நல்ல நோக்கத்துடன் தீர்ப்பு வழங்கப்பட்டாலும், பின்னோக்கி செல்லும் சுற்றுச்சூழல் அனுமதிகளை (post-facto or retrospective environmental clearances) சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது மாநிலங்கள் முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிர்வாகத்தை உலுக்கிய தீர்ப்பில், மே 16, 2025 அன்று உச்சநீதிமன்றம் பின்னோக்கி சுற்றுச்சூழல் அனுமதிகளை சட்டவிரோதமானது என்று அறிவித்தது. ஒரு திட்டம் முன்கூட்டிய சுற்றுச்சூழல் அனுமதி (Environmental Clearance (EC)) இல்லாமல் உருவாக்கப்பட்டிருந்தால், பின்னர் அதை சட்டப்பூர்வமாக்க முடியாது என்பது ஒரு தெளிவான அறிவிப்பாகும்.
நல்ல நோக்கத்துடன் வழங்கப்பட்டாலும், இந்த தீர்ப்பு மாநிலங்கள் முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்கூட்டிய சுற்றுச்சூழல் அனுமதி (Environmental Clearance (EC)) இல்லாமல் இருக்கும் கட்டிடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பொது உள்கட்டமைப்புகள் இடிக்கப்படுமா? பெரிய அளவிலான இடிப்புகள் புதிய சட்டத்தின் விதியாக மாறுமா? இந்த நீதிமன்றத் தீர்ப்பு அரசாங்கங்கள், அதிகாரிகள் மற்றும் குடிமக்களை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
தெளிவாகச் சொல்வதென்றால், இங்கு நீதிபதியையோ, தீர்ப்பையோ, நீதித்துறையையோ அல்லது நீதி வழங்கும் அமைப்பையோ விமர்சிப்பதோ அல்லது குறைகூறுவதோ நோக்கம் அல்ல. மாறாக, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் தாக்கத்தை முன்னோக்கிக் காட்டுவதாகும்.
இது நடக்க பத்து வருடங்கள் ஆனது
இந்தப் பிரச்சினை அக்டோபர் 2013-ஆம் ஆண்டில் தொடங்கியது. அப்போது, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த S.P. முத்துராமன் VS இந்திய ஒன்றியம் (S.P. Muthuraman v. Union of India) வழக்கில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (National Green Tribunal (NGT)) தெற்கு அமர்வு, நடந்துகொண்டிருக்கும் திட்டங்கள், அவை ஏற்கனவே சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் தொடங்கப்பட்டிருந்தாலும், பின்னர் அனுமதிக்கும் அரசாங்க உத்தரவை நிறுத்தியது. 2025-ஆம் ஆண்டு வனசக்தி vs இந்திய ஒன்றியம் மற்றும் தொடர்புடைய (Vanashakti v. Union of India (2025)) வழக்குகளில், நீதிமன்றம் அந்த நிலைப்பாட்டை உறுதிசெய்து, பின்னோக்கிச் செல்லும் சுற்றுச்சூழல் ஒப்புதல் குறித்த தீர்ப்பை நிறுத்திவைத்துள்ளது.
சட்டப்பூர்வ பகுத்தறிவு தெளிவானது. ஆனால், காலவரிசை கவலைக்குரியது கடந்த 12 ஆண்டுகளில், இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் துறைகள் வேகமாக வளர்ந்துள்ளன. அரசாங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் மக்கள் திட்டங்களில் நிறைய பணத்தை முதலீடு செய்துள்ளனர். வேலை தொடங்கிய பிறகு ஒப்புதல்கள் வழங்கப்படலாம் என்று எதிர்பார்த்தனர். தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிலைப்பாடுக்கும் உச்சநீதிமன்றத்தின் உறுதிப்படுத்தலுக்கும் இடையே உள்ள 12 ஆண்டு இடைவெளி சட்டரீதியான வெற்றிடத்தையும் மற்றும் நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்கியுள்ளது.
தீர்ப்பு எங்கே குறைபாடுடையது? இது நடைமுறைக்குப் பிந்தைய சுற்றுச்சூழல் அனுமதிகளைத் தடை செய்தாலும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்தத் தீர்ப்பு எந்த வழிகாட்டுதலையும் வழங்கவில்லை. ஒவ்வொரு மாநிலமும் இந்தத் தீர்ப்பின் அர்த்தம் என்ன என்பதைத் தாங்களாகவே தீர்மானிக்க வேண்டியிருப்பதால், சிலர் ஏற்கனவே பொதுக் கட்டிடங்கள், வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகளை இடிக்கத் தொடங்கியுள்ளனர்.
முரண்பாடாக, சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறுகையில், இந்தப் பெரிய அளவிலான இடிப்புகள் சுற்றுச்சூழலுக்கு உதவுவதற்குப் பதிலாக தீங்கு விளைவிக்கும். ஆயிரக்கணக்கான கட்டிடங்களை இடிப்பது ஏராளமான கழிவுகளை உருவாக்கும், தீங்கு விளைவிக்கும் வாயுக்களை வெளியிடும். மேலும், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும். இது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் குறிக்கோளுக்கு எதிரானது. தீர்ப்பு அனைத்து மீறல்களையும் ஒரே மாதிரியாகக் கருதுகிறது. நோக்கம், அளவு மற்றும் தாக்கத்தைப் புறக்கணிக்கிறது. மேலும், அரசியலமைப்பின் 21-வது பிரிவின் ஒரு பகுதியாக இருக்கும் நிலையான வளர்ச்சி (sustainable development) என்ற கொள்கையை இந்த தீர்ப்பு புறக்கணிக்கிறது. மேலும், பொறுப்புணர்வை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, இடிபாடுகள் இடிப்பு குறித்த பயம் மேலும் பல திட்டங்களை மறைக்கச் செய்து, விதிகளைச் சரிபார்த்து அதை பின்பற்றுவதை கடினமாக்கும்.
நீதிமன்றத்தின் உத்தரவு 2006-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (Environmental Impact Assessment (EIA)) விதிகளைப் பற்றியது. ஆனால், அது 2011ஆம் ஆண்டு கடலோர ஒழுங்குமுறை மண்டல (Coastal Regulation Zone (CRZ)) விதிகளைப் பற்றி எதுவும் கூறவில்லை. அவை வேறுபட்ட சுற்றுச்சூழல் சட்டத்தின் ஒரு பகுதியாகும். நீதிமன்றம் கடலோர ஒழுங்குமுறை மண்டலம் விதிகளைப் பற்றிக் குறிப்பிடாததால், துறைமுகங்கள் முதல் சுற்றுலா முயற்சிகள் வரை ஆயிரக்கணக்கான கடலோர திட்டங்களுக்கு சட்ட தெளிவின்மையை உருவாக்கியுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவு கடலோர ஒழுங்குமுறை மண்டல வழக்குகளுக்கு தானாகவே பொருந்தும் என்று நினைப்பது தவறு. ஏனெனில், விதிகள் வேறுபட்டவை மற்றும் பங்குதாரர்களின் ஆலோசனையும் தேவைப்படுகிறது. அனைத்து வழக்குகளுக்கும் ஒரே தீர்ப்பை பயன்படுத்துவது விவகாரத்தை மேலும் குழப்பமடைய செய்யும்.
1974-ஆம் ஆண்டு இந்தியாவின் சுற்றுச்சூழல் விதிகளில் நீர் மாசுபாடு சட்டம் ((Prevention and Control of Pollution) Act) மற்றும் 1981-ஆம் ஆண்டு காற்று மாசுபாடு சட்டம் (Air (Prevention and Control of Pollution) Act) ஆகியவை அடங்கும். இந்தச் சட்டங்கள் சுற்றுச்சூழல் அனுமதி செயல்முறைக்கு அடித்தளமாக உள்ளன. நீதிமன்றத்தின் உத்தரவு அவற்றுக்கும் பொருந்தினால், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களின் அனுமதியின்றி இயங்கும் எந்தவொரு வணிக நிறுவனமும் மூடப்படலாம். இது மிகப்பெரிய பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இது பொருளாதாரத்திற்கும் சமூகத்திற்கும் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
திட்டம் தொடங்கபடுவதற்கு முன்னர் ஒப்புதல் பெறாத பெரும்பாலான திட்டங்கள் வேண்டுமென்றே செயல்படுத்தப்படுவதில்லை. 12 ஆண்டுகளுக்கும் மேலாக, மாறுபட்ட விளக்கங்களும் இடைக்கால அனுமதிகளும் இணக்கத்திற்கும் மீறலுக்கும் முக்கிய காரணங்களாக இருந்தன. கட்டிடங்களை இடிப்பதற்கு சட்ட விதிகளைப் பின்பற்றலாம். ஆனால், அது சுற்றுச்சூழலுக்கு உதவாது. சட்டங்கள் மக்களின் வாழ்வாதாரத்திற்கு தீங்கு விளைவிக்காமல் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் மற்றும் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கபட வேண்டும்.
முன்னோக்கி ஒரு சமநிலையான வழி
நீதிமன்றத்தின் இலக்குகளைப் பின்பற்றும் ஆனால் பெரிய சமூக மற்றும் பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்துவதைத் தவிர்க்கும் ஒரு கலவையான அணுகுமுறையை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்தத் திட்டம் சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதிகளில் (eco-sensitive zones) ஒப்புதல்களை நிறுத்துகிறது. நடந்துகொண்டிருக்கும் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளது, அபராதம் வசூலிக்கிறது, நிறுவனங்களை சேதத்தை சரிசெய்ய வைக்கிறது, தன்னிச்சையான கண்காணிப்பைப் பயன்படுத்துகிறது மற்றும் விதிகளைப் பின்பற்றுவதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்கிறது. இந்த மாதிரி மீறுபவர்களை மன்னிப்பதில்லை; அது அவர்களை பணம் செலுத்தவும், மீட்டெடுக்கவும், இணங்கவும் வைக்கிறது, தண்டனையிலிருந்து தடுப்பு மற்றும் சீர்திருத்தத்திற்கு கவனத்தை மாற்றுகிறது.
இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர் சங்கங்களின் கூட்டமைப்பு (Confederation of Real Estate Developers' Associations of India) மற்றும் பிறரின் கோரிக்கைகளுக்குப் பிறகு நீதிமன்றம் தனது முடிவை மீண்டும் பரிசீலிக்க ஒப்புக்கொண்டுள்ளது. இந்த மதிப்பாய்வு தீர்ப்பை பலவீனப்படுத்துவது பற்றியது அல்ல, மாறாக அதன் கவனிக்கப்படாத அம்சங்களை ஆராய்வது பற்றியதாகும்.
இந்தியாவின் சுற்றுச்சூழல் விதிகளுக்கு முழுமையான மாற்றம் தேவையில்லை. முன்னேற்றம் தேவைப்படுகிறது. கட்டிடங்களை இடிப்பதற்கு பதிலாக, கொள்கை வகுப்பாளர்கள் சுய அறிக்கையிடல், கடுமையான தண்டனைகள், தெளிவான கண்காணிப்பு மற்றும் வலுவான மேலாண்மை ஆகியவற்றைக் கொண்ட சிறந்த அமைப்பை உருவாக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி புத்திசாலித்தனமான, அறிவியல் அடிப்படையிலான கொள்கை மூலம் இணைந்து இருக்க வேண்டும்.
கலைச்செல்வன் பெரியசாமி, சுற்றுச்சூழல் மற்றும் சமூக நிபுணர்.