கல்வி இதழ்கள் தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு அறிமுகப்படுத்தப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட அளவுருக்கள் என்ன? இது தரம் குறைந்த இதழ்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்குமா?
பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission (UGC)), கல்வி மற்றும் ஆராய்ச்சி நெறிமுறைகளுக்கான பல்கலைக்கழக மானியக் குழு கூட்டமைப்பு (UGC Consortium for Academic and Research Ethics (UGC-CARE)) பட்டியலை நிறுத்த முடிவு செய்துள்ளது. 2018-ல் அறிமுகப்படுத்தப்பட்ட UGC-CARE பட்டியல், தரமான கல்வி இதழ்களின் பட்டியலாகும். UGC-CARE பட்டியல், பத்திரிகைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான பரிந்துரைக்கும் அளவுருக்களால் மாற்றப்படும். இந்த அளவுருக்கள் 8 அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டவை. பங்குதாரர்கள் பிப்ரவரி 25-ஆம் தேதிக்குள் தங்கள் பரிந்துரைகளை வழங்கலாம்.
புதிய அளவுருக்கள் என்ன சொல்கின்றன?
"சக மதிப்பாய்வு செய்யப்பட்ட பத்திரிகைகளுக்கான பரிந்துரை அளவுருக்கள்" (Suggestive Parameters for Peer-Reviewed Journals) என்ற தலைப்பிலான வரைவு அறிவிப்பில் 8 அளவுகோல்களின் கீழ் 36 பரிந்துரைக்கும் அளவுருக்கள் உள்ளன. பத்திரிகையின் ஆரம்ப அளவுகோல்களின் கீழ், வெளியீட்டிற்கு ஒரு கட்டுரையை அனுப்புவதற்கு முன், பத்திரிகை தலைப்பு, சர்வதேச தரநிலை வரிசை எண், கால இடைவெளி, தொடர்ச்சி மற்றும் வெளிப்படைத்தன்மை மதிப்பாய்வு கொள்கை போன்றவற்றைக் கவனிக்குமாறு பல்கலைக்கழக மானியக் குழு ஆசிரியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. ஆசிரியர் குழு அளவுகோல்களின் கீழ், பத்திரிகையின் ஆசிரியர் குழு விவரங்கள் மற்றும் ஆசிரியர் குழு அமைப்பு கிடைக்கச் செய்யப்படுவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு விரும்புகிறது. இதேபோல், பரிந்துரைக்கும் அளவுகோல்களின் கீழ் உள்ள பிற அளவுகோல்களில் பத்திரிகை தலையங்கக் கொள்கை, பத்திரிகை தரநிலைகள், பத்திரிகை தெரிவுநிலை மற்றும் ஆராய்ச்சி நெறிமுறைகள் ஆகியவை அடங்கும்.
பல்கலைக்கழக மானியக் குழு ஏன் அதைத் திரும்பப் பெற்றது?
UGC-CARE பட்டியலின் நோக்கம், ஆசிரியர் தேர்வுகள், பதவி உயர்வுகள் மற்றும் ஆராய்ச்சி நிதி விண்ணப்பங்களுக்கு "நற்பெயர் பெற்ற" பத்திரிகைகள் மட்டுமே அங்கீகரிக்கப்படுவதை உறுதி செய்வதாகும். UGC தலைவர் எம். ஜெகதேஷ் குமாரின் கூற்றுப்படி, கல்வி மற்றும் ஆராய்ச்சி நெறிமுறைகளுக்கான பல்கலைக்கழக மானியக் குழு கூட்டமைப்பு பட்டியல் பல விமர்சனங்களை இருந்தன: இதில் உயர்தர ஆராய்ச்சி மற்றும் பத்திரிகைகள் என்ன என்பதை தீர்மானிப்பதில் அதிகப்படியான ஒன்றிய அரசின் ஈடுபாடு மற்றும் பட்டியலில் இருந்து பத்திரிகைகளைச் சேர்ப்பதில் அல்லது நீக்குவதில் ஏற்பட்ட தேவையற்ற தாமதங்கள் ஆகியவை அடங்கும். UGC CARE பட்டியலின்படி, தமிழ் போன்ற சில துறைகளில் ஆராய்ச்சி இதழ்களின் கிடைக்கும் தன்மை குறைவாக இருப்பதாக கல்வியாளர்கள் தங்களது கவலைகளை தெரிவித்தனர். முடிவெடுக்கும் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை தெளிவாக இல்லை என்றும் இந்திய மொழிகளில் மிகவும் மதிக்கப்படும் பல பத்திரிகைகள் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளதாகவும் குமார் கூறினார்.
மேலும், புதிய அணுகுமுறை அதிக பணம் வசூலிக்கும் பத்திரிகைகளுக்கு எதிராக போராடவும், கல்வி இதழ்களைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறையை பரவலாக்கவும் உதவும் என்று பல்கலைக்கழக மானியக் குழு கூறுகிறது. உயர்கல்வி நிறுவனங்கள், "இப்போது பத்திரிகைகளை மதிப்பிடுவதற்கும் அவை உயர் நெறிமுறை மற்றும் அறிவார்ந்த தரங்களை பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்கும் நம்பகமான வழிமுறைகளை நிறுவுவதற்கான பொறுப்பை பெற்றுள்ளன. வெளியீடுகள் மற்றும் பத்திரிகைகளின் தரத்தை மதிப்பிடுவதற்கு அவர்கள் தங்கள் சொந்த நிறுவன வழிமுறைகளை உருவாக்க முடியும். மதிப்பீட்டு வழிமுறைகள் UGCயின் பரிந்துரைக்கப்பட்ட அளவுருக்கள் மற்றும் கல்வி விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று UGC தலைவர் எம். ஜெகதேஷ் குமார் கூறினார். இந்தப் பரவலாக்கப்பட்ட அணுகுமுறை (decentralised approach) உயர்கல்வி நிறுவனங்களை அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப மதிப்பீட்டு செயல்முறைகளை வடிவமைக்க அனுமதிக்கிறது என்று குமார் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். நிறுவனங்கள் இப்போது பல்வேறு துறைகளின் தனித்துவமான பண்புகளைக் கருத்தில் கொண்டு, புதிய வளர்ந்துவரும் துறைகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் மதிப்பீட்டு மாதிரிகளை உருவாக்கலாம்.
என்ன பதில் கிடைத்தது?
மாணவர்களும் கல்வியாளர்களும் சமீபத்திய நடவடிக்கை குறித்து தங்களது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த நடவடிக்கை தரமில்லாத கல்வி இதழ்களின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று விமர்சகர்கள் கவலைப்படுகிறார்கள். இந்திய மாணவர் கூட்டமைப்பின் (Students’ Federation of India (SFI)) ஒன்றிய செயற்குழு UGCயின் முடிவை கடுமையாக எதிர்த்தது. மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் கலந்தாலோசிக்காமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக SFI கண்டித்தது. இந்தியாவில் கல்வி ஒருமைப்பாடு மற்றும் தரமான ஆராய்ச்சிக்கு பின்னடைவு என்று SFI கூறியது. தேசிய கல்விக் கொள்கை (National Education Policy (NEP)) 2020-ன் கீழ் உயர்கல்வியில் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான பரந்த போக்குடன் SFI இந்த முடிவை இணைத்தது. கல்வி சுதந்திரத்திற்கு பரவலாக்கம் முக்கியம் என்பதை SFI ஒப்புக்கொண்டது. ஆனால், ஒன்றிய அரசு மேற்பார்வை இல்லாமல், பத்திரிகை மதிப்பீடுகள் தன்னிச்சையாகவும் நிறுவனங்கள் முழுவதும் சீரற்றதாகவும் மாற்றக்கூடும் என்று எச்சரித்தது.