காந்தி ஜெயந்தியின் போது, மகாத்மா காந்தியின் தூய்மையான இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நினைவுகூறும் விதமாக, தொடங்கப்பட்ட இந்தியாவின் முதன்மையான முயற்சிகளில் ஒன்றான தூய்மை இந்தியா திட்டம் பற்றி மீண்டும் பார்ப்போம்.
தற்போதைய நிலை :
2014-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி தூய்மை இந்தியா திட்டம் (Swachh Bharat Mission) தொடங்கப்பட்டு 11 ஆண்டுகள் ஆகிறது. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு தொடங்கப்பட்ட முதல் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த திட்டத்தை அறிவிக்கும் போது, பிரதமர் குறிப்பிட்டதாவது, "தூய்மையான இந்தியா என்பது மகாத்மா காந்தியின் 190-வது பிறந்தநாளில் இந்தியா செலுத்தும் சிறந்த அஞ்சலியாகும்." இதன் நோக்கம், சுகாதாரம் மற்றும் நீர் அணுகலை மையமாகக் கொண்ட நிலையான வளர்ச்சி இலக்கு 6 உடன் இணைக்கப்பட்டுள்ளது.
காந்தி ஜெயந்தி அன்று, இந்திய அரசின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான, காந்தியின் தூய்மையான மற்றும் சுகாதாரமான இந்தியா என்ற கனவை நிறைவேற்றி அதை ஜன அந்தோலனாக ”மக்கள் இயக்கமாக” (Jan Andolan) மாற்றுவதற்கான வழியைப் பார்ப்போம்.
முக்கிய அம்சங்கள் :
1. இந்த பணியானது கிராமங்களுக்கான, ‘தூய்மை இந்தியா திட்டம்-கிராமம் (SBM-Grameen)’ எனவும், நகரங்களுக்கு ‘தூய்மை இந்தியா திட்டம்-நகரம் (SBM-Urban)’ எனவும் பிரிக்கப்பட்டது. இது, குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டது. ஸ்வச் பாரத் கோஷ் (நிதி) தொடங்கப்பட்டது. இந்த நோக்கத்திற்காக "தொண்டு பங்களிப்புகள் மற்றும் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதிகளை வழிப்படுத்துவதை எளிதாக்குவதற்காக" தூய்மை இந்தியா கோஷ் (நிதி) தொடங்கப்பட்டது.
2. அக்டோபர் 2, 2019-க்குள் இந்தியாவை “திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாததாக” (Open Defecation-Free (ODF)) ஆக்குவது தூய்மை இந்தியா திட்டத்தின் (SBM) முக்கிய குறிக்கோளாக இருந்தது. இதற்காக கோடிக்கணக்கான வீடுகள் மற்றும் சமூகக் கழிப்பறைகள் கட்டப்பட வேண்டும். அமைச்சகத்தின் கூற்றுப்படி, "ஒரு நாளின் எந்த நேரத்திலும், ஒரு நபர்கூட திறந்தவெளியில் மலம் கழிக்கவில்லை என்றால், ஒரு நகரம் / வார்டை ODF நகரம் / ODF வார்டாக அறிவிக்கலாம் / என்று தெரிவித்தது."
3. அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிப்பறைகள் இருப்பதை உறுதி செய்வதும், சமூகக் கழிப்பறைகள் (cluster toilets) இருப்பதை உறுதி செய்வதும், பள்ளி மற்றும் அங்கன்வாடி கழிப்பறைகளில் கழிவு மேலாண்மை அமைப்புகள் இருப்பதை உறுதி செய்வதும் இதன் நோக்கமாகும். திடக்கழிவுகளில் கரிம மற்றும் கனிம பொருட்கள் (சமையலறை கழிவுகள், நெகிழி, உலோகங்கள் போன்றவை) அடங்கும். அதே நேரத்தில், திரவ கழிவு மேலாண்மை என்பது மனித நுகர்வுக்கு ஏற்றதாக இல்லாத கழிவுநீரைக் கையாள்கிறது.
4. தூய்மை இந்தியா திட்டம்-நகர்ப்புறம் (SBM-U) 2019 அக்டோபர் 2-ஆம் தேதிக்குள் அனைத்து சட்டப்பூர்வ நகரங்களிலும் அடைய வேண்டிய மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டிருந்தது.
100% திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத (Open Defecation Free (ODF)) நிலையை அடைதல்,
100% அறிவியல் பூர்வமான திடக்கழிவு மேலாண்மை (Solid Waste Management (SWM)) உறுதி செய்தல்,
'மக்கள் இயக்கம்' (Jan Andolan) மூலம் நடத்தை மாற்றம்
5. 2021-ம் ஆண்டில், இந்த பணியானது ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்தது. அதன்பிறகு, தூய்மை இந்தியா திட்டம்-நகர்ப்புறத்தின் (SBM-U) சாதனைகளைத் தக்கவைக்க அரசாங்கம் ”SBM-நகர்ப்புற 2.0”-ஐ அறிமுகப்படுத்தியது. குப்பையில்லா நகரங்கள், மலக் கசடு, நெகிழிக் கழிவுகள், திறன் மேம்பாடு மற்றும் சாம்பல் நீர் மேலாண்மை ஆகியவற்றை மையமாகக் கொண்டது. இந்த பணி 5 ஆண்டுகளுக்கு 1 அக்டோபர் 2021 முதல் அக்டோபர் 1, 2026 வரை நீட்டிக்கப்படுகிறது.
6. நிலையான வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals (SDG)) 2030-ஐ அடைவதற்காக SBM-Urban-2.0-ன் கீழ் அனைத்து நகரங்களையும் ‘குப்பை இல்லாததாக’ மாற்ற உறுதிபூண்டுள்ளது. இது MoHUA-ஆல் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மூலம் அனைத்து சட்டப்பூர்வ நகரங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.
7. எஸ்பிஎம்-கிராமின் முடிவுகளை எட்டியபிறகு, ஜல் சக்தி அமைச்சகம் ஸ்வச் பாரத் மிஷன் – கிராமின் இரண்டாம் கட்டத்தை தொடங்கியது, இது ஒரு மத்திய அரசின் நிதியுதவி திட்டமாகும். இது 2020-21 முதல் 2025-26 வரை மிஷன் முறையில் செயல்படுத்தப்படுகிறது.
8. ஜல் சக்தி அமைச்சகமானது, தூய்மை இந்தியா திட்டம்-கிராமம் (SBM-Grameen) கட்டம்-II ஐ அறிமுகப்படுத்தியது. ”சம்பூர்ன் ஸ்வச்சதா” (முழுமையான தூய்மை) அடைவதே இதன் முக்கியக் குறிக்கோள் ஆகும். அதாவது, திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத (ODF) நிலையை நிலைநிறுத்துவதற்கும், 2024-25க்குள் திட மற்றும் திரவக் கழிவுகளை நிர்வகிப்பதற்கும், அனைத்து கிராமங்களையும் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாததிலிருந்து (ODF) ODF பிளஸ் பயன்முறைக்கு மாற்றுவதற்கும்" தொடங்கப்பட்டது.
9. SBM(G) இரண்டாம் கட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:
ODF-நிலைத்தன்மை : கிராமங்கள் அவற்றின் ODF நிலையைப் பேணுவதை உறுதி செய்தல்.
திடக்கழிவு மேலாண்மை : கழிவுகளைப் பிரித்து உரமாக்குதல் அமைப்புகளை நிறுவுதல்.
திரவக் கழிவு மேலாண்மை : கழிவுகளை சாம்பல் நீர் மற்றும் மழைநீருக்காக ஊறவைக்கும் குழிகள் மற்றும் சுத்திகரிப்பு அமைப்புகள் அமைக்கப்பட வேண்டும்.
காட்சித் தூய்மை : கிராமப்புறங்களின் ஒட்டுமொத்த தூய்மை மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துதல்.
தூய்மை இந்தியா திட்டத்தின் தாக்கம்
1. தூய்மை இந்தியா திட்டம் (SBM) பற்றிய நேச்சர் ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, 2014 மற்றும் 2020-க்கு இடையில், அரசாங்கத்தின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் மற்றும் சிறந்த சுகாதார சேவைகள் ஆண்டுதோறும் சுமார் 60,000 முதல் 70,000 குழந்தை இறப்புகளைத் தடுத்திருக்கலாம்.
2. 2003-ம் ஆண்டில், ஒரு மாவட்டத்தில் சராசரி கழிப்பறை வசதி 40 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்தது என்றும், 2020-ம் ஆண்டில், இது 60 சதவிகிதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது என்றும் ஆய்வு கூறுகிறது. கழிப்பறைகளை அணுகுவதற்கும் குழந்தை இறப்பு விகிதத்திற்கும் இடையே ஒரு தலைகீழ் தொடர்பை ஏற்படுத்திய ஆய்வில், 30 சதவீத கழிப்பறை வசதி உள்ள மாவட்டங்கள் கூட குழந்தை இறப்பு விகிதத்தை கணிசமான எண்ணிக்கையில் குறைக்க முடிந்தது என்று கூறியது.
3. 2012-ம் ஆண்டில், ஒவ்வொரு மாவட்டத்திலும் 1,000 நேரடி பிறப்புகளுக்கு 40 குழந்தை இறப்புகள் இருந்தன. இது 2016-ல் 33 ஆகக் குறைந்து, மேலும் 2019-ல் 30-ஆகக் குறைந்துள்ளது. அதேபோல், 2012-ல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு ஒரு மாவட்டத்திற்கு 1,000 நேரடி பிறப்புகளுக்கு 44-ஆக இருந்தது. 2014-ல் 40-க்கும், 2016-ல் 35-க்கும், 2019-ல் 30-க்கும் கீழாக குறைந்துள்ளது.
4. சுகாதாரத்தின் பொருளாதார நன்மைகள், ஒரு கிராமம் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நிலையை அடைந்தபோது, ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.50,000 மிச்சப்படுத்தியதாக யுனிசெஃப் (UNICEF) ஆய்வு மதிப்பிட்டுள்ளது. குறைக்கப்பட்ட மருத்துவக் கட்டணங்கள், நேரத்தை மிச்சப்படுத்துதல் மற்றும் பிற காரணிகளிலிருந்து இந்த சேமிப்பு மதிப்பிடப்பட்டுள்ளது.
5. அரசியல் தலைமை, பொது நிதி, கூட்டாண்மை மற்றும் மக்கள் பங்கேற்பு ஆகிய நான்கு Ps-களில் உட்பதிந்துள்ள SBM-ன் முக்கிய பாடங்கள், மிகப் பெரிய, மாற்றத்தை ஏற்படுத்தும் வளர்ச்சித் திட்டங்களின் வெற்றிக்கு இன்றியமையாதவை என இப்போது உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவை மற்ற தேசிய பிரச்சாரங்களால் பின்பற்றப்படுகின்றன. மேலும் நைஜீரியா, இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளில் சமமான கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
காந்தி - தூய்மைக்கான ஒரு முன்னோடி
1. காந்தியின் பொது மற்றும் தனியார் சுகாதாரம் பற்றிய அக்கறை, தென்னாப்பிரிக்காவில் அவர் கழித்த நாட்களிலிருந்து அவரது சத்தியாக்கிரகப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்தது. காந்தியைப் பொறுத்தவரை, சமூகத்தில் தூய்மைக்கான உந்துதல், சாதியற்ற மற்றும் சுதந்திரமான சமூகத்தை உருவாக்குவதற்கான செயல்முறையின் ஒரு பகுதியாகும்.
2. "ஒவ்வொருவரும் அவரவர் துப்புரவாளர்கள்" (Everyone is his own scavenger) என்று காந்தி கூறினார். தூய்மையை ஒரு தனிப்பட்ட பொறுப்பாக ஆக்குவதன் அவசியம் தீண்டாமையை அகற்றுவதற்கு முக்கியமானது என்ற உண்மையை மீண்டும் வலியுறுத்தினார். மேற்கத்திய நாடுகளின் நாகரிகப் பணி இந்தியர்களுக்குத் தேவை என்ற கருத்தை அகற்றுவதற்கு சுகாதாரம் அவசியமாகக் கருதப்பட்டது என்று அவர் கண்டார்.
சுதந்திரத்தை விட சுகாதாரம் முக்கியமானது.
மகாத்மா காந்தி
3. 1920-களின் முற்பகுதியில் நடந்த ஒத்துழையாமைப் போராட்டத்திற்குப் பிறகு, காந்தியின் இயக்கத்தில் தூய்மைக்கான உந்துதல் வலுவடைந்தது. இந்த நேரத்தில், காந்தியின் சுகாதாரத்திற்கான அழைப்பு இரண்டு தனித்தனி காரணங்களின் ஒரு பகுதியாக மாறியது. ஒன்று சுதந்திரத்திற்கான போராட்டம். மற்றொன்று தீண்டாமையை அகற்றும் முயற்சி ஆகும்.
4. தூய்மைக்கும் சுயாட்சிக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பை காந்தி சுட்டிக்காட்டினார். மேற்கத்திய நாடுகளிடமிருந்து நகராட்சி சுகாதாரத்தைக் கற்றுக்கொள்ளுமாறு அவர் இந்தியர்களைக் கேட்டார். இந்தியாவின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப அதை மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். "சுத்தமான, துணிச்சலான மக்களால் மட்டுமே சுயாட்சி இருக்க முடியும்" என்று அவர் நம்பினார்.
5. “தேசிய அல்லது சமூக சுகாதார உணர்வு நம்மிடையே ஒரு நற்பண்பாக இல்லை. நாம் ஒருவகையில் குளிக்கலாம், ஆனால் கிணறு, குளம் அல்லது நதியை, அதன் கரையில் அல்லது அதற்குள் நாம் குளிக்கும்போது அழுக்காக்குவதைப் பற்றி கவலைப்படுவதில்லை. இந்தக் குறையை நான் ஒரு பெரிய தீமையாகக் கருதுகிறேன், இது நமது கிராமங்களின் அவமானகரமான நிலைக்கும், புனித நதிகளின் புனித கரைகளுக்கும், சுகாதாரமின்மையால் உருவாகும் நோய்களுக்கும் காரணமாக உள்ளது.”