பழங்குடியினத் தலைவர்களும் அவர்களின் இயக்கங்களும், சுதந்திரம் மற்றும் கண்ணியத்திற்கான போராட்டம் இந்தியாவின் பழங்குடியினப் பகுதிகளின் காடுகளிலும் மலைகளிலும் ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதைத் தொடர்ந்து நினைவூட்டுகின்றனர்.
இந்தியாவின் பழங்குடியின சமூகங்கள் தேசத்தின் சமூக மற்றும் அரசியல் கட்டமைப்பை வடிவமைப்பதில் மிக முக்கியமான பங்கை ஆற்றியுள்ளன. வரலாறு முழுவதும், பழங்குடியினத் தலைவர்கள் தங்கள் நிலம், கலாச்சாரம் மற்றும் கண்ணியத்தை காலனித்துவ சுரண்டல் மற்றும் அநீதியிலிருந்து பாதுகாக்க சக்தி வாய்ந்த இயக்கங்களை வழிநடத்தியுள்ளனர். 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பழங்குடியின சமூகங்கள், அவர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையை சீர்குலைத்த பிரிட்டிஷ் காலனித்துவ நிர்வாகம், உள்ளூர் நிலப்பிரபுக்கள் மற்றும் கந்து வட்டிக்காரர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தன.
பிர்சா முண்டா தலைமையிலான உல்குலான் இயக்கம் முதல் அல்லூரி சீதாராம ராஜு, தாண்டியா பீல், வீர் குண்டதூர், ராணி காயிதின்ல்யூ, ராம்ஜி கோண்ட், ஷஹீத் வீர் நாராயண் சிங், சித்து-கான்ஹு மற்றும் பிறரின் எதிர்ப்புகளும், இந்தப் பழங்குடியின இயக்கங்கள் தனித்தனியான கிளர்ச்சிகள் அல்ல என்பதை நிரூபித்தன. அவை காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிரான நிலையான, சக்திவாய்ந்த எதிர்-விவாதங்களாக இருந்தன. அவர்களின் போராட்டங்கள் பழங்குடியினர் உரிமைகளைப் பாதுகாத்தது மட்டுமின்றி, தேசத்தின் சுதந்திரம் மற்றும் சமத்துவத்திற்கான பரந்த போராட்டத்தையும் வலுப்படுத்தியுள்ளன.
இந்தப் பழங்குடியினத் தலைவர்களையும் அவர்களின் போராட்டத்தையும் அங்கீகரிக்கும் வகையில், பிர்சா முண்டாவின் பிறந்த நாளான நவம்பர் 15-ஆம் தேதியை பழங்குடியின பெருமை தினம் ('ஜனஜாதிய கௌரவ திவாஸ்') எனக் கொண்டாட பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2021-ஆம் ஆண்டில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை அறிவித்தது. இந்தப் பிரமாண்டமான முடிவு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இது பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களின் செழுமையான பாரம்பரியம் மற்றும் போராட்டங்களைப் பற்றிய பெருமையையும் அறிவையும் தலைமுறைகள் தாண்டியும் கொண்டு சேர்க்கிறது.
இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. ஏனெனில், நாம் 2024-ஆம் ஆண்டில் தொடங்கிய பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாள் கொண்டாட்டங்களை ('ஜனஜாதிய கௌரவ வர்ஷ்') இந்த நாளில் நிறைவு செய்கிறோம்.
அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது (12வது மற்றும் 13வது மக்களவை) பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அவரது ஆட்சி காலத்தில்தான் பழங்குடியினர் விவகாரங்களுக்கான தனி அமைச்சகம் நிறுவப்பட்டது. மக்களவை உறுப்பினராக, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் உத்தரகண்ட் ஆகிய தனி மாநிலங்களை உருவாக்குவதற்கும் நான் வாக்களித்தேன். பின்னர், நான் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநரானேன்.
பதவியேற்ற பிறகு, பிர்சா முண்டாவின் பிறந்த இடமான உலிஹாட்டுக்குச் (Ulihatu) சென்று அஞ்சலி செலுத்தினேன். குறிப்பாக, உலிஹாட்டுக்கு வருகை தரும் முதல் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. அவரது வருகை முழு நாட்டின் பார்வையிலும் பழங்குடிமக்களின் (Janjatiyas) முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தியது. குறிப்பாக, பாதிக்கப்படக்கூடிய பழங்குடி சமூகங்களைப் பாதுகாப்பதையும் அதிகாரமளிப்பதையும் நோக்கமாகக் கொண்ட Pradhan Mantri Janjati Adivasi Nyaya Maha Abhiyan (PM-JANMAN) திட்டத்தை அவர் அறிவித்தார்.
கடந்த பத்தாண்டுகளாக, பழங்குடி சமூகங்களுக்கான கொள்கை வகுப்பில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது, நலத்திட்டங்களை நோக்கியதாக இருந்ததிலிருந்து, அதிகாரமளிப்பதை நோக்கியதாக மாறியுள்ளது. உதாரணமாக, 75 மிகவும் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்களை (Particularly Vulnerable Tribal Groups (PVTGs)) இலக்காகக் கொண்ட PM-JANMAN திட்டமானது, கான்கிரீட் வீடுகள், சாலை வசதி, குடிநீர், மின் இணைப்பு, சுகாதார வசதிகள், கல்வி போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குகிறது.
மற்றொரு குறிப்பிடத்தக்க திட்டம் தார்தி ஆபா ஜன்ஜாதியா கிராம உத்கர்ஷ் அபியான் (Dharti Aaba Janjatiya Gram Utkarsh Abhiyan), இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டமாகும். இது 63,000-க்கும் மேற்பட்ட பழங்குடியினர் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களில் அடிப்படை சேவைகளை நூறு சதவிகிதம் சென்றடையச் செய்வதையும், முழுமையான சமூக-பொருளாதார மேம்பாட்டையும் நோக்கமாகக் கொண்டது. பழங்குடி தயாரிப்புகளுக்கான புவிசார் குறியிடுதல் (Geotagging), பழங்குடி வணிகக் கூட்டமைப்பு மற்றும் மத்திய அரசின் இது போன்ற பிற முன்முயற்சிகள், பழங்குடி சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான நேர்மறையான நடவடிக்கைகளாகும். இந்த முயற்சிகள், பழங்குடி சமூகங்கள் தனிமைப்படுத்தப்பட்ட குழுக்களாக இருந்ததிலிருந்து, தேசிய நீரோட்டத்தில் ஒரு பகுதியாக மாற உதவியுள்ளன.
ஜார்கண்ட், தெலுங்கானா, பின்னர் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் ஆளுநராக, நான் அதிக பலன்கள் கிடைப்பதற்காக ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளின் (Eklavya Model Residential (EMR)) விரிவாக்கம் குறித்த பிரச்னையை மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சருடன் தனிப்பட்ட முறையில் எடுத்துரைத்தேன். 728 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளை அமைப்பதை மத்திய அரசு இலக்காகக் கொண்டுள்ளது என்றும், அவற்றில் 479 பள்ளிகள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 3.5 லட்சம் பழங்குடி மாணவர்கள் பயனடைகின்றனர்.
பழங்குடித் தலைவர்களின் வரலாற்றுக் கதைகள் அழியாமல் இருப்பதற்காக அரசாங்கம் முன்முயற்சிகளை எடுப்பது மகிழ்ச்சியான ஒன்று. 10 மாநிலங்களில் மொத்தம் 11 அதிநவீன பழங்குடி சுதந்திரப் போராட்ட வீரர் அருங்காட்சியகங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் நான்கு அருங்காட்சியகங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகங்கள், டிஜிட்டல் மற்றும் அதிவேகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, துடிப்பான கல்வி மையங்களாகச் செயல்பட்டு வருகின்றன.
பழங்குடித் தலைவர்களின், அவர்களின் இயக்கங்களின், சுதந்திரம் மற்றும் கண்ணியத்திற்கான போராட்டம் இந்தியாவின் பழங்குடிப் பகுதிகளின் காடுகள் மற்றும் மலைகளில் ஆழமாக வேரூன்றியிருந்தது என்பதைத் தொடர்ந்து நினைவூட்டுகின்றன. அவர்களின் துணிச்சல், தியாகம் மற்றும் நீடித்த உத்வேகம் ஆகியவை நாடு முழுவதும் சமூக நீதி, சுற்றுச்சூழல் சமநிலை மற்றும் மனித உரிமைகளுக்கான இயக்கங்களைத் தொடர்ந்து ஊக்குவிக்கின்றன. பிர்சா முண்டா 25 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார். ஆனால், அவர் சமூகத்தில் தேசபக்தியின் நெருப்பை மூட்டினார், அது வரும் தலைமுறைகளுக்கும் நீடிக்கும்.
எழுத்தாளர், இந்திய குடியரசு துணைத் தலைவர்.