ஒரு தேர்தலின் முடிவு, மாநிலங்களுக்கு அளிக்கப்படும் தேசிய வளங்களின் நிதியில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இது போன்ற நடவடிக்கைகள் நிதி கூட்டாட்சி (fiscal federalism) கொள்கைகளுக்கு எதிரானது.
இந்தியாவில் பத்தாண்டுகளுக்கு பிறகு கூட்டணி ஆட்சி மீண்டும் அமைந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்றத்தில் தனி பெரும்பான்மை பெறாத காரணத்தினால் பீகாரின் ஜனதா தளம் (யுனைடெட்) மற்றும் ஆந்திர பிரதேசத்தின் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. 2014 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி தனி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், சூழல் தற்போது மாறிவிட்டது. குறிப்பிட்ட மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப மானியங்கள் (grants) அல்லது 'சிறப்பு தொகுப்புகள்' (special packages) வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஒற்றைக் கட்சியின் ஆதிக்கம் கூட்டணி கட்சிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. இது அதிகப்படியான ஒரு சார்பு முறையைத் தடுக்கும். தேசிய அளவில் ஒற்றைக் கட்சிக் கட்டுப்பாடு பலவீனமடையும் போது, கூட்டாட்சி தத்துவம் வலுப்பெறும். ஆனால், ஒரு வலுவான தலைவரின் கீழ் ஒற்றைக் கட்சி ஆதிக்கம் செலுத்தும் போது, கூட்டாட்சியின் தத்துவங்கள் பலவீனமடைகின்றன என்று சோதிப்பது காலத்தின் கட்டாயம்.
வலுவான கூட்டாட்சி அமைப்புக்கு, வரிகள், மானியங்கள் மற்றும் நிதி எல்லைகள் பற்றிய தெளிவான விதிகள் அவசியம். பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் சமச்சீரற்ற கூட்டாட்சி அமைப்புகளைக் கொண்டிருக்கலாம். இருப்பினும், இந்த வேறுபாடுகள் நிலையான அரசியலமைப்பு விதிகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும்.
அரசியலமைப்பில் குறிப்பிட்ட மாநிலங்கள் அல்லது சில விஷயங்களில் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான விதிகள் உள்ளன. சிறப்பு அந்தஸ்து (special status) தொடர்பான விதிகள் பிரிவு 371A முதல் பிரிவு 371H வரை அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
முற்றிலும் விருப்புரிமை
மாறாக, சிறப்பு தொகுப்புகள் குறிப்பிட்ட மாநிலத்தின் விருப்பம் சார்ந்தது. அந்த மாநிலத்தின் தேவைக்கு ஏற்ப சிறப்பு தொகுப்புகளை வழங்கலாம். சிறப்பு தொகுப்புகள் என்பது 'இதர நிதி ஒதுக்கீடுகளின்' (‘Miscellaneous Financial Provisions’) ஒரு பகுதியான பிரிவு 282-ன் கீழ் வழங்கப்படும் கூடுதல் மானியமாகும். பெரும்பாலும், அவற்றை சில மாநில கட்சிகள் தங்களின் சுயலாபத்திற்காக பேரம் பேசும் யூகித்தயாக பயன்படுத்துகின்றன. இது நமது கூட்டாட்சி அமைப்பின் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது?
ஒரே கட்சி, ஒன்றியம் மற்றும் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் போது அது 'இரட்டை இயந்திர சர்கார் ஆட்சி' (double-engine sarkar) என்று அழைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட தலைவர் மட்டும் நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியாது. அனவைரும் ஒன்றாக இணைந்து செயலாற்றினால் தான் நாடு வளர்ச்சி பெரும். மாநிலங்களுக்கு சிறப்பு தொகுப்புகள் தேவைப்பட்டாலும், செயல்முறை மிகவும் முக்கியமானது. இந்த நிகழ்வுகள் ஒன்றியம் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான அரசியல் மற்றும் நிதி உறவுகளை எவ்வாறு பாதித்தன?
கூட்டாட்சி போக்குகள் (Federal tendencies)
நமது அரசியல் அமைப்பில் கூட்டாட்சி முறை எந்தளவுக்கு பின்பற்றப்படுகிறது என்பதுதான் இங்கு முக்கியப் பிரச்சினை. நமது அரசியலமைப்பு பெரும்பாலும் அரை-கூட்டாட்சி முறையாகவே (quasi-federal) பார்க்கப்படுகிறது. இருப்பினும், சி.எச். அலெக்ஸாண்ட்ரோவிச் தனது இந்திய அரசியலமைப்பு வளர்ச்சிகள் (Constitutional Developments, 1957) என்ற புத்தகத்தில் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவசர நிலையை தவிர பிற காலகட்டங்களில் இந்திய கூட்டாட்சி அமைப்பை பின்பற்றுவதாக சி.எச். அலெக்ஸாண்ட்ரோவிச் வாதிட்டார். அவசரநிலை பற்றி குறிக்கும் பிரிவு-352 மற்றும் 356 சட்டப்பிரிவுகள் நடைமுறையில் உள்ளதா என்பதைப் பொறுத்து நமது அமைப்பு ஒற்றையாட்சி மற்றும் கூட்டாட்சி ஆகிய இரண்டிலும் செயல்பட முடியும் என்று ராஜஸ்தான் மாநிலம் மற்றும் பிறர் vs இந்திய ஒன்றியம்,1977 (State of Rajasthan and Others vs Union of India, 1977) வழக்கில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
எவ்வாறாயினும், கூட்டாட்சி தத்துவங்கள் வளர்கிறதா அல்லது குறைகிறதா என்பதை அரசியல் சூழல் தீர்மானிக்கிறது என்று அடிக்கடி வாதிடப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, ஒற்றைக் கட்சி தனிப்பெரும்பான்மையை இழக்கும் போது, கூட்டாட்சித் தத்துவம் வளர்கிறதா என்ற முந்தைய கருத்தை நாம் சோதிக்க முடியும்.
கூட்டாட்சியின் வலிமையை மதிப்பிடுவதில் நிதி பகிர்வு முறை முக்கிய பங்கு வகிக்கிறது. சமீபத்தில், சில மாநிலங்கள் ஒன்றிய வரிகளில் சிறிய பங்கைப் பெறுவதாக தங்களது கவலைகளை தெரிவித்துள்ளன. வரி விநியோகம் ஒரு சூத்திரத்தைப் பின்பற்றுகிறது, மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் நலன்களை சமநிலைப்படுத்தும் அதே வேளையில் 16-வது நிதிஆணையம் இந்த சிக்கலை தீர்க்க வேண்டும்.
மானியங்கள் (grants) மீது கவனம் செலுத்தப்படுகிறது. நமது அரசியலமைப்பில், இது தொடர்பாக நாடாளுமன்றம் சட்டம் இயற்றும் வரை, உதவி தேவைப்படும் மாநிலங்களுக்கு மானியங்களைப் பரிந்துரைப்பது நிதி ஆயோக்கின் முதன்மைப் பணி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, சட்டப்பிரிவு 282-ன் கீழ் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள், நிதி ஆயோக்களால் பரிந்துரைக்கப்பட்டதை விட, கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாகும். ஒன்றியத்தில் கூட்டணியில் உள்ள கட்சிக்கு சிறப்பு தொகுப்பு வழங்கினால், அது நிதிக் கூட்டாட்சியை பலவீனப்படுத்தும். ஏனென்றால், இது அவசரத் தேவைகளைக் கொண்ட பிற மாநிலங்கள் வளங்கள் பெறுவதை குறைத்து விடும். இதை அனுமதித்தால் ஒற்றைக் கட்சி ஆதிக்கம் குறைந்து, வலுவடைவதற்குப் பதிலாக கூட்டாட்சி தத்துவங்களை வலுவிழக்க செய்யும்.