அரசியலமைப்பில் "மாநிலங்களின் ஒன்றியம்" (Union of States) என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், உலகின் மிகவும் மையப்படுத்தப்பட்ட நிர்வாக அமைப்பை இந்தியா கொண்டுள்ளது. பெரும்பாலான நாடுகளில், சமூகம் முன்னேறி பொருளாதாரம் வளரும்போது, உள்ளூர் அரசாங்கங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்படுகிறது. இது பொறுப்புடைமை மற்றும் சுயாட்சியை (self-governance) மேம்படுத்துகிறது. இருப்பினும், குடியரசாக மாறியதிலிருந்து, இந்தியா அதிகாரப் பரவலுக்கு எதிரான திசையில் நகர்ந்துள்ளது. அதிகாரத்தை மையப்படுத்துவதற்கான தற்போதைய முயற்சி முன்பைவிட தீவிரமாகவும், ஆக்ரோஷமாகவும் உள்ளது. உண்மையில், இந்த அதிகாரக் கொள்ளை மிகவும் தீவிரமானதாகவும், தீங்கு விளைவிப்பதாகவும் மாறிவிட்டதால், இது டெல்லியின் வழக்கமான கட்டுப்பாட்டு உத்தியா அல்லது இதில் பெரியதாக ஏதாவது இருக்கிறதா?
இந்தியா உலகளாவிய போக்குகளுக்கு எதிரான ஒரு அசாதாரண பொருளாதார மற்றும் மக்கள்தொகை முறையைக் கொண்டுள்ளது. பெரும்பாலான நாடுகளில், பொருளாதார ரீதியாக வலுவான பகுதிகள் இடம்பெயர்வு மூலம் அதிக மக்களை ஈர்க்கின்றன. அதே, நேரத்தில் ஏழ்மையான பகுதிகள் மக்கள் தொகை குறைவைக் காண்கின்றன. ஆனால் இந்தியாவில், தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product (GDP)) அதிக பங்களிக்கும் தென் மாநிலங்கள், சிறிய மக்கள்தொகையையும் குறைந்த பிறப்பு விகிதங்களையும் கொண்டுள்ளன. மாறாக, வட மாநிலங்கள் மிகப்பெரிய மக்கள்தொகையையும் அதிக பிறப்பு விகிதங்களையும் கொண்டிருக்கின்றன. ஆனால், பெரும்பாலான வளர்ச்சி மற்றும் பொருளாதார குறியீடுகளில் தேசிய சராசரியை விட கணிசமாக பின்தங்கியுள்ளன.
பல ஆண்டுகளாக தென் மாநிலங்களிடமிருந்து அதிக வரிகளை வசூலித்து, அவற்றை ஏழை வட மாநிலங்களுக்கு மறுபகிர்வு செய்த போதிலும், அவற்றுக்கிடையேயான இடைவெளி அதிகரித்து வருகிறது. ஏழை மாநிலங்களை மேம்படுத்தத் தவறியது தற்போதைய அரசாங்கங்களின் தவறு மட்டுமல்ல, இது பல ஆண்டுகளாக ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது.
தவிர்க்க முடியாத படிப்பினைகள்: முதலாவதாக, ஏழை மாநிலங்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும், பணம் பின்தங்கிய மாநிலங்களுக்கு எந்த பரிமாணத்திலும் முன்னேற உதவாது. மேலும், பல ஆண்டுகளாக இந்த பிராந்தியங்களில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தத் தவறியது இந்தியாவின் மையப்படுத்தப்பட்ட நிர்வாக அமைப்பு செயல்படவில்லை என்பதைக் காட்டுகிறது.
இந்தச் சூழலில்தான், 50 ஆண்டுகால தொகுதி மறுவரையறை முடக்கம் முடிவுக்கு வந்த நிலையில், தென் மாநிலங்கள் மக்களவையில் பிரதிநிதித்துவத்தை இழக்கும் என்ற கடுமையான கவலைகள் உள்ளன. மூன்று முக்கிய பிரச்சினைகள் இதை மேலும் கவலையடையச் செய்கின்றன.
முதலாவதாக, தற்போதைய அரசாங்கம் முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் முக்கிய, சட்டப்பூர்வமாக கேள்விக்குரிய முடிவுகளை எடுக்கும் வரலாற்றைக் கொண்டுள்ளது. 370-வது பிரிவை நீக்குதல் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita (BNS)) அறிமுகப்படுத்துதல் ஆகியவை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். அரசாங்கம் நாடாளுமன்ற விவாதத்தை புறக்கணித்துள்ளது, விவசாயச் சட்டங்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டபோது காணப்பட்டது போல, இந்த சர்வாதிகார முடிவெடுக்கும் முறை ஜனநாயகத்தின் மீதான பொறுமையின்மையை மட்டுமல்ல, அரசியலமைப்பை புறக்கணித்ததையும் காட்டுகிறது. தொகுதி மறுவரையறை காலக்கெடு நெருங்கி வருவதால், கடந்தகால நடவடிக்கைகள் மீண்டும் இதே போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற அச்சத்தை எழுப்புகின்றன.
இரண்டாவதாக, 2021ஆம் ஆண்டு நடைபெறவிருந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் விவரிக்க முடியாத தாமதம், தொற்றுநோய் கவலைகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இது ஒரு பெரிய கவலையாக உள்ளது. சரியான நேரத்தில், துல்லியமான மக்கள் தொகை தரவு கொள்கை வகுத்தல் மற்றும் நிர்வாகத்திற்கு மிகவும் முக்கியமானது. தொற்றுநோய்க்குப் பிறகு ஒரு பொறுப்பான அரசாங்கம் மக்கள் தொகை கணக்கெடுப்பைத் தொடங்கி முடித்திருக்க வேண்டும். இருப்பினும், ஒன்றிய அரசு எந்த தெளிவான காரணமும் இல்லாமல் அதைத் தொடர்ந்து தாமதப்படுத்துகிறது.
2002ஆம் ஆண்டு முடக்கம் தொடர்பான மசோதா, முடக்கம் முடிந்த பிறகு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பைத் தொடர்ந்து தொகுதி மறுவரையரை செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறது. சாதாரண சூழ்நிலையில், அது 2031-ல் நடைபெற்றிருக்கும். இருப்பினும், முடக்கம் 2026-ல் முடிவடைந்தவுடன் மறுவரையறையை நடத்துவதற்காக அரசாங்கம் வேண்டுமென்றே மக்கள் தொகை கணக்கெடுப்பை தாமதப்படுத்தியதாக கவலை உள்ளது. இது தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் 2031 அல்லது அதற்குப் பிறகு வரை காத்திருப்பதற்குப் பதிலாக, 2029-ல் முடிவடைவதற்கு முன்பு மறுவரையறையை முடிக்க அனுமதிக்கும்.
மூன்றாவதாக, புதிய நாடாளுமன்றக் கட்டிடம் 800-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது அரசாங்கத்தின் நீண்டகால நோக்கங்கள் குறித்த கவலைகளை எழுப்புகிறது.
அரசியலமைப்பு விதிமுறைகள், நடைமுறை அல்லது வெற்றிக்கான வாய்ப்புகளைக்கூட கருத்தில் கொள்ளாமல், சீர்குலைக்கும் முடிவுகளை எடுக்கும் வரலாற்றை ஒன்றிய அரசாங்கம் கொண்டுள்ளது. ஒரே இரவில் பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரியை அவசரமாக அமல்படுத்துதல் மற்றும் தயாரிப்பதற்கு சிறிது நேரம் அவகாசகம்கூட வழங்காத திடீர் நாடு தழுவிய ஊரடங்கு ஆகியவை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்த முறை, மறுவரையறை மற்றொரு பெரிய கவனச்சிதறலாக இருக்கலாம். இது கொள்கை தோல்விகளிலிருந்து பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பக்கூடும். கொள்கை தோல்விகளிலிருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் அதே வேளையில், வரவிருக்கும் தலைமுறைகளுக்கு அரசியல் அதிகார சமநிலையை மாற்றும். ஆனால், சுதந்திரத்திற்குப் பிறகு வேறு எந்தப் பிரச்சினையையும்விட, இந்தியாவின் ஜனநாயகத்திற்கு வரவிருக்கும் தொகுதி மறுவரையறை மிக முக்கியமான பிரச்சினையாகும்.
நியாயமான பிரதிநிதித்துவம் என்பது ஜனநாயகத்தின் முக்கிய கொள்கையாகும். ஆனால், சுதந்திரத்திற்குப் பிறகு, விரைவான மக்கள்தொகை வளர்ச்சி பொருளாதார முன்னேற்றம் அதிகரித்து வறுமையை அதிகரிக்கும் என்று இந்தியா கவலைப்பட்டது. சீனாவும் இதே கவலைகளைக் கொண்டிருந்தது. மேலும், கடுமையான அரசு அமல்படுத்திய ‘ஒரு குழந்தை’ கொள்கை மூலம் அவற்றை நிவர்த்தி செய்தது. ஒரு ஜனநாயக நாடாக, இந்தியா, ஒரு ஜனநாயக நாடாக, பிறப்பு விகிதங்களைக் குறைக்க கல்வி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களைப் பயன்படுத்தியது. இருப்பினும், 1970-களின் நடுப்பகுதியில், சில மாநிலங்கள் மற்றவற்றைவிட வேகமாக மக்கள்தொகை வளர்ச்சியைக் குறைத்து வருகின்றன. இந்த வளர்ந்து வரும் ஏற்றத்தாழ்வை உணர்ந்த அரசாங்கம், முதலில் 1976-ல் 42வது திருத்தம் மற்றும் மீண்டும் 2002-ல் 84-வது சட்டத் திருத்தம் மூலம் தொகுதி மறுவரையறையை முடக்கி வைத்தது. 2026-ஆம் ஆண்டு நெருங்கி வருவதால், இந்த வேறுபாடு 1976 அல்லது 2002-ல் இருந்ததை விட மோசமாக உள்ளது.
தொகுதி மறுவரையறை இந்தியாவின் அரசியல் சமநிலையை பெரிதும் மாற்றக்கூடும். இது இருக்கை பங்கீட்டைவிட அதிகமாக பாதிக்கும். தற்போது, மாநிலங்களில் யார் ஆதிக்கம் செலுத்துகிறார்களோ அவர்கள் நாட்டை திறம்பட கட்டுப்படுத்துகிறார்கள். தொகுதி மறுவரையறை இந்த ஏற்றத்தாழ்வை தீவிரப்படுத்தும். இது இந்த மாநிலங்களின் மேலாதிக்க நிலையை பல தலைமுறைகளாக உறுதிப்படுத்தும். ஒரு மொழி மற்றும் கலாச்சாரப் பகுதி தனியாக நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பெற முடிந்தால், அது ஒரு நியாயமற்ற அரசியல் அமைப்பை உருவாக்குகிறது. இது ஏற்கனவே ஓரங்கட்டப்பட்ட பகுதிகளை மேலும் பலவீனப்படுத்தி ஓரங்கட்டும்.
மக்கள்தொகை தரவுகளும் சமீபத்திய தேர்தல் முடிவுகளும் ஒரு கவலையான படத்தை வெளிக்காட்டுகின்றன. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டிருந்தால், 2019 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் பாஜக வட மாநிலங்களில் இன்னும் அதிகமான இடங்களை வென்றிருக்கும். ஒரு கட்சி வட மாநிலங்களில் 65% சதவீதத்தை மட்டுமே வென்று, தென் மாநிலங்களில் வெறும் ஐந்து சதவீதத்தை மட்டுமே கைப்பற்றுவதன் மூலம் ஒன்றிய அரசாங்கத்தை அமைக்க முடியும் என்ற சூழ்நிலையில், தெற்கு கவலைகளை நிவர்த்தி செய்ய தேசிய கட்சிகளுக்கு என்ன ஊக்கம் உள்ளது?
தேர்தல் புவியியலில் ஏற்பட்ட இந்த மாற்றம், முழு பிராந்தியங்களையும் புறக்கணித்து நாடாளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்த முடிந்தால், அது ஒன்று வட மாநில வாக்குகள் தேர்தல்களை தீர்மானிக்கின்றன. மற்றொன்று தென் மாநில செல்வாக்கு பலவீனமடைகிறது. தென் மாநிலங்கள் தேசிய பொருளாதாரத்திற்கு அதிக பங்களிப்பை அளித்த போதிலும், இந்த வளர்ந்து வரும் அரசியல் மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இந்தியாவின் கூட்டாட்சிக் கட்டமைப்பை சீர்குலைக்கக்கூடும்.
அதிக மக்கள்தொகை கொண்ட, உத்தரபிரதேசம் மற்றும் பீகார் போன்ற குறைந்த வருமானம் கொண்ட மாநிலங்கள் அதிக நாடாளுமன்ற இடங்களால் என்ன லாபம் அடைகின்றன? இந்த வட மாநிலங்கள் ஏற்கனவே அதிக பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளன. மேலும், ஒன்றிய அரசின் நிதியில் மிகப்பெரிய பங்கைப் பெறுகின்றன. அதே, நேரத்தில் தேசிய வருவாய்க்கு மிகக் குறைவாகவே பங்களிக்கின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவை பங்களிப்பதை விட மிக அதிகமான நிதி உதவியைப் பெறுகின்றன. ஆயினும், பல ஆண்டுகளாக கூடுதல் நிதி மற்றும் வளங்கள் இருந்தபோதிலும், இந்த மாநிலங்கள் நாட்டில் மிகக் குறைந்த வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்றாகவே உள்ளன. அதிக வளங்களை வழங்குவது அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை என்பதை இது காட்டுகிறது.
அவர்களின் வளர்ச்சி சவால்கள் போதுமான நாடாளுமன்றக் குரல் இல்லாததால் உருவாகவில்லை. மாறாக, அடிப்படை நிர்வாகத் தோல்விகள், வேரூன்றிய சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அதிகரித்து வரும் வளங்களை உறுதியான மனித வளர்ச்சியாக மாற்றத் தவறிய அரசியல் தலைமை ஆகியவற்றின் காரணமாக உருவாகின்றன. அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சேர்ப்பது முன்னேற்றத்தைக் கொண்டுவராத அதே குறைபாடுள்ள அரசியல் அமைப்பை வலுப்படுத்தும்.
மக்கள்தொகைக் கொண்ட மாநிலங்களில் அதிக நாடாளுமன்ற இடங்களைச் உருவாக்குவது ஜனநாயகத்தை மேம்படுத்துமா? இல்லை என்று சான்றுகள் கூறுகின்றன. மறுவரையறைக்குப் பிறகும், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் 1.5 முதல் 2.5 மில்லியன் வாக்காளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள். இந்த அளவிலான தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு வலுவான கட்சி ஆதரவு தேவைப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களைவிட தங்கள் கட்சித் தலைவர்களுக்கு அதிக விசுவாசமாக இருப்பார்கள். தொகுதி மறுவரையறை அதிக தன்னாட்சியான தலைவர்களை உருவாக்காது. இது நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சி முடிவுகளைச் சார்ந்து வைத்திருக்கும். பொதுத் தேவைகள் மற்றும் கட்சி உத்தரவுகளுக்கு இடையே தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது, அவர்கள் ஒவ்வொரு முறையும் கட்சி கொள்கையை பின்பற்றுவார்கள். மேலும், கட்சி தாவல் தடைச் சட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சுதந்திரத்தைப் பறித்து, அவர்களை வெறும் வாக்குப்பதிவு இயந்திரங்களாக மாற்றிவிட்டது. ஜனநாயகத்திற்கு மிக முக்கியமான நாடாளுமன்ற விவாதங்கள் பலவீனமடைந்துள்ளன. முக்கியமான, மசோதாக்கள் குழுக்களால் மறுஆய்வு செய்யப்படாமலேயே நிறைவேற்றப்படுகின்றன. குறைவான அமர்வு நாட்கள், விவாத நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும், மாநிலங்களவை ஆய்வைத் தவிர்ப்பதற்காக முக்கியமான சட்டங்களை "பண மசோதாக்கள்" என்று வகைப்படுத்துகின்றன. உண்மையில், ஒரு அரசாங்கத்தின் கொள்கையை எண்ணிக்கையில் அதிக முத்திரைகளைச் சேர்ப்பது ஜனநாயக பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துகிறதா?
தேசிய கட்சிகள் தங்கள் பரந்த வாக்காளர் தளத்தின் காரணமாக முரண்பாடுகளை எதிர்கொள்கின்றன. உதாரணமாக, பாஜக வட மாநிலங்களில் மாட்டிறைச்சியைத் தடை செய்கிறது. ஆனால், கேரளா, கோவா மற்றும் வடகிழக்கில் அதை அனுமதிக்கிறது. இதேபோல், காங்கிரஸ் தமிழ்நாட்டில் திமுக மற்றும் கம்யூனிஸ்ட்டுகளுடன் கூட்டணி வைத்துள்ளது, ஆனால், கேரளாவில் அவற்றை எதிர்க்கிறது. இருப்பினும், பிராந்தியக் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளன மற்றும் மாநில உரிமைகள் மற்றும் பரவலாக்கத்தை வலுவாக ஆதரிக்கின்றன. தொகுதி மறுவரையறை அதிகாரத்தை ஒரு மொழியியல்-கலாச்சாரக் குழுவிற்கு மாற்றுவதன் மூலம் இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பை பலவீனப்படுத்தும் என்பதால், பிராந்தியக் கட்சிகள் அதை எதிர்ப்பதில் முன்னிலை வகிக்க வேண்டும்.
தமிழ்நாட்டை ஆளும் கட்சியான திமுக தொகுதி மறுவரையறைக்கு எதிரான எதிர்க்கட்சியை வழிநடத்த நல்ல நிலையில் உள்ளது. இது 1930-களில் இருந்து இந்தி திணிப்பு மற்றும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்கு எதிராகப் போராடி வரும் திராவிட இயக்கத்திலிருந்து வருகிறது. இந்தப் போராட்டம் திமுக ஆதரவாளர்கள் மட்டுமல்ல, அனைத்து தமிழ் மக்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கிறது. தமிழ்நாடு தனித்துவமானது. வலுவான இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் காரணமாக 1976-ஆம் ஆண்டு அலுவல் மொழிகள் சட்டத்திலிருந்து (Official Languages Act) அதிகாரப்பூர்வமாக விலக்கு பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடாகும். இந்த வரலாறு அதன் தலைவர்களுக்கு அதிகாரத்தை மையப்படுத்துவதை எதிர்க்க வலுவான தார்மீக அதிகாரத்தை வழங்குகிறது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகப்படியான மத்திய கட்டுப்பாட்டை எதிர்க்கும் ஒரு வலுவான அரசியல் மரபைத் தொடர்கிறார். இந்த எதிர்ப்பு, இந்தியா ஒரு மத்திய கட்டுப்பாட்டில் உள்ள நாடு அல்ல, மாறாக "மாநிலங்களின் ஒன்றியம்" என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. திமுக எப்போதும் கூட்டுறவு கூட்டாட்சியை ஆதரித்து வருகிறது. அதே, நேரத்தில் தேசிய முன்னேற்றத்திற்கு முக்கியப் பங்களிப்பை அளித்து வருகிறது. தொகுதி மறுவரையறையின் தாக்கத்தை எதிர்கொள்ள, ஸ்டாலின் பல மாநிலங்களுடன் ஒரு கூட்டு நடவடிக்கைக் குழுவை (Joint Action Committee (JAC)) உருவாக்கி, முடக்கத்தை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கக் கோரியுள்ளார்.
முரண்பாடாக, தொகுதி மறுவரையறை நியாயமான பிரதிநிதித்துவத்திற்காக இப்போது வாதிடும் அதே தேசிய ஜனநாயக அரசாங்கம், சரக்கு மற்றும் சேவை வரி கூட்டத்தில் "ஒரு மாநிலம், ஒரு வாக்கு" (One State, One Vote) விதியை முன்பு அமல்படுத்தியது. இந்த விதி மக்கள்தொகை அளவு அல்லது பொருளாதார பங்களிப்பைப் பொருட்படுத்தாமல், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் அரசியலமைப்புத் திருத்தம், ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைத்து மாநிலங்களுக்கும் சமமான வாக்களிக்கும் அதிகாரத்தை வழங்கியது. அரை மில்லியன் மக்களை மட்டுமே கொண்ட சிக்கிம் போன்ற ஒரு சிறிய மாநிலம், 80 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட தமிழ்நாடு அல்லது 240 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட உத்தரபிரதேசம் போன்ற அதே வாக்குரிமையைக் கொண்டுள்ளது. மே 2021-ல் கோவிட்-க்குப் பிறகு நடந்த முதல் சரக்கு மற்றும் சேவை வரி கூட்டத்தில் தொடங்கி, பல சூழல்களில், பல பரிமாணங்களில் இருந்து இந்த வாக்கு ஒதுக்கீட்டின் அபத்தத்தை நான் சுட்டிக்காட்டியுள்ளேன். இது ஒரு தவறு அல்ல, மாறாக பெரிய மற்றும் பணக்கார மாநிலங்களின் அதிகாரத்தைக் குறைத்து, அதே நேரத்தில் அதன் நிதி ஆதரவை நம்பியிருக்கும் ஒன்றிய மற்றும் சிறிய மாநிலங்களின் மீது கட்டுப்பாட்டை வைத்திருக்கும் ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாகும். வரிக் கொள்கைகளை உருவாக்கும் போது, அரசாங்கம் மக்கள் தொகை அளவையும் பொருளாதார பங்களிப்பையும் புறக்கணித்தது. ஆனால், இப்போது அதன் தேர்தல் பிடியை வலுப்படுத்த, அது திடீரென்று அவற்றை முக்கியமானதாகக் கருதுமா?
தொகுதி மறுவரையறை என்பது அரசியல் ஆதாயத்திற்காக மக்கள்தொகையை ஆபத்தான முறையில் பயன்படுத்துவதாகும். நமது அமைப்புகள் கற்பனை செய்த பன்முகத்தன்மை கொண்ட, கூட்டாட்சி அமைப்பைப் பாதுகாப்பதா அல்லது கலாச்சார மற்றும் பிராந்திய வேறுபாடுகளைப் புறக்கணிக்கும் ஒரு மையப்படுத்தப்பட்ட, பெரும்பான்மை ஆட்சியை அனுமதிப்பதா என இந்தியா இப்போது ஒரு தேர்வை எதிர்கொள்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குரிமை பறிப்பு ஆபத்து உண்மையானது மற்றும் அவசரமானது.
திமுக அரசு மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு, கடந்த காலத்தைப் போலவே எதிர்ப்பை வழிநடத்தும்.
நாம் நமக்காக பேசும்போது, அனைவருக்காகவும் பேசுகிறோம். அரசியலமைப்பு, கூட்டாட்சி அமைப்பு மற்றும் "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற முழக்கத்தில் நம்பிக்கை கொண்ட அனைத்து இந்திய குடிமக்களின் எதிர்ப்பையும் இது பிரதிபலிக்கிறது.
நாம் வெல்வோம்
பழனிவேல் தியாக ராஜன் தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக உள்ளார். அவர் முன்பு நிதியமைச்சர் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி குழுவில் உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.