டாக்காவில் முஸ்லிம் லீக் நிறுவப்பட்ட நேரத்தில், பெரும்பாலும் உயர்வகுப்பைச் சார்ந்த முஸ்லீம் ஆண்களின் கூட்டமைப்பாக இருந்தது. முஸ்லிம் லீக் மற்றும் இந்திய அரசியலில் அதன் பங்கு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மூன்று விஷயங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
1906-ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி அகில இந்திய முஸ்லிம் லீக் நிறுவப்பட்டது. டாக்காவில் லீக் நிறுவப்பட்ட நேரத்தில், லீக் பெரும்பாலும் உயர்வகுப்பைச் சார்ந்த முஸ்லீம் ஆண்களின் கூட்டமைப்பாக இருந்தது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அவ்வாறே இருந்தது. இறுதியில் அதன் மிக உயர்ந்த தலைவரான முகமது அலி ஜின்னா, அப்போது காங்கிரஸில் இருந்தார். 1930-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில்தான் அது மிகவும் வெகுஜன அமைப்பாக மாறியது. ஜின்னாவின் தலைமையில் பிரிவினை இயக்கத்தை முன்னெடுத்தது.
பிரிவினைக்குப் பிறகு, இந்தியாவில் முஸ்லிம் லீக் கலைக்கப்பட்டது. பாகிஸ்தானிலும், பின்னர் பங்களாதேஷிலும் முஸ்லிம் லீக் பிளவுபட்டது. அதனால், நீண்ட காலம் நீடிக்கவில்லை.
முஸ்லிம் லீக்கின் உருவாக்கம்
20-ஆம் நூற்றாண்டு தொடங்கியபோது, இந்தியாவில் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த முஸ்லீம்கள் சமூகத்திற்குள் அரசியல் தலைமை மற்றும் பிரதிநிதித்துவத்தின் தேவையை உணரத் தொடங்கினர். 1905-ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையை காங்கிரஸ் எதிர்த்த விதம் இந்த உணர்வை மேலும் அவசரமாக்கியது. முஸ்லீம் லீக் முறையாக நிறுவப்படுவதற்கு முன்பு இரண்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் நிகழ்ந்தன. இன்றைய அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான இயக்கம், முஸ்லிம்களுக்கு அதிக அரசியல் பிரதிநிதித்துவம் கோரி 1905-ஆம் ஆண்டில் அப்போதைய இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த மிண்டோ பிரபுவுடன் முஸ்லிம்களின் முக்கிய சந்திப்பு நடைபெற்றது.
அமெரிக்க வரலாற்றாசிரியர் ஸ்டான்லி வோல்பெர்ட், தனது 1984-ஆம் ஆண்டு புத்தகத்தில் பாகிஸ்தானின் ஜின்னா, "அக்டோபர் 1, 1906-ஆம் ஆண்டு அன்று, பிரிட்டிஷ் இந்தியாவின் ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் பல சுதேச மாநிலங்களிலிருந்தும் உன்னத பிறப்பு, செல்வம் மற்றும் அதிகாரம் கொண்ட முப்பத்தைந்து முஸ்லிம்கள் இமயமலையில் உள்ள வைஸ்ராயின் சிம்லா அரண்மனையின் அரச நடன அறையில் கூடினர்." என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் வைஸ்ராய்க்கு ஒரு உரையை வழங்கினர். அதில் "ஐரோப்பிய வகையான பிரதிநிதித்துவ நிறுவனங்கள் இந்திய மக்களுக்கு புதியவை" என்றும், அவை மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் மாற்றியமைக்கப்படாவிட்டால், இது "நமது தேசிய நலன்களை அனுதாபமற்ற பெரும்பான்மையினரின் கருணையில் வைக்கும்" என்றும் கூறியது.
"அனுதாபமற்ற" இந்து பெரும்பான்மையினருக்கு எதிராக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் உதவி கோருவதில், இந்திய முஸ்லிம்கள் "தேசிய நலன்கள்" என்ற வார்த்தைகளை முதன்முதலில் பயன்படுத்தியது இதுதான் என்று வோல்பெர்ட் குறிப்பிடுகிறார்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, டாக்காவில் (Dacca) (இப்போது தாக்கா (Dhaka)), அகில இந்திய முஸ்லிம் லீக் நிறுவப்பட்டது.
லக்னோ ஒப்பந்தம் (1916)
காங்கிரசும் முஸ்லிம் லீக்கும் ஒத்துழைத்த உதாரணங்களும் உண்டு. டிசம்பர் 1916-ஆம் ஆண்டில், பால கங்காதர திலக் தலைமையிலான காங்கிரசும், முகமது அலி ஜின்னாவின் தலைமையிலான முஸ்லீம் லீக்கும் லக்னோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஒப்பந்தத்தின் படி, மாகாண, மத்திய சட்டமன்றங்கள், மத்திய நிர்வாகக் கவுன்சில் போன்ற அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் வேண்டும் மற்றும் காங்கிரஸ் தனி வாக்காளர் தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டது.
லாகூர் தீர்மானம் (1940)
லக்னோ ஒப்பந்தம் முதல் லாகூர் தீர்மானம் வரை லீக்கும் ஜின்னாவும் பிரிவினையைத் தவிர வேறு எதையும் வலியுறுத்தாமல் முற்றிலும் மாறிவிட்டன. அதற்குள் ஜின்னா காங்கிரஸை விட்டு வெளியேறிவிட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு, "காங்கிரஸின் இந்து நாட்டில்" முஸ்லிம்களுக்கு நியாயமான பலன் கிடைக்காது என்று இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் முன்னாள் ஆதரவாளர் நம்பினார்.
இவ்வாறு, 1940 மார்ச் 22 முதல் மார்ச் 24 வரை லாகூரில் நடந்த அதன் பொது அமர்வில் அகில இந்திய முஸ்லீம் லீக் ஏற்றுக்கொண்ட லாகூர் தீர்மானம், இந்திய முஸ்லிம்களுக்கு ஒரு சுதந்திர மாநிலத்தை முறையாக அழைப்பு விடுத்தது. இந்த தீர்மானத்தை நினைவுகூரும் வகையில் மார்ச் 23 பாகிஸ்தான் தேசிய தினமாக அனுசரிக்கப்படுகிறது.
அந்தத் தீர்மானம் பின்வருமாறு அறிவித்தது: "பின்வரும் அடிப்படைக் கோட்பாட்டின் அடிப்படையில் வகுக்கப்பட்டாலொழிய எந்த அரசியலமைப்புத் திட்டமும் இந்த நாட்டில் நடைமுறைக்கு உகந்ததாகவோ அல்லது முஸ்லிம்களுக்கு ஏற்புடையதாகவோ இருக்காது என்பது அகில இந்திய முஸ்லிம் லீக்கின் இந்த அமர்வின் பரிசீலிக்கப்பட்ட கருத்தாகும். அதாவது, புவியியல் ரீதியாக அருகருகே உள்ள அலகுகள் அவ்வாறு அமைக்கப்பட வேண்டிய பிராந்தியங்களாக வரையறுக்கப்பட்டு, தேவைப்படும் அத்தகைய பிராந்திய மறுசீரமைப்புகளுடன், இந்தியாவின் வடமேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் உள்ளதைப் போல முஸ்லிம்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக உள்ள பகுதிகள் "சுதந்திர மாநிலங்களாக" தொகுக்கப்பட வேண்டும் மற்றும் அதில் அரசியலமைப்பு அலகுகள் தன்னாட்சி மற்றும் இறையாண்மை கொண்டதாக இருக்கும்." என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும், "முஸ்லீம்கள் சிறுபான்மையினராக உள்ள இந்தியாவின் பிற பகுதிகளில், அவர்களுக்கும் பிற சிறுபான்மையினருக்கும் அவர்களின் மத, கலாச்சார, பொருளாதார, அரசியல், நிர்வாக மற்றும் பிற உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்காக அவர்களுடன் கலந்தாலோசித்து அவர்களுக்குப் போதுமான, பயனுள்ள, கட்டாயமான பாதுகாப்புகள் அரசியலமைப்பில் சிறப்பாக வழங்கப்பட வேண்டும்" என்றும் தீர்மானம் கோரியது.