டெல்லிக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான நீண்டகால நலன்களின் சீரமைப்பு, மேம்பட்ட தொழில்நுட்பங்களில் இணைந்து பணியாற்றிய வரலாறு ஆகியவற்றுடன், டிரம்பின் கீழ் அது தொடரும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கவில்லை. இந்தியா-அமெரிக்க உயர் தொழில்நுட்ப ஒத்துழைப்பைப் பராமரிக்க, தொடர்ச்சியான முயற்சிகள் தேவை.
அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இந்தியாவிற்கு வருகை தந்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உயர் பாதுகாப்பு அதிகாரியாக இது அவரது இறுதி வெளிநாட்டுப் பயணமாகும். இந்த பயணம் அமெரிக்க-இந்திய உறவின் மூன்று முக்கிய அம்சங்களைக் காட்டுகிறது. முதலாவதாக, இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்துவதில் பைடன் நிர்வாகத்தின் வலுவான அர்ப்பணிப்பை இது எடுத்துக்காட்டுகிறது. வெள்ளை மாளிகையில் சல்லிவன் மற்றும் அவரது குழுவினர் இந்த முயற்சியில் சிறப்புப் பங்காற்றியுள்ளனர். கூட்டாண்மையை வலுப்படுத்துவதும், எதிர்பாராத நெருக்கடிகள் அமெரிக்க-இந்திய உறவை சீர்குலைக்காமல் பார்த்துக் கொள்வதும் இதன் நோக்கமாகும்.
இரண்டாவதாக, இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்த பைடன் நிர்வாகம் சிறப்பு முயற்சியை மேற்கொண்டு வருகிறது. தொழில்நுட்ப பிரச்சினைகள் குறித்த அரசாங்க விவாதங்களுக்கு அப்பால் அவர்கள் முன்னேறியுள்ளனர். இப்போது, அவர்கள் பல ஆண்டுகளாக உலகப் பொருளாதாரத்தை வடிவமைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் செயற்கை நுண்ணறிவு (AI), குறைமின் கடத்திகள் (semiconductors), விண்வெளி மற்றும் உயிரி தொழில்நுட்பம் போன்ற துறைகளில் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்த முயற்சியில் இரு நாடுகளிலிருந்தும் வணிகங்கள், தொடக்க நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி குழுக்கள் ஈடுபடுவதும் அடங்கும்.
இதற்கான கொள்கை கருவி, முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா-இந்தியா முன்முயற்சி (United States–India Initiative on Critical and Emerging Technology (iCET)) ஆகும். இது சல்லிவன் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் ஆகியோரால் ஜனவரி 2023-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. டெல்லி மற்றும் வாஷிங்டன் இரண்டிலும் உள்ள சிக்கலான பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்த விரிவான பேச்சுக்களை iCET உள்ளடக்கியுள்ளது. இது இந்தியா-அமெரிக்க உறவுகளில் பைடன் நிர்வாகத்தின் மரபின் முக்கிய பகுதியாக இருக்கும்.
பைடனின் பெரிய திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக iCET உள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் சீனாவை உலகம் நம்பியிருப்பதைக் குறைப்பதே இதன் நோக்கமாகும். நட்பு நாடுகளுடன் புதிய தொழில்நுட்ப கூட்டாண்மைகளை உருவாக்குவதில் இந்தத் திட்டம் கவனம் செலுத்துகிறது. ஆசியா மற்றும் அதன் சுற்றியுள்ள நீர்நிலைகள் மீதான சீனாவின் கட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதிகார சமநிலையை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து அமெரிக்காவைப் பற்றிய இந்தியாவின் பார்வையில் தொழில்நுட்பம் ஒரு முக்கிய பகுதியாக இருந்து வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவின் முக்கிய மையமாக இது மாறியது. இந்தியா தனது அணுசக்தி மற்றும் விண்வெளித் திட்டங்களை உருவாக்க அமெரிக்கா உதவியது. இந்திய விவசாயத்தை நவீனமயமாக்குவதிலும், இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியின் வளர்ச்சியை ஆதரிப்பதிலும் இது முக்கிய பங்கு வகித்தது.
சுசுதந்திரத்தின் ஆரம்ப ஆண்டுகளில், தொழில்நுட்பத்தில் நிறைய ஒத்துழைப்பு இருந்தது. இருப்பினும், 1970-ஆம் ஆண்டுகளில், அமெரிக்காவில் புதிய அணு ஆயுத பரவல் தடைச் சட்டங்கள் மற்றும் அணு ஆயுதங்கள் பரவுவதைத் தடுப்பதற்கான உலகளாவிய விதிகள் காரணமாக இந்த ஒத்துழைப்பு முடிவுக்கு வந்தது.
1960-ஆம் ஆண்டுகளில், இந்தியா அணு ஆயுதங்களை உருவாக்க வேண்டாம் என்று முடிவு செய்தது. இது அமெரிக்கா, பிற முன்னேறிய நாடுகள் மற்றும் சோவியத் யூனியனின் கடுமையான தடைகளுக்கு இலக்காக அமைந்தது. இவை அனைத்தும் அணு ஆயுதங்கள் பரவுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் இருந்தன. (1960-ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் அமெரிக்க அதிபர் ஜான் எஃப். கென்னடி இந்தியா அணு ஆயுதங்களை உருவாக்க உதவ முன்வந்ததாகக் ஒரு கதை உள்ளது, ஆனால் பிரதமர் ஜவஹர்லால் நேரு அந்த வாய்ப்பை நிராகரித்தார்.)
1980-ஆம் ஆண்டுகளில், பிரதம மந்திரிகள் இந்திரா காந்தியும். ராஜீவ் காந்தியும் அணு ஆயுத பரவல் தடை தொடர்பான சவால்கள் இருந்தபோதிலும், அமெரிக்காவுடன் பொதுவான தொழில்நுட்ப தளத்தைக் கண்டறிய முயன்றனர். இருப்பினும், 1990-ஆம் ஆண்டுகளில், இந்தியாவிற்கு எதிரான அணு ஆயுத பரவல் தடை கட்டுப்பாடுகள் வலுவடைந்தன. மே 1998-ஆம் ஆண்டில், அடல் பிஹாரி வாஜ்பாயின் அணு ஆயுத சோதனைகள் இந்தியாவும் அமெரிக்காவும் ஈடுபடுவதற்கு ஒரு புதிய வாய்ப்பை உருவாக்கி, அணு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்தன.
2005-08 ஆண்டு காலகட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட இந்திய-அமெரிக்க அணுசக்தி முன்முயற்சியால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டது. வாஷிங்டனில், பராக் ஒபாமாவும் டொனால்ட் ட்ரம்பும் ஆழமான தொழில்நுட்ப கூட்டுறவுக்கான அடித்தளத்தைத் தொடர்ந்து தெளிவுபடுத்தி வருகின்றனர். பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் iCET மூலம் அதை ஒரு புதிய நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
அதிக முன்னேற்றம் இருந்தபோதிலும், கடந்த 20வது ஆண்டுகளாக தொழில்நுட்ப ஒத்துழைப்பில் சிறந்த முன்னேற்றத்தின் நன்மைகளை முழுமையாக உணர முடியாமல் நீடித்த பிரச்சினைகள் உள்ளன. டெல்லியில், சல்லிவன் திங்களன்று இந்தியாவுடனான விண்வெளி ஒத்துழைப்பில் தற்போதுள்ள பல கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அறிவித்தார்.
இருதரப்பு சிவிலியன் அணுசக்தி ஒத்துழைப்பை எளிதாக்குவதற்காக இந்தியாவில் உள்ள முக்கிய அணுசக்தி மையங்களை அமெரிக்க கருப்பு பட்டியலில் இருந்து அகற்ற பைடன் நிர்வாகத்தில் தொடர்ந்து பணியாற்றி வருவதையும் அவர் மேற்கோள் காட்டினார். (ஜனாதிபதி பைடனும் நிர்வாகக் குழுவும் ஜனவரி 19 வரை கொள்கை முடிவுகளை எடுக்க முடியும், அவை ஒவ்வொரு நாளும் எடுக்கப்படுகின்றன).
இந்தியாவும் செய்ய வேண்டிய பணிகள் உள்ளன. குறிப்பாக அணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்பு சட்டம் (Civil Liability for Nuclear Damage Act) (2010), விதிகளை மாற்றியமைப்பதில் அமெரிக்க மற்றும் இந்திய நிறுவனங்கள் அணுசக்தி துறையில் முதலீடு செய்வதைத் தடுக்கின்றன. அணுசக்தி ஒப்பந்தம் வெளியாகி ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பிறகும், ரஷ்யாவைத் தவிர சர்வதேச இறக்குமதியாளர்களுடன் அணுமின் நிலையங்களைக் கட்டுவதற்கான எந்த ஒப்பந்தமும் இல்லை என்பது உண்மையில் வருந்தத்தக்கது.
டெல்லி மற்றும் வாஷிங்டனில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள், அணுசக்தி மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை உணர்ந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் செயற்கை நுண்ணறிவுத் (AI) துறையாகும். AI தரவு மையங்கள் அதிக அளவு சுத்தமான ஆற்றலைப் பயன்படுத்துகின்றன, மேலும் இந்தத் துறையில் உள்ள பல நிறுவனங்கள் அணுசக்தியைத் தேர்வு செய்கின்றன.
அணுசக்தி மீண்டும் வருவதால், இந்தியா அதன் வளர்ச்சியை விரைவுபடுத்த சரியான விதிகளை அமைக்க வேண்டும். தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறையில் நீடித்த ஒத்துழைப்பை உருவாக்குவதற்கும், பகிரப்பட்ட பொருளாதார மற்றும் உலகளாவிய இலக்குகளால் இயக்கப்படுவதற்கும் டிரம்ப் நிர்வாகத்திற்கும் மோடியின் அரசாங்கத்திற்கும் பைடன் ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளார்.
டிரம்பின் கீழ் இந்த பரந்த கட்டமைப்பு நிலைத்திருக்குமா? நம்பிக்கையுடன் இருப்பதற்கு காரணங்கள் உள்ளன. டிரம்ப் மற்றும் பைடன் இருவரும் அமெரிக்க தொழில்நுட்பத் தலைமையை வலுப்படுத்தவும் மேம்பட்ட உற்பத்தியை அதிகரிக்கவும் விரும்புகிறார்கள். சீனாவுடனான போட்டி, பொருளாதார ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் தொடர வாய்ப்புள்ளது. அதாவது, அமெரிக்கா இந்தியா போன்ற நம்பகமான கூட்டாளர்களுடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டும்.
மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம், அதன் மேம்பட்ட தொழில்நுட்பத் துறைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான தொடர்ச்சியான பகிரப்பட்ட நலன்களும், தொழில்நுட்பத்தில் இணைந்து பணியாற்றுவதற்கான அவர்களின் நீண்ட அரசியல் உறுதிப்பாட்டின் வரலாற்றும், டிரம்பின் கீழ் இது தொடரும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கவில்லை. தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கு தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகள் தேவைப்படும்.
இந்த வாரம், சல்லிவன் இந்தியத் தலைவர்களைச் சந்தித்தார். அதே நேரத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடந்த வாரம் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸைச் சந்திக்க வாஷிங்டனுக்குச் சென்றார். இரு நாடுகளுக்கும் இடையே சுமூகமான தொழில்நுட்ப ஒத்துழைப்பைப் பேணுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த சந்திப்புகள் உள்ளன.
இருப்பினும், அமெரிக்காவில் மேம்பட்ட தொழில்நுட்பத்தை வளர்ப்பதில் டிரம்ப் வேறுபட்ட அணுகுமுறையைக் கொண்டிருக்கலாம். இதன் தாக்கத்திற்கு இந்தியா தயாராக இருக்க வேண்டும். இது குறித்து மேலும் அடுத்த வாரம் விவாதிக்கப்படும்.
சி.ராஜா மோகன், கட்டுரையாளர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் சர்வதேச விவகாரங்களுக்கான பங்களிப்பு ஆசிரியராக உள்ளார்.