தற்போதைய செய்தி : சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகள் வரிகளிலிருந்து விலக்கப்படுவது குறுகிய காலத்திற்கு மட்டுமே என்று தெளிவுபடுத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இறக்குமதி செய்யப்படும் குறைமின்கடத்தி சில்லுகள் அடுத்த வாரம் வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறியுள்ளார். குறைமின்கடத்தி துறையில் தேசிய பாதுகாப்பு வர்த்தக விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
முக்கிய அம்சங்கள் :
• சீனாவிலிருந்து மின்னணு பொருட்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து விவரிக்கையில், "அந்த மின்னணு பொருட்கள் வேறு கட்டணவரி பிரிவுகளுக்கு மாற்றப்படுகின்றன" என்று ட்ரம்ப் கூறினார்.
• ட்ரூத் சோஷியல் (Truth Social) சமூகவலைத்தளத்தில் ஒரு பதிவில், "நாங்கள் குறைமின்கடத்திகள் மற்றும் முழு மின்னணு விநியோக சங்கிலியை வரவிருக்கும் தேசிய பாதுகாப்பு கட்டணவரி விசாரணைகளில் ஆராய்கிறோம்" என்று ட்ரம்ப் கூறினார்.
• அதிபர் ட்ரம்பின் பரஸ்பர கட்டணவரியில் இருந்து சில மின்னணு பொருட்களுக்கு விலக்கு அளிப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்த பிறகு, ஜப்பான், ஆஸ்திரேலியா, தென் கொரியா ஆகிய நாடுகளில் டெக் பங்குகளில் உயர்வுடன் பங்குச் சந்தை பசுமை போக்கைக் காட்டியுள்ளது.
• வெள்ளை மாளிகையின் கட்டணவரி நிவாரண அறிவிப்பிற்குப் பிறகு, தைவான் டெக் சப்ளை சங்கிலி பங்குகள், சீனா மற்றும் ஹாங்காங்கின் பங்குச் சந்தையும் உயர்ந்துள்ளன, இது குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்கலாம்.
• சீனாவின் முக்கியமான தொழில்நுட்ப தயாரிப்புகளுக்கு குறைமின்கடத்திகளுடன் தனித்தனி புதிய வரிகளில் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
உங்களுக்குத் தெரியுமா?
• பெயர் சுட்டிக்காட்டுவது போல, ஒரு குறைமின்கடத்தியால் (semiconductor) அவ்வப்போது மின்சாரத்தை கடத்தவோ அல்லது அதன் ஓட்டத்தை தடுக்கவோ முடியும். இன்று பயன்படுத்தப்படும் குறைமின்கடத்திகள் சிலிகான் போன்ற பொருட்களால் செய்யப்பட்டுள்ளன மற்றும் மில்லியன் கணக்கான டிரான்சிஸ்டர்களைக் கொண்டுள்ளன. இவை சிறிய மின்சார சுவிட்சுகள் போல செயல்பட்டு, படங்கள், ரேடியோ அலைகள் மற்றும் ஒலிகள் போன்ற தரவுகளை செயலாக்க இயக்க மற்றும் நிறுத்துகின்றன.
• குறைமின்கடத்திகள் வீட்டு உபயோக சாதனங்கள் முதல் நவீன பாதுகாப்பு அமைப்புகள், மொபைல் போன்கள் முதல் கார்கள், விளையாட்டுப் பொருட்கள் முதல் உயர்தர ஆடம்பர பொருட்கள்வரை பெரும்பாலான நவீன தொழில்நுட்பங்களில் காணப்படுகின்றன. இவை மைக்ரோசிப்கள் அல்லது ஒருங்கிணைந்த சுற்றுகள் (integrated circuits) என்றும் அழைக்கப்படுகின்றன.
• குறைமின்கடத்திகளின் உற்பத்தியில் தன்னிறைவு பெற விரும்புவது அமெரிக்கா மட்டுமல்ல. உலகம் முழுவதும் தொழில்நுட்பம் வேகமாக பரவி வருவதால், உள்நாட்டில் உயர்தர உற்பத்தியை உறுதி செய்வதற்கும், திறன்பேசிகள் (ஸ்மார்ட்போன்கள்), மடிக்கணினிகள் மற்றும் பிற மின்னணு சாதனங்களுக்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்கும் குறைமின்கடத்திகள் முக்கியமானவையாக மாறியுள்ளன. நவீன சாதனங்களில் செயற்கை நுண்ணறிவின் (artificial intelligence (AI)) வளர்ந்து வரும் ஒருங்கிணைப்பும் இந்த சூழலில் முக்கியமானது. ஏனெனில், AI அமைப்புகள் கிராஃபிக்ஸ் ப்ராசஸிங் யூனிட்கள் (Graphics Processing Units (GPUs)) என்று அழைக்கப்படும் சிறப்பு சில்லுகளைப் பயன்படுத்தி பயிற்றுவிக்கப்படுகின்றன.
. குறைமின்கடத்தி இண்டஸ்ட்ரி அசோசியேஷன் மற்றும் போஸ்டன் கன்சல்டிங் குரூப்பின் 2020 அறிக்கையின்படி, அமெரிக்கா உலகின் செமிகண்டக்டர் உற்பத்தியில் 12% மட்டுமே கொண்டுள்ளது. இது 1990-ல் 37% இருந்ததிலிருந்து குறைந்துள்ளது.