சுரங்கப்பாதை பணியை மேற்கொள்வதற்கு முன் அறிவியல் ரீதியான இடர் மதிப்பீடு (scientific risk assessment) அவசியம்.
ஜனவரி தொடக்கத்தில் அஸ்ஸாமில் வெள்ளத்தில் மூழ்கிய நிலக்கரி சுரங்கத்தில் இருந்து, 44 நாள் மீட்புப் பணியின் முடிவில் ஒன்பது நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் எச்சங்கள் மீட்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, தெலுங்கானாவில் உள்ள நாகர்கர்னூலில், இதேபோன்ற பேரிடர் உருவாகி உள்ளது. இதில், ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி, கட்டுமானத்தில் உள்ளது. இங்கு, பிப்ரவரி 22, 2025 அன்று இடிந்து விழுந்ததில் எட்டு தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். நீர் கசிவு (water seepage) காரணமாக மேற்கூரையின் 3 மீட்டர் பகுதி இடிந்து விழுந்துள்ளது என்பது இதுவரை அறியப்பட்ட தகவலாகும்.
பின்னர், மேற்கூரை இடிந்து விழுந்ததால் சுரங்கப்பாதை எட்டு மீட்டர் நீளத்திற்கு இடிந்து விழுந்தது. மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து ஒன்பது சிறப்பு மீட்புக் குழுக்கள் (specialised rescue teams) 24 மணி நேரமும் பணியாற்றிய போதிலும், தொழிலாளர்களின் நிலையைக் கண்டறிவதிலும், உகந்த மீட்புத் திட்டத்தை வகுப்பதிலும் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இதுவரை, பயன்படுத்தப்பட்டு வரும் மீட்பு நடைமுறையானது, நவம்பர் 2023-ம் ஆண்டில் உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காஷியில் சில்க்யாரா சுரங்கப்பாதை சரிவில் வெற்றிகரமான மீட்பு நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதில், 4 கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்து 41 தொழிலாளர்கள் சிக்கித் தவித்தனர். சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களைச் சென்றடைய சுரங்கப்பாதையின் இரு முனைகளிலிருந்தும் கிடைமட்டமாகவும், பின்னர் செங்குத்தாகவும் துளையிடுதல் உட்பட பல்வேறு அணுகுமுறைகளுடன் தொடங்கப்பட்ட 16-நாள் நடவடிக்கை இதில் மேற்கொள்ளப்பட்டது. இறுதியில், அஸ்ஸாமைச் சேர்ந்த 'எலித் துளை' (rat hole) சுரங்கத் தொழிலாளர்கள் குழுவால் முன்னேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவர்கள் அபாயகரமானதாகக் கருதப்படும் மற்றும் சட்டவிரோதமாகக் கருதப்படும் கைமுறை அகழ்தல் முறைகளை இதில் பயன்படுத்தினர்.
சில்க்யாரா சம்பவத்திற்கும் ஸ்ரீசைலம் சுரங்கப்பாதை சரிவுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு தண்ணீர் இருப்பதுதான். சுரங்கப்பாதையில் 70 தொழிலாளர்கள் இருந்தபோது திடீரென தண்ணீர் மற்றும் சேறு பீறிட்டு ஓடத் தொடங்கியது. எட்டு தொழிலாளர்களைத் தவிர, மீதமுள்ளவர்கள் தப்பி ஓடினர். அவர்களில் 13 தொழிலாளர்கள் காயமடைந்தனர். அடுத்தடுத்த நாட்களில், அதிக நீர் ஓட்டம் மீட்பு நடவடிக்கைகளுக்கு பெரும் தடையாக மாறியது.
உலகளவில் சுரங்கப்பாதை-தொடர்பான பேரிடர்களின் வரலாறு, அரிதாக இருந்தாலும், அவை பெரும்பாலும் அதிகளவில் பேரிடரை ஏற்படுத்தும் என்பதைக் காட்டுகிறது. இந்த விபத்துகளில் பெரும்பகுதி, நீர்நிலைகளில் (நிலத்தடி நீர் வழித்தடங்கள்) உடைப்பு காரணமாக இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. ஒரு தளத்தின் துணை மேற்பரப்பு புவியியலைப் புரிந்து கொள்ள விரிவான ஆய்வுகள் நியமிக்கப்படுவது இத்தகைய அபாயங்களைத் தீர்மானிக்கும்.
சில்க்யாரா சம்பவம் குறித்த உத்தரகண்ட் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையில், சில்க்யாராவில் உள்ள பாறை அமைப்புகள் முறையாக பகுப்பாய்வு செய்யப்படவில்லை என்று கூறுகிறது. இருப்பினும், சுரங்கப்பாதை தோண்டும் முன் கட்டமைப்பு குறைபாடுகளை முழுமையாக புரிந்து கொள்ள முடியாது என்றும் அது குறிப்பிடுகிறது. ஸ்ரீசைலம் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பது முதன்மையானது. ஆனால், சரிவுக்குப் பின்னால் உள்ள காரணங்களை அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். சுரங்கப்பாதைக்கு முந்தைய பகுப்பாய்வு மோசமாக இருந்ததற்கான ஆதாரம் இருந்தால், நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.