கர்நாடகா உயர்நீதிமன்றம் ஏன் திருநங்கைகள் பிறப்புச் சான்றிதழில் பெயர் மற்றும் பாலினத்தை மாற்றிக்கொள்ளலாம் என்று அனுமதித்தது? -அஜய் சின்ஹா ​​கற்பூரம்

 ஆதார் அட்டை, பாஸ்போர்ட் போன்ற அதிகாரப்பூர்வ ஆவணங்களில் திருநங்கைகள் பெயர் மற்றும் அடையாளத்தை மாற்றுவது பற்றி சட்டம் என்ன சொல்கிறது?


திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 2019 இயற்றப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, கர்நாடக உயர் நீதிமன்றம் தலையிட்டது. திருநங்கை ஒருவர் தனது பிறப்புச் சான்றிதழில் பெயர் மற்றும் பாலினத்தை மாற்றிக்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த மாற்றம் அவருக்கு முன்பு நிராகரிக்கப்பட்டது. இருப்பினும், 2019 சட்டமும் அதன் விதிகளும் தெளிவாக அனுமதிக்கின்றன.


அந்த பெண்ணினுடைய கோரிக்கை ஏன் நிராகரிக்கப்பட்டது? மேலும் ஒரு திருநங்கை தனது பெயரையும் அடையாளத்தையும் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் மாற்றுவதற்கான செயல்முறை என்ன?


(Ms. X vs State of Karnataka (2024)) வழக்கில் மனுதாரருக்கு பாலின அசொகரியம் (dysphoria) இருப்பது கண்டறியப்பட்டது. பாலின அசொகரியம் என்பது ஒருவரின் பாலின அடையாளத்தில் ஏற்படும் பிரச்சனையை குறிக்கிறது. பிறக்கும்போது, ​​ஆண் அல்லது பெண் போன்ற பாலின அடையாளங்கள் பாலின உறுப்புகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகினற்ன. இருப்பினும், காலப்போக்கில், பாலினம் என்பது உயிரியலைக் குறிக்கும் பாலினத்திலிருந்து பிரிக்கப்பட்ட ஒரு சமூக அடையாளமாக புரிந்து கொள்ளப்பட்டது.


இந்நிலையில், பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து, பெயரை மாற்ற மனுதாரர் முடிவு செய்தார். அவரது அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இந்த மாற்றங்களை பிரதிபலிக்கின்றன என்பதை உறுதிப்படுத்த, அவர் தனது ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் பாஸ்போர்ட்டில் தனது பெயர் மற்றும் பாலின அடையாளத்தை புதுப்பித்துள்ளார். எனினும், அந்த பெண் தனது பிறப்புச் சான்றிதழில் உள்ள தகவலை மாற்ற விண்ணப்பித்தபோது, ​​அந்த பெண்னினது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.


மங்களூரில் உள்ள பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் மனுதாரருக்கு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம்,  (Registration of Births and Deaths Act, 1969) பற்றி தெரிவித்தார். இந்த சட்டம் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை வழங்குவதை நிர்வகிக்கிறது. தகவல் "தவறானது" (erroneous) அல்லது "மோசடியாக அல்லது தவறாக" குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே பிறப்புச் சான்றிதழில் மாற்றங்களைச் சட்டப்  பிரிவு 15 அனுமதிக்கிறது.


பின்னர் இந்த சட்டத்தை எதிர்த்து அந்த பெண் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், பிரிவு 15 "மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது" (extremely restrictive) என்று வாதிட்டார். இது அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் கண்ணியத்துடன் வாழ்வதற்கான (curtailed her right to life) தனது உரிமையை மீறுவதாக அவர் கூறினார். ஒரு பெயர் ஒரு நபரின் அடையாளத்தின் வெளிப்பாடு என்று அவர் கூறினார்.


வெவ்வேறு அடையாளங்களைக் கொண்ட ஆவணங்களை வைத்திருப்பது இரட்டை வாழ்க்கையை உருவாக்குகிறது என்றும் அவர் கூறினார். ஒரு அடையாளம் காகிதத்தில் உள்ளது, மற்றொன்று உண்மையில் உள்ளது. இது எதிர்காலத்தில் துன்புறுத்தல் மற்றும் பாகுபாடுகளுக்கு வழிவகுக்கும் என்று அந்த பெண் கூறினார். 


பதிவாளர் 1969 சட்டத்தின்படி மட்டுமே செயல்பட முடியும் என்று கர்நாடகா அரசு வாதிட்டது.


சிறப்பு சட்டங்கள் மற்றும் பொதுச் சட்டங்கள் vs கர்நாடக உயர்நீதிமன்றம்


திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019, திருநங்கைகளுக்கு அவர்களின் அடையாளச் சான்றாக “அடையாளச் சான்றிதழை” (certificate of identity) வழங்கலாம் என்று பிரிவு 6 கூறுகிறது. பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு (sex-reassignment surgery) அவர்கள் தேர்வு செய்தால் இந்தச் சான்றிதழைத் திருத்தலாம் என்று பிரிவு 7 கூறுகிறது.


இந்தச் சான்றிதழின் அடிப்படையில் திருநங்கையின் பாலினம் "அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் பதிவு செய்யப்பட வேண்டும்" என்று சட்டம் தெளிவாகக் கூறுகிறது. இந்தச் சான்றிதழ் அல்லது திருத்தப்பட்ட சான்றிதழைக் கொண்ட எவரும் "பிறப்புச் சான்றிதழில் உள்ள முதல் பெயரையும் அவர்களின் அடையாளத்துடன் தொடர்புடைய மற்ற அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களையும் மாற்ற உரிமை உண்டு" என்றும் சட்டம் கூறுகிறது.


இந்தச் சான்றிதழைப் பெறுவதற்கான நடைமுறை திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) விதிகள், 2020 இல் விளக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் "அதிகாரப்பூர்வ ஆவணங்களையும்" பட்டியலிடுகின்றன. மேலும் "பிறப்புச் சான்றிதழ்" முதலாவதாக உள்ளது.


கர்நாடக உயர் நீதிமன்றம் 2020 விதிகளைக் குறிப்பிட்டு, 1969ஆம் ஆண்டு சட்டம், "பொதுச் சட்டமாக" (general enactment), "சிறப்புச் சட்டமான" திருநங்கைகள் சட்டத்திற்கு இணங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.


பொதுச் சட்டங்கள் என்பது பல சூழ்நிலைகளுக்கு பரவலாகப் பொருந்தும் சட்டங்கள் ஆகும். உதாரணமாக, 1969 சட்டம் பெரும்பாலும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குப் பொருந்தும். சிறப்புச் சட்டங்கள், மறுபுறம், குறிப்பிட்ட பிரிவுகளில் கவனம் செலுத்துகின்றன. பணமோசடி தடுப்புச் சட்டம், 2002, பணமோசடி குற்றத்தை கையாள்கிறது. அதே போல் திருநங்கைகள் சட்டம் திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது. 


1969 சட்டம் 2019 சட்டத்திற்கு இணைந்து செயல்படவேண்டும் என்று கூறுவதன் மூலம், கர்நாடக உயர் நீதிமன்றம் "பொதுவிதி, தனிவிதியை மிஞ்சி நிற்காது" (generalia specialibus non derogant) என்ற சட்ட விதியைப் பின்பற்றியது. அதாவது "பொதுவான சட்டங்களை விட சிறப்பு சட்டங்கள் மேலானவை என்று பொருள்".


ஒரு குறிப்பிட்ட சிக்கலுக்காக வடிவமைக்கப்பட்ட சட்டத்தில் பொதுச் சட்டம் தலையிடக் கூடாது என்பது பொதுவான கருத்து. உதாரணமாக, பணமோசடி அல்லது பயங்கரவாதத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் பெற கடுமையான நிபந்தனைகளை சந்திக்க வேண்டும். இது பாரதிய நியாய சன்ஹிதாவின் (Bharatiya Nyaya Sanhita (BNS)) கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து வேறுபட்டது. அவர்கள் ஜாமீனில் குறைந்த தேவைகளை பூர்த்தி செய்கின்றனர்.


திருநங்கைகள் சட்டத்தின் கீழ் பதிவாளர் சான்றிதழை ஏற்க வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பதிவாளர் திருத்தப்பட்ட பெயர் மற்றும் பாலின அடையாளத்துடன் பிறப்புச் சான்றிதழை வழங்க வேண்டும். “1969 சட்டத்தில் தேவையான திருத்தங்கள் செய்யப்படும் வரை" இந்த நடைமுறை தொடர வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.


திருநங்கைகள் சட்டத்தின் கீழ் சான்றிதழுக்கான விண்ணப்ப செயல்முறை


திருநங்கைகள் சட்டத்தின்கீழ் அடையாளச் சான்றிதழைப் பெற, நபர் திருநங்கைகள் விதிகளில் உள்ள செயல்முறையைப் பின்பற்ற வேண்டும். முதலில், அவர்கள் மாவட்ட நீதிபதியிடம் (District Magistrate) ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டும் மற்றும் அவர்களின் பாலின அடையாளத்தை தெரிவிக்கும் பிரமாணப் பத்திரத்தைச் அதில் சேர்க்க வேண்டும். மாவட்ட நீதிபதி உறுதிமொழியைச் செயல்படுத்தி, விண்ணப்பதாரருக்கு ஆதாரமாக அடையாள எண்ணைக் கொடுப்பார். அடையாளச் சான்றிதழும் திருநங்கை அடையாள அட்டையும் 30 நாட்களுக்குள் வழங்கப்படும் அல்லது விண்ணப்பம் காரணங்களுடன் நிராகரிக்கப்படும்.


ஒரு நபர் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை (reassignment surgery) செய்து கொண்டால், அவர்கள் மருத்துவக் கண்காணிப்பாளர் அல்லது தலைமை மருத்துவ அதிகாரியிடம் மருத்துவச் சான்றிதழைக் கோரலாம். இந்தச் சான்றிதழுடன், திருத்தப்பட்ட அடையாளச் சான்றிதழுக்காக அவர்கள் மாவட்ட நீதிபதிக்கு விண்ணப்பிக்கலாம். அது 15 நாட்களுக்குள் வழங்கப்படும்.


சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பே ஒருவர் பாலினத்தை மாற்றிக் கொண்டால், அவர்கள் புதிய சான்றிதழுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை.


ஆதார், ஓட்டுநர் உரிமம் அல்லது பிறப்புச் சான்றிதழ் போன்ற அதிகாரப்பூர்வ ஆவணங்களை வழங்குவதற்குப் பொறுப்பான எந்தவொரு அதிகாரமும், ஆவணத்தில் உள்ள பெயர், பாலினம், புகைப்படம் அல்லது வேறு ஏதேனும் தகவலை மாற்ற வேண்டும். செல்லுபடியாகும் அடையாளச் சான்றிதழைக் கொண்ட திருநங்கையிடமிருந்து விண்ணப்பத்தைப் பெற்ற 15 நாட்களுக்குள் இதைச் செய்ய வேண்டும்.




Original article:

Share: