த வழிகாட்டுதல்கள் குறிப்பிடுவதாவது,
குறைந்தபட்ச நடைபாதை அகலங்கள் : குடியிருப்புப் பகுதிகளில் 4 மீ மற்றும் உயர் தெருப் பகுதிகளில் 6.5 மீ.
நடைபாதை உயரம் : 150 மிமீ.
சறுக்கல் எதிர்ப்பு மேற்பரப்புகள் (anti-skid surfaces).
பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு தொட்டுணரக்கூடிய நடைபாதைகள்.
சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்களுக்கான சாய்வுப் பாதைகள்.
சட்டவிரோத வாகன நிறுத்துமிடங்களைத் தடுக்க சிறிய தூண்கள் (Bollards).
நடைபாதைகள் மீதான ஆக்கிரமிப்பு புகார்கள், நடைபாதைகளை பராமரித்தல் மற்றும் பாதசாரிகள் கடப்பதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய இணையவழி குறை தீர்க்கும் செயல்முறையை உருவாக்குமாறு மாநில அரசுகள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தலைக்கவசம் தொடர்பான பிரச்னைகள் தொடர்பாக, இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிவது தொடர்பான சட்ட விதிகளை கடுமையாக அமல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் குறிப்பிட்டதாவது "இந்த விதிகளை கண்டிப்பாக அமல்படுத்துவதுடன் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்ட கேமராக்கள், மின்-அமலாக்க வழிமுறைகள் (e-enforcement mechanisms) மூலம் உறுதி செய்யப்பட வேண்டும். அதாவது, மேற்கூறிய விதிமீறலை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் இந்த நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்படும். அபராதம் விதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை மற்றும் இரசீதுகள் மூலம் வசூலிக்கப்படும் தொகை மற்றும் இடைநிறுத்தப்பட்ட உரிமங்கள் ஆகியவை உச்சநீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்படும்," என்று குறிப்பிட்டது.
தவறான பாதையில் வாகனம் ஓட்டுவதைத் தடுக்க, சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் தானியங்கி கேமராக்கள், படிப்படியான அபராதம் (graduated fines), வண்ண மற்றும் கடினமான பாதை அடையாளங்கள் (எ.கா. பேருந்து மற்றும் சைக்கிள் பாதைகளுக்கு), இயங்கும் ஒளி (dynamic lighting), அதிர்வு பட்டைகள் (rumble strips) மற்றும் முக்கியமான மோதல் இடங்களில் வாகனத்தின் சக்கரங்களைக் கிழிக்கும் கருவிகள் (tyre killers) போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. பாதை மீறல்கள் குறித்த நிகழ்நேர தரவுத்தளங்களை உருவாக்குதல் மற்றும் வெளியிடுதல் ஆகியவை பொதுமக்களின் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இணக்கத்தை அதிகரிக்கவும், ஒட்டுமொத்த சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் ஆராயப்படலாம் என்று நீதிமன்றம் கூறியது.
மேலும், வாகனங்களின் முன்பக்க விளக்குகளுக்கு அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட ஒளிர்வு மற்றும் கற்றை கோணங்களை MoRTH, மாநில போக்குவரத்துத் துறைகள் மற்றும் போக்குவரத்து காவல் துறைகள் பரிந்துரைக்க வேண்டும் மற்றும் வாகன உடற்தகுதி சான்றிதழ் வழங்கும் போது இணக்கத்தை உறுதி செய்ய வேண்டும், அதே வேளையில் இணங்காத அல்லது மாற்றப்பட்ட முன்பக்க விளக்குகளை தண்டிக்க இலக்கு வைத்து பிரச்சாரங்களை நடத்த வேண்டும்.
"அங்கீகரிக்கப்படாத சிவப்பு-நீல ஸ்ட்ரோப் ஒளிரும் விளக்குகள் (red-blue strobe flashing lights) மற்றும் சட்டவிரோத மிகையொலிப்பான்களுக்கு (illegal hooters) முழுமையான தடை விதிக்கப்படும். பறிமுதல், சந்தை அடக்குமுறை மற்றும் அபராதம் மூலம் செயல்படுத்தப்படும். இதில் அத்தகைய சாதனங்களைப் பறிமுதல் செய்தல், சந்தை நடவடிக்கை மற்றும் அபராதங்கள் ஆகியவை அடங்கும். அதே நேரத்தில், MoRTH, மாநில போக்குவரத்துத் துறைகள் மற்றும் போக்குவரத்து காவல்துறை நாடு தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தும். இந்த பிரச்சாரங்கள் ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகளுக்கு திகைப்பூட்டும் வாகன முகப்பு விளக்குகள், அங்கீகரிக்கப்படாத ஸ்ட்ரோப் விளக்குகள் மற்றும் சட்டவிரோத மிகையொலிப்பான்களின் ஆபத்துகள் குறித்து கல்வி கற்பிக்கும்."
இப்போது மாநிலங்கள் என்ன செய்ய வேண்டும்?
உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் (UTs) மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 138(1A)-ன் கீழ் ஆறு மாதங்களுக்குள் விதிகளை உருவாக்கி அறிவிக்க வேண்டும். இந்த விதிகள் பொதுச் சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் இயந்திரத்தால் இயக்கப்படாத வாகனங்கள் (non-mechanically propelled vehicles) மற்றும் பாதசாரிகளின் செயல்பாடுகள் மற்றும் அணுகலை ஒழுங்குபடுத்தும்.
இதனுடன், மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் தவிர மற்ற சாலைகளுக்கான தரங்களை வடிவமைத்தல், கட்டுமானம் மற்றும் பராமரிப்புக்காக ஆறு மாத காலத்திற்குள் மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 210-D இன் கீழ் விதிகளை உருவாக்கி அறிவிக்கும்.
இந்த இரண்டு விதிகளும், மாநிலங்களால் ஒன்றிணைக்கப்பட்டு, பாதசாரிகளின் பாதுகாப்பு, நடைபாதை மற்றும் சாலை வடிவமைப்பு ஆகியவற்றிற்கு வழி வகுக்கும்.
பாதசாரிகள், மிகவும் பாதிக்கப்படக்கூடிய சாலைப் பயனாளர்களைப் பாதுகாப்பதில் இருந்து பாதுகாப்பான நடமாட்டம் தொடங்குகிறது என்பதை அங்கீகரிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ஒரு முக்கிய படியாகும் என்று SaveLIFE அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி பியூஷ் திவாரி கூறினார்.
“மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 138(1A)-ன் கீழ், பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்கள் போன்ற மோட்டார் பொருத்தப்படாத சாலைப் பயனர்களைப் பாதுகாப்பதிலும் மற்றும் ஒழுங்குபடுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது. 210D பிரிவின் கீழ், மாநில அளவில் சாலை வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் பராமரிப்புக்கான தரநிலைகளை நிர்வகிக்கும் விதிகளை உருவாக்குவதற்கான நீதிமன்றத்தின் வழிகாட்டுதல், மாநிலங்களுக்கிடையேயான நீண்டகாலச் சட்டங்கள் வரவேற்கத்தக்கது. பிரிவு 135-ன் கீழ், விதிகளையும் மாநிலங்கள் செயல்படுத்தும் என்று அவர் நம்புகிறார். இந்த விதிகளுக்கு சாலை விபத்துக்கள் குறித்த தடயவியல் விசாரணைக்கான திட்டங்கள் தேவை. அவை ஓட்டுநர் பிழையைத் தாண்டி பொறுப்பை நிறுவ உதவுகின்றன. சாலை உள்கட்டமைப்பு மற்றும் வாகன பொறியியலில் உள்ள சிக்கல்களையும் அவர்கள் கருதுகின்றனர். இவை இரண்டும் விபத்துக்களை ஏற்படுத்தி காயங்களை மோசமாக்கும்.
பல ஆண்டுகளாக வழக்கு எவ்வாறு வெளிப்பட்டது?
இந்த மனுவை எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் எஸ்.ராஜசேகரன் 2012-ல் தாக்கல் செய்தார். இதில், பல சட்டங்கள் மற்றும் ஏராளமான நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகள் இருந்தபோதிலும், சாலை விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருவதாக அவர் கூறினார். அவரைப் பொறுத்தவரை, சாலை விபத்துகளில் உயிர்கள் மற்றும் கைகால்கள் இழப்பு பெரியளவில் தேசிய இனப்படுகொலைகளில் ஏற்பட்டதற்கு ஒப்பிடத்தக்கது.
இந்த வழக்கை நீதிமன்றம் எடுத்துக்கொண்டபோது, சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த அதிர்ச்சிகரமான தரவுகளை எதிர்கொண்டது. இது ஏப்ரல் 2014 உத்தரவில், நீதிமன்றம் சாலைப் பாதுகாப்பு என்பது போக்குவரத்து மேலாண்மை மட்டுமல்ல, பொது சுகாதாரம் மற்றும் நிர்வாகத்தின் விஷயமாக அங்கீகரித்தது. தேசிய இணக்கத்தை மேற்பார்வையிட நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில் சாலைப் பாதுகாப்புக்கான உச்சநீதிமன்றக் குழுவை (Supreme Court Committee on Road Safety (SCCoRS)) அமைத்தது. சாலைப் பாதுகாப்பின் "நான்கு Es"களில் குழு கவனம் செலுத்தியது: அமலாக்கம் (Enforcement), பொறியியல் (Engineering), கல்வி (Education) மற்றும் அவசர சிகிச்சை (Emergency Care) ஆகும். மேலும் உரிமம், வாகன தகுதி, அமலாக்கம் மற்றும் அவசர சிகிச்சை குறித்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
நவம்பர் 30, 2017 அன்று, சாலை விபத்து இறப்புகள் அதிகரித்துள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. அனைத்து மாநிலங்களும் ஒன்றியப் பிரதேசங்களும் சாலை பாதுகாப்புக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாய உத்தரவை பிறப்பித்தது. மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன் கீழ் மாநில சாலை பாதுகாப்பு கவுன்சில்கள் மற்றும் மாவட்ட சாலை பாதுகாப்பு குழுக்களை (District Road Safety Committees (DRSCs)) அமைக்கவும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சாலை பாதுகாப்பு நிதிகள் (road safety funds) மற்றும் அதிர்ச்சி பராமரிப்பு மையங்களை (trauma care centres) உருவாக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், மாநிலங்களும் மாவட்டங்களும் இந்த விதிகளை எவ்வாறு பின்பற்றுகின்றன என்பதைக் கண்காணிக்க MoRTH ஒரு சாலை பாதுகாப்பு குழு தரவுத்தளத்தை உருவாக்கியது.
இது தொடர்பாக வழக்கு தொடர்ந்து வருவதால், ஜனவரி 202-ல் உச்சநீதிமன்றம் விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்கும் திட்டத்தை-2022 (Hit-and-Run Compensation Scheme) மதிப்பாய்வு செய்தது. இந்தத் திட்டம் இழப்பீட்டை இறப்புகளுக்கு ரூ. 2 லட்சமாகவும், கடுமையான காயங்களுக்கு ரூ. 50,000 ஆகவும் நிலையான தொகையாக அதிகரித்தது. இந்த உரிமைகள் குறித்து பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரிவிக்கவும் நீதிமன்றம் காவல்துறையிடம் கூறியது. ஜனவரி 2025-ல், உச்சநீதிமன்றம் விபத்துக்குள்ளானவர்களுக்கு கட்டணமில்லா "பொன்னான நேரம்" (Golden Hour) சிகிச்சையை அறிமுகப்படுத்த உத்தரவிட்டது. இந்த சிகிச்சையானது விபத்துக்குப் பிறகு முதல் ஒரு மணி நேரத்தைக் குறிக்கிறது. அப்போது, சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிப்பது உயிர்களைக் காப்பாற்ற அதிக வாய்ப்புள்ளது.