நவீன நகர்ப்புற கட்டிடக்கலை பறவைகள் தங்கள் வீடுகளை உருவாக்கும் இடங்களை எடுத்துக்கொள்கிறது. மக்கள் கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கு நகர்கிறார்கள். ஆனால் சிட்டுக்குருவி போன்றவை, எதிர் திசையில் நகர்கின்றன.
ஆறு வருடங்களுக்கு முன்பு சிட்டுக்குருவிகள் காணாமல் போனதைப் பற்றி இந்த செய்தித்தாளில் எழுதியிருந்தேன். சிட்டுக்குருவிகளைப் பற்றி மீண்டும் பேச வேண்டிய நேரம் இது.
சைமன் மற்றும் கார்ஃபுன்கெல் (Simon and Garfunkel song) எழுதிய ஒரு பாடல் உள்ளது, "நான் ஒரு நத்தையை விட ஒரு சிட்டுக்குருவியாக இருக்க விரும்புகிறேன்." காடுகள் மறைந்து வருகின்றன, சாலைகளால் மாற்றப்படுகின்றன. எனவே பூமியுடன் குறைவாக இணைந்திருப்பதை உணர்கிறோம். டெல்லியின் மாநில பறவை எது தெரியுமா? தேசியப் பறவை மயில் என்பது பெரும்பாலானோருக்குத் தெரியும். ஆனால் மாநிலப் பறவைகளைப் பற்றி பலருக்குத் தெரியாது. ஹார்ன்பில் திருவிழா காரணமாக ஹார்ன்பில் நாகாலாந்தின் மாநில பறவை என்று சிலர் நினைக்கலாம். ஆனால் உண்மையில் பிளைத்தின் டிராகோபன் (Blyth’s tragopan) ஆகும். டெல்லியின் மாநில பறவை 2012 முதல் வீட்டுச் சிட்டுக்குருவி (house sparrow). அதற்கு முன்பு, டெல்லியில் மாநில பறவை இல்லை. சிட்டுக்குருவிகளில் பல்வேறு வகைகள் இருப்பதால் அது வீட்டுச் சிட்டுக்குருவியா இல்லையா (Passer domesticus) என்பதில் கவனகமாக இருக்க வேண்டும்.
டெல்லியில் இருந்து காணாமல் போன டெல்லி மாநில பறவை சிட்டுக்குருவியாக இருப்பது வியப்பாக உள்ளது. 2010 ஆம் ஆண்டு முதல் மார்ச் 20 ஆம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினமாக (World Sparrow Day) கடைபிடிக்கப்படுகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, சிட்டுக்குருவிகள் டெல்லியில் பொதுவானவை. ஆனால், இப்போது அப்படி இல்லை. "சிட்டுக்குருவி வீழ்வதில் ஒரு சிறப்பு உண்டு" என்று ஹாம்லெட்டை சில மாணவர்கள் இன்னும் மேற்கோள் காட்டுகிறார்கள். ஆனால் வீட்டுச் சிட்டுக்குருவியின் வீழ்ச்சிக்கு விதி காரணமல்ல; இதற்குக் காரணம் மனித வளர்ச்சியும், நகரங்களும்தான்.
வீட்டுச் சிட்டுக் குருவியைப் பார்க்க கோரையா கிராமத்திற்குச் செல்லலாம். "கோரையா" (Goraiya”) என்றால் இந்தியில் வீட்டுச் சிட்டுக்குருவி என்று பொருள், இந்த சிறப்பு கிராமம் கர்ஹி மண்டு காட்டில் நிறுவப்பட்டுள்ளது. டெல்லியின் நான்கு நகர காடுகளில் கர்ஹி மண்டு ஒன்றாகும். சிட்டுக்குருவிக்கு பல சமஸ்கிருத சொற்கள் உள்ளன. மிகவும் பொதுவான சொல் "சதகா" (chataka) ஆகும். இருப்பினும், மிகவும் பிடித்தது "கிருஹபலிபுஜ்" (grihabalibhuj). இந்த வார்த்தை ஒரு வீட்டுச் சிட்டுக்குருவியின் சாரத்தைப் பிடிக்கிறது. இது வீடுகளைச் சுற்றி சிதறிக்கிடக்கும் பிரசாதங்களை உண்ணும் பறவை.
சிட்டுக்குருவிகளின் வீழ்ச்சிக்கு பல காரணங்கள் உள்ளன. உதாரணமாக, 1898 ஆம் ஆண்டில், குதிரை-சாணத்தைப் பற்றி விவாதிக்க ஒரு சர்வதேச மாநாடு நடத்தப்பட்டது. 1900 ஆம் ஆண்டில், லண்டனில் சுமார் 300,000 குதிரைகள் இருந்தன, நியூயார்க்கில் சுமார் 170,000 இருந்தன. இந்த நகரங்கள் குதிரை சாணம் மற்றும் சிறுநீரை நிர்வகிக்கும் சிக்கலை எதிர்கொண்டன. நகர்ப்புற மையங்கள் குதிரைச் சாணத்தால் நிரம்பி வழியும் என்ற கவலைகள் இருந்தன. ஆனால், அது நடக்கவில்லை. குதிரைகளுக்குப் பதிலாக தானியங்கி வாகனங்கள் வந்தன, இது இறுதியில் குதிரை போக்குவரத்துக்கு தடை விதிக்க வழிவகுத்தது. குதிரைகளுக்கு தானியங்கள் உணவளிக்கப்பட்டன, அவை அடிக்கடி சிந்தின, சிட்டுக்குருவிகளுக்கு உணவளித்தன.
இணையத்தில், "ஆங்கிலேயக் குருவியும் வழிப்போக்கனும் மோட்டார் வாகனமும்" (Passer domesticus) என்ற தலைப்பில் “ தி ஆக்" (The Auk) இல் டபிள்யூ எச் பெர்க்டோல்ட் (W H Bergtold) 1921 இல் எழுதிய ஒரு சுவாரஸ்யமான கட்டுரை வெளிவந்தது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, டென்வரின் பரபரப்பான தெருக்களில் பல ஆங்கிலேய சிட்டுக்குருவிகளைப் பார்க்க முடிந்தது என்பதை அது விவரிக்கிறது. பறவைகள் சத்தமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தன. இது ஏன் மாறியது என்பதை கட்டுரை ஆராய்கிறது. அதிகரித்த வேட்டையாடுபவர்கள், நோய்கள், சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் உணவு வழங்கல் குறைதல் போன்ற சாத்தியமான காரணங்களை இது பட்டியலிடுகிறது. நகரத்தின் குதிரைகளின் எண்ணிக்கை குறைவதற்கு முக்கிய காரணம் மோட்டார் வாகனங்களின் அதிகரிப்பு என்று அந்த அறிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாற்றம் பெரும்பாலும் கவனிக்கப்படவில்லை, ஆனால் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. மோட்டார் வாகனங்களினால் சிட்டுக்குருவிகளுக்கு கிடைக்கும் உணவின் அளவு குறைந்து, அவற்றின் தெரு வாழ்க்கையை ஆபத்தானதாக மாற்றி, அவற்றை வணிகப் பகுதிகளிலிருந்து விரட்ட வழிவகுத்தது. இயன் மால்கம் விவரித்த பட்டாம்பூச்சி விளைவைப் போலவே இந்த கட்டுரை எதிர்பாராத விளைவுகளை நினைவூட்டுகிறது.
சிட்டுக்குருவிகளின் வீழ்ச்சிக்கு பறவையியலாளர்கள் பல காரணங்களை சுட்டிக்காட்டுகின்றனர். இருப்பினும், சிட்டுக்குருவிகள் தங்கள் கூடுகளை எங்கே கட்டுகின்றன என்பதைப் பற்றி சிந்திக்கவேண்டும். முன்பெல்லாம் வீடுகளில் சிட்டுக்குருவிகள் கூடு கட்டும் பால்கனிகள் இருந்தன. சில நேரங்களில் அவை உச்சவரம்பு மின்விசிறிகளின் மேல் கூடு கட்டுகின்றன. இப்போதெல்லாம், காற்றுப்பதனம் அதிகரித்ததால், பால்கனிகள் அரிதாகிவிட்டன. நவீன நகர்ப்புற கட்டிடக்கலை சிட்டுக்குருவிகளுக்கான பாரம்பரிய கூடு கட்டும் தளங்கள் பலவற்றை அளித்து விட்டது. மக்கள் கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கு நகரும்போது, சிட்டுக்குருவிகள் எதிர் திசையில் நகர்கின்றன என்று தெரிகிறது.
சமீப காலமாக சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்று இந்திய பறவைகள் நிலை அறிக்கை (Report of Birds of India) சுட்டிக்காட்டுகிறது. சிட்டுக்குருவிகள் மீதான கவலை அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழல் வேர்கள் அறக்கட்டளை போன்ற அமைப்புகள் கூடுகளை வழங்குவதன் மூலமும், சிட்டுக்குருவிகளுக்கு உணவளிக்க மக்களை ஊக்குவிப்பதன் மூலமும் உதவுகின்றன. கூடு கட்டும் இடங்கள் இல்லாததைத் தவிர, சிட்டுக்குருவிகள் மற்ற சவால்களையும் எதிர்கொள்கின்றன. உதாரணமாக, பெரிய நகரங்களில் வீட்டுத் தோட்டங்கள் கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டன. பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு பல பூச்சிகளை அகற்றியுள்ளது.
இந்த பிரச்சினையில் வெளிச்சம் பாய்ச்சும் "டவுன் டு எர்த்" கட்டுரையை நான் நினைவு கூர்கிறேன். தேசிய ஈரநில பாதுகாப்பு திட்டத்தில் (National Wetland Conservation Programme) ஈடுபட்டுள்ள பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்றுக்கான சலீம் அலி மையத்தின் உறுப்பினரும், தற்போது பெங்களூரில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுபவருமான சுப்பிரமண்யா கூறுகையில், பெங்களூரில் சிட்டுக்குருவிகளின் வீழ்ச்சிக்கு பல காரணிகள் உள்ளன. நவீன கான்கிரீட் கட்டிடங்களில் கூடு கட்டும் இடங்கள் இல்லாதது, மறைந்து வரும் சமையலறை தோட்டங்கள் மற்றும் வயல் பீனுடன் தொடர்புடைய ஒரு குறிப்பிட்ட லார்வாக்கள் ஹெலிகோவெர்பா ஆர்மிஜெரா (Helicoverpa armigera) இல்லாதது ஆகியவை இதில் அடங்கும். முன்பெல்லாம் நகர்ப்புற குடும்பங்கள் காய்கறி சந்தைகளில் இருந்து காய்களில் வயல் பீன்ஸை வாங்குவார்கள். காய்களை உடைத்தால் முட்டைப்புழுக்கள் தெரியவரும், சிட்டுக்குருவிகள் அவற்றைத் உண்ணும். இருப்பினும், இப்போது புதிய விதைகள் பொட்டலங்களில் விற்கப்படுவதால், இளம்பருவப்புழுக்கள் (larvas) இனி கிடைக்காது. சிட்டுக்குருவிகள் தங்கள் உணவு ஆதாரத்தை இழக்கிறது.
சிட்டுக்குருவிகள் தங்கள் உணவு மற்றும் வாழ்விடம் இரண்டையும் இழந்து வருவதால், அவற்றின் ஒரே வழி கோரையா கிராம் (Goraiya Gram) போன்ற இடங்களில் தஞ்சம் புகுவதுதான்.
கட்டுரையாளர் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர்.