இந்தியாவில் காற்று மாசுபாட்டிற்கான காரணங்கள் யாவை? -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


— இஷான் பக்ஷி எழுதுகிறார்: கடந்த பத்தாண்டு காலமாக, காற்று மாசுபாடு ஒரு குறிப்பிடத்தக்க பொது சுகாதாரப் பிரச்சினையாக இருந்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து பல பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன… தூய்மையான காற்று என்ற பொது நலனை வழங்குவதில் அரசு மீண்டும் மீண்டும் தோல்வியடைந்துள்ள நிலையில், தனியார் மாற்று வழிகளைக் கருத்தில் கொள்ள வேண்டிய நேரம் இதுவாக இருக்கலாம். தனியார் தனிநபர்கள் நேரடியாக விவசாயிகளுடன் தொடர்பு கொண்டு, பயிர்க் கழிவுகளை (வைக்கோலை) எரிக்காமல் இருப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியுமா?


— பஞ்சாபில், ஒரு ஏக்கருக்கான சராசரி நெல் மகசூல் சுமார் 2.5 முதல் 3 டன்கள் ஆகும். தானியத்திற்கும் வைக்கோலுக்கும் இடையேயான விகிதம் தோராயமாக 1:1 ஆக உள்ளது, அதாவது ஒரு ஏக்கருக்கு 2.5 முதல் 3 டன் வைக்கோல் கிடைக்கிறது. 32.4 லட்சம் ஹெக்டேர் சாகுபடி பரப்பளவில், பஞ்சாப் சுமார் 20-24 மில்லியன் டன் பயிர்க் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டியுள்ளது. இப்போது, ​​பயிர்க் கழிவுகளை வெட்டுதல், பரப்புதல், கட்டுதல் மற்றும் சேமித்து வைப்பதில் உள்ள செலவுகள் குறித்து பல்வேறு மதிப்பீடுகள் உள்ளன.


— ரமேஷ் சந்த் மற்றும் ஸ்வேதா சாஹ்னி (2023) கருத்துப்படி, ஒரு டன்னுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை இந்த செயல்முறைக்குப் போதுமானதாக இருக்கும். “ஆற்றல், சூழல் மற்றும் நீர்வளம் குறித்த கூட்டமைப்பு (Council on Energy, Environment and Water (CEEW)) (2021) நடத்திய ஆய்வில், ஒரு டன்னுக்கு ரூ.1,330 என மதிப்பிடப்பட்டுள்ளது. பண்ணையில் இருந்து 15 கி.மீ வரை வைக்கோலை கொண்டு செல்வதற்கான செலவும் இதில் அடங்கும். இந்த மதிப்பீடுகளை பணவீக்கத்திற்கு ஏற்றவாறு புதுப்பித்து, அறிவு, தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் (Center for Study of Science, Technology and Policy (CSTEP)) (2024) நடத்திய ஆய்வின் அடிப்படையில் ஒரு டன்னுக்கு ₹1,620 என செலவுத் தொகை கணிக்கப்பட்டுள்ளது. 


— பஞ்சாபில் உள்ள அனைத்து பயிர்க் கழிவுகளையும் கொள்முதல் செய்வதற்கான செலவு ரூ.2,000 முதல் ரூ.4,000 கோடி வரை இருக்கும் என்பதைக் குறிக்கிறது. இந்தச் செலவை யாரோ ஒருவர் ஏற்க வேண்டும். விவசாயியும் அரசாங்கமும் இந்த முழுச் செலவையும் ஏற்கத் தயாராக இல்லாததால், ஒருவேளை தனியார் நிறுவனங்கள் இதில் ஒரு பகுதிச் செலவை ஏற்க முன்வரலாம்.


— பயிர்க் கழிவுகளை எரிப்பதால் ஒரு பரந்த பகுதி பாதிக்கப்படுகிறது. ஆனால், தேசிய தலைநகர் பகுதியில் வசிப்பவர்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு இல்லாததால், மின் இணைப்புகளை எடுத்துக் கொள்வோம். டெல்லியில் சுமார் 60 லட்சம் உள்நாட்டு மின் நுகர்வோர் உள்ளனர். இத்துடன் குருகிராம், நொய்டா, ஃபரிதாபாத் மற்றும் காசியாபாத் ஆகிய பகுதிகளில் வாழும் மக்களின் எண்ணிக்கையையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்போது, சுமார் 80 லட்சம் குடும்பங்கள் என்று வைத்துக் கொண்டால், பயிர்க் கழிவுகளை அகற்றுவதற்கான செலவு ஒரு குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கான செல்வு ₹2,500 முதல் ₹5,000 வரை இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது.

 

— இதில் மிகவும் பணக்காரர்களான 1 சதவீதத்தினருக்கு மட்டும், ஒரு மாதத்திற்கு ₹20,000 முதல் ₹40,000 வரை ஆகும். இடைப்பட்ட சிறு அளவிலான தொகையை ஏற்கலாம். அனைத்து குடும்பங்களும் பங்களிக்க முடியும். ஆனால், சிலர் பங்களிக்காமல் இருக்கவும் வாய்ப்புள்ளது. மாசுபாடு ஏற்படுத்தும் செலவைக் கருத்தில் கொள்ளும்போது இந்தச் செலவினத் தொகை அவ்வளவு அதிகமாக இல்லை.


— இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு தோல்வியடைவதைவிட, இதற்கு  கோய்சியன் கொள்கையின் (Coasean Principle) அடிப்படியில் தீர்வு காண்பது மாற்று வழியாகும். இது புறநிலைச் சிக்கல்களைத் தீர்க்க கட்சிகளுக்கு இடையேயான தனியார் பேரத்தை சார்ந்துள்ளது.


— அனுமிதா ராய்சௌத்ரி, மாசுக் கட்டுப்பாட்டிற்கு எதிரான போரில் படிப்படியான மற்றும் தற்காலிக நடவடிக்கைகளால் வெற்றி பெற முடியாது. வாகனங்கள், தொழிற்சாலைகள், மின் நிலையங்கள், கழிவு நீரோடைகள், வீடுகளில் பயன்படுத்தப்படும் திட எரிபொருட்கள் மற்றும் தூசிக் கோளங்கள் ஆகியவற்றிலிருந்து வரும் உமிழ்வைக் குறைக்க ஆழமான துறைசார் சீர்திருத்தங்கள் இல்லாவிட்டால், தேசிய சுற்றுப்புற காற்று தரத் தரங்களை பூர்த்தி செய்ய டெல்லி அதன் வருடாந்திர PM2.5 அளவுகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமான குறைப்பை அடைய முடியாது. இதனால் தேசிய வெளிப்புற காற்றின் தர நிலைகளை (National Ambient Air Quality Standards) பூர்த்தி செய்யவும் இயலாத நிலை ஏற்படும் என்று எச்சரிக்கப்படுகிறது எனக் குறிப்பிடுகிறார்.


— இந்தப் பகுதியில் நகர்ப்புற மற்றும் தொழில்துறை வளர்ச்சியிலிருந்து மாசு ஏற்படுதலைக் குறைப்பதென்பது மிகப்பெரிய சவாலாகும். இதற்கு நடவடிக்கைகளில் உள்ள இடைவெளிகளைக் குறைப்பதற்கும், எல்லை தாண்டிய மாசுபாட்டின் தாக்கத்தைக் குறைப்பதற்கும் இந்திய-கங்கை சமவெளி முழுவதும் மேம்பட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் முறையான மாற்றங்கள் தேவைப்படுகிறது. 


— விரைவான தீர்வுகள் எதுவும் இல்லை என்பதை ஒப்புக்கொள்வது முக்கியமாகிறது. கடந்த காலங்களில்கூட, போக்குவரத்துக்கான அசுத்தமான டீசல் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் தொழில்களில் உள்ள நிலக்கரியை தொடர்ந்து குறிவைத்து, பெரிய அளவிலான எரிசக்தி அமைப்புகளின் மறுசீரமைப்பு மற்றும் இயற்கை எரிவாயு அடிப்படையிலான உள்கட்டமைப்பு மேம்பாடு தேவைப்பட்டதன் மூலமே டெல்லியால் அதன் மாசுபாட்டைக் குறைக்க முடிந்தது.


— டெல்லி முறையான தீர்வுகளைக் கையாள்வதில் இருந்து பின்வாங்க முடியாது. குளிர்காலத்தில் ஏற்படுகின்ற உள்ளூர் மாசு மூலங்களில் ஏறக்குறைய பாதியளவுக்குக் காரணமான வாகனப் புகையைக் கட்டுப்படுத்த, டெல்லிக்கு வாகனப் பிரிவு வாரியாக உமிழ்வு கொண்ட மின்சார வாகனங்கள் (Electric Vehicle - EV) பயன்பாட்டுக்கான கட்டாய ஆணையும், அத்துடன் உள்எரிப்பு இயந்திரங்களுக்கான (Internal Combustion Engines (ICE)) ஊக்கமின்மைகள் மற்றும் அவற்றை செயல்படுத்துவதற்கான ஆதரவு நடவடிக்கைகள் தேவைப்படுகிறது.


— டெல்லி, தனது போக்குவரத்துத் தேவைகளில் 80 சதவிகிதத்தை ஒருங்கிணைந்த பொதுப் போக்குவரத்து அமைப்புகளால் பூர்த்தி செய்யும் முக்கியத் திட்டங்கள் இலக்கை அடையாவிட்டால், வேறு எந்த முயற்சியும் போதுமானதாக இருக்காது. உதாரணமாக, சேவையை மேம்படுத்தாமலும், மக்களின் பொதுப் பயன்பாட்டை அதிகரிக்காமலும் மின்சாரப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது உதவாது என்று தெரிவிக்கப்படுகிறது. 


— வாகன நெரிசல் மற்றும் மாசுபாட்டைப் குறைக்கும் வகையிலான மேம்பாலங்கள் மற்றும் அகலமான சாலைகள் உள்ளிட்ட கார் போன்ற வாகனங்களை மையப்படுத்தும் சாலை உள்கட்டமைப்புக்காகப் பெரிய அளவிலான நிதிகள் ஒதுக்கப்படுகின்றன. இந்த நிதி, நடப்பதற்கும் சைக்கிள் ஓட்டுவதற்கும் ஏற்ற சுற்றுப்புறங்கள் மற்றும் வாகனங்களுக்கான சாலைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களுக்குத் திறம்பட விலை நிர்ணயம் செய்தல் ஆகியவற்றுடன் போக்குவரத்து சார்ந்த மேம்பாட்டுடன் (Transit-oriented development) சீரமைக்கப்பட வேண்டும் என்கின்றனர்


— இதேபோல், குளிர்காலத்தில் அதிகமாக இருக்கும் தொழில்துறை உமிழ்வைக் கட்டுப்படுத்த, அங்கீகரிக்கப்பட்ட சுத்தமான எரிபொருட்களைச் செயல்படுத்துவதில் உள்ள தடைகளைச் சாதகமான விலை நிர்ணயக் கொள்கையுடன் நிவர்த்தி செய்து, தொழில்நுட்பரீதியாக சாத்தியமான இடங்களில் தொழில்துறை செயல்முறைகளின் மின்மயமாக்கலை ஊக்குவிக்க வேண்டும்.


— நகராட்சி அமைப்புகள் 100 சதவிகித வீட்டுக் கழிவுகளையும் சேகரித்து பிரித்து வைக்கவில்லை என்றால், கழிவுகள் தொடர்ந்து எரியும். டெல்லிக்குக் கழிவு பதப்படுத்தும் திறனில் மிகப்பெரிய விரிவாக்கம் தேவைப்படுகிறது. இதில் உரமாக்குதல் மற்றும் சுருக்கப்பட்ட உயிரிவாயு உற்பத்தி ஆகியவை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (Compressed Natural Gas (CNG)) வலைப்பின்னலுக்கு அளிக்கப்பட வேண்டியது அவசியம். அதேநேரத்தில், கலப்பு-உணவு அடிப்படையிலான கழிவிலிருந்து-ஆற்றல் (waste-to-energy) அமைப்புகளை படிப்படியாக நிறுத்த வேண்டும்.


— மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவதற்கு ஒரு கட்டாய ஆணை இருப்பதும் அவசியமாகிறது. எடுத்துக்காட்டாக, டெல்லியில் கட்டுமானம் மற்றும் இடிப்பு கழிவுகளுக்கான மறுசுழற்சி ஆலைகள் உள்ளன, ஆனால் புதிய பொது மற்றும் தனியார் கட்டுமானங்கள் அனைத்திலும் குறைந்தது 10 முதல் 20 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட மூலப்பொருட்களைப் பயன்படுத்த ஒரு ஒழுங்குமுறை கட்டாய ஆணை உறுதி செய்ய வேண்டும்.


— அடிப்படை விஷயம் என்னவென்றால், என்ன செய்ய வேண்டும் என்று நமக்குத் தெரியும். ஆனால், நகர்ப்புற உள்கட்டமைப்பில் உள்ள பொதுச் செலவினங்களையும் தனியார் முதலீடுகளையும் தூய்மையான காற்று இலக்குகளுடன் சீரமைக்க, ஒழுங்குமுறை கட்டாய ஆணைகள், இணக்கத் தேவைகள் மற்றும் நிதி அளிப்பாளர்கள் போதுமான அளவில் இல்லை. நமக்கு வழி தெரியும். ஆனால், அதைச் செயல்படுத்த விருப்பமோ அல்லது படைப்புத் திறனோ  இல்லை.


உங்களுக்குத் தெரியுமா?


— இந்த நெல் அறுவடைக் காலம் டிசம்பர் மாதம் முடிவடையும்போது,  ஒன்றிய அரசின் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் அமைப்பானது, செயற்கைக்கோள்களால்  வரையறுக்கப்பட்ட எரிந்த பகுதிகளைச் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவதால், வைக்கோல் எரிக்கப்பட்ட பண்ணைகளின் அளவைப் பற்றிய மிகவும் துல்லியமான தரவுகளைப்  பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.


 — கடந்த ஆண்டு, தேசிய தலைநகர் பகுதி மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள காற்றின் தர மேலாண்மை ஆணையம் (Commission for Air Quality Management (CAQM)) பண்ணைகளின் வரைபடத்தை மேம்படுத்துவதன் மூலம் வைக்கோல் எரிப்புச் சம்பவங்கள் குறைவாகக் கணக்கிடப்படுவதைத் தீர்க்க நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவித்துள்ளது.


— கடந்த ஆண்டு ஒரு முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டாலும், இந்த ஆண்டு முழு அளவிலான சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில அதிகாரிகளின் ஆதரவுடன், களச் சரிபார்ப்பு அல்லது உறுதிப்படுத்துதல் தொடங்கிவிட்டதாக இந்த விவகாரம் குறித்து அறிந்த பலரும் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.


— இந்தச் செயல்பாட்டில் தேசிய தொலை உணர்வு மையம் (National Remote Sensing Centre (NRSC)), பஞ்சாபில் உள்ள தொலை உணர்வு மையங்கள், ஹரியானா விண்வெளிப் பயன்பாட்டு மையம், இந்த மாநிலங்களில் உள்ள மாவட்ட அதிகாரிகள் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (Indian Council of Agricultural Research (ICAR)) ஆகியவை ஈடுபட்டுள்ளன. 


— ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் சென்டினல்-2 (Sentinel-2) உட்படச் செயற்கைக்கோள்கள், பயிர்க்கழிவுகள் எரிக்கப்பட்ட பண்ணை பரப்பளவை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் உயர் தெளிவுத்திறன் கொண்ட 10 மீட்டர் அளவிலான படங்களைத் தருகின்றன. இந்தக் காட்சிகள் மாநில அரசுகளுடன் சரிபார்ப்புக்காகப் பகிரப்படுகின்றன என்று இந்த வளர்ச்சிகள் குறித்து அறிந்த ஒரு விஞ்ஞானி கூறினார். இந்தச் செயற்கைக்கோள் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை அந்தப் பகுதியைக் கடந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


— மற்ற தயாரிப்புகளின் படங்களும் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் சென்டினல்-2 திறந்த மூலமாக (open source) இருப்பதால் மிகவும் நம்பப்படுகிறது. ஏனெனில், அது வயல்களில் எரிக்கப்பட்ட அடையாளங்களைக் கண்டறிய ஒளியியல் படங்கள் (Optical images), அருகில்-அகச்சிவப்பு படங்கள் (near-infrared images), குறுகிய-அலை அகச்சிவப்பு 1 (short-wave infrared 1) மற்றும் குறுகிய-அலை அகச்சிவப்பு 2 (short-wave infrared 2) படங்கள் பயன்படுத்தப்படுகின்றன.



Original article:

Share: