மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு நடைமுறைவாதம் தேவை, தற்காலிக அணுகுமுறைகள் அல்ல -HT Editorial

 மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு ஒரு அறிவியல்பூர்வமான அணுகுமுறை நாட்டிற்கு தேவைப்படுகிறது. கண்காணிப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு மதிப்பீட்டின் (bio-safety assessment) மீது தீவிர கவனம் செலுத்தும் ஒரு வலுவான கொள்கைத் தேவை.  


உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட மரபணு மாற்றப்பட்ட கடுகு (Genetically Modified (GM) mustard) குறித்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. ஆனால், மரபணு மாற்றப்பட்ட உயிரினங்களுக்கான உயிரி பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்த இந்தியாவின் தேசிய கொள்கையின் தேவை என்ற  முடிவில் உச்ச நீதிமன்றம் உறுதியாக இருந்தது. மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் அவசியத்தைக் குறித்து அரசாங்கத்திற்கு இது மற்றொரு நினைவூட்டலாக இருக்க வேண்டும். காலநிலை மாற்றம் அதிகரித்து வரும் வேளையில், விவசாய உற்பத்தித்திறன் மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மரபணு மாற்றம் உள்ளிட்ட தொழில்நுட்ப தீர்வுகளை நோக்கி திரும்ப வேண்டிய தேவை அதிகரித்து வருகிறது. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் குறித்த ஆழமான சந்தேகம் இந்திய மக்களிடம் உள்ளது. அரசாங்கத்தின் தயக்கங்கள், நிகழ்காலத்திலும், கடந்த காலத்திலும், இந்த நிலைமைக்கு மிகவும் பங்களித்துள்ளன. 


மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் உயிர் பாதுகாப்பு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். மேலும், அனுமதிக்கப்படுவதற்கு முன்பு ஒவ்வொரு வாய்ப்பும் கவனமாக மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். Bt கத்தரிக்காய் (Bt brinjal) மற்றும் பிற உண்ணக்கூடிய மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்படாத நிலையில், நாட்டின் உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம், கடந்த ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த பதிலில், இந்தியாவில் விற்கப்படும் இறக்குமதி செய்யப்பட்ட புதிய விளைபொருட்கள் மரபணு மாற்றம் செய்யபட்டதா  இல்லையா என்பது குறித்து உறுதியான பதில் அளிக்க முடியவில்லை. ஒழுங்குமுறை விதிகள் இருந்தபோதிலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கும் இதே சூழல் நிலவுகிறது. ஏனெனில், தாவர அடிப்படையிலான எண்ணெய்கள் போன்ற பொருட்களின் தோற்றத்தைக் கண்டுபிடிப்பது கடினம். 


மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு ஓர் அறிவியல்  ரீதியான சோதனை அணுகுமுறை நாட்டிற்கு தேவைப்படுகிறது. கடுமையான கண்காணிப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு மதிப்பீட்டின் (bio-safety assessment) மீது கவனம் செலுத்தும் வலுவான கொள்கை தேவை. விஞ்ஞானிகள், விவசாயிகள் மற்றும் மாநில அரசுகள் உள்ளிட்ட முதலீட்டாளர்களுடன் கலந்தாலோசிக்கவும், தேசிய மரபணு மாற்றப்பட்ட பாதுகாப்புக் கொள்கையை (National Genetically Modified policy) உருவாக்கவும், ஒன்றிய அரசுக்கு நீதிமன்றம் நான்கு மாத காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. வெறும்  காகிதத்தில் மரபணு மாற்றப்பட்ட சந்தேக அணுகுமுறையைத் தொடர்வதை விட, பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான கட்டமைப்பைக் உருவாக்குவது தேசத்திற்கு மிகவும்  அவசியம்.



Original article:

Share: