2025 உலக வனவிலங்கு தினம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவை யாவை? -ரோஷ்னி யாதவ்

 ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3-ம் தேதி உலக வனவிலங்கு தினமாக (World Wildlife Day) அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளின் முக்கியத்துவம் என்ன?, எந்த இனங்கள் (Species) செய்திகளில் இடம்பெற்றன?


தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3-ம் தேதி உலக வனவிலங்கு தினமாக (World Wildlife Day) அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உலக வனவிலங்கு தினத்தின் கருப்பொருள் 'வனவிலங்கு பாதுகாப்பு நிதி : மக்கள் மற்றும் பூமியில் முதலீடு செய்தல்' (Wildlife Conservation Finance: Investing in People and Planet) ஆகியவை ஆகும்


முக்கிய அம்சங்கள் :


1. 2013-ம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை (United Nations General Assembly (UNGA)) மார்ச் 3-ம் தேதியை ஐ.நா. உலக வனவிலங்கு தினமாக அறிவித்தது. காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் அணுசரிக்கப்படுகிறது. இந்த தேதி 1973-ம் ஆண்டில் அழிந்து வரும் காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான மாநாட்டில் (Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora (CITES)) கையெழுத்திட்டதைக் குறிக்கிறது.


2. CITES என்பது அரசாங்கங்களுக்கிடையேயான ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும். இது பாதுகாப்பிற்கான முக்கிய ஒப்பந்தமாக செயல்படுகிறது. காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாப்பதை உறுதி செய்வதே இதன் முதன்மை நோக்கமாகும். இந்த ஒழுங்குமுறை வர்த்தகம் இந்த உயிரினங்களின் உயிர்வாழ்விற்கு தீங்கு விளைவிக்காது என்பதை உறுதி செய்கிறது.


3. இந்த மாநாட்டை ஏற்றுக்கொண்ட ஒரு மாநில அல்லது பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பு அமைப்பு CITES-ன் அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. இதில், தற்போது 185 அமைப்புகள் உள்ளன. CITES செயலகம் ஐக்கிய நாடுகள் சபை சுற்றுச்சூழல் திட்டத்தால் (United Nations Environment Programme(UNEP)) நிர்வகிக்கப்படுகிறது. இது சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ளது. CITES அமைப்புகளின் மாநாடானது முக்கிய முடிவெடுக்கும் அமைப்பாகும். இது அனைத்து அமைப்புகளையும் உள்ளடக்கியது மற்றும் ஒருமித்த அடிப்படையில் செயல்படுகிறது.


CITES எவ்வாறு செயல்படுகிறது?


CITES அமைப்பின் கீழ் உள்ள இனங்கள், அவற்றுக்கு தேவையான பாதுகாப்பின் அளவுக்கேற்ப, மூன்று பிற்சேர்க்கைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன.


பிற்சேர்க்கை-I அழிந்துபோகும் அபாயத்தில் உள்ள இனங்களை உள்ளடக்கியது. இந்த இனங்களின் மாதிரிகளில் வர்த்தகம் அரிதான சந்தர்ப்பங்களில் மற்றும் "விதிவிலக்கான சூழ்நிலைகளில்" (exceptional circumstances) மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, இதில் இந்தியாவிலிருந்து வரும் கொரில்லாக்கள் மற்றும் சிங்கங்கள் அடங்கும்.


பிற்சேர்க்கை-II அழிந்துபோகும் அபாயத்தில் இல்லாத இனங்களை உள்ளடக்கியது. ஆனால், அவற்றின் உயிர்வாழ்வை உறுதிப்படுத்த இந்த இனங்களில் வர்த்தகம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இதில் சில வகையான நரிகள் மற்றும் நீர்யானைகள் அடங்கும்.


பிற்சேர்க்கை-III-ல் குறைந்தது ஒரு நாட்டில் பாதுகாக்கப்படும் இனங்கள் அடங்கும். இந்த நாடுகள் வர்த்தகத்தை கட்டுப்படுத்த மற்ற CITES அமைப்புகளிடம் உதவி கேட்டுள்ளன. உதாரணங்களில், இந்தியாவிலிருந்து வரும் வங்காள நரி (Bengal fox) மற்றும் தங்க நரி (Golden Jackal) ஆகியவை அடங்கும். ஒவ்வொரு பட்டியலிலும் ஒவ்வொரு வகையிலும் உள்ள உயிரினங்களுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு வெவ்வேறு நடைமுறைகள் உள்ளன.


செய்திகளில் இடம்பெற்ற இனங்கள் 


1. இந்திய நட்சத்திர ஆமைகள் (Indian Star Tortoises )


இந்திய நட்சத்திர ஆமை CITES இணைப்பு-I-ல் பட்டியலிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம் (Wild Life (Protection) Act), 1972-ன் அட்டவணை I-ல் பட்டியலிடப்பட்டுள்ளது. இது அதன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள விலங்குகளுக்கு முழுப் பாதுகாப்பை வழங்குகிறது. ஆமை 2016 முதல் IUCN சிவப்பு பட்டியலில் பாதிக்கப்படக்கூடியதாக பட்டியலிடப்பட்டுள்ளது.


வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-ன் படி, இனங்களை கடத்துவதற்கான தண்டனையாக மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும். இதில் குறைந்தபட்சம் ரூ.25,000 அபராதமும் அடங்கும். 


நட்சத்திர ஆமைகளின் தேவை மிகவும் அதிகமாக உள்ளது. ஏனெனில், அவை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் செல்லப்பிராணிகளாக விரும்பப்படுகின்றன.





TRAFFIC

                    இது உலகளவில் செயல்படும் ஒரு முன்னணி அரசு சாரா நிறுவனமாகும். இது காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் வர்த்தகத்தில் கவனம் செலுத்துகிறது. இதன் பணி பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சி இரண்டையும் ஆதரிக்கிறது.


2. எறும்புண்ணிகள் (Pangolins)

உலகளவில் எட்டு எறும்புண்ணி (Pangolins) இனங்கள் உள்ளன. நான்கு இனங்கள் ஆப்பிரிக்காவிலும், நான்கு ஆசியாவிலும் காணப்படுகின்றன. இந்தியாவில் இரண்டு வகையான எறும்புண்ணிகள் உள்ளன. அவை, இந்திய எறும்புண்ணி (மானிஸ் கிராசிகாடேட்டா) மற்றும் சீன எறும்புண்ணி (மானிஸ் பெண்டாடாக்டைலா). இந்திய எறும்புண்ணிகள் வங்காளதேசம், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் காணப்படுகின்றன.

இந்தியாவில், இந்திய எறும்புண்ணி (Indian pangolin) பரவலாகக் காணப்படுகிறது மற்றும் ஆந்திரப் பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேகாலயா, ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரகண்ட், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய நாடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில், இந்திய எறும்புண்ணிகள் மற்றும் சீன எறும்புண்ணிகள் இரண்டும் 1972-ம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் (Wildlife (Protection) Act) அட்டவணை-I இல் பட்டியலிடப்பட்டுள்ளன. 2017 முதல், அனைத்து எறும்புண்ணி இனங்களும் CITES இன் இணைப்பு-I இல் பட்டியலிடப்பட்டுள்ளன. IUCN சிவப்பு பட்டியலில் சீன எறும்புண்ணிகள் 'மிகவும் ஆபத்தில் உள்ளவை' (Critically Endangered) என வகைப்படுத்தப்பட்டுள்ளன. IUCN சிவப்பு பட்டியலில் இந்திய எறும்புண்ணிகள் 'அழிந்து வரும்' (Endangered) என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

3. சிங்கம் (பாந்தெரா லியோ) Lion (Panthera Leo)

சிங்கங்கள் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டவை. அவை குழுக்களாக வாழும் சமூக பூனைகள் (social cats). சிங்கங்கள் புதர்க்காடுகள் போன்ற திறந்தவெளி காடுகளை விரும்புகின்றன. வயது வந்த ஆண் சிங்கங்கள் அடர்த்தியான, பிடரிமயிரினைக் கொண்டுள்ளன.

சிங்கம் திட்டம் (Project Lion) ஆகஸ்ட் 2020-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இது நீண்டகால பாதுகாப்புக்கான முயற்சிகள் மூலம் ஆசிய சிங்கங்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டம் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறது. 

உலக சிங்க தினம் (World Lion Day) ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 10-ம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது. வேகமாக குறைந்து வரும் சிங்கங்களின் எண்ணிக்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அவற்றின் பாதுகாப்பிற்கான அவசரத் தேவையை எடுத்துக்காட்டுவதும் இதன் முக்கிய நோக்கமாகப் பார்க்கப்படுகிறது.

IUCN சிவப்புப் பட்டியலில் சிங்கங்கள் 'பாதிக்கப்படக்கூடியவை' (Vulnerable) என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை, வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம் (Wildlife (Protection) Act), 1972-ன் அட்டவணை I-ல் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த இனங்கள் CITES இன் இணைப்பு II-ல் சேர்க்கப்பட்டுள்ளன. ஆசிய சிங்கத்தின் துணை இனம் பாந்தெரா லியோ பெர்சிகா இணைப்பு I-ல் பட்டியலிடப்பட்டுள்ளது.

4. ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் (One-horned Rhinoceros)

இந்திய காண்டாமிருகம், ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் என்றும் அழைக்கப்படுகிறது. இது பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கு, வடக்கு வங்காளத்தின் சில பகுதிகள் மற்றும் தெற்கு நேபாளத்தில் மட்டுமே காணப்படுகிறது. வேட்டைக்காரர்கள் நீண்ட காலமாக இந்த இனத்தை குறிவைத்து வருகின்றனர். அதன் கொம்பு மருத்துவ குணங்கள் கொண்டதாக அவர்கள் நம்புகிறார்கள். காண்டாமிருகம் பயிர்களுக்கு அச்சுறுத்தலாகவும் பார்க்கப்படுகிறது. 

கூடுதலாக, காண்டாமிருக எண்ணிக்கையானது தொடர்ந்து ஏற்படும் வெள்ளத்தால் பல சவால்களை எதிர்கொள்கிறது. இது அவர்களை உயர்ந்த பகுதிகளில் தஞ்சம் புக வைக்க கட்டாயப்படுத்துகிறது. இந்தப் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட மண்டலங்களுக்கு அப்பால் உள்ளன. இது அதிக மனித-வனவிலங்கு மோதல்களுக்கு வழிவகுக்கிறது.

உலக காண்டாமிருக தினம் (World Rhino Day)

                  உலக காண்டாமிருக தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22 அன்று அனுசரிக்கப்படுகிறது. காண்டாமிருகங்களைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய முயற்சிகளை இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது. வேட்டையாடுவதை நிறுத்துவது குறித்த விழிப்புணர்வையும் இது ஏற்படுத்துகிறது.

இந்திய காண்டாமிருகம் IUCN சிவப்பு பட்டியலில் 'பாதிக்கப்படக்கூடியது' (Vulnerable) என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இது CITES இணைப்பு-I-ல் சேர்க்கப்பட்டுள்ளது. கருப்பு, ஜாவான் மற்றும் சுமத்ரான் காண்டாமிருக இனங்கள் IUCN சிவப்பு பட்டியலில் 'மிகவும் அழிந்து வரும் இனம்' (Critically Endangered) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.

5. புலி (பாந்தெரா டைகிரிஸ்) (Tiger (Panthera Tigris))

அகில இந்திய புலி மதிப்பீடு (All India Tiger Estimation) 2022 சுருக்க அறிக்கையின் 5-வது சுழற்சியின்படி, இந்தியாவில் சுமார் 3,167 புலிகள் உள்ளன. இது உலகின் காட்டுப் புலி எண்ணிக்கையில் 70%-க்கும் அதிகமாகும். திட்டம் புலி (Project Tiger) என்பது ஒன்றிய நிதியுதவி அளிக்கும் திட்டமாகும். இது புலிகளைப் பாதுகாப்பதற்காக ஒன்பது காப்பகங்களில் 1973-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

புலி தற்போது IUCN-ஆல் அழிந்து வரும் உயிரினமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது 1972 வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் அட்டவணை-I-ன் கீழ் பாதுகாக்கப்படுகிறது.

பாதுகாப்பு முயற்சிகளை மேம்படுத்த இந்தியா அண்டை நாடுகளுடன் நெருக்கமாக இணைந்து செயல்படுகிறது. எடுத்துக்காட்டாக, சுந்தரவன நிலப்பரப்பில் (Sundarbans landscape) புலிகள் பாதுகாப்பில் இந்தியாவும் வங்காளதேசமும் ஒத்துழைக்கின்றன.

1. இந்தியாவில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் வனவிலங்கு பாதுகாப்பை மேற்பார்வையிடுகிறது. வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பணியகம் (Wildlife Crime Control Bureau) இந்த அமைச்சகத்தின் கீழ் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இது நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட வனவிலங்கு குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்காக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

2. வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பணியகமானது (Wildlife Crime Control Bureau) புது தில்லியில் தலைமையகம் உள்ளது. இது டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை மற்றும் போபாலில் ஐந்து பிராந்திய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. கவுஹாத்தி, அமிர்தசரஸ் மற்றும் கொச்சினில் மூன்று துணை பிராந்திய அலுவலகங்கள் உள்ளன. கூடுதலாக, இது இராமநாதபுரம், கோரக்பூர், மோதிஹாரி, நாதுலா மற்றும் மோரே ஆகிய ஐந்து எல்லைப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

3. வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம் (Wildlife (Protection) Act), 1972-ன் பிரிவு 38 (Z)-ன் படி, பணியகம் ஒழுங்கமைக்கப்பட்ட வனவிலங்கு குற்ற நடவடிக்கைகள் குறித்த புலனாய்வுத் தகவல்களைச் சேகரித்து தொகுக்கிறது. குற்றவாளிகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க இந்த தகவலை மாநில மற்றும் பிற அமலாக்க நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்கிறது. தாவரங்கள் மற்றும் விலங்குகளின் சரக்குகளை ஆய்வு செய்வதில் சுங்க அதிகாரிகளுக்கு பணியகம் உதவுகிறது மற்றும் ஆலோசனை வழங்குகிறது. இது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், CITES மற்றும் அத்தகைய பொருட்களுக்கான ஏற்றுமதி இறக்குமதி கொள்கை (EXIM Policy) விதிகளின்படி செய்யப்படுகிறது.



Original article:

Share: