சக்திகாந்த தாஸ் 1980-ம் ஆண்டு தமிழ்நாடு கேடர் அதிகாரியாக இந்திய நிர்வாகப் பணியில் (Indian Administrative Service) சேர்ந்தார். இவர், இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக அவரது பதவிக்காலம் டிசம்பர் 2024-ம் ஆண்டில் முடிந்தது.
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) முன்னாள் ஆளுநரான சக்திகாந்த தாஸ் சனிக்கிழமை (பிப்ரவரி 22) பிரதமரின் முதன்மை செயலாளராக (Principal Secretary) நியமிக்கப்பட்டார். அவர், ஒரு ஓய்வு பெற்ற IAS அதிகாரி ஆவார். வரலாற்றில் மத்திய வங்கியால் கட்டுப்படுத்தப்படும் பணவியல் கொள்கை (monetary policy) மற்றும் அரசாங்கத்தால் வகுக்கப்பட்ட நிதிக் கொள்கை (fiscal policy) இரண்டிலும் அனுபவம் கொண்ட ஒரே அதிகாரி சக்திகாந்த தாஸ் தான்.
சக்திகாந்த தாஸுக்கு மற்றொரு தனித்துவமும் உண்டு. அது, பிமல் ஜலானுக்கு (1997-2003) பிறகு, ஆறு ஆண்டுகள் பதவிக்காலத்தில் பணியாற்றும் இரண்டாவது இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் இவர்தான்.
சக்திகாந்த தாஸ் யார்?
சக்திகாந்த தாஸ் 1980-ம் ஆண்டில் தமிழ்நாடு கேடரில் ஒரு அதிகாரியாக இந்திய நிர்வாகப் பணியில் (Indian Administrative Service) சேர்ந்தார். இவர், டெல்லி பல்கலைக்கழகத்தின் செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாறு பயின்றார். 2014-ம் ஆண்டில், அவர் உரங்கள் துறைச் செயலாளர் (Fertilisers Secretary) ஆனார்.
விரைவில், ஆட்சிக்கு வந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் கீழ் நிதி அமைச்சகத்தில் வருவாய் செயலாளராக (Revenue Secretary) நியமிக்கப்பட்டார். ஆகஸ்ட் 2015-ம் ஆண்டில், அவர் பொருளாதார விவகார செயலாளராக (Economic Affairs Secretary) நியமிக்கப்பட்டார். மேலும், மே 2017-ம் ஆண்டில் ஓய்வு பெறும் வரை இந்தப் பதவியில் இருந்தார். சக்திகாந்த தாஸ் 15-வது நிதி ஆணையத்தின் (15th Finance Commission) உறுப்பினராகவும் இருந்தார்.
அவர் 2018 முதல் டிசம்பர் 2024 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பணியாற்றினார். மேலும், அவர் நியமிக்கப்பட்டபோது ஒரு அதிகாரப்பூர்வமாக வெளியீடு, “இந்திய அரசின் நிதி அமைச்சகத்தில் நீண்ட காலமாகப் பணியாற்றிய காலத்தில், அவர் 8 மத்திய பட்ஜெட்டுகளைத் தயாரிப்பதில் நேரடியாக ஈடுபட்டார். உலக வங்கி (World Bank), ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank (ADB)), புதிய வளர்ச்சி வங்கி (New Development Bank (NDB)) மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank (AIIB)) ஆகியவற்றில் இந்தியாவின் மாற்று ஆளுநராகவும் ஸ்ரீ சக்திகாந்த தாஸ் பணியாற்றினார். சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund (IMF)), G20, BRICS மற்றும் SAARC போன்ற சர்வதேச மன்றங்களில் அவர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்” என்று குறிப்பிட்டது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னர் தெரிவித்தது போல, இந்தக் காலகட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கி பல சவால்களை எதிர்கொண்டது. இவற்றில் உள்நாட்டு மற்றும் வெளிப்புற அதிர்வலைகளும் அடங்கும். உள்கட்டமைப்பு குத்தகை மற்றும் நிதி சேவைகள் (Infrastructure Leasing & Financial Services (IL&FS)) சரிவு ஒரு பெரிய சவாலாக இருந்தது. இது மற்ற வங்கி சாரா நிதி நிறுவனங்களையும் (non-banking financial companies (NBFC)) பாதித்தது. மற்றொரு சவாலாக, இந்த காலகட்டத்தில் கோவிட்-19 தொற்றுநோய் இருந்தது. இது வாழ்நாளில் ஒரு முறை ஏற்படும் நெருக்கடியாகும். கூடுதலாக, ரஷ்யா-உக்ரைன் போர் பணவீக்கத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.
மேலும், ₹2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து அகற்றுவதையும் அவர் மேற்பார்வையிட்டார். தேசிய அட்டை கட்டண வலையமைப்பான ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payments Interface (UPI)) மற்றும் RuPay ஆகியவற்றின் வரம்பை உலக அளவில் விரிவுபடுத்துவதில் சக்திகாந்த தாஸ் பணியாற்றினார். இருப்பினும், கடந்த ஆறு ஆண்டுகளாக அதிக உணவு பணவீக்கம் (high food inflation) ஒரு கடுமையான சவாலாகவே இருந்தது.
முதன்மைச் செயலாளரின் பதவி (Principal Secretary’s post) என்ன?
முதன்மைச் செயலாளர் பிரதமர் அலுவலகத்தின் (Prime Minister’s Office (PMO)) நிர்வாகத் தலைவராக உள்ளார். இந்தப் பதவி பிரதமருக்கு மிக முக்கியமான உறுதுணைப் பதவியாகக் கருதப்படுகிறது. தற்போது, பிரமோத் குமார் மிஸ்ரா இந்தப் பதவியை வகிக்கிறார். அவர் 1972 கேடரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற IAS அதிகாரி ஆவார். சக்திகாந்த தாஸ் முதன்மைச் செயலாளர்-2 ஆக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் அலுவலகத்தில் பொதுவாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (National Security Advisor), பிரதமரின் ஆலோசகர் (Advisor to the PM), கூடுதல் செயலாளர்கள் (Additional Secretaries), இணைச் செயலாளர்கள் (Joint Secretaries) மற்றும் பிற மூத்த அதிகாரிகள் அடங்குவர். முதன்மைச் செயலாளருக்கு பல முக்கிய பொறுப்புகள் உள்ளன. பிரதமருக்கும் வெளிநாட்டு பிரமுகர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்களுக்கான குறிப்புகளைத் தயாரிக்கிறார்கள். பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை அவர்கள் உறுதி செய்கிறார்கள். அவர்கள் பிரதமருக்கு முக்கியமான உத்தரவுகளை வழங்குகிறார்கள் மற்றும் பிற தொடர்புடைய பணிகளைக் கையாளுகிறார்கள்.