சமக்ர சிக்ஷா அபியான் (Samagra Shiksha Abhiyan) திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கான நிதியை வழங்குவதில் ஏன் தாமதம் செய்கிறது? மும்மொழிக் கொள்கை எப்போது முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது, அது எதைக் கட்டாயப்படுத்தியது? அரசுப் பள்ளிகளில் கூடுதல் மொழிப் படிப்புகளைச் சேர்ப்பதால் என்னென்ன சிக்கல்கள்உருவாகும்?
2020-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கையின் (New Education Policy (NEP)), கீழ் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கைத் தொடர்பாக ஒன்றிய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் நிதி பெற பள்ளிகள் இந்தக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று ஒன்றிய அரசு கூறுகிறது. இருப்பினும், இந்தக் கொள்கை இந்தியைத் திணிப்பதற்கான ஒரு வழியாக இருக்கலாம் என்று தமிழ்நாடு அரசு கருதுகிறது. தமிழ்நாடு அரசு இருமொழிக் கொள்கையைத் தொடர முடிவு செய்துள்ளது.
அரசியலமைப்பு விதிகள் என்ன சொல்கிறது?
அரசியலமைப்புச் சட்டம் இந்தி ஒன்றிய அரசின் அலுவல் மொழி (official language) என்று கூறுகிறது. அரசியலமைப்புச் சட்டம் தொடங்கியதிலிருந்து 15 ஆண்டுகளுக்கு மட்டுமே, 1965 வரை ஆங்கிலம் அலுவல் மொழியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. இருப்பினும், 1963-ஆம் ஆண்டு அலுவல் மொழிச் சட்டம், எந்த காலக்கெடுவும் இல்லாமல், இந்தியுடன் ஆங்கிலத்தையும் அலுவல் பயன்பாட்டிற்குத் தொடர அனுமதித்தது. ஒரு மாநில சட்டமன்றம் அரசாங்கப் பணிகளுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உள்ளூர் மொழிகளையோ அல்லது இந்தியையோ அதன் அலுவல் மொழியாகத் தேர்வு செய்யலாம்.
மேலும், அரசியலமைப்புச் சட்டம், இந்தி மொழியை மேம்படுத்துவது மத்திய அரசின் கடமை என்று கூறுகிறது. இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரத்தின் அனைத்து பகுதிகளுக்கும் ஒரு பொதுவான மொழியாக இந்தி இருக்க வேண்டும்.
மும்மொழிக்கொள்கை என்றால் என்ன?
மும்மொழிக் கொள்கை 1968ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தக் கொள்கை, 1968ஆம் ஆண்டு அலுவல் மொழித் தீர்மானத்துடன் சேர்ந்து, இந்தி பேசாத மாநிலங்கள் இந்தியை ஒரு பாடமாகக் கற்பிப்பதை கட்டாயமாக்கியது. தமிழ்நாடு இந்த விதியை கடுமையாக எதிர்த்தது. மாநிலத்தில் இதற்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. மும்மொழிக் கொள்கையை பின்பற்றுவதற்குப் பதிலாக, தமிழ்நாடு அரசு இருமொழிக் கொள்கையைத் தொடர்ந்தது.
அரசுப் பள்ளிகளில், தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே கற்பிக்கப்படுகின்றன. 2020-ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், எந்த மாநிலத்தையும் ஒரு குறிப்பிட்ட மொழியைப் பின்பற்றும்படி கட்டாயப்படுத்துவதில்லை. மாநிலங்கள், பிராந்தியங்கள் மற்றும் மாணவர்கள் எந்த மொழிகளைக் கற்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்ய அனுமதிக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று மொழிகளில், குறைந்தது இரண்டு மொழிகள் இந்தியாவை பூர்விகமாகக் கொண்டிருக்க வேண்டும்.
என்னென்ன பிரச்சினைகள் உள்ளன?
வருடாந்திர கல்வி நிலை ஆராய்ச்சி (Annual Status of Education Research (ASER)) பிரபல அரசு சாரா நிறுவனமான பிரதம் மூலம் தொடர்ந்து நடத்தப்படுகிறது. 2022 அறிக்கை மாணவர்களிடையே மோசமான கற்றல் திறன்களைக் எடுத்துக்காட்டுகிறது. ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் சுமார் 60% பேர் இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தைப் படிக்க முடியவில்லை. 2023 அறிக்கை 14-18 வயதுடைய இளைஞர்களிடையே மோசமான எழுத்தறிவுத் திறனை எடுத்துக்காட்டுகிறது.
அவர்களில் 25% பேர் தங்கள் பிராந்திய மொழியில் இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தை சரளமாகப் படிக்க முடியவில்லை. அவர்களில் 40%-க்கும் அதிகமானோர் ஆங்கிலத்தில் வாக்கியங்களைப் படிக்க சிரமப்பட்டனர். கழித்தல் மற்றும் வகுத்தல் போன்ற அவர்களின் அடிப்படை கணிதத் திறன்களும் மோசமாக உள்ளன.
2022ஆம் ஆண்டில் இந்திய அரசின் கல்வி அமைச்சகம் தயாரித்துள்ள “கல்விக்கான பட்ஜெட் செலவினங்களின் பகுப்பாய்வு” (‘Analysis of Budgeted expenditure on Education’) அறிக்கையின்படி, தொடக்கக் கல்விக்கான மொத்த வருவாய் செலவீனமான ₹3.03 லட்சம் கோடியில் (2019-20) 15% ஒன்றிய அரசாலும் 85% மாநிலங்களாலும் செலவிடப்படுகிறது.
ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகள் தொடக்க, இடைநிலை, உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கான மொத்தச் செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4-4.5% ஆகும். தேசிய கல்விக் கொள்கை 2020 கல்விச் செலவினத்திற்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% என்ற நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு எதிராக உள்ளது. தற்போதைய, செலவினம் இந்த இலக்கை விடக் குறைவாகவே உள்ளது.
முன்னோக்கி செல்லும் வழி என்னவாக இருக்க முடியும்?
ஆங்கிலம் தாய்மொழி இல்லையென்றாலும், அதன் தேர்ச்சி பல்வேறு சேவைத் தொழில்களில் உலகளவில் போட்டித்தன்மையுடன் இருக்க நமக்கு பல்வேறு வழிகளில் உதவியுள்ளது. இந்தியா பல்வேறு மொழிகளை கொண்ட நாடு. நாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப இந்திய மொழிகளைக் கொள்வது ஒரு நல்ல யோசனையாகும்.
இருப்பினும், அரசுப் பள்ளிகள் மோசமான கற்றல் விளைவுகள் மற்றும் வரையறுக்கப்பட்ட வளங்கள் போன்ற சிக்கல்களை எதிர்கொள்கின்றன. எனவே, இந்த பள்ளிகளில் தாய்மொழி/உள்ளூர் மொழி, ஆங்கிலம் மற்றும் அடிப்படை கணிதத் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். தனியார் பள்ளிகளில், மாணவர்கள் எட்டாம் வகுப்பு வரை மூன்றாம் மொழியைக் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அந்த மொழியில் மாணவர்கள் பெறும் தேர்ச்சி குறைவாகவே உள்ளது.
2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகள், இந்தியாவில் சுமார் 26% பேர் இருமொழி பேசுபவர்கள் என்றும், 7% பேர் மூன்று மொழிகளைப் பேசுபவர்களாக உள்ளனர் என்று சுட்டிக்காட்டியது. நகர்ப்புறங்களுக்கான தொடர்புடைய புள்ளிவிவரங்கள் 44% மற்றும் 15%, கிராமப்புறங்களில் 22% மற்றும் 5% ஆகவும் உள்ளது. இந்தியா விரைவான நகரமயமாக்கலையும், நாடு முழுவதும் தொழிலாளர்களின் இடம்பெயர்வையும் சந்தித்து வருகிறது.
மொழி கற்றலில் எதிர்பார்க்கப்படும் இந்த மாற்றங்கள் காரணமாக, வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருமொழி மற்றும் மும்மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ப இளைஞர்கள் புதிய மொழிகளைக் கற்றுக்கொள்வார்கள். இது இளைஞர்கள் மற்றும் வயது வந்தோர் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப கூடுதல் மொழிகளைக் கற்றுக்கொள்வார்கள் என்பதைக் குறிக்கிறது.
நிதி வழங்குவதில் தாமதம் ஏற்படாமல் இருக்க, ஒன்றிய அரசுக்கும், தமிழ்நாடு அரசிற்கும் இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.
மாநிலங்கள் செலவிடும் செலவினப் பங்கையும், பிராந்திய பன்முகத்தன்மையையும் கருத்தில் கொண்டு, பள்ளிக் கல்வி தொடர்பான கொள்கை விவகாரங்களில் மாநிலங்களுக்கு அதிக சுயாட்சி வழங்குவது குறித்து ஒரு ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்தப்பட வேண்டும்.
ரங்கராஜன். ஆர் முன்னாள் இந்திய குடிமைப் பணி அதிகாரி மற்றும் “எளிமைப்படுத்தப்பட்ட அரசியல்” என்ற நூலின் ஆசிரியர்.