சர்வதேச அமைதி தினத்தில், அமைதி ஏற்படுத்துவதில் இந்தியாவின் வரலாற்று பங்கை மறுபரிசீலனை செய்வோம் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போரில் அதன் சாத்தியக்கூறுகளை ஆராய்வோம்.
குறிப்பாக மேற்கு ஆசியா போன்ற பிராந்தியங்களில் உலகம் மோதல்கள், போர்கள் மற்றும் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதால் இந்த ஆண்டின் சர்வதேச அமைதி தினம் மிகவும் முக்கியமானது. இந்த சூழலில், அமைதி ஏற்படுத்துவதில் இந்தியாவின் வரலாற்று பங்கை நினைவு கூர்வதன் மூலமும், ரஷ்யா-உக்ரைன் போரில் அதன் சாத்தியமான மத்தியஸ்தத்தை ஆராய்வதன் மூலமும் சர்வதேச அமைதி தினத்தை அனுசரிப்போம்.
சர்வதேச அமைதி தினம் ( International Day of Peace) ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. இது 1981-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் (United Nations General Assembly (UNGA)) "அனைத்து நாடுகளுக்கும் மக்களுக்கும் உள்ளேயும் அமைதியின் இலட்சியங்களை நினைவுகூருவதற்கும் பலப்படுத்துவதற்கும்" நிறுவப்பட்டது.
2001-ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்த நாளை அகிம்சை மற்றும் போர் நிறுத்த நாளாக நிர்ணயிக்க ஒருமனதாக வாக்களித்தது. இது உரையாடல், மோதல் தீர்வு மற்றும் அமைதிக் கல்வியை ஊக்குவிக்கும் அதே நேரத்தில் மோதல்களை நிறுத்த பரிந்துரைக்கிறது. இந்த ஆண்டுக்கான சர்வதேச அமைதி தினத்தின் கருப்பொருள்: அமைதி கலாச்சாரத்தை வளர்ப்பது ("Cultivating a Culture of Peace") என்பதாகும். அமைதி என்ற கருத்து உலகெங்கிலும், பல்வேறு சமூகங்கள் மற்றும் தலைமுறைகளிடையே வளர்க்கப்பட வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது.
சர்வதேச மன்றத்தில் இந்தியாவின் பாரம்பரியம் என்ன?
சுதந்திரத்திற்குப் பிறகு "ஆக்கிரமிப்பினால்" (“aggression”) இந்தியா எதிர்கொண்ட அனுபவத்தை வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அனுபவம் சர்வதேச மோதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியாவின் உணர்திறனை வெளிப்படுத்துகிறது. கூடுதலாக, இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு, சர்வதேச சட்டம் மற்றும் நடுநிலை போன்ற கொள்கைகளுக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பு, அமைதியை ஏற்படுத்துபவராக அதன் செயலின் பங்கை வலுப்படுத்துகிறது.
ரஷ்யா - உக்ரைன் போர் மூன்றாவது ஆண்டை நெருங்கி வரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூலை மாதம் ரஷ்யாவுக்கும், ஆகஸ்ட் மாதம் உக்ரைனுக்கும் வரலாற்று சிறப்புமிக்க பயணங்களை மேற்கொண்டார். இந்த பயணங்களின் போது, அவர் முறையே அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருடன் விவாதங்களில் ஈடுபட்டார்.
இந்த இருதரப்பு மோதலில் இந்தியா "நடுநிலையானது" (“not neutral”) அல்ல, ஆனால் "அமைதியை ஆதரிக்கிறது" (“in favour of peace”) என்று பிரதமர் மோடி தெளிவுபடுத்தினார். இரு தரப்பினரும் தாமதமின்றி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும், "அமைதியை நோக்கிய எந்தவொரு முயற்சியிலும் செயலில் பங்கு வகிக்க இந்தியா தயாராக உள்ளது" என்றும் அவர் கூறினார்.
குவாட் (Quad) தலைவர்களின் உச்சிமாநாட்டின் போது நியூயார்க்கில் ஜெலன்ஸ்கியை பிரதமர் மீண்டும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் புதினுடன் அவர் பேச உள்ளார்.
ரஷ்யாவுடன் தொடர்பில் உள்ள மற்றும் உக்ரைன் மோதலைத் தீர்க்க உண்மையான முயற்சிகளை மேற்கொண்டு வரும் மூன்று நேர்மையான கூட்டாளிகளில் பிரேசில் மற்றும் சீனாவுடன் இந்தியாவை புடின் பெயரிட்டார். உக்ரைன் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவும் அமைதி பேச்சுவார்த்தையில் இந்தியாவின் பங்கு குறித்து இதேபோன்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
இந்த நிகழ்வுகள் ரஷ்யா-உக்ரைன் மோதலில் ஒரு சமாதான தூதுவராக இந்தியாவின் சாத்தியமான பங்கை எடுத்துக்காட்டுகின்றன. இந்த ஆற்றல் சர்வதேச மன்றத்தில் இந்தியாவின் பாரம்பரியத்தை உருவாக்குகிறது.
வெற்றிகரமான கொரிய மோதல் தீர்வு முதல் 1979-ஆம் ஆண்டில் வியட்நாம் மீதான சீனாவின் படையெடுப்பு மற்றும் 2003-ஆம் ஆண்டில் ஈராக் மற்றும் 2001-ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க படையெடுப்புகள் குறித்த அதன் விமர்சன நிலைப்பாடு வரை இந்தியாவுக்கு அனுபவம் உள்ளது.
உலகளவில் நடந்து வரும் மோதல்களுக்கு அமைதியான தீர்வுகளை உறுதி செய்ய ஜனநாயக பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்தை இந்தியா தொடர்ந்து வலியுறுத்துகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் தேசிய இயக்கம் மற்றும் அணிசேரா இயக்கத்தின் (Non-aligned movement) கொள்கையின் மரபிலிருந்து சமாதான பேச்சுவார்த்தையாளரின் இந்த நிலையை இந்தியா மரபுரிமையாகப் பெற்றது.
சர்வதேச அரசியலில், குறிப்பாக நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தலைமையின் கீழ், அமைதி காக்கும் சர்வேதேச மன்றத்தில் இந்தியா சிறப்பான அனுபவத்தைக் கொண்டுள்ளது.
கொரிய நெருக்கடி (1950-53)
கொரிய நெருக்கடியின் போது (1950-53) அமைதிக்கான பேச்சுவார்த்தைகளில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டது. 1952-ஆம் ஆண்டில் கொரியா குறித்த இந்தியத் தீர்மானத்தை ஐ.நா. அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் மற்றும் சீனா போன்ற முக்கிய பங்குதாரர்களை இந்தியா ஒன்றிணைத்து, 1953-ஆம் ஆண்டில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முடிக்க உதவியது.
நடுநிலை நாடுகளை திருப்பி அனுப்பும் ஆணையத்திற்கு (Neutral Nations Repatriation Commission (NNRC)) இந்தியா தலைமை தாங்கியது. இது இரு தரப்பிலிருந்தும் போர் கைதிகளின் வாழ்க்கை நிலையை தீர்மானித்தது. லெப்டினன்ட் ஜெனரல் கே.எஸ்.திமையா தலைமையில் ஒரு பாதுகாவலர் படை 38 வது இணைகோட்டில் நிறுத்தப்பட்டது. இரு கொரியாக்களுக்கும் திரும்ப விரும்பாத சில கைதிகளுக்கு பிரதமர் நேரு அடைக்கலம் கொடுத்தார். கொரியாவுக்கான ஐ.நா ஆணையம் மற்றும் நடுநிலை நாடுகளின் மேற்பார்வை ஆணையம் ஆகியவற்றிலும் இந்தியா தீவிர உறுப்பினராக இருந்தது.
பிராந்தியத்தில் புவிசார் அரசியல் நலன்கள் இல்லாமல் இரு கொரியாக்களுக்கும் இடையில் வெற்றிகரமாக ஒரு சமாதானத்தை கொண்டு வந்ததற்காக இந்தியாவின் அமைதி காக்கும் பங்கு சர்வதேச பாராட்டுக்களைப் பெற்றது. கிருஷ்ண மேனன், கே.எம். பணிக்கர், பி.என். ராவ் போன்ற ராஜதந்திரிகள் இந்த முக்கியமான பணியில் நேருவுக்கு உதவினார்கள்.
வேறு சில சமரச முயற்சிகள்
சோவியத் படைகளை திரும்பப் பெறுவதற்காக சோவியத் ஒன்றியத்திற்கும் ஆஸ்திரியாவிற்கும் இடையில் மத்தியஸ்தம் செய்வதில் நேரு முக்கிய பங்கு வகித்தார். 1955-ஆம் ஆண்டில் ஆஸ்திரியாவை நடுநிலை அறிவிக்க சம்மதிக்க வைத்தார்.
1950 மற்றும் 1960-ஆம் ஆண்டுகளில் வியட்நாம் போரின் போது மேற்பார்வை மற்றும் கட்டுப்பாட்டுக்கான சர்வதேச ஆணையத்திற்கு இந்தியா இணைத் தலைமை தாங்கியது.
1979-ஆம் ஆண்டில் வியட்நாம் மீதான சீனாவின் படையெடுப்பை எதிர்த்த இந்தியா, அதே ஆண்டு ஆப்கானிஸ்தான் மீதான சோவியத் படையெடுப்பு குறித்து நிதானமாக இருக்க அறிவுறுத்தியது. 2003-ஆம் ஆண்டில் ஈராக் மற்றும் 2001-ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க படையெடுப்புகளை இந்தியா விமர்சித்தது.
சுருக்கமாக, தெற்காசியாவில் ஒரு நடுநிலை சக்தியாக இந்தியாவின் பிம்பம், வலுவான அரசியல் தலைமை, செயலூக்கமான இராஜதந்திரம் மற்றும் ஐ.நா.வின் நிறுவன ஆதரவு ஆகியவை கொரியா மற்றும் பிற சர்வதேச மோதல்களில் இந்தியாவின் மத்தியஸ்தத்தின் வெற்றிக்கு வழிவகுத்தது.
ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் தேவை என்று இந்தியா கோரிக்கை விடுத்து வருகிறது. 2022-ஆம் ஆண்டில் கீவ் மீது மாஸ்கோவின் அணுசக்தி தாக்குதலைத் தடுப்பதில் பிரதமர் மோடியும் பிற உலகத் தலைவர்களும் முக்கிய பங்கு வகித்ததாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
கருங்கடல் தானிய முன்முயற்சியை (Black Sea Grain Initiative) (உக்ரைனில் இருந்து பாதுகாப்பான தானிய போக்குவரத்துக்கான ஒரு முயற்சி) நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்த பின்னர், இந்தியாவில் நடந்த ஜி -20 உச்சிமாநாட்டின் போது இந்தியா இந்த முயற்சியை புதுப்பிக்க முயன்றது.
கருங்கடல் தானிய முன்முயற்சி ஐ.நா பொதுச்செயலாளரால் முன்மொழியப்பட்டு ஜூலை 22, 2022-ஆம் ஆண்டில் இஸ்தான்புல்லில் கையெழுத்திடப்பட்டது. அதன் மூன்றாவது பதவிக்காலம் ஜூலை 17, 2023 அன்று காலாவதியான பின்னர் அது புதுப்பிக்கப்படவில்லை.
ரஷ்யா மற்றும் உக்ரைனை பேச்சுவார்த்தை முடிவுக்கு கொண்டு வர இந்தியா முயற்சித்தது. சமீபத்தில், பேச்சுவார்த்தைகளில் இந்தியாவின் பங்கு குறித்து இரு தரப்பினரும் நம்பிக்கை தெரிவித்தனர். மோடியின் உக்ரைன் பயணத்திற்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு, புட்டின், அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்த தனது முந்தைய தயக்கத்தை மாற்றிக் கொண்டார்.
மோதலை அமைதியான முறையில் தீர்க்க இந்தியா போன்ற கூட்டு நாடுகளுடன் ரஷ்யா தொடர்பில் இருப்பதாக அவர் அறிவித்தார். எதிர்காலத்தில் இரு தரப்பினருக்கும் இடையிலான செய்திகளை தெரிவிக்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 22ம் தேதி நடைபெறவுள்ள பிரிக்ஸ் கூட்டத்தில் மோடியுடனான இருதரப்பு சந்திப்பில் புடின் நம்பிக்கையை வெளிப்படுத்தினார். அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியாவின் நட்புறவு பேச்சுவார்த்தையை எளிதாக்க உதவும்.
சர்வதேச விவகாரங்களில் அமைதிப் பேச்சுவார்த்தையாளராக செயல்பட வேண்டும் என்ற இந்தியாவின் விருப்பம், உலகின் முன்னணி நாடாக தனது பிம்பத்தை வலுப்படுத்தும். தெற்காசியாவில் ஒரு அணிசேரா அரசியல் சக்தியாக புது டெல்லியின் அந்தஸ்து, ரஷ்யா மற்றும் மேற்கத்திய சக்திகள் இரண்டுடனும் அதன் நெருக்கத்துடன், உக்ரேனில் அதன் அமைதி முயற்சிகளை மேம்படுத்த முடியும்.
கொரிய நெருக்கடியிலிருந்து (1950-53) இந்தியா தனது அமைதி முயற்சிகளைப் பின்பற்றி போரிடும் தரப்பினரிடையே வெற்றிகரமாக சமரசம் செய்ய முயற்சிக்கலாம். ஐ.நா. நிறுவன பொறிமுறைகள், வலுவான அரசியல் தலைமைத்துவம், அனுபவம் வாய்ந்த இராஜதந்திரிகள், வழக்கமான உரையாடல்கள், மனிதாபிமான மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கான அர்ப்பணிப்பு மற்றும் சர்வதேச விவகாரங்களில் அணிசேரா நிலைப்பாட்டைப் பேணுதல் ஆகியவற்றின் ஆதரவை உறுதி செய்வது இதில் அடங்கும்.