நீதிபதிகளின் சொத்துக்களை வெளியிடுவதற்கான விதிகள் மற்றும் நடைமுறைகள் என்ன? -ஷ்யாம்லால் யாதவ்

 நீதிபதிகள் மற்ற பொது ஊழியர்களைப் போலல்லாமல், சொத்துக்கள் தொடர்பான தகவலைப் பகிரங்கப்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. இது  பெரும்பாலான வழக்குகளில், அவர்கள் அதை வெளியிட வேண்டாம் என்று தேர்வு செய்துள்ளனர்.


டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் ஏராளமான பணக்கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இது, இந்தியாவின் உயர் நீதித்துறையில் ஊழல் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.


நீதிபதிகள் தங்கள் சொத்துக்கள் (assets) மற்றும் பொறுப்புகளை (liabilities) பகிரங்கமாக பொதுமக்கள் மத்தியில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை  இந்த பிரச்சனையை வலுப்படுத்தியுள்ளது. மற்ற பொது ஊழியர்கள் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால், நீதிபதிகள் அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமில்லை. பெரும்பாலான வழக்குகளில், நீதிபதி அவர்கள் அதை வெளியிட வேண்டாம் என்று தேர்வு செய்துள்ளனர்.


உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு என்ன?


1997-ம் ஆண்டு, உச்சநீதிமன்றம் இந்திய தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையில் ஒரு கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்தில், நீதிபதிகளின் சொத்து தொடர்பான அறிவிப்புகள் குறித்து நீதிமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.


இதில், ஒவ்வொரு நீதிபதியும் தங்களுக்குச் சொந்தமான அனைத்து சொத்துக்களையும் அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் குறிப்பிட்டது. இதில் ரியல் எஸ்டேட் மற்றும் அவர்களின் பெயரில் முதலீடுகள் தொடர்பான சொத்துகள் அடங்கும். அவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் அல்லது அவர்களைச் சார்ந்திருப்பவர்கள் வைத்திருக்கும் சொத்துக்களும் இதில் அடங்கும். இருப்பினும், நீதிபதிகள் இந்தத் தகவலை பொதுமக்களுடன் அல்ல, தலைமை நீதிபதியுடன் மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது.


பின்னர், செப்டம்பர் 8, 2009 அன்று, உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வு மற்றொரு முடிவை எடுத்தது. நீதிபதிகளின் சொத்து விவரங்களை நீதிமன்றத்தின் இணையதளத்தில் வெளியிட அவர்கள் ஒப்புக்கொண்டனர். இருப்பினும், இது முற்றிலும் ”தன்னார்வ அடிப்படையிலானது” என்று அவர்கள் தெளிவுபடுத்தினர். இந்த அறிவிப்புகள் நவம்பர் 2009-ல் உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அதன்பிறகு, சில உயர் நீதிமன்றங்களும் இதை பின்பற்றத்  தொடங்கின.


ஆனால், உச்சநீதிமன்ற வலைத்தளம் 2018 முதல் புதுப்பிக்கப்படவில்லை. உண்மையில், தற்போதைய நீதிபதிகள் சமர்ப்பித்த சொத்து அறிவிப்புகளை வலைத்தளமானது வெளியிடவில்லை. அதற்கு பதிலாக, தலைமை நீதிபதியிடம் தங்கள் சொத்து அறிவிப்புகளை சமர்ப்பித்த 28 நீதிபதிகள் (33 பேரில்) மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளது. முன்னாள் நீதிபதிகளின் அறிவிப்புகளையும் வலைத்தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.


உச்ச நீதிமன்றத்தின் 2019 தீர்ப்பை மீறி இது தொடர்கிறது. நீதிபதிகளின் தனிப்பட்ட சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் "தனிப்பட்ட தகவல்" (personal information) என்று கருதப்படுவதில்லை என்று நீதிமன்றம் கூறியது. இந்த தீர்ப்பு ஜனவரி 2009-ல் தொடங்கிய ஒரு வழக்கிலிருந்து வந்தது. அந்த நேரத்தில், தகவல் அறியும் உரிமை (Right to Information (RTI)) சட்டத்தின் கீழ் ஒரு கோரிக்கையை RTI ஆர்வலர் சுபாஷ் சந்திர அகர்வால் தாக்கல் செய்தார். 1997-ம் ஆண்டு தீர்மானத்தின்படி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் சொத்துக்களை தலைமை நீதிபதியிடம் அறிவித்தார்களா என்பதை அவர் உறுதிப்படுத்த விரும்பினார்.


உயர் நீதிமன்றங்களில் நிலைமை


இந்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி நிலவரப்படி, அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் 770 நீதிபதிகள் உள்ளனர். இவற்றில், டெல்லி, பஞ்சாப் & ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், சென்னை, சத்தீஸ்கர், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய ஏழு உயர் நீதிமன்றங்களைச் சேர்ந்த 97 நீதிபதிகள் மட்டுமே தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை பகிரங்கமாக அறிவித்துள்ளனர். இதன் பொருள், அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 13%-க்கும் குறைவானவர்கள் தங்கள் சொத்து விவரங்களை பகிரங்கப்படுத்தியுள்ளனர்.


நாட்டில் உள்ள பெரும்பாலான உயர் நீதிமன்றங்கள் தங்கள் நீதிபதிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை பகிரங்கமாக வெளியிடுவதை எதிர்க்கின்றன.


உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் 2012-ல் "தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், நீதிபதிகள் தங்கள் சொத்துக்களை வெளியிடுவதை எதிர்த்து வலுவாக ஆட்சேபனை தெரிவிக்கிறார்கள்" என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.


அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய தகவல்களைக் கோரி இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னதாக ஒரு தகவல் அறியும் உரிமைச் சட்ட விண்ணப்பத்தை தாக்கல் செய்திருந்தது. நீதிமன்றமானது, இத்தகைய தகவல்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என்று அது கூறி அந்த விண்ணப்பக் கோரிக்கையை நிராகரித்தது.


இந்த செய்தித்தாள் ராஜஸ்தான், மும்பை, குஜராத், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கெளஹாத்தி மற்றும் சிக்கிம் உயர் நீதிமன்றங்கள் உட்பட பல உயர் நீதிமன்றங்களிடமிருந்து அதன் தகவல் அறியும் உரிமைச் சட்ட விண்ணப்பங்களுக்கு இதேபோன்ற பதில்களைப் பெற்றது.


இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை கட்டாயமாக வெளியிடுவதை உறுதி செய்வதற்கான சட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று 2023-ம் ஆண்டில் நாடாளுமன்றக் குழு, பொது குறைகள் மற்றும் சட்டம் மற்றும் நீதித்துறை குழு பரிந்துரைத்தது. ஆனால் இந்தப் பரிந்துரையில் இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லை.


பல பொது ஊழியர்களைப் போலல்லாமல்


நீதிபதிகளைப் போலல்லாமல், பொது ஊழியர்கள் பெரும்பாலும் தங்கள் சொத்துக்களை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும், இந்தத் தகவல் பெரும்பாலும் சாதாரண குடிமக்களுக்கு எளிதாக அணுகக்கூடியதாக உள்ளது.


2005-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) அரசாங்கத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிப்பதில் முக்கியப் பங்கு வகித்துள்ளது.


உதாரணமாக, தகவல் அறியும் உரிமைச் சட்டம் அரசு அதிகாரிகள் தங்கள் சொத்துக்களை ஆண்டுதோறும் அந்தந்த தகுதிநிலைக்கு ஏற்றாற்போல் கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் (controlling authorities) அறிவிக்க கட்டாயப்படுத்தியுள்ளது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்தத் தகவல் பொதுமக்களுக்குக் கிடைக்கிறது.


குஜராத், கேரளா மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற பல மாநிலங்கள், மாநில அளவிலான அதிகாரிகள் தங்கள் சொத்துக்களை அறிவிக்க வேண்டும் என்ற கடுமையான விதிகளைக் கொண்டுள்ளன. இந்த அறிவிப்புகளை பெரும்பாலும் பொதுத் தளத்தில் காணலாம் அல்லது RTI விண்ணப்பங்கள் மூலம் அணுகலாம்.


ஐக்கிய முற்போக்கு கூட்டணி-2 அரசாங்கத்தில் (2009-14) தொடங்கி, பிரதமர் உட்பட மத்திய அமைச்சர்கள் அனைவரும் தங்கள் சொத்து விவரங்களை பிரதமர் அலுவலகத்தில் சமர்ப்பிப்பது வழக்கமாகிவிட்டது. இந்த அறிவிப்புகளை இப்போது பிரதமர் அலுவலகத்தின் இணையதளத்தில் அணுகலாம். பல மாநில அரசுகளும் இதைச் செய்யத் தொடங்கியுள்ளன.


நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொத்து அறிவிப்புகளை வெவ்வேறு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கிறார்கள். மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவற்றை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கிறார்கள். அதே நேரத்தில், மாநிலங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவற்றை அவைத் தலைவரிடம் சமர்ப்பிக்கிறார்கள். இந்த அறிவிப்புகள் பகிரங்கப்படுத்தப்படுவதில்லை. ஆனால், அவற்றை பொதுவாக ஆர்.டி.ஐ விண்ணப்பங்கள் மூலம் அணுகலாம். பெரும்பாலான மாநிலங்களிலும் இதே விதி பொருந்தும்.


மேலும், நாடாளுமன்றம் அல்லது எந்த மாநில சட்டமன்றம் அல்லது கவுன்சிலுக்குத் தேர்தலில் போட்டியிடும் எவரும் வேட்புமனு தாக்கல் செய்யும் செயல்முறையின் ஒரு பகுதியாக தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். இந்த செயல்முறை 2002-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் கட்டாயமாக்கப்பட்ட உத்தரவின் விளைவாக நிறுவப்பட்டது. எந்தவொரு பொது ஊழியரும் செய்ய வேண்டிய மிக விரிவான அறிவிப்புகள் இவை. மேலும், ஒரு சிறிய தவறுகூட ஒரு வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்படுவதற்கு வழிவகுக்கும்.


Original article:
Share: