வழக்கறிஞர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்ட கடிதங்களைத் தொடர்ந்து, சட்ட அமைச்சகம் மசோதாவை திரும்பப் பெற்றது. அது பல முக்கிய மாற்றங்களை முன்மொழிந்தது.
ஒன்றிய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பிப்ரவரி 13 அன்று பொதுமக்களின் கருத்துக்களை சேகரிக்க வரைவு மசோதாவை வெளியிட்டது. இந்த மசோதா முக்கிய மாற்றங்களை முன்மொழிந்தது. இந்திய பார் கவுன்சிலில் ஆதிக்கம் செலுத்தவும், வெளிநாட்டு வழக்கறிஞர்கள் நுழைவதை ஒழுங்குபடுத்தவும், வழக்கறிஞர்களின் போராட்டம் நடத்தும் உரிமையை கட்டுப்படுத்தவும், அனுமதிக்கும் விதிகள் கொண்ட விரிவான மாற்றங்களை முன்மொழிந்தது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, டெல்லி நீதிமன்றங்கள் முழுவதும் வழக்கறிஞர்கள் இந்த மாத தொடக்கத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அனைத்து மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுக்கள் பல சுற்றறிக்கைகளை வெளியிட்டன. "அநீதியான, நியாயமற்ற மற்றும் பாரபட்சமான" மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கான முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். போராட்டங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்ட பல கடிதங்களைத் தொடர்ந்து, அமைச்சகம் மசோதாவை திரும்ப பெற்றது. திருத்தப்பட்ட வரைவு மதிப்பாய்வு செய்யப்பட்டு பங்குதாரர்களுடன் மீண்டும் விவாதிக்கப்படும் என்று அது அறிவித்தது.
வழக்கறிஞர்கள் சங்கங்களின் சுதந்திரம் குறித்த கவலைகள்
முன்மொழியப்பட்ட பிரிவு 49-B, ஒன்றிய அரசு இந்திய பார் கவுன்சிலுக்கு வழிகாட்டுதல்களை வழங்க அனுமதித்தது. இந்த வழிகாட்டுதல்கள் ஒன்றிய அரசுக்கு அவசியமானதாகக் கருதப்படும் சட்டத்தின் எந்தவொரு விதிக்கும் பொருந்தும். இதன் பொருள் வழக்கறிஞர்கள் சட்டம் மற்றும் இந்திய பார் கவுன்சிலின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட எந்தவொரு விஷயத்திலும் ஒன்றிய அரசுக்கு இறுதி அதிகாரம் உள்ளது. இந்திய பார் கவுன்சில் இந்த விதியை எதிர்த்தது, இது அதன் சுதந்திரத்தை பலவீனப்படுத்தும் என்று கூறியது.
வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள் மீதான விதிகளுக்கு எதிர்ப்பு
வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள் இந்தியாவிற்குள் நுழைவது குறித்த பிரச்சினை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. 2018-ஆம் ஆண்டில், இந்திய பார் கவுன்சில் VS ஏ.கே. பாலாஜி வழக்கில், வெளிநாட்டு வழக்கறிஞர்கள் சாதாரண உரிமையின் அடிப்படையில் மட்டுமே சட்ட ஆலோசனை வழங்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்திய பார் கவுன்சிலில் (BCI) பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்களைப் போல அவர்களால் சட்டப் பயிற்சி செய்ய முடியாது என்றும் விளக்கியது.
2023-ஆம் ஆண்டில், வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் நிறுவனங்கள் சர்வதேச நடுவர் மன்றம் போன்ற குறிப்பிட்ட பகுதிகளில் பயிற்சி பெற அனுமதிக்கும் விதிகளை BCI அறிமுகப்படுத்தியது. இருப்பினும், அவர்கள் இன்னும் இந்திய நீதிமன்றங்களில் வழக்குகளைக் கையாள தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிவு 49A-ல் முன்மொழியப்பட்ட வரைவு மசோதா, வெளிநாட்டு வழக்கறிஞர்களின் நுழைவு குறித்த விதிகளை அமைக்கும் அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு வழங்குகிறது. தற்போது இந்த அதிகாரம், மாற்றத்தை எதிர்த்த BCI இடம் உள்ளது. வரைவு மசோதாவில் மற்றொரு பெரிய மாற்றம் "சட்ட பயிற்சியாளர்" என்பதன் வரையறையை விரிவுபடுத்துவதாகும். வெளிநாட்டு சட்ட நிறுவனங்களின் வழக்கறிஞர்கள் மற்றும் பெருநிறுவன நிறுவனங்களுக்காக பணிபுரிபவர்களைச் சேர்ப்பது முன்மொழியப்பட்டது. தற்போது, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் வருவாய் முகவர்கள் மட்டுமே சட்டப் பயிற்சியாளர்களாகக் கருதப்படுகிறார்கள்.
“ தவறான நடத்தைக்கு” ஒரு காரணமாக வழக்கறிஞர் போராட்டம்
மிகவும் சர்ச்சைக்குரிய புதிய விதிகளில் ஒன்று பிரிவு 35A ஆகும். அதன் படி, எந்தவொரு வழக்கறிஞர் சங்கமோ அல்லது சங்கத்தின் எந்தவொரு உறுப்பினரோ அல்லது எந்தவொரு வழக்கறிஞரோ, தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ, நீதிமன்றப் பணிகளைப் புறக்கணிக்கவோ அல்லது தவிர்ப்பதற்கோ அல்லது நீதிமன்றங்களின் செயல்பாடுகளிலோ அல்லது நீதிமன்ற வளாகங்களிலோ எந்த வடிவத்திலும் இடையூறு விளைவிக்கவோ அழைப்பு விடுக்கக்கூடாது என்று கூறுகிறது. வழக்கறிஞர்கள் சட்டம், 1961-ன் பிரிவு 4-ன் கீழ் இந்திய பார் கவுன்சில் (BCI) நிறுவப்பட்டது. வழக்கறிஞர்களின் சேர்க்கையை ஒழுங்குபடுத்துதல் மற்றும் பிரிவு 6-ன் கீழ் தவறான நடத்தை வழக்குகளைக் கையாளுதல் உள்ளிட்ட பரந்த அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
வரைவு மசோதா ஒரு பெரிய மாற்றத்தை முன்மொழிந்தது - இந்திய பார் கவுன்சிலில் மூன்று உறுப்பினர்கள் வரை பரிந்துரைக்க ஒன்றிய அரசுக்கு அனுமதி அளித்தது. பல வழக்கறிஞர்கள் இதை எதிர்த்தனர். இது இந்திய பார் கவுன்சில் மற்றும் பயிற்சி பெறும் வழக்கறிஞர்களின் சுதந்திரத்தை பலவீனப்படுத்தும் என்று வாதிட்டனர்.
பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் இந்திய பார் கவுன்சிலின் தலைவர் மனன் குமார் மிஸ்ரா ஆரம்பத்தில் இந்த திட்டத்தை விமர்சித்தார். இது இந்தியாவில் 27 லட்சம் வழக்கறிஞர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய பார் கவுன்சிலின் ஜனநாயக கட்டமைப்பிற்கு எதிரானது என்று அவர் சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலுக்கு ஒரு கடிதம் எழுதினார். இருப்பினும், அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களுக்குப் பிறகு, அவர் தனது நிலைப்பாட்டை மாற்றினார்.
மசோதாவில் ஒரு வரையறுக்கப்பட்ட விதிவிலக்கு சேர்க்கப்பட்டுள்ளது. நீதிமன்றப் பணிகளை சீர்குலைக்காவிட்டால் மட்டுமே வேலைநிறுத்தங்களை மேற்கொள்ள அனுமதித்தது. தொழில்முறை நடத்தை, பணி நிலைமைகள் அல்லது நிர்வாக சிக்கல்கள் குறித்து வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம்.
இந்த விதியை மீறுவது பிரிவு 35-ன் கீழ் தவறான நடத்தையாகக் கருதப்படும். டெல்லி பார் கவுன்சிலின் முன்னாள் தலைவரான வழக்கறிஞர் கே.சி. மிட்டல் இந்த விதியை கடுமையாக எதிர்த்தார். எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை அடிப்படையானது என்றும் அதை தவறான நடத்தை என வகைப்படுத்தக்கூடாது என்றும் அவர் வாதிட்டார்.
தவறான நடத்தைக்கான கூடுதல் காரணங்கள்
வரைவு மசோதா பிரிவு 45B, ஒரு வழக்கறிஞரின் தவறான நடத்தையால் ஒருவருக்கு இழப்பு ஏற்பட்டால், அந்த நபர் வழக்கறிஞருக்கு எதிராக புகார் அளிக்கலாம் என்று கூறுகிறது. இந்திய பார் கவுன்சில் (BCI) பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் வழக்கறிஞரின் பொறுப்பை முடிவு செய்யும். இதன் பொருள், வழக்கறிஞரின் செயல்கள் வேண்டுமென்றோ அல்லது தவறான நடத்தையிலோ தங்களுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக வாடிக்கையாளர்கள் நம்பினால், அவர்கள் மீது புகார் அளிக்கலாம். இந்த விதி தவறாகப் பயன்படுத்தப்படும் என்று வழக்கறிஞர்கள் கவலை கொள்கின்றனர்.
வழக்கறிஞர் பராஸ் ஜெயின் இதை கேள்வி எழுப்பி, "ஒரு வாடிக்கையாளர் ஒரு வழக்கில் தோற்றால், அந்த வழக்கறிஞருக்கு எதிராக புகார் செய்யலாம். ஆனால் ஒரு வழக்கில் தோற்றதற்கு மட்டும் ஒரு வழக்கறிஞரை எப்படி குறை கூற முடியும்?" என்று கேள்வி எழுப்பினர். இந்த விதி நாட்டில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களுக்கும் கடுமையான சட்ட விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்தார்.
"தவறான நடத்தைக்கு" (misconduct) பண அபராதம் விதிக்க இந்த மசோதா முன்மொழிந்துள்ளது. ஒரு வழக்கறிஞர் மாநில பட்டியலில் (state roll) இருந்து இடைநீக்கம் செய்யப்படலாம் அல்லது நீக்கப்படலாம். அவர்களுக்கு ₹3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம். புகார் பொய்யானது என்று கண்டறியப்பட்டால், புகார்தாரர் ₹50,000 அபராதம் செலுத்த வேண்டும்.
"பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கும் அதிகாரம்" என்று தலைப்பிடப்பட்ட வரைவு மசோதாவின் பிரிவு 26-A, வழக்கறிஞர் இறந்தால், வழக்கறிஞர் நீக்கம் கோரினால், வழக்கறிஞர் "கடுமையான தவறான நடத்தை" அல்லது "நீதிமன்ற செயல்பாட்டைத் தடுப்பது" ஆகியவற்றில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டால் மாநில பார் கவுன்சில் ஒரு வழக்கறிஞரின் பெயரை நீக்க அனுமதிக்கிறது. தவறான நடத்தை என்ற சொல் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், "தவறான நடத்தை" மற்றும் "இழப்பு" ஆகியவை வழக்கறிஞர்கள் சட்டத்திலோ அல்லது வரைவு மசோதாவிலோ வரையறுக்கப்படவில்லை.
துவாரகா நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செய்தித் தொடர்பாளருமான வழக்கறிஞர் என்.சி. சர்மா, புதிய விதி குறித்து கேள்வி எழுப்பினார். "தவறான நடத்தை என்றால் என்ன என்பதை யார் தீர்மானிப்பார்கள்?" என்று அவர் கேட்டார். வழக்கறிஞர்கள் தங்கள் கட்சிக்காரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். மாநிலப் பட்டியலில் தங்கள் பெயர்களைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடக்கூடாது என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்த விதி பல வழக்கறிஞர்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.