அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச் சூடு இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு சோகமான நிகழ்வாகும்.
ஏப்ரல் 13, 1919 அன்று, அதாவது 105 ஆண்டுகளுக்கு முன்பு, பிரிகேடியர்-ஜெனரல் ரெஜினால்ட் டயர் (Brigadier-General Reginald Dyer) ஒரு பெரிய கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்த தனது துருப்புகளுக்கு உத்தரவிட்டார். பிரிட்டிசாரின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் 379 பேர் இறந்ததாகக் கூறியது. ஆனால், சில மதிப்பீடுகள் இறப்பு எண்ணிக்கை ஆயிரத்தை எட்டியதாகக் கூறுகின்றன. பல வரலாற்றாசிரியர்கள் இந்த நிகழ்வு இந்தியர்களுக்கும் அவர்களின் பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளுக்கும் இடையிலான உறவை மாற்றியதாக நம்புகிறார்கள். இது இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு முக்கிய தருணமாக மாறியது.
படுகொலை
மார்ச் 1919 இல் ரௌலட் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, போராட்டமானது பஞ்சாப் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் பரவியது. மாகாணம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. அந்த நேரத்தில் பஞ்சாபின் லெப்டினன்ட் கவர்னராக இருந்த மைக்கேல் ஓ'டயர், 1857 இல் நடந்ததைப் போன்ற ஒரு பெரிய எழுச்சியாக மாறிவிடுமோ என்று கவலைப்பட்டார்.
ஏப்ரல் 10 அன்று, அமிர்தசரஸில் போராட்டக்காரர்கள் குழு மீது காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் கலவரத்திற்கு வழிவகுத்தது. நகரில் இருந்த பிரிட்டிஷ் குடியிருப்பாளர்களான ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரையும் போராட்ட கும்பல் தாக்கியது. இந்த நிகழ்வுகள் மைக்கேல் ஓ'டயரின் கிளர்ச்சி குறித்த அச்சங்களை தீவிரப்படுத்தின.
வரலாற்றாசிரியர் கிம் வாக்னர் 1857 ஆம் ஆண்டின் நிகழ்வுகள் கலவரங்களை கிளர்ச்சியாகவும், தேசியவாத போராட்டங்களை பிரிட்டிஷ் எதிர்ப்பு சதிகளாகவும் மாற்றின என்று கூறினார். இது உள்ளூர் அமைதியின்மை பெரும் அரசியல் நெருக்கடிகளாக தீவிரமடைய வழிவகுத்தது. 1919 ஆம் ஆண்டில், அமிர்தசரஸ் போராட்டத்தின் போது, ரெஜினால்ட் டயர் ஏப்ரல் 13 அன்று ஜாலியன் வாலாபாக்கில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார். இது வருடாந்திர பைசாகி திருவிழாவின் போது நடந்தது, அங்கு ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். இந்த படுகொலையை பீப்பாய்க்குள் வைத்து மீன்களை சுடுவது போன்றது (shooting fish in a barrel) என பலர் வர்ணித்தனர். டயரின் நடவடிக்கை ஐரோப்பியர்கள் மீதான தாக்குதல்களுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவும், வரவிருக்கும் ஒரு பெரிய வெடிப்பைத் தடுக்கும் ஒரு தடுப்பு நடவடிக்கையாகவும் இருந்தது என்று வாக்னர் விளக்கினார்.
பிரிட்டிஷாரின் பதில்
பஞ்சாபில் இருந்த பிரிட்டிஷ் நிர்வாகம் டயரின் நடவடிக்கைகளை ஆதரித்து போராட்டக்காரர்களின் அடக்குமுறையை அதிகரித்தது. வைஸ்ராய் செம்ஸ்போர்டு இராணுவச் சட்டத்தை அமல்படுத்தி ஆயிரக்கணக்கானோரைக் கைது செய்தார், நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். படுகொலையின் கொடூரம் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குள் விமர்சனத்திற்கு வழிவகுத்தது. அப்போதைய பிரிட்டனின் வெளியுறவு அமைச்சராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில், டயரின் நடவடிக்கைகளை நாடாளுமன்ற உரையில் கண்டித்தார். ஜூலை 8 அன்று, பிரிட்டிஷ் எம்.பி.க்கள் டயரைக் கண்டிக்க 247க்கு 37 என்ற கணக்கில் வாக்களித்தனர். இறுதியில், 1920 இல், டயர் தனது பனியிலிருந்து நீக்கப்பட்டார்.
பிரிட்டனிலும் இந்தியாவிலும் பலர் அவரை இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியைக் காப்பாற்றிய ஒரு ஹீரோவாகவே கருதினர். விமர்சகர்கள் டயரை ஒரு மோசமான நபர் என்று முத்திரை குத்தினர். சர்ச்சிலின் புகழ்பெற்ற மறுப்பு பேரரசின் வன்முறையை அங்கீகரிப்பதைப் பற்றியது அல்ல என்று வாக்னர் எழுதினார். அதற்கு பதிலாக, 1919இல் அமிர்தசரஸ் படுகொலைக்குப் பிறகு பிரிட்டிஷ் பேரரசின் தார்மீக நிலையை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டது.
இந்தியர்களுக்கு ஒரு திருப்புமுனை
இந்தியர்கள் பெரிய மாற்றத்தை எதிர்கொண்டனர். மே மாதம், செய்தித்தாள்கள் படுகொலை பற்றிய விவரங்களை வெளியிட்டன. இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரபல தலைவரான ரவீந்திரநாத் தாகூர் ஆங்கில அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது நைட்வுட் (knighthood) பட்டத்தை திரும்ப வழங்கினார். அவர் வைஸ்ராய் செம்ஸ்ஃபோர்டுக்கு எழுதிய கடிதத்தில், துன்பப்படும் தனது சக நாட்டு மக்களுடன் தானும் நிற்க விரும்புவதாகக் கூறினார்.
பிபன் சந்திரா மற்றும் பிறர் ஜாலியன் வாலாபாக் படுகொலையின் ஆழமான தாக்கத்தை குறிப்பிட்டு, மிருகத்தனம் முழு தேசத்தையும் திகைக்க வைத்தது என்று எழுதினார்கள். உடனடி பதில் வெளியிடவில்லை என்றாலும், ஒரு குறிப்பிடத்தக்க எதிர்வினை பின்னர் வெளிப்பட்டது. இந்த நிகழ்வு 1987இல் வெளியிடப்பட்ட "இந்தியாவின் சுதந்திரத்திற்கான போராட்டம்" (India’s Struggle for Independence) என்ற அவரின் புத்தகத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
ஜாலியன் வாலாபாக் நிகழ்விற்குப் பின்னர், சில மாதங்களிலேயே மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். இது இந்தியாவின் சுதந்திரத்திற்கான முதல் நாடு தழுவிய இயக்கமாகும். அந்த ஆண்டு அக்டோபரில் வெளியிடப்பட்ட ஒரு தலையங்கத்தில், "எந்த அரசாங்கமும் அதன் மக்களின் சுதந்திரத்தைப் புறக்கணித்தால் மரியாதைக்குரியது அல்ல." என்று காந்தி எழுதினார். இது "எ பஞ்சாப் விக்டிம்"(A Punjab Victim), யங் இந்தியா(Young India), போன்ற இதழ்களில் 1919 இல் வெளியானது.
இந்த நிகழ்வானது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் தார்மீக அதிகாரத்திற்கான இறுதி அடி என்று பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். முன்பு மிதவாதியாக இருந்த இந்தியர்கள் கூட, ரவீந்திரநாத் தாகூர் உட்பட படுகொலையைப் பற்றி கேள்விப்பட்ட பிறகு பிரிட்டிஷ் பேரரசின் மீது நம்பிக்கை இழந்தனர்.
வாக்னர் அமிர்தசரஸ் படுகொலை பற்றி எழுதினார். பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி இந்தியாவில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை இது காட்டுகிறது என்றார். ஆங்கிலேயர்கள் அவ்வளவு வலிமையானவர்கள் அல்ல என்று மக்கள் எப்படி நினைத்தார்கள் என்பதையும் இது காட்டியது. ”காலனித்துவ வன்முறை இறுதியில் உள்ளூர் மக்களை அந்நியப்படுத்துவதன் மூலம் காலனித்துவ ஆட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது மற்றும் பாதிக்கப்பட்டவர்களை தேசியவாத இயக்கங்களின் தியாகிகளாக மாற்றியது" என்று வாக்னர் எழுதினார்.