புதிய தென் கடற்கரை இரயில்வே மண்டலம் (new South Coast Railway Zone) இந்திய ரயில்வேயின் 18-வது மண்டலமாக இருக்கும். இந்த நடவடிக்கை பல காரணங்களுக்காக முக்கியமானது.
ஜனவரி தொடக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் தெற்கு கடற்கரை இரயில்வே தலைமையகத்திற்கு (South Coast Railway headquarters) அடிக்கல் நாட்டினார்.
2014-ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் தெற்கு கடற்கரை இரயில்வே (South Coast Railway (SCoR)) மண்டலம் உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டம் தெலுங்கானா மாநிலம் உருவாவதற்கு வழிவகுத்தது. தெற்கு கடற்கரை இரயில்வே (SCoR) இந்திய இரயில்வேயின் 18-வது மண்டலமாக இருக்கும். இதன் அதிகார வரம்பு கிழக்கு கடற்கரை இரயில்வே மற்றும் தெற்கு மத்திய இரயில்வே மண்டலங்களின் சில பகுதிகளைக் கொண்டுள்ளது.
இந்திய இரயில்வேயின் மிகப்பெரிய வருவாய் ஈட்டும் பகுதிகளில் ஒன்றான வால்டேர் இரயில்வே பிரிவை (முன்னர் கிழக்கு கடற்கரை இரயில்வேயின் கீழ் இருந்தது) அமைச்சரவை இரண்டு பகுதிகளாகப் பிரித்தது. அதன் காலனித்துவ காலப் பெயரை மேற்கோள் காட்டி, அரசாங்கம் முதல் பகுதியை விசாகப்பட்டினம் இரயில்வே பிரிவு என்று மறுபெயரிட்டு புதிய மண்டலத்தின் கீழ் சேர்த்தது.
இரண்டாவது பகுதி, ஒடிசாவின் ராயகடாவில் தலைமையகத்தைக் கொண்ட ஒரு புதிய பிரிவாக மாறும். இது கிழக்கு கடற்கரை இரயில்வேயின் கீழ் இருக்கும்.
ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தின் அட்டவணை 13 இன் 8வது பிரிவின் படி, இந்திய இரயில்வே ஒரு புதிய ரயில்வே மண்டலத்தை அமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டியிருந்தது.
பிப்ரவரி 27, 2019 அன்று, மத்திய அரசு ஒரு புதிய இரயில்வே பிரிவை உருவாக்கும் திட்டங்களை அறிவித்தது. இந்தப் பிரிவு ஆந்திரப் பிரதேசத்தில் செயல்பாடுகளுக்கான ஒரு இரயில்வே உத்திக்கான மையமாகச் செயல்படும் என்ற நோக்கம் கொண்டது. இது செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதையும் பயணிகள் மற்றும் சரக்கு சேவைகளுக்கான வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பிப்ரவரி 28, 2019 ஆம் ஆண்டு முதல் அமைச்சரவை முடிவில் சில மாற்றங்களுடன் இந்தத் திட்டம் தற்போது செயல்படுத்தப்படுகிறது.
ஒரு மூத்த ரயில்வே அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், “இது பிராந்தியத்தில் தொழில்துறை மற்றும் விவசாய வளர்ச்சியை ஆதரிக்கும். இதனுடன், விசாகப்பட்டினம் மற்றும் கிருஷ்ணபட்டணம் போன்ற முக்கிய துறைமுகங்களுக்கான தளவாடங்களை மேம்படுத்தும். இந்த மண்டலம் திருப்பதி மற்றும் ஆந்திராவின் பிற கலாச்சார அடையாளங்களுக்கு சுற்றுலாவை அதிகரிக்கும்.”
ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்ட பிறகு தனி இரயில்வே மண்டலம் வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை இருந்தபோதிலும், மாநிலத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையே அதிகார ஒற்றுமை ஏற்பட்ட பின்னரே அது நிறைவேறியது. 2024-ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஆந்திராவின் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி (TDP), மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) ஒரு பகுதியாகும்.
தெற்கு கடற்கரை ரயில்வே மண்டலத்தில் என்ன பிரிவுகள் அடங்கும்?
இது தெலுங்கானா மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளுடன் ஆந்திராவின் குறிப்பிடத்தக்க பகுதியை உள்ளடக்கும். அதன் முக்கிய பிரிவுகளில் விஜயவாடா பிரிவு (தெற்கு மத்திய இரயில்வேயிலிருந்து), குண்டூர் பிரிவு (தெற்கு மத்திய இரயில்வேயிலிருந்து) மற்றும் வால்டேர் பிரிவின் ஒரு பகுதி, அதாவது விசாகப்பட்டினம் பிரிவு ஆகியவை அடங்கும்.
இது முன்னாள் வால்டேர் பிரிவின் சில பகுதிகளை உள்ளடக்கும், இதில் பலாசா-விசாகப்பட்டினம்-துவாடா, குனேரு-விஜியநகரம், நௌபாடா சந்திப்பு-பரலகேமுண்டி, பொப்பிலி சந்திப்பு-சாலூர், சிம்ஹாசலம் வடக்கு-துவாடா பைபாஸ், வடலபுடி-துவாடா, மற்றும் விசாகப்பட்டினம் எஃகு ஆலை-ஜக்காயபாலம் ஆகியவற்றுக்கு இடையேயான பிரிவுகள் அடங்கும், மொத்தம் சுமார் 410 கி.மீ. ஆகும்.
வால்டேர் பிரிவின் ஒரு பகுதி பிரிக்கப்பட்டு புதிய பிரிவு உருவாக்கப்படும். இதில் கோட்டவலசா–பச்சேலி, குனேரு–தெருவலி சந்திப்பு, சிங்கப்பூர் சாலை–கோராபுட் சந்திப்பு, மற்றும் பராலகேமுண்டி–குன்பூர் இடையேயான பிரிவுகளும் அடங்கும். இந்தப் பிரிவுகளின் மொத்த நீளம் சுமார் 680 கி.மீ. ஆகும். புதிய பிரிவின் தலைமையகம் ராயகடாவில் இருக்கும்.
வால்டேர் பிரிவு (Waltair division) ஏன் முக்கியமானது?
வால்டேர் பிரிவு இரயில்வேக்கு ஒரு முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது. இது முதன்மையாக அதன் சரக்கு போக்குவரத்து ஒடிசா மற்றும் சத்தீஸ்கரின் சுரங்க மற்றும் எஃகு தொழில்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இரயில்வே அமைச்சகத்தின் தரவுகளின்படி, கிழக்கு கடற்கரை இரயில்வே (East Coast Railway (ECoR)), 2023-24 நிதியாண்டில் சரக்கு ஏற்றுதலில் இந்திய இரயில்வேயின் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது. ஏப்ரல் 1, 2023 ஆண்டு முதல் மார்ச் 25, 2024 ஆண்டு வரை, ECoR 250 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றி, 2022-23 நிதியாண்டில் நிறுவப்பட்ட சாதனையை முறியடித்தது.
இதில், தெற்கு கடற்கரை இரயில்வேயின் (ECoR) குர்தா சாலை பிரிவு 156.17 மில்லியன் டன்களையும், அதைத் தொடர்ந்து வால்டேர் பிரிவு 74.66 மில்லியன் டன்களையும், சம்பல்பூர் பிரிவு 19.20 மில்லியன் டன்களையும் பங்களித்தது. இது, தொடர்ந்து ஐந்தாவது முறையாக 200 மில்லியன் டன் சரக்கு ஏற்றுதல் என்ற மைல்கல்லைக் கடந்த முதல் மண்டலமாகவும் தெற்கு கடற்கரை இரயில்வே (ECoR) ஆனது.