தினசரி உலகளாவிய சராசரி வெப்பநிலை 17.09 டிகிரி செல்சியஸை எட்டியது. இது ஜூலை 6, 2023 அன்று நிர்ணயிக்கப்பட்ட முந்தைய அதிகபட்ச வெப்பநிலை பதிவான 17.08 டிகிரி செல்சியஸை முறியடித்தது.
ஜூலை 21, ஞாயிற்றுக்கிழமை, பூமியில் இதுவரை பதிவுசெய்யப்பட்டதில் அதிக வெப்பமான நாளாக இருந்தது. இந்தத் தகவல் கோபர்நிகஸ் காலநிலை மாற்ற சேவையிலிருந்து (Copernicus Climate Change Service (C3S)) தெரிவிக்கப்பட்டுள்ளது. தினசரி உலகளாவிய சராசரி வெப்பநிலை 17.09 டிகிரி செல்சியஸைத் தொட்டது. இது ஜூலை 6, 2023 அன்று அமைக்கப்பட்ட முந்தைய சாதனையான 17.08 டிகிரி செல்சியஸை முறியடித்தது.
கடந்த ஆண்டு முதல் முறையாக தினசரி உலக சராசரி வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸைத் தாண்டியது.
ஓர் அறிக்கையில், கோபர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை (C3S) இயக்குனர் கார்லோ பூண்டெம்போ கூறுகையில், "கடந்த 13 மாதங்களின் வெப்பநிலைக்கும் முந்தைய வெப்பநிலை பதிவுகளுக்கும் இடையே எவ்வளவு பெரிய வித்தியாசம் உள்ளது என்பது உண்மையிலேயே அதிர்ச்சியூட்டும் தகவலாக உள்ளது. காலநிலை தொடர்ந்து வெப்பமடைவதால், வரவிருக்கும் மாதங்கள் மற்றும் ஆண்டுகளில் புதிய சாதனைகள் முறியடிக்கப்படுவதை நாம் காண நேரிடும்.
இந்த சாதனையை முறியடிக்கும் தினசரி உலகளாவிய சராசரி வெப்பநிலைக்கு என்ன வழிவகுத்தது என்பதை ஆராய்வோம்.
வரலாறு காணாத வெப்பநிலைக்கு என்ன காரணம்?
தீவிர வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமாக உள்ள முக்கிய உந்துதல் வளிமண்டலத்தில் அதிகரித்து வரும் பசுமை இல்ல வாயுவின் (Greenhouse gas) செறிவுகளாகும். இதில், கார்பன் டை ஆக்சைடு (carbon dioxide) மற்றும் மீத்தேன் (methane) போன்ற பசுமைஇல்ல வாயுக்கள் (Greenhouse gas) மற்றும் நீராவி (water vapour) ஆகியவை சூரியனின் ஆற்றலை பூமியின் அமைப்பில் சிக்க வைக்கின்றன. இந்த ஆற்றல் இல்லையெனில் விண்வெளியில் சென்றுவிடும். இதன் விளைவாக, பூமி வெப்பமடைகிறது.
தொழிற்புரட்சிக்குப் (industrial revolution) பின்னர், மனித நடவடிக்கைகள் முன்னெப்போதும் இல்லாத அளவு வாயுக்களை வெளியிட்டன. நிலக்கரி (coal), எண்ணெய் (oil) மற்றும் எரிவாயு (gas) போன்ற புதைபடிவ எரிபொருட்களை எரிப்பது இந்த நடவடிக்கைகளில் அடங்கும். இதன் விளைவாக, சமீபத்திய பத்தாண்டுகளில், பூமியானது வேகமாக வெப்பமடைந்துள்ளது.
2023-ம் ஆண்டில், பசுமைஇல்ல வாயு செறிவுகள் வளிமண்டலத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளன என்று கோபர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை (C3S) மற்றும் கோப்பர்நிக்கஸ் வளிமண்டல கண்காணிப்பு சேவை (Copernicus Atmosphere Monitoring Service (CAMS)) தெரிவித்துள்ளது. 2023-ல் கார்பன் டை ஆக்சைடு செறிவுகள் 2022-ஐ விட மில்லியனுக்கு 2.4 பாகங்கள் (parts per million(ppm)) அதிகமாக இருந்தன. மீத்தேன் செறிவு பில்லியனுக்கு 11 பகுதிகள் (parts per billion (ppb)) அதிகரித்துள்ளது.
இது தவிர, அண்டார்டிகாவின் பெரும்பகுதிகளில் சராசரிக்கும் மேலான வெப்பநிலையும், வெப்பமான தினசரி சராசரி உலக வெப்பநிலைக்கு பங்களித்துள்ளது என்று கோபர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை (C3S) கூறுகிறது. இருப்பினும், ஆண்டின் இந்த நேரத்தில் அண்டார்டிகாவில் வெப்பமான வெப்பநிலை அசாதாரணமானது அல்ல.
இக்கண்டம் வழக்கத்தை விட குறைவான கடல் பனியைக் கொண்டுள்ளது. இது தெற்கு பெருங்கடலின் (Southern Ocean) சில பகுதிகளில் அதிக வெப்பநிலையை ஏற்படுத்துகிறது. இந்த உயர் வெப்பநிலை உலக சராசரி வெப்பநிலை அதிகரிப்பதற்கும் பங்களிக்கிறது.
அடுத்து என்ன நடக்கும்?
தினசரி உலகளாவிய சராசரி வெப்பநிலை மேலும் உயரும் என்று கோபர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை (C3S) கணித்துள்ளது. இது ஜூலை 22 அல்லது 23, 2024 இல் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, வெப்பநிலை குறையும். ஆனால், அடுத்த வாரங்களில் வெப்பநிலையில் அதிக ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம்.
இதுவரை, 2024 வெப்பமான ஆண்டாக மாறும் பாதையில் உள்ளது. இது 2023-ன் சாதனையை முறியடிக்கிறது. இது 1850-1900 தொழில்துறைக்கு முந்தைய நிலையின் சராசரியை விட 1.48 டிகிரி செல்சியஸ் வெப்பமாகவும், 2016 ஐ விட 0.17 டிகிரி செல்சியஸ் வெப்பமாகவும் இருந்தது.