தெலுங்கானாவில் ஆளும் காங்கிரஸ், 1992-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 50% வரம்பிற்கு மேல் மாநிலத்தில் ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் மசோதாவை தாக்கல் செய்ய தயாராகி வருகிறது.
மார்ச் மாதத்தில், தெலுங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி, மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (Backward Classes) இடஒதுக்கீட்டை 25%-லிருந்து 42%ஆக உயர்த்துவதற்கான மசோதாவை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. இது நிறைவேற்றப்பட்டால், மாநிலத்தில் மொத்த இடஒதுக்கீடு 62%ஆக அதிகரிக்கும். இந்த இடஒதுக்கீடு உள்ளாட்சி அமைப்புகள், பொது வேலைவாய்ப்பு மற்றும் பொதுக் கல்வி ஆகியவற்றிற்குப் பொருந்தும். 2023 தேர்தலுக்கு முன்பு, முதல்வர் ரேவந்த் ரெட்டி ‘காமரெட்டி பிரகடனத்தில்’ (Kamareddy Declaration) கையெழுத்திட்டார். இது இடஒதுக்கீட்டை அதிகரிப்பதாக உறுதியளித்தது.
இருப்பினும், மசோதா நிறைவேற்றப்பட்டாலும், கடந்த ஆண்டு பீகார் அரசு எதிர்கொண்ட அதே சவாலை எதிர்கொள்ளும். அதாவது, பீகார் அரசானது அதன் ஒட்டுமொத்த ஒதுக்கீட்டை அதிகரிக்க முயன்றது. இது, 1992-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் இடஒதுக்கீடுகளுக்கு 50% வரம்பை நிர்ணயித்தது. இந்த வரம்பைப் பயன்படுத்தி ஜூலை 2024-ம் ஆண்டில் பீகார் சட்டத்தை ரத்து செய்தது பாட்னா உயர் நீதிமன்றம் ஆகும்.
50% உச்சவரம்புக்கு பின்னால் உள்ள வரலாறு என்ன? அது எப்போதாவது மீறப்பட்டதா?
இறுதியில், இந்திய அரசியலமைப்பின் 16-வது பிரிவாக மாறவிருந்த அரசியலமைப்பு நிர்ணய சபை விவாதத்தின்போது, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் "வாய்ப்பு சமத்துவம்" (equality of opportunity) என்ற கருத்தை விரிவாக விவாதித்தார். பொதுச் சேவைகளில் போதுமான அளவு பிரதிநிதித்துவம் பெறாத எந்தப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் ஆதரவாக நியமனங்கள் அல்லது பதவிகளை மாநிலங்களுக்கு ஒதுக்குவதற்கு அரசியலமைப்புப் பிரிவு 16 அனுமதிக்கிறது. டாக்டர் அம்பேத்கர் தெளிவாகவும் உறுதியாகவும் இடஒதுக்கீடுகளுக்கு ஆதரவாக இருந்தபோதும், அத்தகைய நடவடிக்கைகளை முதலில் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று நம்புபவர்களின் நலன்களை அவர் சமநிலைப்படுத்த வேண்டியிருந்தது.
டாக்டர் அம்பேத்கர் சட்டமன்றத்தில் பொதுவாக ஒரு கேள்வியை எழுப்பினார். இங்கு, 70% வேலைகள் ஒதுக்கப்பட்டு, 30% மட்டுமே அனைவருக்கும் திறந்திருந்தால் என்ன நடக்கும்? என்று அவர் யோசித்தார். இது இன்னும் "வாய்ப்பு சமத்துவம்" (equality of opportunity) என்ற கொள்கையைப் பின்பற்றுமா? என்று குறிப்பிட்டு அவரே தனது கேள்விக்கு விரைவாக பதிலளித்தார். அதாவது, "என் தீர்ப்பில் அது இருக்க முடியாது" என்றார். பின்னர், அவர் ஒரு யோசனையை பரிந்துரைத்தார். "எனவே, ஒதுக்கப்பட வேண்டிய இடங்கள் சிறுபான்மை இடங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட வேண்டும்" என்று அவர் கூறினார்.
"சிறுபான்மை இடங்களுக்கு" (a minority of seats) இடஒதுக்கீடு வரையறுக்கப்பட வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் கூறினார். இந்த யோசனை பின்னர் உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த 50% வரம்பிற்கு அடிப்படையாக அமைந்தது. இந்த 50% இடஒதுக்கீடு விதியை வடிவமைப்பதில் மூன்று உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் முக்கியப் பங்கு வகித்துள்ளன. அவை,
M R பாலாஜி vs மைசூர் மாநிலம் 1962 (M R BALAJI vs STATE OF MYSORE)
1962-ம் ஆண்டு, மைசூர் மாநிலத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இந்த உத்தரவு பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் 68% இடங்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (backward classes), பட்டியலிடப்பட்ட வகுப்பினர் (Scheduled Castes (SC)), மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (Scheduled Tribes (ST)) போன்ற மாணவர்களுக்கு ஒதுக்கியுள்ளது. எம்.ஆர். பாலாஜி vs மைசூர் மாநிலம் (M R Balaji vs State of Mysore) வழக்கில், 23 மாணவர்கள் மாநில அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். இந்த உத்தரவு, அமலில் இல்லாதிருந்தால் தாங்கள் சேர்க்கப்பட்டிருப்போம் என்று அவர்கள் கூறினர்.
அதன் தீர்ப்பில், அரசியலமைப்புப் பிரிவுகள் 15 மற்றும் 16-ன் கீழ் இடஒதுக்கீடு "நியாயமான வரம்புகளுக்குள்" (reasonable limits) இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பொதுவாக, சிறப்பு விதிகள் 50%-க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்றும் அது மேலும் விளக்கியது. இது, டாக்டர் அம்பேத்கர் முதலில் அறிமுகப்படுத்திய ஒரு கொள்கையின் அடிப்படையில் ஒரு தெளிவான வரம்பை நிர்ணயித்தது. இருப்பினும், "உண்மையான சதவீதம் ஒவ்வொரு வழக்கிலும் உள்ள தொடர்புடைய சூழ்நிலைகளைப் பொறுத்தது" என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
கேரள மாநிலம் vs என் எம் தாமஸ் 1976 (STATE OF KERALA vs N M THOMAS)
1976-ம் ஆண்டில், ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு கேரள அரசு vs N M தாமஸ்” (State of Kerala vs N M Thomas) வழக்கை விசாரித்தது. பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியின ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக விலக்கை இந்த வழக்கு சவால் செய்தது. இந்த விலக்கு, அவர்கள் பதவி உயர்வுகளுக்குத் தேவையான சிறப்புத் துறைத் தேர்வைத் தவிர்க்க அனுமதித்தது.
ஐந்து நீதிபதிகள் பெரும்பான்மையை உருவாக்கி தற்காலிக விலக்கை (temporary exemption) உறுதி செய்தனர். இதில், இந்த விலக்கு "முழுமையாக நியாயமானது" (fully justified) என்று நீதிபதி ஃபசல் அலி ஒப்புக்கொண்டார்.
அரசியலமைப்புப் பிரிவுகள் 14 மற்றும் 16-ல் உள்ள சமத்துவத்தின் இலக்கை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களை மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே அடைய முடியும் என்று அவர் விளக்கினார். அவர்களுக்கு சலுகைகள், தளர்வுகள் மற்றும் வசதிகளை வழங்குவதன் மூலம் இதைச் செய்ய முடியும். இது அவர்களின் குறைபாடுகளை நீக்கி பொருத்தமான இடஒதுக்கீடுகளை வழங்குவதையும் அவசியமாக்கியது. இந்த நடவடிக்கைகள் பின்தங்கிய பிரிவுகள் (weaker sections) மேம்பட்ட குழுக்களுடன் போட்டியிட உதவும். காலப்போக்கில், இது அவர்களை சமமாக்கி பின்தங்கிய நிலையை என்றென்றும் நீக்கும்.
எம் ஆர் பாலாஜிக்கு முன்மொழியப்பட்ட 50% உச்சவரம்பு குறித்தும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதாவது, நீதிபதி ஃபசல் அலி 50% உச்சவரம்பு என்பது "கவனமான விதி" (a rule of caution) என்று கூறினார். மேலும், உச்சவரம்பு எப்போது மீறப்படலாம் என்பதை விளக்க தனது சொந்த எண்கள் அடிப்படையிலான அனுமானத்தைப் பயன்படுத்தினார். ஒரு மாநிலத்தின் மக்கள்தொகையில் 80% பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குடிமக்களைக் கொண்ட ஒரு சூழ்நிலையில், அரசாங்கம் 80% இடஒதுக்கீட்டை வழங்கினால், “இடஒதுக்கீட்டின் சதவீதம் தவறானது என்றும், அரசியலமைப்புப் பிரிவு 16(4)-ன் விதியின் வரம்புகளை மீறுவதாகவும் கூற முடியுமா?
இதற்கு அவர் பதிலளித்ததாவது, "பதில் அவசியம் இல்லை என்று இருக்க வேண்டும்."
இந்திரா சாவ்னி vs இந்திய ஒன்றியம் 1992 (INDRA SAWHNEY vs UNION OF INDIA)
இந்திரா சாவ்னி vs இந்திய ஒன்றியம் (1992) வழக்கில், ஒன்றிய அரசின் முடிவுக்கு எதிரான ஒரு சவாலை நீதிமன்றம் விசாரித்தது. மண்டல் ஆணையத்தின் (Mandal Commission) பரிந்துரைகளை செயல்படுத்த ஒன்றியம் விரும்பியது. இந்தப் பரிந்துரைகளில் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினருக்கான 27% இடஒதுக்கீடு ஆகியவை அடங்கும்.
நீதிமன்றம் இந்த ஒதுக்கீட்டை உறுதி செய்தது. ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வானது, பட்டியலிடப்பட்ட வகுப்பினர் (SC), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (Backward Class) 50% இடஒதுக்கீடு உச்சவரம்பையும் உறுதி செய்தது. இருப்பினும், இந்த வரம்பை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டுமா என்பது குறித்து நீதிபதிகள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தனர்.
நீதிபதி பி.பி. ஜீவன் ரெட்டி தனக்கும் பெரும்பான்மையில் உள்ள மற்ற மூன்று பேருக்கும் தீர்ப்பை எழுதினார். இது, 50% இடஒதுக்கீடு வரம்பு எப்போதும் கடுமையானது அல்லது மாற்ற முடியாதது அல்ல என்று அவர் கூறினார். சில விதிவிலக்கான சூழ்நிலைகளில், இந்த வரம்பை மீறலாம். இது மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதாகும்.
காலப்போக்கில், மாநிலங்கள் பெரும்பாலும் 50% வரம்பிற்கு மேல் இடஒதுக்கீடுகளை வழங்க முயற்சித்துள்ளன. இருப்பினும், நீதிமன்றங்களால் மதிப்பாய்வு செய்யப்பட்ட பின்னர் இந்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.
2021-ம் ஆண்டில், மகாராஷ்டிராவில் சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டோருக்கான வகுப்புகள் சட்டம் (Educationally Backward Classes Act), 2018-ஐ உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்தச் சட்டம் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கி, இது 50% இடஒதுக்கீடு வரம்பை மீறுவதற்கு வழிவகுத்தது. நீதிபதி அசோக் பூஷண் உள்ளிட்டோர், இந்தச் சட்டத்திற்கு எதிராகத் தீர்ப்பளித்தனர். இதற்கிடையில், 50% உச்சவரம்பு சட்டமாகிவிட்டது என்று அவர் கூறினார். 50% வரம்பை மீறுவதற்கு நியாயப்படுத்தக்கூடிய 'விதிவிலக்கான சூழ்நிலைகள்' (exceptional circumstances) எதுவும் வழங்கப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மறுபுறம், இந்திரா சாவ்னி தீர்ப்பிற்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு ஒரு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. 1990-ம் ஆண்டில், தமிழ்நாடு அரசு அதன் மொத்த இடஒதுக்கீட்டு ஒதுக்கீட்டை 69% ஆக உயர்த்தியது. 1993-ம் ஆண்டில், முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா இந்தச் சட்டத்தை அரசியலமைப்பின் 9-வது அட்டவணையின் கீழ் கொண்டுவருவதற்கு அழுத்தம் கொடுத்தார். இந்த அட்டவணையில் உள்ள சட்டங்களை அடிப்படை உரிமைகளை மீறுவதாக சவால் செய்ய முடியாது.