மனிதர்களால் ஏற்படும் காலநிலை மாற்றத்தால் கடல் வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்த வெப்பநிலை அதிகரிப்பு பெரும் தடுப்புப் பவளத்திட்டு (Great Barrier Reef) பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஆஸ்திரேலியாவின் பெரும் தடுப்புப் பவளத்திட்டு (Great Barrier Reef) மற்றும் அதைச் சுற்றியுள்ள நீர் வெப்பநிலை 400 ஆண்டுகளில் இல்லாத அளவு கடந்த பத்தாண்டுகளில் உயர்ந்துள்ளது. இது உலகின் மிகப்பெரிய பவளப்பாறைகளை (largest coral reef) அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஆராய்ச்சி தனித்துவமானது. ஏனெனில், இது மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றத்தின் விளைவுகளை வரலாற்று சூழலில் வைக்கிறது. மற்ற ஆய்வுகள் குறுகிய காலத்தில் பாறைகளுக்கு ஏற்பட்ட சேதத்தை மட்டுமே கண்டறிந்துள்ளன. வடக்கு குயின்ஸ்லாந்தின் கடற்கரையில் இருந்து சுமார் 2,400 கிமீ தொலைவில் பாறைகள் நீண்டுள்ளது.
முதலில், பவளப்பாறைகள் என்றால் என்ன?
பவளப்பாறைகள் பொதுவாக அடிப்படையில் விலங்குகள். அவை தண்டு இல்லாத (sessile) விலங்கு வகையாகும். அதாவது, அவை நிரந்தரமாக கடலின் தளத்துடன் தங்களை இணைத்துக் கொள்கின்றன. அவை, தங்கள் சிறிய கூடாரம் போன்ற கைகளைப் பயன்படுத்தி தண்ணீரிலிருந்து உணவைப் பிடித்து தங்கள் வாயில் செலுத்துகின்றன. ஒவ்வொரு தனிப்பட்ட பவள விலங்கும் ஒரு பாலிப் (polyp) என்று அழைக்கப்படுகிறது. மேலும், இது நூற்றுக்கணக்கான முதல் ஆயிரக்கணக்கான மரபணு ரீதியாக ஒத்த பாலிப்களின் குழுக்களில் வாழ்கிறது. அவை ஒரு 'காலனியை' (colony) உருவாக்குகின்றன.
பவளப்பாறைகள் பெரும்பாலும் கடினமான பவளம் (hard corals) அல்லது மென்மையான பவளம் (soft coral) என வகைப்படுத்தப்படுகின்றன. கடினமான பவளப்பாறைகள் தான் பவளப்பாறைகளின் கட்டிடக் கலைஞர்கள் ஆகும். இது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கட்டப்பட்ட சிக்கலான முப்பரிமாண கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது. "மென்மையான பவளப்பாறைகளைப் போலல்லாமல், கடினமான பவளப்பாறைகளில் சுண்ணாம்புக் கற்களால் செய்யப்பட்ட கல் எலும்புக்கூடுகள் (stony skeletons) உள்ளன. அவை பவள பாலிப்களால் (coral polyps) உற்பத்தி செய்யப்படுகின்றன. பாலிப்கள் இறக்கும்போது, அவற்றின் எலும்புக்கூடுகள் பின்னால் விடப்பட்டு புதிய பாலிப்களுக்கான அடித்தளங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன," என்று தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) தெரிவித்துள்ளது.
பவளப்பாறைகள், "கடலின் மழைக்காடுகள்" என்றும் குறிப்பிடப்படுகின்றன, கிட்டத்தட்ட 450 மில்லியன் ஆண்டுகளாக பூமியில் உள்ளன.
பவளப்பாறைகள் ஏன் முக்கியம்?
கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளில், பவளப்பாறைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒரு பாறையில் ஆயிரக்கணக்கான கடல் உயிரினங்கள் வாழ்வதைக் காணலாம். உதாரணமாக, "பெரும் தடுப்புப் பவளத்திட்டு 400-க்கும் மேற்பட்ட பவள இனங்கள், 1,500 மீன் இனங்கள், 4,000 மொல்லஸ்க் இனங்கள் மற்றும் உலகின் ஏழு கடல் ஆமை இனங்களில் ஆறு ஆகியவற்றைக் கொண்டுள்ளது" என்று இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. பவளப்பாறைகளிலும் அதைச் சுற்றியும் கண்டுபிடிக்கப்படாத மில்லியன் கணக்கான உயிரினங்கள் வாழக்கூடும் என்று ஆராய்ச்சிகள் சுட்டிக் காட்டுகிறது.
இந்த பெரிய கட்டமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 375 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளாதார பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குகின்றன. உலகெங்கிலும் 500 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உணவு, வருமானம் மற்றும் புயல் மற்றும் வெள்ளத்திலிருந்து கடலோரப் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக பவளப்பாறைகளை நம்பியுள்ளனர். பவளப்பாறைகள் அலைகள், புயல்கள் மற்றும் வெள்ளத்திலிருந்து 97% ஆற்றலை உறிஞ்சும் தன்மை கொண்டது. இது உயிர் இழப்பு, வளங்களின் சேதம் மற்றும் மண் அரிப்பு ஆகியவற்றைத் தடுக்கிறது.
ஆய்வின் கண்டுபிடிப்புகள் என்ன?
ஆஸ்திரேலியா முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களின் விஞ்ஞானிகள் குழு, பவளப்பாறைகளைத் துளையிட்டு, ஒரு மரத்தில் உள்ள வளையங்களை எண்ணுவதைப் போலவே, 1618-ம் ஆண்டுக்கு முந்தைய கோடைகால கடல் வெப்பநிலையை அளவிட மாதிரிகளை பகுப்பாய்வு செய்தது.
நூறு ஆண்டுகளுக்கு முந்தைய கப்பல் மற்றும் செயற்கைக்கோள் தரவுகளுடன் இணைந்து, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நிலையானதாக இருந்த கடல் வெப்பநிலை 1900 முதல் மனித செல்வாக்கின் விளைவாக உயரத் தொடங்கியது என்று ஆராய்ச்சி முடிவு செய்தது.
1960 முதல் 2024 வரை, ஆய்வின் ஆசிரியர்கள் ஜனவரி முதல் மார்ச் வரை சராசரியாக ஒரு பத்தாண்டிற்கு 0.12 டிகிரி செல்சியஸ் வருடாந்திர வெப்பமயமாதலைக் கவனித்தனர்.
2016 முதல், பெரும் தடுப்புப் பவளத்திட்டு தீவிர பவள வெளுப்பின் ஐந்து கோடைகாலங்களை அனுபவித்துள்ளது. வெப்ப அழுத்தம் காரணமாக பவளத்திட்டின் பெரிய பகுதிகள் வெள்ளை நிறமாக மாறும் போது, அவை இறப்புக்கான அபாயத்தில் உள்ளன.
கடந்த நான்கு நூற்றாண்டில், ஆறு வெப்பமான ஆண்டுகளில் ஐந்து ஆண்டுகள் இந்த கோடைக்காலம் இருந்தது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் கல்வியாளரும், ஆய்வின் இணை ஆசிரியருமான பெஞ்சமின் ஹென்லி, "உலகம் அதன் முக்கிய அடையாளங்கள் ஒன்றை இழந்து வருகிறது" என்றார். அவர் அதை "ஒரு முழுமையான சோகம்" என்று அழைத்தார். ஹென்லி மேலும் கூறியதாவது, நம் வாழ்நாளில் இது இப்படி நடக்கும் என்பதைப் புரிந்துகொள்வது கடினமாக உள்ளது. எனவே இது மிகவும் வருத்தமாக கருதுகிறேன் என்றார்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான வெப்பநிலை தரவுகள் இதுவரை பதிவு செய்யப்படாத அதிகபட்ச அளவாகும். ஹென்லியின் கூற்றுப்படி, இது மற்ற ஆண்டுகளை விட மிக அதிகமாக இருந்தது.