அரசாங்கத்தை கண்காணிக்கும் ஒரு கருவியாக பொதுக் கணக்குக் குழு (Public Accounts Committee) தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.
கடந்த பத்தாண்டுகளாக, நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்தது. நாடாளுமன்றத்தில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிப்பதை தவிர்த்தது. ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக தற்போது நடத்தி வருகிறது. எதிர்க்கட்சிகள் தற்போது பலம் பெற்றுள்ளன.
நிறைவேற்று அதிகாரத்தை நாடாளுமன்றம் எவ்வாறு மேற்பார்வை செய்கிறது என்பதை வலுப்படுத்த புதிய சூழ்நிலை வாய்ப்பு அளிக்கிறது. புதிதாக அமைக்கப்பட்ட பொதுக் கணக்குக் குழு (Public Accounts Committee (PAC)) தனது பணியை தொடங்கவுள்ளது. செப்டம்பர் 2 அன்று, பொதுக் கணக்குக் குழு அதன் பதவிக்காலத்தில் விவாதத்திற்காக 161 தலைப்புகளைத் தேர்ந்தெடுத்ததாக அறிவித்தது. இந்த தலைப்புகள் பெரும்பாலானவை தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் (Comptroller and Auditor General of India (CAG)) அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை.
குழு சொந்தமாக ஐந்து தலைப்புகளைத் தேர்ந்தெடுத்துள்ளது:
1. வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் சீர்திருத்தங்கள்.
2. ஒன்றிய அரசின் நலத்திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தல்.
3. ஆற்றல் துறையில் மாற்றத்திற்கான கொள்கை நடவடிக்கைகள்.
4. சட்டங்களால் அமைக்கப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகளின் செயல்திறனை மதிப்பாய்வு செய்தல்.
5. பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள் மீதான கட்டணங்கள், மற்றும் பயன்பாட்டாளர் கட்டணங்களை விதித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல்.
பொதுக் கணக்குக் குழு (Public Accounts Committee (PAC)) காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.வேணுகோபால் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுக் கணக்குக் குழு, அரசின் செலவு விவரங்களைத் தாண்டி, எவ்வளவு பணம் தேவைக்கேற்ப பயன்படுத்தப்படுகிறது என்பதையும் சரிபார்க்கலாம். பொதுக் கணக்குக் குழு தேர்ந்தெடுக்கும் தலைப்புகள் அரசியல் கோணங்களைக் கொண்டிருந்தாலும், அவை பொதுமக்களின் நலனுக்கு சேவை செய்கின்றன.
நாட்டின் நிதியை நாடாளுமன்றம் கட்டுப்படுத்துகிறது என்று அரசியலமைப்பு கூறுகிறது. நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டங்கள் மூலம் மட்டுமே வரிவிதிக்க முடியும். அனைத்து அரசாங்க செலவினங்களுக்கும் ஒதுக்கீட்டு மசோதாக்கள் மூலம் பாராளுமன்றத்தின் ஒப்புதல் தேவை. தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General of India (CAG)) அரசுத் துறைகளின் நிதிச் செயல்பாடுகளை சரிபார்த்து, தணிக்கை செய்யும் அரசியலமைப்பு அலுவலகமாகும்.
தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கைகள் ஒரு முக்கியமான நாடாளுமன்றக் குழுவான பொதுக் கணக்குக் குழுவுக்கு செல்கிறது. சமீபகாலமாக, அரசாங்கத்தின் முடிவுகள் சில வணிகங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், சலுகைசார் முதலாளித்துவத்திற்கு (crony capitalism) ஆதரவாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளன.
இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரிய (Securities and Exchange Board of India (SEBI)) தலைவர் மாதபி புச் மற்றும் அதானி குழுமம் மீதான கடுமையான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அரசாங்கம் மறுத்துவிட்டது. அதானி குழுமம் இந்தியாவில் ஏழு விமான நிலையங்களை கட்டுப்படுத்துகிறது.
பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளும் குறிப்பிடத்தக்க கேள்விகளை எதிர்கொள்கின்றன. இந்த விவகாரங்கள் குறித்து பொதுக் கணக்குக் குழு விசாரணை நடத்துவதை பாரதிய ஜனதா கட்சி ஏற்கனவே எதிர்த்துள்ளது. பொதுக் கணக்குக் குழுவில் 22 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 13 பேர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள், 9 பேர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள். இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள் உள்ளனர்.
ஆளும் கூட்டணியின் பெரும்பான்மையால் குழுவின் வலுவான நிலைப்பாட்டை பலவீனப்படுத்தப்படலாம். பொதுக் கணக்குக் குழு (Public Accounts Committee (PAC)) மற்றும் துறை தொடர்பான நிலைக்குழுக்கள், அவற்றில் பல குழுக்கள் இன்னும் அமைக்கப்படவில்லை, அந்த குழுக்களை உடனடியாக அமைக்க வேண்டும். அனைத்து குழுக்களும் நாடாளுமன்ற அதிகாரத்தின் கருவிகளாக செயல்பட வேண்டும் மற்றும் நிர்வாகம் மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.