ஜனவரி 26 குடியரசு தினமாக கொண்டாடப்படும் நிலையில், 2015 முதல், நவம்பர் 26 ஆண்டுதோறும் இந்திய அரசியலமைப்பு தினம் (Constitution Day of India) அல்லது சம்விதான் திவாஸாக (Samvidhan Divas) அனுசரிக்கப்படுகிறது.
ஜனவரி 26 குடியரசு தினமாக கொண்டாடப்படும் நிலையில், 2015 முதல், நவம்பர் 26 ஆண்டுதோறும் இந்திய அரசியலமைப்பு தினம் அல்லது சம்விதான் திவாஸாக அனுசரிக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி X வலைதளத்தில் பதிவிடுகையில், இந்த (நவம்பர் 26) நாளுக்கான தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், அவர் அரசியலமைப்பை இந்தியாவின் "வழிகாட்டும் ஒளி" (guiding light) என்று அழைத்தார். அன்றைய வரலாறு மற்றும் அரசியல் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே குறிப்பிடுகிறது.
"குடிமக்களிடையே அரசியலமைப்பு மதிப்புகளை" ஊக்குவிப்பதற்காக நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்றும் மே 2015-ம் ஆண்டில் ஒன்றிய அமைச்சரவை அறிவித்தது. அந்த ஆண்டு அரசியலமைப்பின் வரைவுக் குழுவின் தலைவரான பி.ஆர்.அம்பேத்கரின் 125வது பிறந்த நாளையும் குறித்தது. கே.எம்.முன்ஷி, முஹம்மது சாதுல்லா, அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் ஆகியோரும் குழுவின் உறுப்பினர்களாக இருந்தனர்.
இந்த ஆண்டு, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளை நாடு கொண்டாடுகிறது. இந்த ஆண்டு முழுவதும் நாடு தழுவிய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 'அரசியலமைப்பு தினம்' இருக்கும். அரசியலமைப்பு சபையின் வரைவுக் குழுவின் தலைவராக இந்திய அரசியலமைப்பை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்த டாக்டர் அம்பேத்கரை கெளரவிக்கும் விதமாக இருக்கும்" என்று பத்திரிகை தகவல் அலுவலகம் 2015–ம் ஆண்டில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் இந்த முடிவு அம்பேத்கரின் பாரம்பரியத்தை உரிமை கோருவதற்கான ஒரு நடவடிக்கையாகவும், தலித் சமூகத்தை (Dalit community) அணுகும் முயற்சியாகவும் பார்க்கப்பட்டது. 2015-ம் ஆண்டு அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, அப்போதைய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தாவர் சந்த் கெஹ்லோட், "ராகுல் காந்தியும் அவரது கட்சியும் அம்பேத்கரை ஒருபோதும் கௌரவிக்கவில்லை. அவர் ஒருபோதும் பாரத ரத்னாவைப் பெறவில்லை, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அவரது ஆயில் பெயிண்டிங் நாடாளுமன்றத்தில் நிறுவப்படவில்லை.
அந்த நேரத்தில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் அம்பேத்கரின் சிந்தனைகள் மற்றும் தத்துவத்தை மேம்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்தது. இந்த நடவடிக்கைகளில் ஒன்று புது தில்லியில் உள்ள ஜன்பத் (Janpath) 15-ல் அம்பேத்கர் சர்வதேச மையத்தை அமைப்பதாகும். இந்த திட்டத்திற்கான செலவு 197 கோடி ரூபாய் ஆகும்.
நவம்பர் 19, 2015 அன்று, அரசாங்கம் முறையாக நவம்பர் 26ஆம் நாளை அரசியலமைப்பு தினமாக அறிவித்தது. இதற்கு முன்பு, அம்பேத்கர் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும் இருந்ததால் இந்த நாள் தேசிய சட்ட தினமாக அனுசரிக்கப்பட்டது.
இந்த ஆண்டு, எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரங்களிலிருந்து தனது சமீபத்திய அறிக்கைகளின் காணொலி தொகுப்புடன் அன்றைய செய்தியைப் பகிர்ந்து கொண்டார். 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, காந்தி அடிக்கடி அரசியலமைப்பின் ஒரு சிறிய நகலை தன்னுடன் எடுத்துச் செல்வதைக் காண முடிந்தது, சிறுPANமை மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகக் குழுக்களுக்கு வேண்டுகோள் விடுக்க அதைப் பயன்படுத்தினார்.
X வலைதளத்தில் அவரது பதிவில், "அரசியலமைப்பு என்பது சமூகத்தின் ஏழ்மையான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமுகங்களைப் பாதுகாக்க ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். அது எந்த அளவுக்கு வலிமையானதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு நமது நாடு வலிமையாக இருக்கும். இந்த நாளில், அரசியலமைப்பின் நோக்கங்களைப் பாதுகாத்த தியாகிகள் மற்றும் அரசியலமைப்பு சபையின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் இன்று நான் அஞ்சலி செலுத்துகிறேன். அதைப் பாதுகாப்பதற்கான எனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்.
இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான அமைப்பான அரசியலமைப்பு சபை தனது முதல் அமர்வை டிசம்பர் 9, 1946 அன்று நடத்தியது. இதில் 207 உறுப்பினர்களுடன் நடைபெற்றது. ஆரம்பத்தில், சட்டமன்றத்தில் 389 உறுப்பினர்கள் இருந்தனர். ஆனால், சுதந்திரம் மற்றும் இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, உறுப்பினர்களின் பலம் 299 ஆகக் குறைக்கப்பட்டது.
அரசியலமைப்பை இயற்றுவதற்கு சட்டமன்றம் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்துக் கொண்டது. அரசியலமைப்பு வரைவின் உள்ளடக்கத்தை மட்டும் பரிசீலிக்க 114 நாட்களுக்கும் மேலாக செலவிட்டனர். மற்ற நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்கள் உட்பட அரசியலமைப்பு வரைவுக்கான பல்வேறு ஆதாரங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன. மேலும், அந்த நேரத்தில் இந்தியாவுக்குத் தேவைப்பட்டவற்றுக்கு ஏற்ப விதிகளை மாற்றியமைக்க பொருத்தமான திருத்தங்கள் செய்யப்பட்டன.
மற்றொரு முக்கிய ஆதாரம் 1935-ம் ஆண்டின் இந்திய அரசாங்கச் சட்டம் (Government of India Act) ஆகும். இந்தச் சட்டம் இரு அவைகளை அறிமுகப்படுத்தியது. இதன் பொருள் ஒன்றியத்திலும் ஆறு மாகாணங்களிலும் மேல் மற்றும் கீழ் சபைகள் இருந்தன. இந்த சபைகளுக்கு நேரடித் தேர்தலையும் அது நிறுவியது. அந்த நேரத்தில், இது பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மிக நீண்ட சட்டங்களில் ஒன்றாகும்.
டிசம்பர் 13, 1946 அன்று, நேரு "குறிக்கோள் தீர்மானத்தை" (Objectives Resolution) முன்மொழிந்தார். இது பின்னர் ஜனவரி 22, 1947 அன்று முகவுரையாக (Preamble) ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அம்பேத்கர் தலைமையிலான வரைவுக் குழு அரசியலமைப்பு சபையின் 17-க்கும் மேற்பட்ட குழுக்களில் ஒன்றாகும். இந்தியாவுக்கான வரைவு அரசியலமைப்புச் சட்டத்தைத் தயாரிப்பதே அவர்களின் முக்கியப் பணியாக இருந்தது. முன்வைக்கப்பட்ட 7,600 திருத்தங்களில், இந்த குழு அரசியலமைப்பு குறித்து விவாதிக்கும் போது சுமார் 2,400 திருத்தங்களை நீக்கியது.
அரசியலமைப்பு சபையின் கடைசி அமர்வு நவம்பர் 26, 1949 அன்று அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டபோது முடிவடைந்தது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஜனவரி 26, 1950 அன்று 284 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட பின்னர் அது நடைமுறைக்கு வந்தது. 1930-ம் ஆண்டு இதே நாளில் காங்கிரஸின் முழு சுயராஜ்ஜியம் தீர்மானம் (Poorna Swaraj resolution) அறிவிக்கப்பட்டதால் ஜனவரி 26 தேர்ந்தெடுக்கப்பட்டது.