இந்தியாவின் சில பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை நிலவி வருகிறது. வெப்ப அலைகளை உண்மையிலேயே ஆபத்தானதாக ஆக்குவது வெப்பமான இரவுகள் (warmer nights) மற்றும் அதிக ஈரப்பதம் (high humidity) ஆகும்.
நாட்டின் பெரும்பகுதிகள் வழக்கத்தைவிட நீண்ட வெப்ப அலையைச் சந்திக்கின்றன. வரலாறு காணாத அளவில் பகல்நேர வெப்பநிலை முந்தைய சாதனைகளை முறியடித்து வருகிறது. கடந்த சிலநாட்களாக டெல்லி, பீகார், ஒடிசா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வெயிலின் தாக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக நகரங்கள், நகரமயமாதல் காரணமாக பசுமையான இடங்களை இழந்து வருவதால், நகரங்கள் வெப்பமாகவும், அதிக ஈரப்பதமாகவும் மாறுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இது, அதிக இரவுநேர வெப்பநிலையுடன், வெப்ப அலைகளை மிகவும் தீவிரமாகவும் ஆபத்தானதாகவும் ஆக்குகிறது. குறிப்பாக ஏழைகளுக்கு, வெப்ப சோர்விலிருந்து சிறிதளவு ஓய்வு கிடைக்கிறது.
காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் மற்றும் அதன் பாதிப்புகளை மதிப்பிடும் காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு (Intergovernmental Panel on Climate Change (IPCC)) பணிக்குழு-II (Working Group-II), நகர்ப்புற வெப்பத் தீவு விளைவு (urban heat island effect) நகரங்கள் சுற்றியுள்ள பகுதிகளைவிட பல டிகிரி வெப்பமான காற்றின் வெப்பநிலையை அனுபவிக்க வழிவகுக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக இரவில் நகரங்களுக்கு வெப்ப மாற்றங்களைச் சமாளிப்பதை கடினமாக்குகிறது.
நகர்ப்புற வெப்பத் தீவு விளைவு மற்றும் இரவுநேர வெப்பநிலை அதிகரிப்பு
மரங்கள் மற்றும் நீர்நிலைகள் போன்ற இயற்கையான அம்சங்களைவிட கற்காரையால் (Concrete) செய்யப்பட்ட கட்டமைப்புகள், கட்டிடங்கள், நடைபாதைகள், சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் சூரியனின் வெப்பத்தை உறிஞ்சி மீண்டும் வெளியிடுகின்றன. இந்த கற்காரைக் (Concrete) கட்டமைப்புகள் மற்றும் பசுமை குறைவாக உள்ள நகரங்கள், சுற்றியுள்ள சூழ்நிலை, பசுமையான பகுதிகளுடன் ஒப்பிடும்போது அதிக வெப்பநிலையின் "தீவுகளாக" (islands) மாறுகின்றன. இது நகர்ப்புற வெப்பத் தீவு விளைவு (Urban heat island effect) என்று அழைக்கப்படுகிறது. அதிக நகரமயமாக்கல் அதிகரித்து வருவதால் இரவு நேரத்தில் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகிறது.
புவனேஸ்வரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (Indian Institutes of Technology (IIT)) அறிஞர்களான சவுமியா சத்யகாந்த சேத்தி மற்றும் வி வினோஜ் ஆகியோர் 2003-2020 வரை 141 இந்திய நகரங்களில் இரவு நேர வெப்பநிலையை ஆய்வு செய்தனர். ஏறக்குறைய, அனைத்து நகரங்களும் இரவுநேர வெப்பநிலையானது அதிகரிப்பைக் கண்டன. இதன் சராசரி விகிதம் 0.52+/-0.19 டிகிரி செல்சியஸ் ஆகும். "நகரமயமாக்கல் மட்டுமே இந்திய நகரங்களில் வெப்பமயமாதலில் ஒட்டுமொத்தமாக 60% அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது" என்று நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்திற்காக (Centre for Science and Environment (CSE)) அனுமிதா ராய் சவுத்ரி, சோம்வன்ஷி மற்றும் ஷரன்ஜீத் கவுர் ஆகியோர் நடத்திய மற்றொரு ஆய்வில், நகர்ப்புறங்களில் பகல் மற்றும் இரவு வெப்பநிலைகளுக்கு இடையிலான வேறுபாடு காலப்போக்கில் குறைந்துள்ளது என்று கண்டறியப்பட்டது. பகல்நேர மற்றும் இரவுநேர வெப்பநிலையை ஒப்பிடுகையில், 2001-10 காலகட்டத்தில் இரவுகள் 6.2-13.2 டிகிரி செல்சியஸ் குளிர்ச்சியான நிலையாக இருந்தது. ஆனால் 2014-23 காலகட்டத்தில் 6.2-11.5 டிகிரி செல்சியஸ் மட்டுமே குளிர்ச்சியாக இருந்தது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கொல்கத்தாவைத் தவிர, அனைத்து நகரங்களிலும் இரவு நேர குளிர்ச்சி குறைந்துள்ளது.
நகர்ப்புற வெப்பத் தீவு விளைவை (Urban heat island effect) எதிர்த்துப் போராடுவதற்கு அதிக மரங்களை நடவு செய்தல் மற்றும் கட்டப்பட்ட பகுதிகளின் அடர்த்தியைக் குறைத்தல் போன்ற நீண்டகாலத் தீர்வுகள் முக்கியம் என்று நிலையான எதிர்கால ஒத்துழைப்பின் ஆதித்யா வலியதன் பிள்ளை கூறினார். "தற்போது ஏற்படக்கூடிய வெப்பம் இந்தியாவின் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீது காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் பயங்கரமான எண்ணிக்கையை நினைவூட்டுகிறது" என்று அவர் கூறினார்.
ஈரப்பதம் மற்றும் வெப்பமான இரவுகள் மனித உடலை எவ்வாறு பாதிக்கின்றன?
வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் வெப்பமான இரவுகளின் அதிகரிப்பு ஆகியவை கோடைகாலத்தை மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக ஆக்குகின்றன. மனிதர்கள் வியர்வை மூலம் தங்கள் உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்துகிறார்கள். தோலில் இருந்து வியர்வை ஆவியாதல் நம் உடலை குளிர்விக்கிறது. ஆனால், அதிக ஈரப்பதம் இது நடப்பதைத் தடுக்கிறது. இது உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்.
காந்திநகர் இந்திய பொது சுகாதார நிறுவனத்தின் கெளரவ பேராசிரியரும் முன்னாள் இயக்குநருமான டாக்டர் திலீப் மாவலங்கர் கூறியதாவது, வெப்பத்திற்கு எதிர்வினையாக, “இதயம் நமது தோலுக்கு அதிக இரத்தத்தை செலுத்தத் தொடங்குகிறது. இது உடலின் வெப்பநிலையை சீராக்க உதவும் வியர்வை சுரப்பிகளை செயல்படுத்துகிறது. ஆனால் வியர்வையின் விளைவாக மற்ற உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் குறைவாகவே கிடைக்கிறது,” என்று மேலும் விளக்கியுள்ளார்.
ஈரப்பதமான சூழ்நிலைகளில், உடல் சிறியளவில் தொடர்ந்து வியர்க்கிறது. இதனால் நீரிழப்பு, உப்பு ஏற்றத்தாழ்வுகள் மற்றும் உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் குறைகிறது. உடலில் வெப்பநிலை ஒழுங்குபடுத்தும் செயல்முறையானது வேலை செய்யாதபோது, அது அதிக வெப்பமடைகிறது.
டாக்டர் மாவ்லங்கர் மேலும் கூறுகையில், "வெப்பநிலை மிக அதிகமாக இருந்தால், மூளையில் உள்ள செல்லுலார் செயல்முறைகள் பாதிக்கப்படுகின்றன. அதிக ஈரப்பதம் மற்றும் வெதுவெதுப்பான இரவுகள் நம் உடல்களை ஓய்வெடுக்கவும் மீட்கவும் கடினமாக்கும். இது முதலில் மயக்கத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும், மோசமான சூழ்நிலைகளில், இது வெப்பப் பக்கவாதம் மற்றும் உறுப்பு பிரச்சனைகள் போன்றவற்றுக்கு வழிவகுக்கும்.
Journal Science Advances இதழில் வெளியிடப்பட்ட 2017-ம் ஆண்டு ஆய்வில், 1960 மற்றும் 2009-க்கு இடையில் இந்தியாவில் கோடை வெப்பநிலை அதிகரித்தபோது, வெப்பத்தால் பலர் இறப்பதற்கான வாய்ப்புகள் 146% அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது என்று கண்டறியப்பட்டது.