மனநலம்: இந்தியாவின் மௌன நெருக்கடி - ஊர்வசி பிரசாத் & ஸ்ரேயா அஞ்சலி

 மோசமான வசதிகள், சமூக களங்கம் மற்றும் அதிக செலவுகள் காரணமாக கடுமையான மனநோயால் பாதிக்கப்பட்ட பலருக்கு சரியான சிகிச்சை கிடைப்பதில்லை.


ஒவ்வொரு ஆண்டும், உலக மனநல தினத்தன்று, "மனநலம் இல்லாமல் ஆரோக்கியம் இல்லை" (“there is no health without mental health.”) என்பதை நமக்கு நினைவூட்டுகிறோம். இருப்பினும், வரவு செலவு திட்டங்களில் மனநலம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது மற்றும் கொள்கை வகுப்பில் போதுமான கவனம் செலுத்தப்படுவதில்லை.


இந்தியா மனநலப் பிரச்சினைகளின் பெரும் சுமையைச் சுமக்கிறது. உலகளாவிய நோய்ச்சுமை ஆய்வின்படி (The Global Burden of Disease study), 2017-ஆம் ஆண்டு நிலவரப்படி, 197 மில்லியன் இந்தியர்கள், அதாவது மக்கள் தொகையில் சுமார் 14.6 சதவீதம் பேர், மனச்சோர்வு, பதற்றம், இருமுனைக் கோளாறு மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டுக் கோளாறுகள் உள்ளிட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மனநலக் கோளாறுகளுடன் வாழ்ந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


சிகிச்சை இடைவெளி மிகவும் விரிவானது. கடுமையான மனநலக் கோளாறு உள்ளவர்களில் 80%-க்கும் அதிகமானோர் வசதிகள் இல்லாமை, சமூக களங்கம் மற்றும் அதிக செலவுகள் காரணமாக எந்த சரியான கவனிப்பையும் பெறுவதில்லை. தேசிய மனநலக் கணக்கெடுப்பு (2015–16) 10.6% பேர் தங்கள் வாழ்நாளில் ஒரு மனநலக் கோளாறை அனுபவித்ததாகக் கண்டறிந்துள்ளது, சிகிச்சை இடைவெளிகள் வெவ்வேறு பகுதிகள் மற்றும் கோளாறுகளில் 70% முதல் 92% வரை உள்ளன.


உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, இந்தியாவின் தற்கொலை விகிதம் 100,000 பேருக்கு 21.1 ஆக இருந்தது. இது வளர்ந்துவரும் பிரச்சினையின் தீவிர அறிகுறியாகும்.


இந்த புள்ளிவிவரங்கள் மனநலம் ஒரு பொது சுகாதார நெருக்கடி மற்றும் வளர்ச்சிக்கான சவால் என்பதை தெளிவாகக் காட்டுகின்றன.


கட்டமைப்பு இடைவெளிகள், கொள்கை குறைபாடுகள்


மீண்டும் மீண்டும் தேசிய அளவில் வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் இந்த நெருக்கடி ஏன் நீடிக்கிறது?


மனித வள பற்றாக்குறை: 


இந்தியாவில் ஒவ்வொரு 100,000 பேருக்கும் சுமார் 0.75 மனநல மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். இது WHO பரிந்துரைத்த 100,000 பேருக்கு 3 பேர் என்பதைவிட இது மிகக் குறைவு. பல மாநிலங்களில், 100,000 பேருக்கு 0.3 அல்லது அதற்கும் குறைவான மனநல மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். மனநல செவிலியர்கள், உளவியலாளர்கள் மற்றும் சமூகப் பணியாளர்களுக்கு இந்தப் பற்றாக்குறை இன்னும் மோசமாக உள்ளது.


குறைந்த முதலீடு: 


மனநலம் சுகாதார பட்ஜெட்டில் மிகச் சிறிய பங்கைப் பெறுகிறது. மாநிலத்திற்கு மாநிலம் தொகை மாறுபடும். ஆனால், பல மனநல சேவைகள் இன்னும் தன்னார்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களை ஆதரவுக்காகச் சார்ந்துள்ளது.





கொள்கை மற்றும் செயல்படுத்தல் இடைவெளி:


 2017ஆம் ஆண்டின் மனநலச் சட்டம் ஒரு நவீன சட்ட கட்டமைப்பை வழங்குகிறது. இது மனநலப் பராமரிப்புக்கான உரிமைகளை உறுதி செய்கிறது, மனநல மறுஆய்வு வாரியங்கள் போன்ற மேற்பார்வை அமைப்புகளை அமைக்கிறது மற்றும் நிறுவனமயமாக்கலை ஊக்குவிக்கிறது. இருப்பினும், இந்த விதிகளை செயல்படுத்த தேவையான அமைப்புகளை உருவாக்குவதில் பல மாநிலங்கள் மெதுவாக உள்ளன.

ஒருங்கிணைப்பு இல்லாமை: 


மனநல சேவைகள் முதன்மை சுகாதாரப் பராமரிப்பில் சரியாக சேர்க்கப்படவில்லை. மருத்துவமனைகள், முதியோர் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் பெரும்பாலும் உளவியல் ஆதரவு அமைப்புகள் இல்லை. நோயாளிகள் பொதுவாக நகரங்களில் உள்ள சிறப்பு மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும், இது பயண நேரத்தையும் செலவையும் அதிகரிக்கிறது, இது பலரால் வாங்க முடியாத ஒன்று.


தரவு இல்லாமை: 


மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் மனநல சுகாதாரத்தில் முன்னேற்றம், விளைவுகள் அல்லது பொறுப்புணர்வை அளவிடுவதற்கு நிகழ்நேர, தரப்படுத்தப்பட்ட அமைப்புகள் எதுவும் இல்லை. அமைச்சகங்கள், மாநிலங்கள், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்கள் மற்றும் பொது மற்றும் தனியார் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாதது முயற்சிகளை தனிமைப்படுத்தி பயனற்றதாக வைத்திருக்கிறது.


மனநலம் என்பது வெறும் மருத்துவ அல்லது உளவியல் பிரச்சினை அல்ல. இது சமத்துவமின்மை, காலநிலை மன அழுத்தம், இடம்பெயர்வு மற்றும் இளைஞர்களின் விரக்தி ஆகியவற்றுடன் நெருக்கமாக தொடர்புடையது. இந்தியாவில், பெண்கள் அதிக மனநல சுமையை எதிர்கொள்கின்றனர். அவர்கள் வீட்டு வன்முறை, பராமரிப்பு மன அழுத்தம் மற்றும் உதவியை நாடுவதைத் தடுக்கும் சமூக விதிமுறைகளைச் சமாளிக்கின்றனர். இதன் விளைவாக, அவர்களின் மனநலத் தேவைகள் பெரும்பாலும் காணப்படாதவை மற்றும் மோசமாக ஆதரிக்கப்படுகின்றன.


இந்தியாவின் வளர்ச்சி அதன் இளைஞர்களைப் பொறுத்தது. இருப்பினும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே தற்கொலை விகிதங்கள் மற்றும் பதட்டம் மற்றும் மனச்சோர்வு வழக்குகள் கடுமையாக அதிகரித்துள்ளன. தேசிய குற்றப் பதிவு பணியகத்தின் (National Crime Records Bureau (NCRB)) தரவுகளின்படி, 2013 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கு இடையில் மாணவர் தற்கொலைகள் 65 சதவீதம் அதிகரித்துள்ளன.


தீவிர வானிலை, கிராமப்புற துயரம், வாழ்வாதார இழப்பு மற்றும் இடப்பெயர்ச்சி ஆகியவை மனநலப் பிரச்சினைகளை மோசமாக்குகின்றன. உலகெங்கிலும் உள்ள ஆய்வுகள் வெப்ப அலைகள், வெள்ளம் மற்றும் வறட்சி ஆகியவை மனச்சோர்வு, பதட்டம், போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் தற்கொலை நடத்தை அதிகரிப்புடன் தொடர்புடையவை என்பதைக் காட்டுகின்றன. கூடுதலாக, வேலைக்காக நகரங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் கட்டாயமாக இடம்பெயர்தல், உடைந்த சமூக உறவுகள் மற்றும் நிலையற்ற வாழ்க்கை நிலைமைகள் மன உளைச்சலை அதிகரிக்கின்றன.


எதுவும் செய்யாமல் இருப்பதற்கான செலவு


மனநலத்தைப் புறக்கணிப்பது கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது உற்பத்தித்திறனைக் குறைக்கிறது, வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகரிக்கிறது. மேலும், பராமரிப்பாளர்கள் மீது அழுத்தத்தை அதிகரிக்கிறது, இது பொருளாதார வளர்ச்சியை மெதுவாக்குகிறது. மனநலக் கோளாறுகள் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1 டிரில்லியன் டாலர் உலகளாவிய இழப்புகளை ஏற்படுத்துகின்றன என்று WHO மதிப்பிடுகிறது. இந்தியாவில், 2012 மற்றும் 2030ஆம் ஆண்டுக்கு இடையில், இது இழப்பு உற்பத்தித்திறன் மற்றும் நல்வாழ்வில் $1.03 டிரில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், மருந்துகள் மற்றும் வாழ்வாதார ஆதரவு மூலம் மனச்சோர்வுக்கு சிகிச்சையளிப்பது மக்களின் பொருளாதார மற்றும் சமூக விளைவுகளை மேம்படுத்துவதாகக் காட்டியது, சிகிச்சைக்குப் பிறகும்கூட நன்மைகள் நீடிக்கும் எனவே பராமரிப்பில் முதலீடு செய்வதன் அவசியத்தைக் காட்டுகிறது.


இந்தியாவில் தற்கொலை மட்டுமே மிகப்பெரிய பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் மருத்துவச் செலவுகள், இழந்த உற்பத்தித்திறன் மற்றும் உளவியல் ரீதியான விளைவுகள் உட்பட $16 பில்லியனுக்கும் அதிகமாகும். இந்த எண்கள் பணத்தைவிட அதிகமாக பிரதிபலிக்கின்றன. அவை இழந்த மனித ஆற்றல், உடைந்த குடும்பங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் பலவீனமான நம்பிக்கையைக் குறிக்கின்றன.


கொள்கை வரைவு


பொது சுகாதார முன்னுரிமையாக இந்தியா ஆறு முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்:


முதன்மை மருத்துவத்தில் உலகளாவிய மனநலம்: 


அனைத்து ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்களிலும் (Ayushman Aarogya Mandirs (AAMs)) மனநல பரிசோதனை, ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்குங்கள். ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் குழுக்கள், முதன்மை பராமரிப்பு செவிலியர்கள் மற்றும் சமூக சுகாதார பணியாளர்களுக்கு (ASHAs) நிலையான கருவிகள், நெறிமுறைகள் மற்றும் தொலை-மனநல மருத்துவ ஆதரவுடன் பயிற்சி அளிக்க வேண்டும.


மனநல நிதியளிப்பு நோக்கம்: 


தேசிய மற்றும் மாநில அளவில் சுகாதார பட்ஜெட்டில் 5% மனநலத்திற்கு ஒதுக்கவும். மனநல சேவைகளை விரிவுபடுத்தும் மாநிலங்களுக்கு பொருத்தமான மானியங்களை வழங்கவும். அளவிடக்கூடிய பாதுகாப்பு, விளைவுகள் மற்றும் தரத்துடன் நிதியை இணைக்கும் சலுகைகளை அறிமுகப்படுத்த வேண்டும்.





பணியாளர் விரிவாக்கம் மற்றும் திறன் முடுக்கம்: 


உளவியலாளர்கள், மனநல மருத்துவர்கள் மற்றும் உளவியல்-புற்றுநோய் நிபுணர்கள் உட்பட குறைந்தது 50,000 புதிய மனநல நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்க ஐந்து ஆண்டு இலக்கை அமைக்கவும், விரைவான பயிற்சி, டிஜிட்டல் கற்றல் மற்றும் பணி-பகிர்வு மாதிரிகள், அதாவது சாதாரண ஆலோசகர்கள் மற்றும் சகாக்களின் ஆதரவு ஆகியவற்றைப் பயன்படுத்தவும்,  மருத்துவ நிறுவனங்களை வலுப்படுத்தி தர அங்கீகாரத்தை உறுதி செய்ய வேண்டும்.


தரவு, கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல்: 


சேவை வழங்கல், விளைவுகள், மாவட்ட அளவிலான இடைவெளிகள் மற்றும் குறைகளைக் கையாளுதல் ஆகியவற்றைக் கண்காணிக்க ஒரு தேசிய நிகழ்நேர மனநல தளத்தை உருவாக்க வேண்டும். இதில் பொது மற்றும் தனியார் வழங்குநர்கள் இருவரும் முக்கிய அளவீடுகளைப் புகாரளிக்க வேண்டும். வள ஒதுக்கீட்டை வழிநடத்த இந்தத் தரவைப் பயன்படுத்த வேண்டும்.


உரிமைகள், சமத்துவம் மற்றும் சட்டப் பாதுகாப்புகள்: 


மனநலச் சட்டம், 2017 முழுமையாக செயல்படுத்துதல், மனநல மறுஆய்வு வாரியங்கள் (MHRBs) சரியாக செயல்படுவதை உறுதி செய்தல், மனநல குறை தீர்க்கும் செயல்முறைகளை எளிதாக்குதல், தனியுரிமையைப் பாதுகாத்தல் மற்றும் பாகுபாட்டைத் தடுத்தல், காப்பீடு மற்றும் பொதுத் திட்டங்களில் மனநல சேவைகள் உடல் ஆரோக்கியத்தைப் போலவே நடத்தப்பட வேண்டும் என்று சட்டப்பூர்வமாகக் கோருகிறது.


காலநிலை-எதிர்ப்பு மனநல உத்திகள்: 


பேரிடர் மீட்பு மற்றும் காலநிலை தழுவல் திட்டங்களில் உளவியல் சமூக ஆதரவைச் சேர்க்கவும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற காலநிலை அபாயங்களுக்கு ஆளாகக்கூடிய பகுதிகளில் மீள்தன்மை மையங்களுக்கு நிதியளிக்க வேண்டும். வெப்ப அலைகள், வெள்ளம் மற்றும் இடப்பெயர்ச்சி போன்ற காலநிலை நிகழ்வுகளால் ஏற்படும் அதிர்ச்சியைக் கையாள சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும் வேண்டும்.


இந்த சீர்திருத்தங்கள் கடினமானவை. ஆனால், அவை எதுவும் செய்யாததால் ஏற்படும் உயிர் இழப்பு மற்றும் உற்பத்தித்திறனைவிட மிகவும் எளிதானவை மற்றும் மலிவானவையாகும்.


2025 உலக மனநல தினத்தன்று, இந்தியா சொற்களிலிருந்து செயலுக்கு மாற வேண்டும். தேவைப்படுபவர்களில் 80% பேர் போதுமான உதவியைப் பெறாத, மனநலம் பற்றி அமைதியாகப் பேசப்படும் ஆனால் முறையாகக் கவனிக்கப்படாத நாடாக நாம் இருக்க முடியாது.


மனநலம் ஒட்டுமொத்த சுகாதாரக் கொள்கை மற்றும் திட்டமிடலின் ஒரு பகுதியாக இருக்கும்போது, ​​நாம் நோய்க்கு சிகிச்சையளிப்பது மட்டுமல்லாமல், அதன் கண்ணியத்தைப் பாதுகாப்போம், மீள்தன்மையை வளர்ப்போம், மனித ஆற்றலை மீட்டெடுப்போம். இதில் இந்தியா செயல்படுமா என்பது அல்ல, எப்போது செயல்படும் என்பதுதான் முக்கிய கேள்வியாக உள்ளது.



Original article:

Share: