அண்டை நாடான தாய்லாந்தும் பாதிக்கப்பட்டது: தலைநகர் பாங்காக்கில் கட்டுமானத்தில் இருந்த ஒரு வானளாவிய கட்டிடம் இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழந்துள்ளனர். வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இருப்பினும் உயிரிழப்புகள் அல்லது சொத்துக்களுக்கு குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
வெள்ளிக்கிழமை மத்திய மியான்மரை 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதோடு குறைந்தது ஆறு பின்னதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலேயில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. 144 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் மாண்டலே நகரத்திலிருந்து 17.2 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. இது 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட ஆழமற்ற நிலநடுக்கம் என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகில் ஏற்பட்ட மிக வலிமையானது என்றும் USGS தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்திற்கு என்ன காரணம்?
பூமியின் வெளிப்புற பாறை அடுக்கு, லித்தோஸ்பியர் (lithosphere) என்று அழைக்கப்படுகிறது. இது டெக்டோனிக் தட்டுகளால் ஆனது. இந்த தட்டுகள் கோடிக்கணக்கான ஆண்டுகளாக மெதுவாக நகர்ந்து வருகின்றன. அவற்றின் தொடர்புகள் பூமியின் பல புவியியல் அம்சங்களுக்கு காரணமாகின்றன.
இரண்டு டெக்டோனிக் தட்டுகள் திடீரென ஒன்றையொன்று கடந்து மோதும் போது பூகம்பங்கள் ஏற்படுகின்றன. இது நில அதிர்வு அலைகளின் வடிவத்தில் சேமிக்கப்பட்ட "மீள் திரிபு" (elastic strain) ஆற்றலை வெளியிடுகிறது. இதனால் நில பகுதி குலுங்குகிறது.
மியான்மர் நிலநடுக்கம் இந்திய மற்றும் யூரேசிய தட்டுகளுக்கு இடையேயான கிடைநகர்வுப் பிளவு (strike slip faulting) காரணமாக ஏற்பட்டதாக USGS தெரிவித்துள்ளது. தட்டுகள் ஒன்றுக்கொன்று எதிராக பக்கவாட்டாக நகர்ந்தன.
மத்திய மியான்மர் வழியாக வடக்கிலிருந்து தெற்காக ஓடும் மற்றும் அடிக்கடி நிலநடுக்கங்களுக்கு பெயர் பெற்ற சகாயிங் ஃபால்ட்டில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இரண்டு பாறைத் தொகுதிகளுக்கு இடையில் ஒரு விரிசல் ஏற்படுவதே பிளவு (fault) ஆகும். இது அவற்றை நகர்த்த அனுமதிக்கிறது. சில நேரங்களில் பூகம்பங்களை ஏற்படுத்துகிறது.
இந்தியத் தட்டுக்கும் (மேற்கு) யூரேசியத் தட்டுக்கும் (கிழக்கு) இடையிலான எல்லையாக சாகைங் பிளவு (Sagaing fault) உள்ளது. யூரேசிய தட்டுடன் ஒப்பிடும்போது இந்திய தட்டு பிளவுப் பாதையில் வடக்கு நோக்கி நகர்கிறது என்று லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் புவி இயற்பியல் மற்றும் காலநிலை ஆபத்துகளின் எமரிட்டஸ் பேராசிரியர் பில் மெக்குயர் தி கார்டியனிடம் தெரிவித்தார்.
மியான்மரில் அடிக்கடி எவ்வளவு நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன?
மியான்மர் பெரும்பாலும் சாகைங் பிளவு (Sagaing fault) காரணமாக நிலநடுக்கங்களை சந்திக்கிறது. 1900-ஆம் ஆண்டு முதல், 7 ரிக்டர் அளவைவிட வலுவான ஆறு நிலநடுக்கங்கள் இந்தப் பிளவு அருகே ஏற்பட்டுள்ளன என்று USGS தெரிவித்துள்ளது.
1990 ஜனவரியில், 7 ரிக்டர் அளவைக் கொண்டு 32 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பிப்ரவரி 1912-ல், வெள்ளிக்கிழமை நிலநடுக்க மையப்பகுதிக்கு சற்று தெற்கே 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 2016-ஆம் ஆண்டு இதே பகுதியில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடந்த 100 ஆண்டுகளில், மியான்மரில் 6 அல்லது அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவு கொண்ட 14 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், இப்பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கங்களில் ஒன்று 1839-ல் நிகழ்ந்தது. வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்துடன் ஒப்பிடுகையில் இது மிக நெருக்கமானதாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் இயன் வாட்கின்சன் கூறுகிறார். 1839-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் 8.3 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாகவும், சுமார் 300-400 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.