அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களைத் தவிர, பொதுவான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்கள் தடைகளை உருவாக்கலாம்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்றால் என்ன?
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களவை மற்றும் சட்டமன்றங்களுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கான யோசனையைக் குறிப்பிடுகிறது. இதற்கான உயர்மட்டக் குழு அளித்த பரிந்துரைகளை அமைச்சரவை தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தலை அமல்படுத்த வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைத்தனர். முதல் கட்டமாக மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டமாக, மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல் நடந்த 100 நாட்களுக்குள், நகராட்சிகளுக்கு, ஊராட்சிகளுக்கு, தேர்தல் நடத்தப்படும் என்று குறிப்பிட்டிருந்தது.
இந்தியாவில் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்துவதன் பின்னணியில் உள்ள வரலாறு என்ன?
1951 முதல் 1967 வரை ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டன. பின்னர், 1999-ல் சட்ட ஆணையமானது (Law Commission) தனது 170-வது அறிக்கையில், ஐந்து ஆண்டுகளுக்கு மக்களவை மற்றும் அனைத்து சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்தக்கூடாது என்று பரிந்துரைத்தது. இதேபோல், நாடாளுமன்றக் குழு தனது 2015 அறிக்கையில் இரண்டு கட்டங்களாக ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான வழிமுறைகளை முன்மொழிந்தது.
சுதந்திரம் அடைந்ததிலிருந்து, இந்தியா மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட தேர்தல்களை நடத்தியுள்ளது. ஒவ்வொரு தேர்தலுக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் கணிசமான அளவில் செலவுகள் ஏற்படுகின்றன. ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்துவது என்பது, தேர்தல் செயல்முறை மற்றும் நிர்வாகத்தை மாற்றும் என்று உயர்மட்டக் குழு ஒருமனதாக நம்புகிறது. இந்த மாற்றம் வரையறுக்கப்பட்ட வளங்களை மேம்படுத்தும் மற்றும் அதிக வாக்காளர் பங்கேற்பை ஊக்குவிக்கும்.
மாதிரி நடத்தை நெறிமுறைகளில் (Model Code of Conduct) இருந்து ஆட்சி மற்றும் கொள்கை முடக்கம் ஆகியவற்றில் ஏற்படும் இடையூறுகள் குறைக்கப்படும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது செயல்முறைக்கான சுழற்சியை பராமரிக்க உதவும் என்று முன்னணி வணிக நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. ஏனெனில், குறைவான தொழிலாளர்கள் வாக்களிக்க தங்கள் தொகுதிகளுக்கு செல்வார்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், குறிப்பாக, ஊதியத்தை இழப்பதைத் தவிர்க்கலாம் மற்றும் பயணச் செலவுகளைக் குறைக்கலாம்.
இந்த முன்மொழிவை நடைமுறைப்படுத்துவதில் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?
இந்த முன்மொழிவை நடைமுறைபடுத்துவதில், அடுத்த கட்டமானது பல நடவடிக்கைகளை உள்ளடக்கியது. அனைத்து தேர்தல்களுக்கும் பொதுவான வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதும் இதில் அடங்கும். நாடு தழுவிய அளவிலும் அரசு விரிவான விவாதங்களை நடத்தக்கூடும். இதில், ஒரு செயல்படுத்தும் குழு (implementation group) நிறுவப்பட வேண்டும். விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு, அரசியலமைப்பைத் திருத்துவதற்கான வரைவு மசோதா உருவாக்கப்படும். இந்த மசோதா வரும் குளிர்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் அமல்படுத்துவதில் என்னென்ன சவால்கள் இருக்கும்?
அரசியலமைப்பில் இரண்டு வகையான திருத்தங்கள் தேவை. முதல் திருத்தம் மக்களவை மற்றும் சட்டமன்றங்களைக் கொண்ட யூனியன் பிரதேசங்கள் உட்பட மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது. இரண்டாவதாக, மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களுக்குப் பிறகு 100 நாட்களுக்குள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்துத் தேர்தல்களை நடத்துவது மற்ற திருத்தம் ஆகும்.
முதல் திருத்தங்களுக்கு மாநில சட்டசபைகளின் ஒப்புதல் தேவையில்லை. இருப்பினும், இரண்டாவது திருத்தத்திற்கு மாநில சட்டசபைகளின் ஒப்புதல் தேவைப்படும். இது சில சவால்களை உருவாக்கலாம். மேலும், மற்றொரு சவால் என்னவென்றால், முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸும் மற்ற பிராந்தியக் கட்சிகளும் இணைந்து ஒரே நேரத்தில் தேர்தல் என்ற யோசனையை எதிர்க்கிறது.
மாநில அரசுகளின் நிலைப்பாடு என்ன? அவர்கள் செயல்படுத்த தயாராக இருக்கிறார்களா?
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்கள் (19 மாநிலங்கள் மற்றும் சட்டமன்றத்துடன் கூடிய ஒரு யூனியன் பிரதேசம்) இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும். இருப்பினும், ஒன்பது ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணி (I.N.D.I.A bloc) மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடமிருந்து எதிர்ப்பு இருக்கலாம்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் எப்போது எதிர்பார்க்கலாம்?
மோடி அரசு ஒரு காலக்கெடுவை குறிப்பிடவில்லை என்றாலும், இவரின் தற்போதைய பதவிக்காலத்தில் (2024-2029) செயல்படுத்துவதற்கான விருப்பத்தை சுட்டிக்காட்டியுள்ளது.