சமீபத்தில், பல்வேறு எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள், குறிப்பாக தென்னிந்தியாவைச் சேர்ந்தவை, தற்போதைய நிதிப் பகிர்வு திட்டத்தின்படி (scheme of financial devolution) தங்களுக்கு நியாயமான பங்கு கிடைக்கவில்லை என்று கூறி வருகின்றன. வரி வசூலில் அவர்களின் பங்களிப்புடன் ஒப்பிடும்போது, வரி வருவாயில் விகிதாச்சாரத்திற்கும் குறைவான பங்கு குறித்து அவர்கள் பிரச்சினைகளை எழுப்பியுள்ளனர்.
பிரிக்கக்கூடிய வரிகளின் தொகுப்பு (divisible pool of taxes) என்றால் என்ன?
அரசியலமைப்பின் 270வது பிரிவு மத்திய அரசால் சேகரிக்கப்பட்ட வரி வருமானம் மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையில் எவ்வாறு பிரிக்கப்படுகிறது என்பதை சுட்டி காட்டுகிறது. கார்ப்பரேஷன் வரி (corporation tax), தனிநபர் வருமான வரி (personal income tax), மத்திய ஜிஎஸ்டி மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியில் (Integrated Goods and Services Tax IGST) மத்திய அரசின் பங்கு ஆகியவை பகிரப்பட்ட வரிகளில் அடங்கும். அரசியலமைப்பின் பிரிவு 280இன் படி இந்த நிதிப்பகிர்வு ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் நிதி ஆணையத்தால் (Finance Commission) தீர்மானிக்கப்படுகிறது. வரிப் பங்குகளுக்கு மேல் அதிகமாக, நிதிக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மாநிலங்கள் மானிய உதவிகளையும் பெறுகின்றன. குறிப்பிடத்தக்க வகையில், பிரிக்கக்கூடிய தொகுப்பில் மத்திய அரசால் விதிக்கப்பட்ட மேல்வரி (cess) மற்றும் கூடுதல் கட்டணம் சேர்க்கப்படவில்லை.
நிதி ஆணையம் எவ்வாறு அமைக்கப்படுகிறது?
நிதி ஆணையம் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒன்றிய அரசால் உருவாக்கப்படுகிறது. இது ஒரு தலைவர் மற்றும் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் நான்கு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தகுதிகள் நிதி ஆணையம் (இதர ஏற்பாடுகள்) சட்டம், 1951 (Finance Commission (Miscellaneous Provisions) Act, 1951) இல் குறிப்பிடப்பட்டுள்ளன. டாக்டர் அரவிந்த் பனகாரியா (Dr.Arvind Panagariya) தலைமையிலான 16 வது நிதி ஆணையம் 2026-31 காலத்திற்கான பரிந்துரைகளை வழங்க மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒதுக்கீட்டின் அடிப்படை (basis for allocation) என்ன?
15-வது நிதிக்குழு மாநிலங்கள் பகிர்ந்தளிக்கக்கூடிய (vertical devolution) தொகுப்பில் 41% பெற வேண்டும் என்று பரிந்துரைத்தது. மாநிலங்களுக்கிடையேயான கிடைமட்ட அதிகாரப் பகிர்வு (horizontal devolution) வெவ்வேறு அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டது. அட்டவணை 1ல் , 11 முதல் 15 வது நிதி ஆணையத்திலிருந்து கிடைமட்ட அதிகாரப் பகிர்வுக்கான அளவுகோல்களை சுட்டி காட்டுகிறது.
15 வது நிதி ஆணையத்தின் அளவுகோல்களின் சுருக்கமான விளக்கம். இங்கே, 'வருமான தூரம்' (‘Income distance’) என்பது அதிக தனிநபர் வருமானம் கொண்ட மாநிலமான ஹரியானாவிலிருந்து ஒரு மாநிலத்தின் வருமானம் எவ்வளவு தூரம் உள்ளது என்பதை அளவிடுகிறது. குறைந்த வருமானம் கொண்ட மாநிலங்கள் நியாயத்தை பராமரிக்க அதிக பங்கைப் பெறுகின்றன. 'மக்கள்தொகை' என்பது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்கள்தொகையைக் குறிக்கிறது. முந்தைய ஆணையங்கள் 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருந்து மக்கள்தொகை தரவைப் பயன்படுத்தின, ஆனால் இது 15 வது நிதி ஆணையத்துடன் மாறியது. 'வனம் மற்றும் சூழலியல்' (‘Forest and ecology’) என்பது அனைத்து மாநிலங்களையும் சேர்த்து ஒப்பிடுகையில் ஒவ்வொரு மாநிலத்தின் அடர்ந்த காடுகளின் பங்கைக் கருதுகிறது. 'மக்கள்தொகை செயல்திறன்’ (The demographic performance) மாநிலங்கள் தங்கள் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது. குறைந்த கருவுறுதல் (lower fertility ratio) விகிதங்களைக் கொண்ட மாநிலங்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுகின்றன. 'வரி முயற்சி’ (Tax Effort) என்பது சிறந்த வரி வசூல் திறனுடன் இருக்கும் மாநிலங்களுக்கு பரிசு அளிப்பதாகும் .
என்னென்ன பிரச்சினைகள்?
அரசியலமைப்பு சட்டமன்ற, நிர்வாக மற்றும் நிதி விஷயங்களில் ஒரு வலுவான ஒன்றிய அதிகாரத்தை நோக்கி சாய்கிறது. ஆனால், இது கூட்டாட்சியை நிலைநிறுத்துகிறது. மாநிலங்கள் வளங்களில் நியாயமான பங்கு பெறுவதை உறுதி செய்கிறது. மத்தியஅரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சி தலைமையிலான மாநிலங்களுக்கும் இடையிலான அரசியல் வேறுபாடுகள் பிரச்சினையை அதிகரிக்கின்றன. ஆனால், கவனிக்க வேண்டிய உண்மையான கவலைகள் உள்ளன.
முதலாவதாக, 2024-25 ஆம் ஆண்டில் ஒன்றிய அரசின் வரி ரசீதுகளில் சுமார் 23% மேல்வரி (cess) மற்றும் கூடுதல் கட்டணத்திலிருந்து வருகிறது, அவை மாநிலங்களுடன் பகிரப்படவில்லை. 2022-23, 2023-24 மற்றும் 2024-25 ஆம் ஆண்டுகளுக்கான ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாய் முறையே ₹30.5, ₹34.4 மற்றும் ₹38.8 லட்சம் கோடி. மாநிலங்களின் பங்கு முறையே ₹9.5, ₹11.0 மற்றும் ₹12.2 லட்சம் கோடியாக இருந்தது. இது, மொத்த வரி ரசீதுகளில் சுமார் 32% ஆகும். இது 15 வது நிதி ஆணையம் பரிந்துரைத்த 41% ஐ விட மிகக் குறைவு. ஜிஎஸ்டி இழப்பீட்டு செஸ் போன்ற சில செஸ், ஜிஎஸ்டி தொடர்பான வருவாய் பற்றாக்குறைக்கு மாநிலங்களுக்கு ஈடுசெய்ய எடுக்கப்பட்ட கடன்களை திருப்பிச் செலுத்த பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த நிதிகள் மீது மாநிலங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.
இரண்டாவதாக, ஒவ்வொரு மாநிலமும் மத்திய வரிகளுக்கு பங்களிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் பெறும் தொகையில் குறிப்பிடத்தக்க மாறுபாடு உள்ளது. 2021-22 ஆம் ஆண்டில், தொழில்துறை ரீதியாக வளர்ந்த மாநிலங்கள் பங்களித்த ஒவ்வொரு ரூபாய்க்கும் ஒரு ரூபாய்க்கும் குறைவாகவே பெற்றன. அதே நேரத்தில், உத்தரபிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்கள் அதிக நிதி பகிர்வை பெற்றன. இந்த மாறுபாட்டிற்கு பல நிறுவனங்கள் இந்த மாநில தலைநகரங்களில் தலைமையிடமாக இருப்பதன் காரணமாகும், அங்கு அவை நேரடி வரி செலுத்துகின்றன. இருப்பினும், மாநிலங்களுக்கிடையேயான ஜிஎஸ்டி வசூலில் உள்ள வேறுபாடுகளும் இந்த ஏற்றத்தாழ்வுக்கு காரணிகள் இருக்கின்றன.
மூன்றாவதாக, கடந்த ஆறு நிதிக் குழுக்களில் தென் மாநிலங்களுக்கான வகுக்கக்கூடிய வரிகளின் சதவீத பங்கு குறைந்து வருகிறது. மக்கள்தொகை செயல்திறன் மற்றும் வரி வசூல் திறன் போன்ற காரணிகளைக் காட்டிலும் வருமான ஏற்றத்தாழ்வு மற்றும் மக்கள் தொகை, பரப்பளவு மற்றும் வனப்பகுதி போன்ற மாநில தேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் இந்த குறைப்பு ஏற்படுகிறது. கடைசியாக, நிதி ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட உதவி மானியங்கள் மாநிலங்களுக்கு இடையில் வேறுபடுகின்றன. 15-வது நிதிக்குழு வருவாய் பற்றாக்குறை மானியங்கள், துறை சார்ந்த மானியங்கள், பல்வேறு மாநிலங்களுக்கான மாநில வாரியான மானியங்கள், மாநிலங்களின் மக்கள் தொகை மற்றும் பரப்பளவின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியங்களை பரிந்துரைக்கிறது.
முன்னோக்கி செல்லும் வழி என்னவாக இருக்கும்?
மாநிலங்கள் வருவாயில் சுமார் 40% பங்களிக்கின்றன மற்றும் சுமார் 60% செலவுகளை ஈடுகட்டுகின்றன என்பதை அங்கீகரிப்பது முக்கியம். நிதி ஆணையம் மற்றும் அதன் பரிந்துரைகள் இந்த ஏற்றத்தாழ்வை நிவர்த்தி செய்வதையும், நியாயமான பகிர்வு வழிமுறையை பரிந்துரைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. நாட்டின் சமமான வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டிய பொறுப்பு அனைத்து மாநிலங்களுக்கும் உள்ளது. இருப்பினும், வருவாய் பகிர்வில் சமபங்கு மற்றும் கூட்டாட்சிக்கு இடையில் சமநிலையை பராமரிக்க உதவும் மூன்று முக்கிய சீர்திருத்தங்கள் உள்ளன.
முதலாவதாக, செஸ் (cess) மற்றும் கூடுதல் கட்டண வருவாயின் ஒரு பகுதியைச் சேர்ப்பதன் மூலம் பிரிக்கக்கூடிய தொகுப்பை விரிவுபடுத்தலாம். அதற்கேற்ப வரி வரும் வழிகளை சரிசெய்வதன் மூலம் பல்வேறு செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்களை மத்திய அரசு படிப்படியாக அகற்ற வேண்டும். இரண்டாவதாக, கிடைமட்ட பகிர்வில் (horizontal devolution) செயல்திறன் அளவுகோல்களுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தில் அதிகரிப்பு இருக்க வேண்டும். ஜிஎஸ்டி என்பது ஒன்றிய மற்றும் மாநிலங்களுக்கு இடையே சமமாக பகிரப்பட்ட நுகர்வு அடிப்படையிலான வரி என்பதால், ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தொடர்புடைய ஜிஎஸ்டி பங்களிப்பு எதிர்கால நிதியாண்டுகளில் பரிசீலக்கபட வேண்டும். இறுதியாக, ஜிஎஸ்டி கவுன்சிலைப் போலவே, நிதிக் குழுவின் அமைப்பு மற்றும் செயல்பாட்டில் மாநில பங்கேற்புக்கான முறையான வழிமுறைகள் ஆராயப்பட வேண்டும்.
இந்த நடவடிக்கைகளை அனைத்து மாநிலங்களுடனும் கலந்து ஆலோசித்து மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். பயனுள்ள மற்றும் வெளிப்படையான வளர்ச்சி முயற்சிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதுமான ஆதாரங்களை ஒதுக்கீடு செய்வதன் மூலம் நிதி கூட்டாட்சி கொள்கைகளை மாநிலங்கள் கடைப்பிடிப்பதும் முக்கியமானதாகும்.
ரங்கராஜன். ஆர் ஒரு முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி, 'அரசியல் எளிமைப்படுத்தப்பட்டது' (Polity Simplified) என்ற புத்தகத்தின் ஆசிரியர். தற்போது 'ஆபிசர்ஸ் ஐஏஎஸ் அகாடமி' (Officers IAS Academy)யில் குடிமைப்பணி ஆர்வலர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்.