ஒருவரின் வங்கிக் கணக்கை குற்றவாளிகள் கையகப்படுத்தி சட்டவிரோத பணத்தை வெள்ளையாக்க பயன்படுத்தினால் என்ன நடக்கும்? 'ஆள்மாறாட்ட பணப் பரிமாற்றம்' (‘money mules’) எவ்வாறு குறிவைக்கப்படுகின்றன? அதை தடுக்க அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கிறது?
இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India (RBI)) வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) ஒரு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) இயங்கும் மாதிரியை உருவாக்கியுள்ளது. இது "ஆள்மாறாட்ட பணப் பரிமாற்ற" வங்கிக் கணக்குகளின் அதிகரித்து வரும் சிக்கலைச் சமாளிக்க வங்கிகளுக்கு உதவுவதன் மூலம் டிஜிட்டல் மோசடியைக் குறைக்கும். MuleHunter.AI என்று அழைக்கப்படும் இந்த மாதிரியை மத்திய வங்கியின் துணை நிறுவனமான பெங்களூருவில் உள்ள ரிசர்வ் வங்கியின் புத்தாக்க மையம் (Reserve Bank Innovation Hub (RBIH)) உருவாக்கியுள்ளது.
ஆள்மாறாட்ட பணப் பரிமாற்ற வங்கிக் கணக்கு என்றால் என்ன?
ஆள்மாறாட்ட பணப் பரிமாற்ற வங்கிக் கணக்கு என்பது சட்டவிரோத நிதிகளை வெள்ளையாக்குவது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு குற்றவாளிகளால் பயன்படுத்தப்படும் ஒரு வங்கிக் கணக்காகும். இந்த கணக்கு பொதுவாக குற்றவாளிகளால் அவர்களின் அசல் பயனர்களிடமிருந்து, பெரும்பாலும் குறைந்த வருமானக் குழுக்களைச் சேர்ந்த நபர்களிடமிருந்து அல்லது குறைந்த அளவிலான தொழில்நுட்பக் கல்வியறிவு கொண்ட நபர்களிடமிருந்து வாங்கப்படுகிறது.
"ஆள்மாறாட்ட பணப் பரிமாற்றம்" என்பது குற்றவாளிகளால் திருடப்பட்ட அல்லது சட்டவிரோத பணத்தை தங்கள் வங்கிக் கணக்குகள் மூலம் மோசடி செய்ய பயன்படுத்தும் அப்பாவி பாதிக்கப்பட்டவர்களை விவரிக்க பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் புகாரளிக்கப்படும்போது இவை விசாரனைக்கு உள்ளாகிறது. ஏனென்றால், ஆள்மாறாட்ட பணப் பரிமாற்றத்தின் உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்க முடியாதவர்களாக உள்ளனர்.
"நிதித் துறையில் டிஜிட்டல் மோசடிகளைத் தடுக்கவும் குறைக்கவும் வங்கிகள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் ஒருங்கிணைந்து ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சைபர் பாதுகாப்பு, சைபர் மோசடி தடுப்பு மற்றும் பரிவர்த்தனை கண்காணிப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கான ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களுக்கான ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் இதில் அடங்கும். மோசடிகளின் வருமானத்தை திசைதிருப்ப மோசடி செய்பவர்களால் ஆள்மாறாட்ட பணப் பரிமாற்ற கணக்குகளைப் பயன்படுத்துவது ஒரு பொதுவான முறையாகும்" என்று ரிசர்வ் வங்கி ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
MuleHunter.AI "ஆள்மாறாட்ட பணப் பரிமாற்ற வங்கிக் கணக்குகளை திறமையான முறையில் கண்டறிய உதவுகிறது" என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இரண்டு பெரிய பொதுத்துறை வங்கிகளுடன் இது ஊக்கமளிக்கும் முடிவுகளை அளித்துள்ளது என்றும், "நிதி மோசடிகளைச் செய்ய இத்தகைய வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்படும் பிரச்சினையைச் சமாளிக்க" MuleHunter.AI மாதிரியை மேலும் உருவாக்க வங்கிகள் ரிசர்வ் வங்கியுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவில் ஆள்மாறாட்ட பணப் பரிமாற்ற கணக்கு பிரச்சினை எவ்வளவு பெரியது?
இந்தியாவில் பெரும்பாலான இணையவழி நிதி மோசடிகளில் ஆள்மாறாட்ட பணப் பரிமாற்ற கணக்குகள் ஒரு முக்கிய அங்கமாக பார்க்கப்படுகின்றன. சைபர் குற்றங்களின் வருமானத்தை மோசடி செய்ய பொதுவாக பயன்படுத்தப்படும் இதுபோன்ற சுமார் 4.5 லட்சம் வங்கிக் கணக்குகளை மத்திய அரசு முடக்கியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கடந்த மாதம் செய்தி வெளியிட்டது.
இந்த 4.5 லட்சம் கணக்குகளில், சுமார் 40,000 ஸ்டேட் வங்கியின் பல்வேறு கிளைகளில் கண்டறியப்பட்டுள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் (ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா உட்பட) 10,000; கனரா வங்கியில் 7,000 (சிண்டிகேட் வங்கி உட்பட); கோடக் மஹிந்திரா வங்கியில் 6,000; மற்றும் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியில் 5,000.
ஆள்மாறாட்ட பணப் பரிமாற்ற கணக்குகளை ஒடுக்க அரசாங்கம் என்ன செய்துள்ளது?
வெள்ளிக்கிழமை, நிதிச் சேவைகள் துறை (Department of Financial Services (DFS) ) செயலாளர் ரிசர்வ் வங்கி, மத்திய உள்துறை அமைச்சகத்துடன் இணைந்த இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (ஐ4சி), வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (National Bank For Agriculture And Rural Development (NABARD)) மற்றும் பொது மற்றும் தனியார் துறை வங்கிகளின் அதிகாரிகளுடன் டிஜிட்டல் நிதி மோசடி, குறிப்பாக ஆள்மாறாட்ட பணப் பரிமாற்ற கணக்குகளின் வளர்ந்துவரும் சவாலைப் பற்றி விவாதித்தார். சமீப காலங்களில் பல்வேறு பங்குதாரர்களுடன் இதுபோன்ற பல கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை கூட்டத்தில், வங்கிகள் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றவும், அதிநவீன கருவிகளைப் பயன்படுத்தவும், ஆள்மாறாட்ட பணப் பரிமாற்ற கணக்குகளை திறம்பட நிவர்த்தி செய்ய வங்கிகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வளர்க்கவும் வலியுறுத்தப்பட்டன. இத்தகைய கணக்குகளை நிகழ்நேரத்தில் கண்டறிவதற்கான AI / ML தீர்வுகள் உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்பங்களை பின்பற்றவும், மோசடி கண்டறிதல் மற்றும் தடுப்பு குறித்து வங்கி ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆள்மாறாட்ட பணப் பரிமாற்ற கணக்குகளைக் கண்டறிதல் மற்றும் கண்காணிப்பை அதிகரிக்க ரிசர்வ் வங்கியின் புதிய Mule hunter தீர்வை ஆராய்ந்து செயல்படுத்தவும் அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.
நவம்பர் 2023-ஆம் ஆண்டில், முன்னாள் DFS செயலாளர் விவேக் ஜோஷி, வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுப்பதில் சில கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
உதாரணமாக, வங்கி கணக்கில் ரூ.50 ஆக இருக்கலாம். ஆனால், திடீரென்று ரூ.50,000 கணக்கில் வரவு செய்யப்படுகிறது. பணத்தைப் பெறுவது ஒரு பிரச்சனையல்ல. ஆனால், அதை திரும்பப் பெறும்போது சில கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும்" என்று நிதி மோசடிகள் குறித்த கூட்டத்திற்குப் பிறகு ஜோஷி செய்தியாளர்களிடம் கூறினார்.
ரிசர்வ் வங்கி தற்போது "ஜீரோ நிதி மோசடிகள்" (“Zero Financial Frauds”) என்ற கருப்பொருளில் ஒரு பயிற்சி வகுப்பினை நடத்தி வருகிறது. இதில் ஆள்மாறாட்ட பணப் பரிமாற்ற கணக்குகளில் முக்கிய கவனம் செலுத்துகிறது. இந்த சிக்கலைச் சமாளிக்க ஆக்கபூர்வமான தீர்வுகளைக் கண்டுபிடிப்பதே முக்கியமான குறிக்கோள் ஆகும்.