டிஜிட்டல் சுகாதார ஊக்கத்தொகை திட்டத்தை ஒன்றிய அரசு ஏன் நீட்டித்துள்ளது? -அங்கிதா உபாத்யாய்

     இத்திட்டத்தின் கீழ், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், சிகிச்சையகங்கள், நர்சிங் ஹோம்கள், நோய் கண்டறியும் ஆய்வகங்கள் மற்றும் மருந்தகங்கள், ஒரு மாதத்திற்கு 100 பரிவர்த்தனைகளின் வரம்புக்கு மேல், டிஜிட்டல் மயமாக்கும் ஒவ்வொரு கூடுதல் பதிவிற்கும் ரூ.20 வழங்கப்படுகிறது.


நோயாளிகளின் சுகாதாரப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கும் அவற்றை ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதார கணக்குடன் (Ayushman Bharat Digital Health Account (ABHA ID)) இணைப்பதற்கும் டிஜிட்டல் சுகாதார ஊக்கத் திட்டத்திற்கு (Digital Health Incentive Scheme (DHIS)) ஒன்றிய அரசு ஒரு வருட கால நீட்டிப்பை வழங்கியுள்ளது. ஜனவரி 1, 2023 அன்று தொடங்கப்பட்ட இத்திட்டம் இப்போது ஜூன் 30, 2025 வரை நடைமுறையில் இருக்கும். இத்திட்டத்தின் மூலம் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்துவது குறித்த விவரங்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடமிருந்து ஒன்றிய அரசு கோரியுள்ளது.


இத்திட்டத்தின் கீழ், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், சிகிச்சையகங்கள், நர்சிங் ஹோம்கள், நோய் கண்டறியும் ஆய்வகங்கள் மற்றும் மருந்தகங்கள், ஒரு மாதத்திற்கு 100 பரிவர்த்தனைகளின் வரம்புக்கு மேல், டிஜிட்டல் மயமாக்கும் ஒவ்வொரு கூடுதல் பதிவிற்கும் ரூ.20 வழங்கப்படுகிறது. டிஜிட்டல் சுகாதார பதிவுகளை உருவாக்கும் பொது மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் டிஜிட்டல் தீர்வு நிறுவனங்கள் (digital solution companies (DSC)) ஆகிய இரண்டிற்கும் இந்த திட்டம் பொருந்தும். ஒவ்வொரு வசதி அல்லது டிஜிட்டல் தீர்வு நிறுவனமும் ரூ.4 கோடி வரை ஊக்கத்தொகையைப் பெறலாம்.


திட்டம் ஏன் நீட்டிக்கப்பட்டது?


டிஜிட்டல் சுகாதார பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கும், டிஜிட்டல் ஆரோக்கியத்தை ஏற்றுக்கொள்வதற்கு சுகாதார வழங்குநர்களுக்கான (healthcare providers) ஊக்கத்தை வழங்குவதற்கும் இந்தத் திட்டம் தேசிய சுகாதார ஆணையத்தால் (National Health Authority (NHA)) ஜனவரி 1, 2023 அன்று தொடங்கப்பட்டது.


அதைத் தொடர்ந்து, தேசிய சுகாதார ஆணையம் (NHA) ஏப்ரல் 2023-ல் குறைக்கப்பட்ட பரிவர்த்தனை வரம்புகள் போன்ற தளர்வுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மருத்துவமனையின் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு (health management information system (HMIS)) மற்றும் ஆய்வக மேலாண்மை தகவல் அமைப்பு (laboratory management information system (LMIS)) போன்ற டிஜிட்டல் சுகாதாரத் தீர்வுகளை வழங்குபவர்கள் மலிவு விலையில் சரியான மென்பொருளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


X வலைதளத்தில், தேசிய சுகாதார ஆணையம் (NHA) பகிர்ந்த புதுப்பிப்பின்படி, அது காட்டிய நல்ல முடிவுகளைக் கருத்தில் கொண்டு திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. "இந்த நீட்டிப்பு சுகாதார வசதிகளை அவற்றின் செயல்பாடுகளுக்கு அவசியமான டிஜிட்டல் முன்நிபந்தனைகளைத் தழுவுவதில் மேலும் ஊக்குவிக்க உதவும்" என்று அந்தப் பதிவில் கூறியது.


இது மருத்துவமனைகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?


மருத்துவமனைகள் தங்கள் வசதியை டிஜிட்டல் மயமாக்குவதற்கான செலவை திரும்பப் பெற இந்தத் திட்டம் உதவுகிறது. இந்த செலவு பெரும்பாலும் மருத்துவமனைகள் டிஜிட்டல் ஆரோக்கியத்திற்கு மாறுவதற்கு ஒரு குறிப்பிடத்தக்க இடையூறாக அறிவிக்கப்பட்டது.


மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் கணினிகள் மற்றும் மடிக்கணினிகளை நிறுவ வேண்டும், இணைய இணைப்புகள் வாங்க வேண்டும் மற்றும் டிஜிட்டல் மென்பொருள் (HMIS/LMIS) வாங்க வேண்டும். உடல் ரீதியாக வேலை செய்வதிலிருந்து டிஜிட்டல் முறைக்கு மாறுவது நடத்தையை மாற்றுவதில் கவனம் செலுத்தும் ஒரு கூறுகளையும் உள்ளடக்கியது. இத்திட்டம் UPI-ஐ ஊக்குவிப்பதற்காக வழங்கப்படும் சலுகைகளைப் போன்றது.


மருத்துவமனைகள் மற்றும் டிஜிட்டல் சுகாதார நிறுவனங்கள் ஊக்கத்தொகையை எவ்வளவு பெற்றுள்ளன?


4,005 சுகாதார வசதிகள் இத்திட்டத்திற்கு பதிவு செய்துள்ளதாக பொதுப் பலகை காட்டுகிறது. இதில் 1,085 தனியார் வசதிகள் மற்றும் 41 டிஎஸ்சிகள் அடங்கும், இவற்றில் 36 தனியார் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. DHIS-ஐ மேற்பார்வையிடும் தேசிய சுகாதார ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர், 83 தனியார் சுகாதார வசதிகள் உட்பட 584 சுகாதார வசதிகள் மற்றும் 12 டிஜிட்டல் தீர்வு நிறுவனங்கள் (digital solution companies (DSC)) (அவற்றில் 10 தனியார் நிறுவனங்களுடன்) திட்டத்தைப் பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.


இதுவரை சுமார் ரூ.34.5 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில், ரூ.24.91 கோடி சுகாதாரப் பராமரிப்பு வசதிகளுக்கு (ரூ. 24.24 கோடி பொது வசதிகளுக்கும், ரூ. 66.88 லட்சம் தனியார் வசதிகளுக்கும்). ரூ.9.59 கோடி டிஜிட்டல் தீர்வு நிறுவனங்களுக்கு (DSC) (பொது டிஎஸ்சிகளுக்கு ரூ.6.34 கோடி, ரூ.3.25 கோடி தனியார் டிஎஸ்சிகளுக்கு என மொத்தம் ரூ.34.5 கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளது. பொது டி.எஸ்.சி.க்களில் தேசிய தகவல் மையம் (National Informatics Centre (NIC)) மற்றும் மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையம் (Centre for Development of Advanced Computing (C-DAC)) போன்ற நிறுவனங்கள் அடங்கும். அவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு eHospital மற்றும் eSushrut தீர்வுகளை வழங்குகிறார்கள்.


இது நோயாளிகளுக்கு எவ்வாறு நன்மை பயக்கும்?


DHIS பராமரிப்பு வழங்குநர்களை (care providers) டிஜிட்டல் மயமாக மாற உதவுகிறது. இது சிறந்த சுகாதார சேவைகள் மற்றும் நோயாளிகளுக்கு அதிக வசதியை செயல்படுத்துகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செயல்படுத்துவதன் மூலம், நோயாளியின் காத்திருப்பு நேரம் குறைகிறது. நோயாளிகள் QR குறியீட்டை ஸ்கேன் செய்து விரைவான வெளி நோயாளி பிரிவினரின் (OPD) பதிவுகளைப் பெற முடியும். அவர்கள் தங்கள் சுகாதாரப் பதிவுகளை பராமரிப்பு வழங்குநர்களுடன் பாதுகாப்பாகக் காணலாம், அணுகலாம் மற்றும் பகிர்ந்து கொள்ளலாம்.


இத்திட்டம் இல்லாமல், மருத்துவமனைகள் டிஜிட்டல் மயமாக்கல் செலவை நோயாளிகளிடமிருந்து வசூலிக்க வாய்ப்புள்ளது. 


டிஜிட்டல் பதிவுகள் நோயாளிகளை மீண்டும் சோதனை செய்வதைத் தடுக்கின்றன, ஏனெனில் அவர்களின் பதிவுகள் பாதுகாப்பாக சேமிக்கப்படுகின்றன, இது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே நகரும் நோயாளிகளுக்கு குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.


ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதார கணக்கு (Ayushman Bharat Digital Health Account (ABHA ID)) என்றால் என்ன, அதன் நோக்கம் என்ன?


ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதார கணக்கு (ABHA ID) என்பது ஆதார் அடையாளத்தைப் போலவே மக்களுக்கான தனித்துவமான அடையாளமாகும். இது அவர்களின் மருத்துவப் பதிவுகளை டிஜிட்டல் முறையில் சேமித்து பகிர அனுமதிக்கிறது. இதுவரை, சுமார் 64 கோடி ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதார கணக்குகள் (ABHA ID) உருவாக்கப்பட்டுள்ளன என்று தேசிய சுகாதார ஆணையம் (NHA) தெரிவித்துள்ளது.


அடையாள முறை உருவாக்கப்பட்டதும், டிஜிட்டல் கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட மையங்களில் ஒரு நோயாளி சுகாதார சேவையைப் பெறும்போதெல்லாம், அவர்களின் அனைத்துப் பதிவுகளும் அதனுடன் இணைக்கப்படுகின்றன. மருத்துவரின் பரிந்துரைகள் மற்றும் நோயைக் கண்டறியும் சோதனை முடிவுகள் போன்ற சுகாதாரப் பதிவுகளைப் பாதுகாப்பாக சேமிக்க, அணுக மற்றும் பகிர இந்த அடையாள முறையானது பயன்படுத்தப்படலாம்.


Share: