சீர்மிகு நகரங்கள் திட்டம் என்றால் என்ன? -ரோஷ்னி யாதவ்

 தற்போதைய செய்தி : பத்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட மூன்று காலநீட்டிப்புகளைக் கொண்ட இத்திட்டம், மார்ச் 31 அன்று முடிவடைகிறது. இருப்பினும் தற்போது நடைபெறும் திட்டங்களில் 7% காலக்கெடுவைக் கடந்தும் நீட்டிக்கப்படலாம்.


முக்கிய அம்சங்கள்:


• 100 சீர்மிகு நகரங்களை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் 2015-ல் தொடங்கப்பட்டது. ஜனவரி 2016 முதல் ஜூன் 2018 வரை நடைபெற்ற போட்டி சுற்றுகளில் நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. மேலும். நகரங்கள் அந்தந்த தேர்விலிருந்து ஐந்து ஆண்டுகள் அதாவது 2021 முதல் 2023 வரை திட்டங்களை முடிக்க வேண்டும்.


• 2021-ல், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் அனைத்து 100 நகரங்களுக்கான காலக்கெடுவை ஜூன் 2023 வரை நீட்டிக்க முடிவு செய்தது.


• காலக்கெடு மேலும் ஜூன் 30, 2024 ஆகவும், பின்னர் மார்ச் 31, 2025 ஆகவும் நீட்டிக்கப்பட்டது. இப்போது, ​​திட்டத்திற்க்காக ஒதுக்கப்பட்ட ஒன்றிய அரசின் நிதியில் 1%-க்கும் குறைவான தொகையே ஒப்புதலுக்காக மீதமுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள தொகை மார்ச் 31-க்கு முன்பு ஒப்புதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்த திட்டம் முடிவுக்கு வரும்.


• 2024-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, அமைச்சகத்தின் முன்மொழிவை மதிப்பாய்வு செய்தது. மாநில அரசுகள் தங்கள் சொந்த நிதியைப் பயன்படுத்தி முடிக்கப்படாத திட்டங்களை முடிக்க வேண்டும் என்று அமைச்சகம் பரிந்துரைத்தது. இருப்பினும், குழு இதற்கு உடன்படவில்லை. அமைச்சகம் திட்டங்களை வெறுமனே ஒப்படைப்பது மட்டுமல்லாமல், அவற்றை முடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியது.

• சீர்மிகு நகரங்கள் திட்ட வலைதளத்தின் படி, நகரங்கள் ரூ.1.50 லட்சம் கோடி மதிப்பிலான 7,491 திட்டங்களை நிறைவு செய்துள்ளன.  ரூ.14,357 கோடி மதிப்பிலான 567 திட்டங்கள் (7%) இன்னும் நடந்துகொண்டிருக்கின்றன.



Original article:

Share: