ஓர் ஊட்டச்சத்து உத்தி ஒலிம்பிக் வேதனையைத் தவிர்த்திருக்கும் -கனிகா அகர்வால்

 இந்தியாவில் விளையாட்டு வீரர்கள் பயிற்சியுடன், துல்லியமான ஊட்டச்சத்து முறையை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை வினேஷ் போகத் விவகாரம் எடுத்துக்காட்டுகிறது.


பாரிஸ் ஒலிம்பிக் 2024-ல் மகளிர் 50 கிலோ மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து இந்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்தது. வினேஷ் போகத் அனுமதிக்கப்பட்ட அளவை விட 100 கிராம் எடை அதிகமாக இருந்தார். இந்த சம்பவம் இந்திய அணியில் உள்ள விளையாட்டு ஊட்டச்சத்து நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் அணி நிர்வாகம் உள்ளிட்டவர்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.


வினேஷ் போகத் ஏன் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்


தகுதி நீக்கம் ஒரு எளிய செயலாக தெரிகிறது. ஆனால் இது விளையாட்டில் துல்லியமான ஊட்டச்சத்தின் அவசியத்தைக் காட்டுகிறது.  துல்லிய ஊட்டச்சத்து, தனிப்பட்ட தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உணவு பரிந்துரைகளை வடிவமைக்கிறது. இது ஒரு விளையாட்டு வீரரின் குறிப்பிட்ட தேவைகளைப்  பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்துகிறது.


அறிவியல் முறைகள்


துல்லியமான ஊட்டச்சத்து (Precision nutrition) என்பது ஒரு நபரின் உடல் உணவு மற்றும் கலோரி செலவினங்களுக்கு எவ்வாறு வினைபுரிகிறது என்பதைப் புரிந்துகொள்வதை உள்ளடக்கியது. இது உயிரியல் மற்றும் மரபணுவியல் (genomics), புரோட்டியோமிக்ஸ் (proteomics,), வளர்சிதை மாற்றவியல் (metabolomics), நுண்ணுயிர் (microbiomes) மற்றும் எபிஜெனெடிக்ஸ் (epigenetics) உள்ளிட்ட அணுகுமுறைகளை உள்ளடக்கியது. இது பயோ இன்ஃபர்மேடிக்ஸ் (bioinformatics) மற்றும் மெஷின் லேர்னிங் (machine learning) போன்ற தொழில்நுட்பத்துடன் மரபியல் மற்றும் பிற உயிரியல் தகவல்கள் உட்பட விரிவான அறிவியல் தரவைப் பயன்படுத்துகிறது. இந்த தரவுகள் ஒரு தடகள வீரரின் உடலியல் செயல்களின் அடிப்படையில் ஊட்டச்சத்து முறைகளைச் சரிசெய்வதை அனுமதிக்கிறது.  அவர்கள் போட்டியில் திறம்பட விளையாட இவை உதவி செய்கிறது. எடுத்துக்காட்டாக, தாவர அடிப்படையிலான உணவை உட்கொள்வது மற்றும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது குடலில் உள்ள பாக்டீரியாக்களை மாற்றும். இது குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்களின் உருவாக்கத்திற்கு வழிவகுக்கும். இதனால், தடகள வீரரின் செயல்திறன் மேம்படுத்தப்படும்.


ஊட்டச்சத்து திட்டம் ஒரு நபரின் உணவு மற்றும் உடற்பயிற்சி பற்றிய விரிவான தகவல்களை சார்ந்துள்ளது. இத்தகைய தரவை சேகரிப்பதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும்  சுய அறிக்கை (self-reporting) போன்றவை குறைபாடுகளைக் கொண்டுள்ளன. இந்த தகவலை  கொண்டு தனிப்பட்ட தொடர்ச்சியான கண்காணிப்புடன் (உதாரணமாக, தொடர்ச்சியான இரத்த குளுக்கோஸ் கண்காணிப்பு) இணைப்பதன் மூலம் விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் குறிப்பிட்ட மற்றும் தனிப்பட்ட பரிந்துரைகளை வழங்க முடியும்.  அணியக் கூடிய சென்சார்கள் (sensors) உடல் செயல்பாடு, மன அழுத்தம், தூக்கத்தின் தரம் மற்றும் இதய துடிப்பு ஆகியவற்றைக் கண்காணிக்கின்றன. வினேஷ் போகத் சம்பவம் பயிற்சிகளின் போது விளையாட்டு வீரர்களை தொடர்ந்து கண்காணிப்பதன் அவசியத்தை காட்டுகிறது.


குளுக்கோஸ் கண்காணிப்பு


தொடர்ச்சியான குளுக்கோஸ் மானிட்டர்கள் (Continuous glucose monitors (CGM)) இரத்த குளுக்கோஸ் அளவுகளை கண்காணிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சாதனங்கள், தோலின் கீழ் பொருத்தப்பட்டிருக்கும். அதனால், நிமிடத்திற்கு நிமிடம் இரத்த குளுக்கோஸ் அளவைப் பதிவு செய்யும். பயிற்சி பெற்ற ஊட்டச்சத்து நிபுணரின் மேற்பார்வையின் கீழ், விளையாட்டு வீரர்களின் இரத்த குளுக்கோஸ் அளவுகளை உணவுக்கு கண்காணிக்க தொடர்ச்சியான குளுக்கோஸ் மானிட்டர்கள் (CGM) உதவும். சேகரிக்கப்பட்ட தகவல்கள் தசையை வளர்ப்பதற்கும், ஆற்றலை அதிகரிப்பதற்கும், வீக்கத்தைக் குறைப்பதற்கும், உடல் எடையை பராமரிப்பதற்கும் பரிந்துரைகளை வடிவமைக்க பயன்படுத்தப்படுகின்றன. இவை விளையாட்டு வீரர்களுக்கு முக்கியமானது.


சில விளையாட்டு வீரர்கள் தொடர்ச்சியான குளுக்கோஸ் மானிட்டர்கள்(CGM)களைப் பயன்படுத்தி தங்கள் செயல்திறனை மேம்படுத்தியுள்ளனர். ஓய்வுபெற்ற ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற ஆஸ்திரேலிய நீச்சல் வீரர் செல்சியா ஹோட்ஜஸ், பயிற்சியின் போது தனது கலோரி அளவையும், சோர்வையும் நிர்வகிக்க குளுக்கோஸ் மானிட்டர்கள் (CGM) உதவியது என்று கூறினார். கென்யாவின் நீண்டதூர ஓட்டப்பந்தய வீரர் எலியுட் கிப்கோஜ் தனிப்பயனாக்கப்பட்ட ஊட்டச்சத்து திட்டங்களை உருவாக்க 2021-ஆம் ஆண்டு முதல் குளுக்கோஸ் மானிட்டர்கள் (CGM)களைப் பயன்படுத்தியுள்ளார். இருப்பினும், யூனியன் சைக்கிளிஸ்ட் இன்டர்நேஷனல் (Union Cycliste Internationale) போட்டிகளின் போது ஆரோக்கியமான விளையாட்டு வீரர்களுக்கு குளுக்கோஸ் மானிட்டர்கள்(CGM)களை தடை செய்துள்ளது. இருப்பினும் அவை பயிற்சியின் போது பயன்படுத்தப்படலாம். ஊட்டச்சத்து பரிந்துரைக்கான தொழில்நுட்பத்தின் இந்த பயன்பாடு இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இதற்கான ஆய்வு மேலும் தேவைப்படுகிறது.


வினேஷ் போகத் மேல்முறையீடு: விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்ததுள்ளது


எடை அடிப்படையிலான விளையாட்டுகளில், "எடையிடுதல்" என்பது முக்கியமானது. விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும் தங்களுக்கு நியமிக்கப்பட்ட எடை வகுப்பிற்குள் இருக்க போராடுகிறார்கள். பட்டினி மற்றும் நீரிழப்பு போன்ற தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இந்த நடவடிக்கைகள் அவர்களின் மன மற்றும் உடல் ஆரோக்கியம் மற்றும் செயல்திறனுக்கு தீங்கு விளைவிக்கும். வினேஷ் போகத் கூடுதல் எடையைக் குறைக்க ஒரு இரவு முழுவதும் முயற்சித்ததாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. மற்றொரு இந்திய மல்யுத்த வீராங்கனையான ஆன்டிம் பங்கல் உடல் எடையை அதிகரிக்க இரண்டு நாட்கள் பட்டினி இருந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய நடவடிக்கைகள் உயர்மட்ட போட்டிகளில் விளையாட்டு வீரர்களை கடுமையாகப் பாதிக்கும்.


விளையாட்டு ஊட்டச்சத்து நிபுணர்களுக்கு ஒரு பங்கு


பயிற்சி மற்றும் போட்டிகளின் போது விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த உணவைத் தேர்ந்தெடுப்பதில் பயிற்சியாளர்கள் மற்றும் அணியினர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு அவர்களின் ஊட்டச்சத்து தேவைகளை கண்காணிக்கவும், அவர்களின் உடல் அமைப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்தைப் புரிந்துகொள்ளவும் துல்லியமான ஊட்டச்சத்தில் பயிற்சி பெற்ற விளையாட்டு ஊட்டச்சத்து நிபுணர்கள் தேவை.


ஊட்டச்சத்து நிபுணர்கள், குறிப்பிட்ட விளையாட்டுகளுக்கு நியமிக்கப்பட்டு, விளையாட்டு வீரர்களுடன் நீண்ட காலத்திற்கு ஈடுபட்டால் அது நன்மை பயக்கும். இது அவர்களின் பரிந்துரைகளை காலப்போக்கில் கண்காணிக்கவும் சோதிக்கவும் அனுமதிக்கும். இந்த ஊட்டச்சத்து நிபுணர்கள் விளையாட்டு விதிகள், எடை பிரிவுகள், எடை நடைமுறைகள் மற்றும் ஒரு விளையாட்டு வீரரின் செயல்திறனை சமரசம் செய்யாமல் எடையைக் குறைப்பதற்கான முறைகள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.


துல்லியமான ஊட்டச்சத்தை விளையாட்டுகளில் ஒருங்கிணைப்பது, உணவுத் திட்டங்களைத் உருவாக்குவது மற்றும் விளையாட்டு வீரரின் மாறிவரும் தேவைகளின் அடிப்படையில் அவற்றை தொடர்ந்து கண்காணித்து சரிசெய்வது ஆகியவை அடங்கும். இந்த அணுகுமுறை விளையாட்டு வீரர்களால் அடிக்கடி மேற்கொள்ளப்படும் கடுமையான நடவடிக்கைகளைத் தடுக்கவும், ஆரோக்கியமான மற்றும் நிலையான நடைமுறைகளை ஊக்குவிக்கவும் உதவும்.


முடிவில் வினேஷ் போகத், தகுதி நீக்கம் இந்திய விளையாட்டு ஆதரவு அமைப்பில் ஒரு முக்கியமான இடைவெளி இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. துல்லியமான ஊட்டச்சத்து, உணவுத் திட்டமிடலுக்கான தரவு உந்துதல் அணுகுமுறை, இது போன்ற பின்னடைவுகளைத் தடுத்தலும், விளையாட்டு வீரர்களின் செயல்திறனை மேம்படுத்துதலும் விளையாட்டுகளில்  இன்றியமையாததாகும். தொழில்நுட்பம் மற்றும் திறன் வாய்ந்த ஊட்டச்சத்து நிபுணர்களை ஒருங்கிணைப்பதன் மூலம் இந்தியா தனது விளையாட்டு பயிற்சியில் புரட்சியை ஏற்படுத்த முடியும். விளையாட்டு வீரர்கள் தங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும்போது தங்கள் முழுத் திறனை அடைவதை உறுதி செய்ய முடியும்.


கனிகா அகர்வால், உறுப்பினர் திரிவேதி பயோ சயின்சஸ் பள்ளி, அசோகா பல்கலைக்கழகம்.



Original article:

Share: