தமிழ்நாடு ஆளுநர் மீதான உச்ச நீதிமன்ற தீர்ப்பு: இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் போன்ற எதிர்க்கட்சிகளால் ஆளப்படும் பிற மாநிலங்களின் ஆளுநர்களையும் பாதிக்கும்.
ஆளுநரின் அதிகாரங்கள் குறித்த தீர்ப்பில், நிலுவையில் உள்ள 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் முடிவு சட்டவிரோதமானது (illegal) மற்றும் தவறானது (erroneous) என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
இந்த முடிவு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநரின் பங்கைப் பாதிக்கிறது. ஏனெனில், அவை ஒன்றிய அரசுடன் அரசியல் ரீதியாக சிக்கலான உறவைப் பகிர்ந்து கொள்கின்றன.
கேரள ஆளுநர் மசோதாக்களை ஒப்புதல் அளிக்க ஏன் நிறைய நேரம் எடுத்துக்கொள்கிறார் என்று கேள்வி எழுப்பும் இதேபோன்ற ஒரு வழக்கு, இப்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்காகக் காத்திருக்கிறது.
மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநரின் பங்கு பற்றி அரசியலமைப்பு என்ன சொல்கிறது?
அரசியலமைப்பின் பிரிவு 163 ஆளுநரின் பொதுவான அதிகாரங்களை (powers of the Governor) கோடிட்டுக் காட்டுகிறது. அதே, நேரத்தில் பிரிவு 200 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இந்த விவகாரத்தில் ஆளுநரின் அதிகாரத்தின் வரையறைகளைத் தீர்மானிக்க இரண்டு பிரிவுகளும் ஒன்றாகக் கருதப்படுகின்றன.
ஒரு மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநரிடம் அளிக்கும் போது,
1) மசோதாவை அங்கீகரிப்பது,
2) ஒப்புதலை நிறுத்தி வைப்பது,
3) மசோதாவை மறுபரிசீலனைக்கு திருப்பி அனுப்புவது, அல்லது
4) மசோதாவை மறுபரிசீலனைக்கு குடியரசுத்தலைவருக்கு அனுப்புவது போன்ற நான்கு தேர்வுகள் ஆளுநருக்கு உள்ளன.
ஒரு மாநில சட்டமன்றம் அல்லது சட்டமன்றத்தின் இரு அவைகளாலும் ஒரு மசோதா நிறைவேற்றப்படும்போது, அது ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும். பின்னர், ஆளுநர் மசோதாவை அங்கீகரிப்பதா, ஒப்புதலை நிறுத்தி வைப்பதா அல்லது மறு ஆய்வுக்கு குடியரசுத்தலைவருக்கு அனுப்புவதா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று பிரிவு 200 கூறுகிறது.
இருப்பினும், பிரிவு ஒரு முக்கிய விதியைக் கொண்டுள்ளது. ஆளுநர் "முடிந்தவரை விரைவில்” (may, as soon as possible) பண மசோதாக்கள் அல்லாத பிற மசோதாக்களை திருப்பி அனுப்பலாம். அவை மசோதாவை பகுதிகளாகவோ அல்லது முழுவதுமாகவோ மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளும் செய்தியுடன் இருக்கும் என்று அது கூறுகிறது. சட்டமன்றம் மசோதாவை மறுபரிசீலனை செய்த பிறகு ஆளுநருக்கு திருப்பி அனுப்பினால், ஆளுநர் "ஒப்புதல் தராமல் நிறுத்தக்கூடாது” (shall not withhold assent therefrom) என்று பிரிவு விளக்கியுள்ளது.
எதிர்க்கட்சிகள் தலைமையிலான மாநிலங்களில் அரசாங்கத்திற்கும் ஆளுநருக்கும் இடையிலான மோதல் முக்கியமாக வார்த்தைப் பிரயோகத்தில் வருகிறது. ஆளுநர் ஒரு மசோதாவை விரைவில் அனுப்ப வேண்டும் என்றால், குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த நிச்சயமற்ற தன்மையைப் பயன்படுத்திக் கொண்டு, ஆளுநர் அலுவலகங்கள் மசோதாக்களை மாநில சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்பாமல் காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ளன.
ஒரு ஆளுநர் ஒரு மசோதாவை நிரந்தரமாக தாமதப்படுத்த முடியுமா?
மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் காலவரையற்ற காலக்கெடு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தையே முடக்குவதற்குச் சமமானதாகும். ஒப்புதல் வழங்குவது குறித்த தனது முடிவை தாமதப்படுத்துவதன் மூலம் ஆளுநர் "பாக்கெட் வீட்டோவைப்” (“pocket veto”) பயன்படுத்துகிறார் என்பது தமிழ்நாடு அரசின் வாதமாகும்.
இதுவே தமிழ்நாடு அரசின் முக்கிய வாதமாக இருந்தது. ஆளுநர் மசோதாக்களை அங்கீகரிக்கும் தனது முடிவை தாமதப்படுத்துவதன் மூலம் "பாக்கெட் வீட்டோவைப்” பயன்படுத்துகிறார் என்று தமிழ்நாடு வாதிட்டது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தனது விருப்புரிமை அதிகாரங்களைப் பயன்படுத்துவதாக ஆளுநர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இருப்பினும், இந்த விருப்புரிமையை தன்னிச்சையாகவோ அல்லது தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையிலோ பயன்படுத்த முடியாது. ஆனால், அரசியலமைப்பு அடிப்படையில் மட்டுமே நியாயமான காரணங்களுடன் பயன்படுத்த முடியும்.
பிரிவு 200 “shall” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது. இது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் ஆளுநர் இதை ஒரு பரிந்துரையாக மட்டுமல்லாமல், அவர்கள் செய்ய வேண்டிய ஒன்றாகக் கருத வேண்டும் என்று விரும்பினர் என்பதைக் காட்டுகிறது.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் முன்பு என்ன கூறியது?
அருணாச்சலப் பிரதேச சட்டமன்ற (Nabam Rebia and Bamang Felix vs Deputy Speaker) வழக்கில் 2016ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த முக்கியமான தீர்ப்பில், இந்தப் பிரச்சினையை விரிவாக விளக்கியது. ஆளுநர் ஒரு மசோதாவை அங்கீகரிப்பதை எப்போதும் தாமதப்படுத்த முடியாது என்றும், மசோதாவில் ஏற்படும் மாற்றங்களுக்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய ஒரு செய்தியுடன் அதை சட்டமன்றத்திற்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.
இது பிரிவு 102 மற்றும் பிரிவு 103 உட்பிரிவில் விளக்கப்பட்டுள்ளது.
விதி 102(1):
முழு மசோதாவையோ அல்லது அதன் சில பகுதிகளையோ மறுபரிசீலனை செய்யுமாறு அல்லது அவர் பரிந்துரைக்கும் குறிப்பிட்ட மாற்றங்களைப் பார்க்குமாறு கேட்டு ஆளுநர் ஒரு மசோதாவை சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்பும்போது, சபாநாயகர் பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்ய வேண்டும்:
சட்டசபை கூடினால் (அமர்வில்), சபாநாயகர் சட்டமன்றத்தில் ஆளுநரின் செய்தியை சத்தமாக வாசிக்க வேண்டும்.
சட்டசபை கூடவில்லை என்றால், சபாநாயகர் செய்தி அனைத்து உறுப்பினர்களுடனும் பகிரப்படுவதை உறுதி செய்ய வேண்டும்" என்று நீதிமன்றம் கூறியது.
2023ஆம் ஆண்டு, பஞ்சாப் மாநிலம் vs ஆளுநரின் முதன்மைச் செயலாளர் வழக்கில் (State Of Punjab vs Principal Secretary To The Governor), பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசுக்கும் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் இடையிலான பிரச்சனையை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
சில மசோதாக்களை ஆளுநர் அங்கீகரிக்க மறுத்ததால் மாநில அரசு அவருக்கு எதிராக நீதிமன்றம் சென்றது. இரண்டு சட்டமன்றக் கூட்டத்தொடர்கள் தெளிவாக சட்டவிரோதமானவை என்பதால், தாம் ஒப்புதலை நிறுத்தி வைத்ததாக ஆளுநர் கூறினார்.
சட்டமன்றம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட பின்னர், சட்டமன்றக் கூட்டத்தை சபாநாயகர் மீண்டும் கூட்டினார்.
தேர்ந்தெடுக்கப்படாத மாநிலத்தலைவராக ஆளுநருக்கு (unelected Head of the State) சில அரசியலமைப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநில சட்டமன்றங்களின் வழக்கமான சட்டமியற்றும் போக்கைத் தடுக்க முடியாது. இதன் விளைவாக, பிரிவு 200-ன் முக்கிய பகுதியின் கீழ் ஆளுநர் ஒப்புதலை நிறுத்தி வைக்க முடிவு செய்தால், மசோதாவை மறுபரிசீலனை செய்வதற்காக மாநில சட்டமன்றத்திற்கு அனுப்புவதற்கான முதல் நிபந்தனையில் சுட்டிக்காட்டப்பட்ட போக்கைப் பின்பற்றுவதே சரியான நடவடிக்கையாகும்" என்று உச்சநீதிமன்றம் கூறி மாநில அரசுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.
மேலும், செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு தீர்ப்பில் நீதிமன்றம் என்ன கூறியது?
செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத் தீர்ப்பு 2023-ஆம் ஆண்டு தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், இத்தீர்ப்பில் உச்சநீதிமன்றம் இன்னும் சிலவற்றைச் சேர்த்தது.
முதலாவதாக, பிரிவு 200-ன் கீழ் ஆளுநர் தனது அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கான காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்தது.
பொது விதியாக, முதல் விதியின்படி முன்பே சபைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட ஒரு மசோதாவை இரண்டாவது சுற்றில் குடியரசுத் தலைவருக்கு வழங்கிய பிறகு, அதை அவரது பரிசீலனைக்காக ஆளுநர் ஒதுக்கி வைக்க முடியாது. இந்தப் பொது விதிக்கு ஒரே விதிவிலக்கு, இரண்டாவது சுற்றில் சமர்ப்பிக்கப்படும் மசோதா, முதல் சுற்றில் ஆளுநருக்கு சமர்ப்பிக்கப்படும் மசோதாவிலிருந்து வேறுபட்டால் மட்டுமே சமர்ப்பிக்க முடியும் என்று உச்சநீதிமன்ற அமர்வு கூறியது.
மாநில அமைச்சரவை குழுவின் ஆலோசனைக்கு மாறாக, குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடிவு செய்தால், அது மூன்று மாதங்களுக்குள் செய்யப்பட வேண்டும். முதல் விதிமுறையின்படி (பிரிவு 200இன்) மறுபரிசீலனைக்குப் பிறகு ஒரு மசோதாவை சமர்ப்பித்தால், ஆளுநர் அதிகபட்சமாக ஒரு மாத காலத்திற்குள் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும், என்று நீதிமன்றம் கூறியது.
இந்தத் தீர்ப்பும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில், நீதிமன்றம் அரசியலமைப்பின் 142-வது பிரிவின் கீழ் அதிகாரங்களைப் பயன்படுத்தி 10 மசோதாக்களை ஒப்புதல் பெற்றதாக அறிவித்தது. ஏனெனில், இந்த மசோதாக்கள் வழக்கத்திற்கு மாறாக நீண்ட காலமாக ஆளுநரால் நிலுவையில் வைக்கப்பட்டிருந்ததாகவும், இதே போன்ற பிரச்சினைகள் குறித்த நீதிமன்றத்தின் முந்தைய முடிவுகளுக்கு ஆளுநர் சிறிதும் மரியாதை காட்டவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
சட்டப்பிரிவு 142 உச்சநீதிமன்றத்திற்கு ஒரு தனித்துவமான அதிகாரத்தை வழங்குகிறது. சில சமயங்களில், சட்டம் ஒரு தீர்வை வழங்காதபோது "முழுமையான நீதியை" (complete justice) வழங்க உச்ச நீதிமன்றத்திற்கு பிரிவு 142 சிறப்பு அதிகாரத்தை வழங்குகிறது. இது போன்ற சூழ்நிலைகளில், நீதிமன்றம் தலையிட்டு சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் சர்ச்சையைத் தீர்க்க முடியும்.
மற்ற மாநிலங்களில் இதே போன்ற வழக்குகளுக்கு இப்போது என்ன நடக்கிறது?
2023ஆம் ஆண்டு தீர்ப்பும் தற்போதைய தீர்ப்பும் இதே போன்ற வழக்குகள் எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றன என்பதைப் பாதிக்கும்.
மூன்று மசோதாக்கள் முன்னாள் ஆளுநர் ஆரிஃப் முகமது கானின் ஒப்புதலுக்காக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருப்பதாகவும், மற்ற மூன்று மசோதாக்கள் ஒரு வருடத்திற்கும் மேலாகக் காத்திருப்பதாகவும் கேரளா வாதிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு (Public Interest Litigation (PIL)) தாக்கல் செய்யப்பட்டது. அதில் மாநில அரசும் ஒரு பிரதிவாதியாக சேர்க்கப்பட்டது. இருப்பினும், உயர் நீதிமன்றம் இதில் தலையிட வேண்டாம் என்று முடிவு செய்ததால், அரசு இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் மற்றொரு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் நிலுவையில் உள்ளது.