இந்தியா ஏன் காற்றை சுத்தம் செய்ய வேண்டும்? -அஜய் சிங் நாக்புரே

 இந்தியாவின் எதிர்காலத்திற்கான சுத்தமான காற்று, காற்றின் தர புள்ளிவிவரங்கள், அறிக்கைகளால் (dashboards) மட்டும் வடிவமைக்கப்படாது.  அது கூட்டாண்மைகள் மற்றும் தெளிவான நோக்கத்தைப் பொறுத்தது. நீடித்த தீர்வுகளுக்கு களத்தில் பணிபுரிபவர்களின் முயற்சிகள் தேவை. கொள்கைகளை செயல்படுத்துவதில் நகராட்சி அதிகாரிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். காற்றின் தரத்தை மேம்படுத்த திட்டமிடுபவர்கள் உத்திகளை வடிவமைக்கிறார்கள். மாசுபாட்டைக் குறைப்பதற்கான தொழில்நுட்பங்களை பொறியாளர்கள் உருவாக்குகிறார்கள். சமூக செயல்பாட்டாளர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாற்றத்தை ஏற்படுத்தவும் மக்களுடன் ஈடுபடுகிறார்கள்.


இந்தியாவின் காற்று மாசுபாடு குளிர்காலத்தில் மட்டும் ஏற்படும் பிரச்சனை அல்ல; அது ஆண்டு முழுவதும் நீடிக்கும் ஒரு பிரச்சனையாக உள்ளது. ஒவ்வொரு குளிர்காலத்திலும், மாசுபாடு ஏற்படுவதால் மக்கள் சுவாசிப்பதைக்  கடினமாக்குகிறது. மருத்துவமனைகளில் சுவாசப் பிரச்சினைகளால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது மற்றும்  நகரங்கள் அடர்த்தியான புகைமூட்டத்தால் மூடப்படுகின்றன. இந்திய நகரங்கள் பெரும்பாலும் உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.


இந்தியா தனது காற்றை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், அதன் முன்னேற்றம் மெதுவாகவும் ஒருங்கிணைக்கப்படாமலும் உள்ளது. தேசிய தூய்மையான காற்று திட்டம் (National Clean Air Programme (NCAP)), பாரத் VI, மற்றும் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (Pradhan Mantri Ujjwala Yojana (PMUY)) போன்ற திட்டங்கள் இதற்கு உதவுகின்றன. தேசிய தலைநகர் பிராந்தியத்தில் நிலக்கரி பயன்பாடு சார்ந்த தொழில்களை நிறுத்துவதற்கான முயற்சிகளும் இதில் அடங்கும். இருப்பினும், சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் விரைவான நடவடிக்கை இல்லாமல், பெரிய முன்னேற்றங்கள் ஏற்படாமல் போகலாம்.


கள யதார்த்தங்களுடன் ஒத்துப்போதல்


இந்தியா பெரும்பாலும் காற்று மாசுபாட்டை ஒரு தொழில்நுட்பப் பிரச்சினையாகவே பார்க்கிறது. ஆனால், உண்மையில் இது அரசாங்கத்தின் செயல்திறன், மக்கள்தொகை வளர்ச்சி, பொருளாதார சமத்துவமின்மை, சமூக நடத்தைகள் மற்றும் நீண்டகால பொருளாதார அமைப்புகளால் பாதிக்கப்படும் ஒரு சிக்கலான பிரச்சினையாகும்.


மருத்துவர்கள் அறிகுறிகளை எவ்வாறு அடையாளம் காண்கிறார்கள் என்பதைப் போலவே, காற்றின் தரத்தைப் படிப்பதன் மூலம் விஞ்ஞானிகள் உதவுகிறார்கள். இருப்பினும், உண்மையான தீர்வுகள் உள்ளூர் அதிகாரிகள், திட்டமிடுபவர்கள், பொறியாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் போன்றோரைப் பொறுத்தது. இவர்கள் வரையறுக்கப்பட்ட நிதி, உள்கட்டமைப்பு மற்றும் பல்வேறு கோரிக்கைகளுடன் வேலை செய்கிறார்கள்.


நீடித்த மாற்றத்தைக் கொண்டுவர, அவர்களின் திறன்கள் மேம்படுத்தப்பட வேண்டும். மேலும், அவர்களின் இலக்குகள் காற்றின் தர முயற்சிகளுடன் ஒத்துப்போக வேண்டும்.


இந்தியா 2026ஆம் ஆண்டுக்குள் PM2.5 அளவை 2017ஆம் ஆண்டில் இருந்ததைவிட 40%-ஆகக் குறைக்க விரும்புகிறது. இது ஒரு பெரிய மற்றும் முக்கியமான குறிக்கோள் ஆகும்.  ஆனால், நிஜ உலக சவால்களை புறக்கணித்தால் அது வெற்றிபெறாமல் போகலாம்.


போக்குவரத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். "வாகனங்கள் மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன" என்று சொல்வது மட்டும் போதாது. நாம் கேட்க வேண்டியது:


- சாலையில் என்ன வகையான வாகனங்கள் உள்ளன?

- அவை என்ன எரிபொருளைப் பயன்படுத்துகின்றன?

- அவை எவ்வளவு பழையவை?

- அவை எவ்வளவு தூரம் பயணிக்கின்றன?

- போக்குவரத்து எவ்வளவு மோசமாக உள்ளது?


இந்த விவரங்கள் இல்லாமல், உள்ளூர் அரசாங்கங்கள் பயனுள்ள திட்டங்களை உருவாக்க முடியாது. தேசிய இலக்குகளை அடைய, மாசுபாட்டை ஏற்படுத்தும் அன்றாட நடவடிக்கைகளுடன் அவற்றை இணைக்க வேண்டும்.


செயலில் உள்ள திட்டங்கள்


சீனா தனது காற்றின் தரத்தை மேம்படுத்தியது. ஆனால், ஐந்து ஆண்டுகளில் அதன் நகரங்களுக்காக மிகப்பெரிய தொகையை ₹22 லட்சம் கோடியை  செலவிட்டது. ஒப்பிடுகையில், இந்தியாவின் NCAP பட்ஜெட் அதில் 1%-க்கும் குறைவாகவே உள்ளது.


இருப்பினும், தொடர்புடைய திட்டங்களைச் சேர்க்கும்போது, ​​காற்று தர முயற்சிகளுக்கான மொத்த நிதி மிக அதிகம். இந்தத் திட்டங்களில் பின்வருவன அடங்கும்.


- PMUY (₹18,128 கோடி)

- மின்சார வாகனங்களுக்கான ஃபேம் II (₹10,795 கோடி)

- ஸ்வச் பாரத் மிஷன்-நகர்ப்புறம் (₹1.4 லட்சம் கோடி)

- NCAP தானே (₹11,542 கோடி)


இந்தத் திட்டங்கள் மாசுபாட்டின் மூலங்களை நிவர்த்தி செய்கின்றன மற்றும் இந்தியாவின் சுத்தமான காற்று உத்தியின் முக்கியப் பகுதிகளாகும்.


NCAP அதன் நிதிகளை நிர்வகிப்பதிலும் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதிலும் சவால்களை எதிர்கொள்கிறது. இது முக்கியமாக காற்றின் தரத் தரவைப் பயன்படுத்துகிறது. ஆனால், இவை வானிலை மற்றும் புவியியல் போன்ற காரணிகள் முடிவுகளைப் பாதிக்கலாம். இது குறுகியகால மேம்பாடுகளைக் காண்பதை கடினமாக்குகிறது.


எடுத்துக்காட்டாக, PMUY மற்றும் கழிவு எரிப்பு கட்டுப்பாடுகள் போன்ற திட்டங்கள் சில பகுதிகளில் உமிழ்வைக் குறைக்க உதவியுள்ளன. இருப்பினும், இந்த மாற்றங்கள் மாசு தரவுகளில் காட்டப்படாமல் போகலாம். இதனால், எதுவும் முன்னேறவில்லை என்ற தவறான எண்ணம் ஏற்படுகிறது.


முன்னேற்றத்தை அளவிடுவதற்கான சிறந்த வழி, மாற்றப்பட்ட அடுப்புகளின் எண்ணிக்கை அல்லது டீசல் பேருந்துகள் அகற்றப்பட்டவை போன்ற குறிப்பிட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பதாகும். இந்த அணுகுமுறை தாக்கத்தின் தெளிவான வரைவைக் கொடுக்கும் மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்தும்.


அளவீடுகளை மாற்றுவது மட்டும் பிரச்சினையைத் தீர்க்காது. மாசுபாட்டை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் குறித்த விரிவான, பொதுவில் கிடைக்கக்கூடிய தரவு உள்ளூர் அரசாங்கங்களுக்கும் தேவை. இதில் கழிவுகள் எங்கு எரிக்கப்படுகின்றன, எந்த வீடுகள் திட எரிபொருட்களைப் பயன்படுத்துகின்றன, கட்டுமானம் எங்கு நடைபெறுகிறது, எந்த சாலைகளில் அதிக போக்குவரத்து உள்ளது என்பதும் அடங்கும். இந்தத் தகவல் இல்லாமல், காற்று மாசுபாடு ஒரு தெளிவற்ற பிரச்சினையாகவே உள்ளது.  


இந்தத் தரவு இல்லாதது NCAP நிதிகள் எவ்வாறு செலவிடப்படுகின்றன என்பதைப் பாதிக்கிறது. 2019ஆம் ஆண்டு மற்றும் 2023ஆம் ஆண்டுக்கு இடையில், வெளியிடப்பட்ட நிதியில் 60% மட்டுமே பயன்படுத்தப்பட்டன. காற்றின் தரம் இன்னும் உள்ளூர் அரசாங்கங்களின் முக்கியப் பொறுப்பாக இல்லாமல் ஒரு தனிப் பிரச்சினையாகக் கருதப்படுகிறது.


நோக்கத்தை உண்மையான தாக்கமாக மாற்ற, இந்தியாவிற்கு படிப்படியான, தரவு சார்ந்த திட்டம் தேவை.


  • நிலை I: மிகப்பெரிய பங்களிப்பாளர்களைக் கண்டறிய உள்ளூர் மாசு மூலங்களின் தரவைச் சேகரிக்கப் பயன்படுகிறது.


  • நிலை II: மாசுபாட்டைக் குறைக்கும் குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு நிதியை இயக்க இந்தத் தரவு பயன்படுத்தப்படுகிறது.


  • நிலை III: காற்றில் மாசு அளவுகளை மட்டுமல்லாமல், உண்மையான உமிழ்வு குறைப்புகளைக் கண்காணிப்பதன் மூலம் வெற்றியை அளவிடலாம்.


இந்த அணுகுமுறை மாசுபாட்டைக் கண்காணிப்பதில் இருந்து அதை தீவிரமாக நிர்வகிப்பது மற்றும் குறைப்பது வரை நகர்கிறது.


மேலோட்டமான தீர்வுகளுக்கு எதிரான பாதுகாப்பு


இந்தியா அதிக டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்துவதால், அது "மேற்கத்திய பொறியை" தவிர்க்க வேண்டும். முக்கிய மாசு மூலங்களைப் புறக்கணிக்கும் அதே வேளையில் உயர் தொழில்நுட்பம், நகரத்தை மையமாகக் கொண்ட தீர்வுகளை அதிகம் சார்ந்துள்ளது. புகைமூட்ட கோபுரங்கள், AI டேஷ்போர்டுகள் மற்றும் நிகழ்நேர தரவு மேம்பட்டதாக இருக்கலாம். ஆனால், உயிரி எரிப்பு, காலாவதியான தொழில்கள் மற்றும் மாசுபடுத்தும் வாகனங்கள் போன்ற சிக்கல்கள் தொடர்ந்தால் அவை பயனற்றவை. இலண்டன் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்கள் பல வருட அடிப்படை சீர்திருத்தங்களுக்குப் பிறகுதான் உயர் தொழில்நுட்ப தீர்வுகளை ஏற்றுக்கொண்டன. இந்தியா அதன் அணுகுமுறையில் சரியான வரிசையைப் பின்பற்ற வேண்டும்.


இந்த தவறான சீரமைப்பு உயரடுக்குகளின் கையகப்படுத்தலுக்கு வழிவகுக்கும். நகரங்கள் மேம்பட்ட கருவிகளைப் பெறக்கூடும், அதே நேரத்தில் உமிழ்வுக்கு அதிக பங்களிக்கும் கிராமப்புற மற்றும் முறைசாரா துறைகள் விடுபட்டுள்ளன. இன்னும் மோசமாக, இந்த கருவிகள் உண்மையான சீர்திருத்தங்களிலிருந்து தோற்றங்களுக்கு கவனத்தை மாற்றக்கூடும். உள்ளூர் அமைப்புகளுக்கு அதிகாரம் அல்லது அதைப் பயன்படுத்துவதற்கான ஆதாரங்கள் இல்லாவிட்டால் அது அதிக நடவடிக்கைக்கு சமமாகாது.


கல்வி ஆராய்ச்சியை நடைமுறை தீர்வுகளிலிருந்து பிரிப்பது முக்கியம். ஆராய்ச்சி நீண்டகால புதுமைகளை இயக்குகிறது. ஆனால், கொள்கை வகுப்பாளர்களுக்கு விரைவான, அளவிடக்கூடிய தீர்வுகள் தேவை. இந்தியாவிற்கு தனித்தனி நிதி பிரிவுகள் இருக்க வேண்டும். ஒன்று ஆராய்ச்சிக்கும் மற்றொன்று உலக நடவடிக்கைக்கும் தேவை. இவை இல்லாமல், உண்மையான முன்னேற்றத்தை விட குறைவான முன்னேற்றம்  மட்டுமே ஏற்படும்.

மற்ற நாடுகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன?


உலகளாவிய எடுத்துக்காட்டுகள் சில வழிகாட்டுதலை வழங்குகின்றன. சீனா நிலக்கரி ஆலைகளை மூடியது. பிரேசில் சமூகத்தால் நடத்தப்படும் கழிவு அமைப்புகளைப் பயன்படுத்தியது. கலிபோர்னியா மாசுபாட்டின் வருவாயை ஏழை சமூகங்களுக்கு செலவிட்டது. சென்சார்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு லண்டன் நிலக்கரி பயன்பாட்டை தடை செய்தது. ஒவ்வொரு நாடும் அதன் தன்மைக்கு ஏற்ப ஒரு பாதையைப் பின்பற்றி வெற்றி பெற்றன. இந்தியா அதன் கூட்டாட்சி அமைப்புடன் செயல்பட்டு முறைசாரா பொருளாதாரத்திற்கு ஏற்ற திட்டங்களை உருவாக்குவதன் மூலம் அதையே செய்ய வேண்டும்.


இந்தியாவின் எதிர்காலத்திற்கான சுத்தமான காற்று, காற்றின் தர புள்ளிவிவரங்கள், அறிக்கைகளால் (dashboards) மட்டும் வடிவமைக்கப்படாது.  அது கூட்டாண்மைகள் மற்றும் தெளிவான நோக்கத்தைப் பொறுத்தது. அதற்கு நாம் அடிப்படைக் கட்டமைப்பை சரிசெய்ய வேண்டும். சுத்தமான காற்று என்பது ஒரு சிலருக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் ஒரு உரிமையாக இருக்க வேண்டும். இதை அடைய, வெறும் வாக்குறுதிகளைவிட ஒருங்கிணைப்பு, துணிச்சல் மற்றும் உண்மையான செயல்பாடு போன்றவை  தேவை.


அஜய் எஸ். நாக்புரே நகர்ப்புற அமைப்புக்கான ஆராய்ச்சி அறிஞர் ஆவார் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள அர்பன் நெக்ஸஸ் ஆய்வகத்தில் பணிபுரிகிறார்.


Original article:
Share: