'அரளி' (‘arali’) என்றும் அழைக்கப்படும் ஒலியாண்டர் செடியின் (oleander plant) இலைகளை சாப்பிட்டதால் 24 வயது பெண் உயிரிழந்துள்ளார். இந்த அழகான மற்றும் நச்சு தாவரங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே.
கேரளாவில் உள்ள இரண்டு கோயில் வாரியங்கள், அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டு, மாநிலத்தில் சுமார் 2,500 கோயில்களை நிர்வகிக்கின்றன. கோயில் பிரசாதங்களில் ஓலியாண்டர் பூக்களை (உள்ளூரில் அரளி என்று அழைக்கப்படுகிறது) பயன்படுத்துவதை தடைவிதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. ஓலியாண்டர் இலைகளை சாப்பிட்ட 24 வயது பெண் ஒருவர் இறந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
முதலில், சரியாக என்ன நடந்தது?
24 வயது செவிலியரான சூர்யா சுரேந்திரன், ஏப்ரல் 30 அன்று ஒலியாண்டர் நச்சை உட்கொண்டதால் இறந்தார். அவர் இங்கிலாந்தில் ஒரு புதிய வேலையைப் பெற்றிருந்தார். ஏப்ரல் 28 அன்று இங்கிலாந்திற்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தார். இருப்பினும், அன்று காலை, ஆலப்புழாவின் பள்ளிபாடியில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே உள்ள ஒரு செடியில் இருந்து சில ஒலியாண்டர் இலைகளை அவர் மென்று சாப்பிட்டார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர் உடல்நிலை சரியில்லாமல் பல முறை வாந்தி எடுக்கத் தொடங்கினார். அதே நாளின் பிற்பகுதியில், அவர் கொச்சி விமான நிலையத்தில் சரிந்து விழுந்து சில நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் காலமானார். அவரது அறிகுறிகளைப் பற்றி விசாரித்தபோது, ஒலியாண்டர் இலைகள் மற்றும் பூக்களை உட்கொண்டதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அவரது பிரேத பரிசோதனை செய்த தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணர், ஒலியாண்டர் விஷம் குறித்து போலீசாரிடம் விளக்கினார்.
ஒலியாண்டர் (oleander) என்றால் என்ன?
நெரியம் ஒலியாண்டர் (Nerium oleander), ஒலியாண்டர் அல்லது ரோஸ்பே (rosebay) என்றும் அழைக்கப்படுகிறது. இது உலகம் முழுவதும் வெப்பமான, சூடான மற்றும் குளிர்ந்த பகுதிகளில் காணப்படும் ஒரு தாவரமாகும். இந்தத் தாவரத்தால் குறைவான தண்ணீரில் வாழ முடியும். மக்கள் பொதுவாக அலங்காரம் மற்றும் இயற்கையை ரசித்தல் ஆகியவற்றிற்கு இதைப் பயன்படுத்துகின்றனர்.
கேரளாவில் இந்த தாவரத்தை அரளி (arali) என்றும் கனவீரம் (kanaveeram) என்றும் அழைக்கிறார்கள். இயற்கையான, வேலிகளை உருவாக்க அவர்கள் அதை நெடுஞ்சாலைகள் மற்றும் கடற்கரைகளில் நடுகிறார்கள். ஒலியாண்டர் பல்வேறு வகைகளில் வருகிறது, ஒவ்வொரு ரகத்திலும் வெவ்வேறு நிறத்தில் பூக்கள் இருக்கும்.
பாரம்பரிய மருத்துவத்தில் ஒலியாண்டர் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?
இந்திய ஆயுர்வேத மருந்தகவியல் (Ayurvedic Pharmacopoeia of India (API)) நூல் ஒலியாண்டரை அங்கீகரிக்கிறது. இது ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மருந்துகளின் தரம், தூய்மை மற்றும் வலிமையைப் பற்றிப் பேசும் ஒரு அரசாங்க ஆவணம். ஒலியாண்டரின் வேர் பட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை தோல் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தலாம்.
ப்ரிஹத்ரயி (Brihattrayi) மற்றும் நிகண்டஸ் (Nighantus) போன்ற பண்டைய ஆயுர்வேத நூல்களில் ஓலியாண்டர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓலியாண்டரின் இலைகள், குறிப்பாக வெள்ளை பூக்கள் கொண்ட வகை, தொழுநோய் போன்ற கடுமையான தோல் நோய்களுக்கு சிகிச்சையளிக்க வெளிப்புறமாக பயன்படுத்தப்படலாம் என்று இந்த நூல்கள் கூறுகின்றன. முக்கியமான ஆயுர்வேத நூல்களில் ஒன்றான சரக் சம்ஹிதா (Charak Samhita), நாள்பட்ட தோல் நோய்களுக்கு ஓலியாண்டரின் இலைகளைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறது. அனாமிகா சவுத்ரி மற்றும் பாவ்னா சிங் ஆகியோர் தங்கள் 2016 ஆராய்ச்சிக் கட்டுரையில் ‘கர்விராபற்றிய விமர்சனம்’ (‘A Critical Review of Karvira’) என்று இதைக் குறிப்பிட்டனர்.
மற்றொரு செவ்வியல் நூலான பாவப்ராகாஷா (Bhavaprakasha) ஒலியாண்டரை ஒரு நச்சு என்று விவரிக்கிறது. ஒலியாண்டர் பல்வேறு நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க முடியும் என்றும் அது கூறுகிறது. பாதிக்கப்பட்ட காயங்கள், தொழுநோய் போன்ற தோல் நோய்கள் மற்றும் நுண்ணுயிரிகள் மற்றும் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் பிரச்சினைகள் ஆகியவை இதில் அடங்கும். அரிப்புக்கு சிகிச்சையளிக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும்.
ஒலியாண்டர் எவ்வளவு நச்சுத்தன்மையுடையது?
ஒலியாண்டர் சில ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் அதன் நச்சுத்தன்மை உலகளவில் அறியப்படுகிறது. ஆராய்ச்சியாளர்கள் ஷானன் டி லாங்ஃபோர்ட் (Shannon D Langford) மற்றும் பால் ஜே போர் ( Paul J Boor) ஆகியோர் சிகிச்சை மற்றும் தற்கொலை ஆகிய இரண்டிற்கும் அதன் வரலாற்றுப் பயன்பாட்டை எடுத்துரைத்தனர். இந்தத் தகவல் 1995-ல் நச்சு இயல் இதழில் ( journal Toxicology in 1995) வெளியிடப்பட்டது. ஒலியாண்டரில் அதன் அனைத்து பகுதிகளிலும் ஒலியாண்ட்ரின், ஃபோலினெரின் மற்றும் டிஜிடாக்சிஜெனின் போன்ற இதய கிளைகோசைடுகள் உள்ளன. அவை உட்கொள்ளும்போது அல்லது எரியும் புகையை உள்ளிழுக்கும்போது தலை சுற்றலை ஏற்படுத்தும்.
கார்டியாக் கிளைகோசைடுகள் (Cardiac glycosides) இதயத்தைப் பாதிக்கும் சக்திவாய்ந்த கலவைகள். அவை இதயத் துடிப்பை வேகமாக செயல்பட வைக்கும். இது சில நிபந்தனைகளுக்குட்பட்டு சிகிச்சையளிப்பதில் உதவியாக இருக்கும். இருப்பினும் ஆபத்தானவை. ஏனெனில், பயனுள்ள மருந்துக்கும் தீங்கு விளைவிக்கும் அளவிற்கும் உள்ள வேறுபாடு சிறியது.
யாராவது ஓலியாண்டரை அதிகமாக உட்கொண்டால், அவர்கள் குமட்டல், வயிற்றுப்போக்கு, வாந்தி, தடிப்புகள், குழப்பம், தலைச்சுற்றல், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, மெதுவான இதயத் துடிப்பு போன்ற தவிர்க்கமுடியாத சூழலில் மரணத்தை ஏற்படுத்தலாம். அறிகுறிகள் பொதுவாக 1 முதல் 3 நாட்கள் வரை நீடிக்கும் மற்றும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருக்கலாம். ஆனால், உயிர் இழப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்று மவுண்ட் சினாய் மருத்துவமனையின் (New York’s Mount Sinai hospital) வலைத்தளம் குறிப்பிடுகிறது.