சிந்து நதி அமைப்பு மற்றும் சிந்து நதிநீர் ஒப்பந்தம் பற்றிய விவாதம். -அபினவ் ராய்

 சிந்து மற்றும் அதன் துணை நதிகளின் நீரின் விநியோகத்தை நிர்ணயிப்பதற்காக 1960 செப்டம்பர் 19 அன்று சிந்து நதிநீர் ஒப்பந்தம் (Indus Water Treaty) இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளால் கையெழுத்தானது. ஆனால், நதி அமைப்பு என்றால் என்ன?, எந்த நதிகள் சிந்து நதி அமைப்பை உருவாக்குகின்றன?


64 ஆண்டுகள் பழமையான சிந்து நதிநீர் ஒப்பந்தம் (Indus Water Treaty) மீண்டும் செய்திகளில் வந்துள்ளது. ஏனெனில், இந்தியா இந்த ஒப்பந்தத்தை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறது. மறுபுறம், ஜம்மு & காஷ்மீரில் கட்டப்பட்டு வரும் இரண்டு நீர்மின் திட்டங்களின் (hydroelectric projects (HEP)) வடிவமைப்பு அம்சங்கள் குறித்து பாகிஸ்தான் ஆட்சேபனைகளை எழுப்புகிறது. இந்த திட்டங்கள் ஜீலத்தின் துணை நதியான கிஷெங்கங்கா நதியில் அமைந்துள்ள கிஷெங்கங்கா நீர்மின் திட்டங்கள் (HEP) மற்றும் செனாப் நதியில் அமைந்துள்ள Ratle நீர்மின் திட்டங்கள் (HEP) ஆகும்.


சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைப் புரிந்து கொள்ள, சிந்து நதி அமைப்பைப் புரிந்துகொள்வது முக்கியம். இதில், அதன் தோற்றம், பாதை, துணை நதிகள் மற்றும் பல அடங்கும். முதலில், தற்போது இருநாடுகளின் ஒப்பந்தத்தின் சுருக்கமான கண்ணோட்டத்தை பார்ப்போம்.


சிந்து நதிநீர் ஒப்பந்தம் (Indus Water Treaty)


சிந்து மற்றும் அதன் துணை நதிகளின் நீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக இந்தியாவும் பாகிஸ்தானும் செப்டம்பர் 19, 1960 அன்று சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் (Indus Water Treaty) கையெழுத்திட்டன. இதில், கராச்சியில் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவும், அப்போதைய பாகிஸ்தான் அதிபர் அயூப் கானும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த ஒப்பந்தத்தின் கீழ், பாகிஸ்தான் கீழ் கரையோர நாடாக மாறியது. இதன் பொருள் சிந்து நதியானது பாகிஸ்தானில் முடிகிறது. இந்தியாவது, மேல் கரையோர நாடாக மாறியது. இதன் பொருள், இந்த நதி இந்தியாவில் உற்பத்தியாகிறது. இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு மூன்று கிழக்கு ஆறுகள் மீது பிரத்யேக உரிமைகளை வழங்கியது. அவை ரவி, சட்லஜ் மற்றும் பியாஸ் போன்றவை ஆகும். இந்த ஆறுகள் சுமார் 33 மில்லியன் ஏக்கர் அடி (MAF) தண்ணீரை வழங்குகின்றன. இது மொத்த சிந்து நதி அமைப்பில் சுமார் 20% ஆகும். சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகிய மூன்று மேற்கு நதிகளின் மீது பாகிஸ்தானுக்கு கட்டுப்பாடு கிடைத்தது. இந்த ஆறுகள் சுமார் 135 MAF தண்ணீரை வழங்குகின்றன. இது மொத்தத்தில் 80% ஆகும்.


இருப்பினும், குறிப்பிட்ட உள்நாட்டு, நுகர்வு அல்லாத மற்றும் விவசாய நோக்கங்களுக்காக மேற்கில் ஓடும் நதிகளின் நீரை இந்தியா பயன்படுத்தலாம். இதன் தொடர்ச்சியாக வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டிற்கான குறிப்பிட்ட அளவுகோல்களுக்கு உட்பட்டு, நதியின் ரன்-ஆஃப்-தி-ரிவர் (run-of-the-river (RoR)) திட்டங்களின் மூலம் நீர்மின்சாரத்தை உருவாக்க இந்தியாவுக்கு உரிமை உள்ளது.


இந்த ஒப்பந்தத்தின் பிரிவு IX தகராறு தீர்க்கும் செயல்முறையை கோடிட்டுக் காட்டுகிறது. இது மூன்று அடுக்கு அமைப்பாக உள்ளது. முதலாவதாக, இரு நாடுகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய நிரந்தர சிந்து ஆணையம் (Permanent Indus Commission (PIC)) மூலம் சர்ச்சைகள் தீர்க்கப்படுகின்றன. மேலும் இதற்கு பிரச்சனைத் தீர்க்கப்படாவிட்டால், இந்த விஷயம் உலக வங்கியால் நியமிக்கப்பட்ட நடுநிலை நிபுணரிடம் பரிந்துரைக்கப்படும். கடைசி முயற்சியாக, தகராறுகளை நிரந்தர நடுவர் நீதிமன்றத்திற்கு (Permanent Court of Arbitration) எடுத்துச் செல்லலாம்.


சிந்து நதி அமைப்பு (Indus River system)


ஒரு நதியும் அதன் துணை நதிகளும் சேர்ந்து ஒரு நதி அமைப்பை உருவாக்குகின்றன. அதேபோல், சிந்து நதி அமைப்பு ஆறு ஆறுகளைக் கொண்டுள்ளது. அவை சிந்து, ஜீலம், செனாப், ரவி, பியாஸ் மற்றும் சட்லஜ் ஆகியவை அடங்கும். சிந்து மற்றும் சட்லஜ் ஆகியவை முன்னோடி ஆறுகள் ஆகும். அதாவது, அவை இமயமலை உருவாகுவதற்கு முன்பே இருந்துள்ளன. இந்த ஆறுகள் திபெத்தில் உருவாகி ஆழமான பள்ளத்தாக்குகளை குறுக்கே வெட்டுகின்றன. மற்ற நான்கு ஆறுகளான ஜீலம், செனாப், ரவி மற்றும் பியாஸ் போன்றவை இந்தியாவில் உருவாகின்றன. 


சிந்து நதி நான்கு நாடுகளை உள்ளடக்கியது. அவை சீனா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்றவை ஆகும். இந்தியாவில், சிந்து நதி படுகை லடாக் மற்றும் ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசங்கள், சண்டிகர் மற்றும் இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் வழியாக பரவியுள்ளது. படுகையின் மொத்த வடிகால் பரப்பளவு சுமார் 3,21,289 சதுர கி.மீ ஆகும். இது இந்தியாவின் மொத்த புவியியல் பரப்பளவில் கிட்டத்தட்ட 9.8% ஆகும்.


சிந்து நதி திபெத்தில் உள்ள கைலாஷ் என்ற டிரான்ஸ்-இமயமலைத் தொடரில், மானசரோவர் ஏரிக்கு அருகில் தொடங்குகிறது. இது 'சிங்கி காம்பன்' (Singi Khamban) அல்லது அங்கு சிங்கத்தின் வாய் என்று அழைக்கப்படுகிறது. இந்த நதி மேற்கு நோக்கி பாய்ந்து லடாக்கில் உள்ள டெம்சோக்கில் (Demchok) இந்தியாவுக்குள் நுழைகிறது. இந்தியாவில், சிந்து நதி சுமார் 1,114 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இது லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லடாக் மற்றும் காரகோரம் மலைத்தொடர்களுக்கு இடையே பாய்கிறது.


சிந்து நதியின் முக்கிய வலது கரை துணை நதிகள் ஷியோக், ஷிகார் மற்றும் கில்கிட் ஆகும். ஷியோக் நதி ரிமோ பனிப்பாறையிலிருந்து உருவாகிறது. சிந்து நதியின் இடது கரை துணை நதிகள் ஜஸ்கர் மற்றும் ஹன்லே ஆகும். இந்த நதி மொத்தம் 2,880 கிலோமீட்டர் தூரம் பாய்கிறது. இது இறுதியில் பாகிஸ்தானின் கராச்சிக்கு அருகில் அரேபிய கடலில் கலக்கிறது. சிந்து நதி டால்பின் ஒரு அழிந்து வரும் இனமாகும். சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (International Union for Conservation of Nature (IUCN)) சிவப்பு பட்டியலின் படி, இந்த இனம் முக்கியமாக சிந்து நதியில் காணப்படுகிறது.


ஜீலம் நதி 252 கி.மீ நீளம் கொண்டது. இது பிர் பாஞ்சல் எல்லைக்கு அருகிலுள்ள வெரினாக்கில் உள்ள ஒரு நீரூற்றில் இருந்து உருவாகிறது. இந்த நதி பாகிஸ்தானுக்குள் நுழைவதற்கு முன்பு ஸ்ரீநகரில் உள்ள வுலர் ஏரி வழியாக பாய்கிறது. பாகிஸ்தானில், இது ஜாங் என்ற இடத்திற்கு அருகில் செனாப் நதியில் இணைகிறது. செனாப் நதி சிந்து நதியின் மிகப்பெரிய துணை நதியாகும். இந்தியாவில், இது 1,180 கி.மீ நீளம் கொண்டது. இது இமாச்சலப் பிரதேசத்தின் கீலாங்கில் உள்ள தண்டியில் சந்திரா மற்றும் பாகா என்ற இரண்டு நதிகளின் சங்கமத்தால் உருவாகிறது.


கிழக்கு ஆறுகள் 


ரவி நதி 95 கி.மீ நீளம் கொண்டது. இது இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ரோஹ்தாங் கணவாய்க்கு (Rohtang Pass) அருகிலுள்ள குலு மலைகளிலிருந்து உருவாகிறது. இது பாகிஸ்தானில் உள்ள சராய் சித்துவில் செனாப் நதி இணைகிறது.


பியாஸ் நதி 354 கி.மீ நீளம் கொண்டது. இது இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ரோஹ்தாங் கணவாய்க்கு அருகில் கடல் மட்டத்திலிருந்து 4,000 மீட்டர் உயரத்தில் உள்ள பியாஸ் குண்டிலிருந்து உருவாகிறது. இது குலு பள்ளத்தாக்கு வழியாக பாய்கிறது. இந்த நதி இந்தியாவின் பஞ்சாபில் உள்ள ஹரிகே அருகே சட்லெஜை சந்திக்கிறது. ஹரிகே அணை 1952-ம் ஆண்டில் கட்டப்பட்டது. இது இந்திரா காந்தி கால்வாய் அமைப்புக்கு தண்ணீரைத் திருப்பி விடுகிறது.


சட்லெஜ் நதி 676 கி.மீ நீளம் கொண்டது. இது ஒரு முன்னோடி நதியாகும். அதாவது, அதைச் சுற்றியுள்ள நிலப்பரப்புகளுக்கு முந்தையது. இந்த நதி திபெத்தில் உள்ள மானசரோவர் அருகே கடல் மட்டத்திலிருந்து 4,555 மீட்டர் உயரத்தில் உள்ள ரகஸ் தால் (Rakas Tal) என்ற இடத்திலிருந்து உருவாகிறது. திபெத்தில், இது லாங்சென் கம்பாப் (Langchen Khambab) என்று அழைக்கப்படுகிறது. இந்த நதி ரோபருக்கு அருகில் இந்தியாவுக்குள் நுழைகிறது.


கிழக்கு நதிகளின் நீரைப் பயன்படுத்த, இந்தியா பல அணைகளைக் கட்டியுள்ளது. இவற்றில் ரவி நதியின் மீது ரஞ்சித் சாகர் அணை, சட்லஜின் மீது பக்ரா அணை, பியாஸின் மீது பாங் மற்றும் பண்டோ அணைகள் ஆகியவை அடங்கும். பியாஸ்-சட்லஜ் இணைப்பு (Beas-Sutlej Link), மாதோபூர்-பியாஸ் இணைப்பு (Madhopur-Beas Link) மற்றும் இந்திரா காந்தி கால்வாய் திட்டம் (Indira Gandhi Canal Project) ஆகியவை பிற முக்கியத் திட்டங்களில் அடங்கும். இந்தத் திட்டங்களுடன், கிழக்கு ஆறுகளின் நீரில் கிட்டத்தட்ட 95% இந்தியா பயன்படுத்துகிறது.


இருப்பினும், மேற்கு நதிகள் மீதான இந்தியாவின் சில திட்டங்கள் காலப்போக்கில் பாகிஸ்தானிடமிருந்து ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளன. மேற்கு நதிகள் மீதான இந்தியாவின் முக்கிய திட்டங்களில் சலால் அணை, பாக்லிஹார் நீர்மின் திட்டம், பகால் துல் திட்டம் மற்றும் கிரு திட்டம் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் செனாப் நதியில் அமைந்துள்ளன. துல்புல் திட்டம் ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள ஜீலம் நதியில் அமைந்துள்ளது.


ஜூலை 2022-ம் ஆண்டில், வெள்ள மேலாண்மை மற்றும் சர்வதேச நீர் ஒப்பந்தங்களுக்கான (Flood Management and International Water Treaties) நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. 1960-ம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம், அந்தக் காலத்தின் அறிவு மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் அமைந்தது என்று அது குறிப்பிட்டது. இந்த ஒப்பந்தத்தை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இந்திய அரசாங்கம் ராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைத்தது. புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம், நீர் கிடைக்கும் தன்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற இன்றைய சவால்கள் காரணமாக இது அவசியமாகப் பார்க்கப்படுகிறது.


ஆகஸ்ட் 2024-ம் ஆண்டில், ஒப்பந்தத்தின் பிரிவு XII (3)-ன் கீழ் இந்தியா பாகிஸ்தானுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா முயன்றது. மக்கள்தொகை வளர்ச்சி, காலநிலை மாற்றம் மற்றும் பாகிஸ்தானால் சர்ச்சைக்கான வழிமுறைகளை தவறாகப் பயன்படுத்துவது போன்ற தற்போதைய சவால்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது.


கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதி அமைப்புகளுடன் ஒப்பிடும்போது சிந்து நதி அமைப்பு மிகப்பெரிய பனிப்பாறைப் பகுதியைக் கொண்டுள்ளது. இது முக்கியமாக திட மழைப்பொழிவு மற்றும் பனிப்பாறை உருகும் நீரை நம்பியுள்ளது. இருப்பினும், காலநிலை மாற்றம் படுகையில் நீர் கிடைக்கும் தன்மை மற்றும் விநியோகத்திற்கு சவால்களை உருவாக்குகிறது. புவி வெப்பமடைதலின் அபாயங்கள் காரணமாக, இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த மாற்றங்களுக்கு பாதிக்கப்படக்கூடியவை.


எனவே, சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஒரு இராஜதந்திர வெற்றியாகும். இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்த பதட்டங்களின் காலகட்டங்களிலும்கூட இது தப்பிப்பிழைத்துள்ளது. இருப்பினும், இந்தியாவின் செப்டம்பர் 2024 அறிவிப்பு "சூழ்நிலைகளில், அடிப்படை மற்றும் எதிர்பாராத மாற்றங்களை" எடுத்துக்காட்டுகிறது. இது ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தைக் குறிக்கிறது.




Original article:

Share: