மதரஸாக்களுக்கு நிதியளிப்பதை நிறுத்துமாறு மாநிலங்களை தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) கேட்டுக்கொள்கிறது : இதில், கேரளா எப்படி வேறுபடுகிறது? -ஷாஜு பிலிப்

 கேரளாவில், அரசியல் தலைவர்கள் ‘தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (National Commission for Protection of Child Rights (NCPCR))’ நடவடிக்கையை விமர்சித்தாலும், இதற்கான பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டால், மாநிலத்தில் சிறிதளவு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.


Madrasas :  மதரஸா எனும் அரபி வார்த்தைக்கு கல்வி நிறுவனம் என்று பொருள். மதரஸா கல்வி முறையானது, பழைய பாரம்பரிய முறையில் செயல்படுகிறது.


தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையமானது (NCPCR) சமீபத்தில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், மதரஸா வாரியங்களை "மூட வேண்டும்" என்று பரிந்துரை செய்ததுடன், மதரஸாக்கள் மற்றும் மதரஸா வாரியங்களுக்கு அரசு நிதி வழங்குவதை நிறுத்தவும் அவர்கள் பரிந்துரைத்தனர். கூடுதலாக, மதரஸாக்களில் படிக்கும் குழந்தைகளை "முறையான பள்ளிகளில்" (formal schools) சேர்க்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.


கேரளாவில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் என்சிபிசிஆர் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டாலும், கேரளாவில் அவை சிறிய விளைவையே ஏற்படுத்தும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏனென்றால், இந்த மாநிலத்தில் உள்ள மதரஸாக்கள் அரசு நிதியைப் பெறுவதில்லை. மேலும், மதரஸா கல்வியானது, வழக்கமான முறையில் பள்ளிக் கல்வியில் தலையிடாது.


மதரஸா கல்வி வாரியங்கள் (Madrasa education boards) 


கேரளாவில், சன்னி பிரிவுகள் மற்றும் முஜாஹித் போன்ற பல்வேறு முஸ்லீம் குழுக்களுடன் இணைக்கப்பட்ட அமைப்புகளால் மதரஸா கல்வி நிறுவனம் நிர்வகிக்கப்படுகிறது. சமஸ்தா கேரளா இஸ்லாம் மாதா வித்யாபயாச வாரியம் (Samastha Kerala Islam Matha Vidyabyasa Board) மற்றும் சமஸ்தா கேரளா சன்னி வித்யாபயாச வாரியம் (Samastha Kerala Sunni Vidyabhyasa Board) ஆகியவை இதன் முக்கிய அமைப்புகளாகும். இந்த வாரியங்கள் பல மதரஸாக்களை மேற்பார்வையிடுகின்றன. இதில், பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களை உருவாக்குதல், கற்பித்தல், தேர்வுகளை நடத்துதல், சான்றிதழ் வழங்குதல் மற்றும் பள்ளிகளுக்கு இடையில் மாணவர்களை இடமாற்றங்களும் (transfers) இந்த வாரியங்களால் நிர்வகிக்கப்படுகின்றன.


வகுப்பு 1 முதல் 12 வரை இயங்கும் மதரஸாக்கள் பொதுவாக ஒரு மசூதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மதரஸாக்களில், காலை நேரங்களில் வகுப்புகள் 9 மணி வரை நடைபெறுகின்றன. அதன் பிறகு, மாணவர்கள் தங்கள் வழக்கமான கல்விக்காக அருகிலுள்ள பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். சில மதரஸாக்களில் மாலை நேர வகுப்புகளும் உண்டு.


கேரளாவில், மதரஸா கல்வி மத மற்றும் ஒழுக்க போதனைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. முஸ்லீம் நிர்வாகத்தின் கீழ் உள்ள சில CBSE பள்ளிகள் வழக்கமான பள்ளி நேரத்திற்கு முன்பாகவே இந்த பள்ளிகளுக்குள் மதரஸா முறையில் கல்வியை கற்பிக்கின்றன. கூடுதலாக, சில ஆங்கில-முறையில் (English-medium schools) மதரஸா கல்வியை வழங்குகின்றன. மேலும், இந்த பள்ளிகளும் மதரஸா கல்வி வாரியங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.


வெளிநாட்டில் உள்ள குழந்தைகளைப் பூர்த்தி செய்வதற்காக, மதரஸாக்கள் மின்-கற்றல் வசதியையும் (e-learning facility) வழங்குகின்றன.


கேரளா கல்வி வாரியங்கள் (Kerala boards) மற்ற மாநிலங்களில் உள்ள மதரஸாக்களை இணைத்துள்ளன. இந்த மாநிலங்களில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை அடங்கும்.


ஆசிரியர்களின் சம்பளம் 


கேரளாவில் 2.25 லட்சம் ஆசிரியர்கள் மதரஸா கல்வி நிறுவனங்களில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர்கள் மார்க்க கல்வியில் (religious education) தகுதி பெற்றவர்கள் ஆவார். மேலும், அவர்கள் உள்ளூர் மசூதி அல்லது மஹல்லு குழுக்களால் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கான நியமனங்கள் மதரஸாக்களுடன் இணைந்த வாரியங்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகின்றன. அவர்களின் சம்பளம் மஹல்லு அல்லது மஸ்ஜித் குழுக்களால் நிர்ணயம் செய்து வழங்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்கள் முக்கியமாக பெற்றோரிடம் இருந்து நிதி வசூலிக்கின்றன.

 

அரசின் ஈடுபாடு 


மாநில அரசு மதரஸாக்களை நடத்துவதில்லை. ஆனால், மதரஸாவில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான நல நிதியை நிறுவியுள்ளது. சச்சார் குழு (Sachar Committee) அறிக்கையின் பரிந்துரையை அமல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட பாலோலி முகமது குட்டி (Paloli Muhammed Kutty) தலைமையிலான குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து 2010-ம் ஆண்டு மதரஸா ஆசிரியர்களுக்கான நல நிதியை அரசு உருவாக்கியது.


இந்த நிதியில் பங்குதாரர்களில் மாநில அரசு, மதரஸா ஆசிரியர்கள் மற்றும் மதரஸா நிர்வாகத்தினர் அடங்குவர். 2018-19ஆம் ஆண்டில், நல நிதி வாரியம் (welfare fund board) நிறுவப்பட்டது. இந்த வாரியத்தில் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு தலைவரும், பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அரசு ஊழியர் ஒரு தலைமை இயக்க அதிகாரியும் இந்த வாரியத்தில் உள்ளனர். இந்த வாரியம் 18 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இந்த உறுப்பினர்களில் ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு மதரஸா நிர்வாக சபைகளின் பிரதிநிதிகளும் அடங்குவர்.


2010-ம் ஆண்டில், மதரஸாக்களின் நல நிதிக்காக மாநில அரசு ரூ.10 கோடியை ஒதுக்கியுள்ளது. மேலும், மதரஸா ஆசிரியர்களும் மற்றும் நிர்வாகமும் மதரஸா நிறுவனத்திற்கு பங்களிப்பாக மாதம் தலா ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டது. 2012-ம் ஆண்டில், பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கையின்படி, இந்த நிறுவனத்திற்கான வைப்புத்தொகை (deposits) வங்கிகளில் இருந்து அரசு கருவூலத்திற்கு மாற்றப்பட்டது. 


2015-16ஆம் ஆண்டில், மாநில கருவூலத்தில் வட்டியில்லா வைப்புத்தொகையான (deposits) ஊக்கத் தொகையாக ரூ.3.75 கோடியை மாநில அரசு வழங்கியது. பின்னர், 2021-ம் ஆண்டில், மாநிலத்திடமிருந்து வட்டியில்லா வைப்புத்தொகைக்கான ஊக்கத்தொகையாக மேலும் ரூ.4.16 கோடியை மதரஸா வாரியம் திரும்பப் பெற்றது. தற்போது, ​​வாரியத்தின் கட்டணக் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய கருவூலத்தில் மொத்தம் ரூ.12 கோடி வைப்புத்தொகையாக (deposits) உள்ளது.


ஆசிரியர்கள் ஓய்வூதியமாக என்ன வருவாய் ஈட்டுகிறார்கள் 


தற்போது, 1,800 மதரசா ஆசிரியர்களுக்கு மாதத்திற்கு ரூ.1,500 முதல் 2,700 வரை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு ரூ.50 கட்டணம் செலுத்திய ஆசிரியருக்கு ஓய்வூதியம் ரூ.1,500 ஆகவும், 10 ஆண்டுகளுக்கு ரூ.2,250 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


கேரளாவில் 2.25 லட்சம் மதரஸா ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால், அவர்களில் 28,000 ஆசிரியர்களின் பங்களிப்பு மட்டுமே ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ளது. இந்த வாரியம் வீட்டுக் கடன்கள் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு திருமணம் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான உதவி உட்பட பிற உதவிகளையும் வழங்குகிறது.




Original article:

Share: