சமீபகாலமாக, அமலாக்க இயக்குநரகத்தின் (Enforcement Directorate) நடவடிக்கைகள் "கூட்டாட்சி கட்டமைப்பை மீறுதல்" உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக உச்ச நீதிமன்றத்தின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. ஆனால், 1956-ல் தொடங்கப்பட்டதிலிருந்து காலம் காலமாக அதன் அதிகாரம் வளர்ந்து வந்த இந்த பொருளாதார புலனாய்வு அமைப்பில் குறைபாடுகள் எங்கே உள்ளன?
அரசு நடத்தும் மதுபான விற்பனை நிறுவனமான தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தில் (Tamil Nadu State Marketing Corporation (TASMAC)) சோதனைகளை நடத்தி, "அனைத்து வரம்புகளையும் மீறியதற்காக" மற்றும் "கூட்டாட்சி கட்டமைப்பை மீறியதற்காக" (violating the federal structure) அமலாக்க இயக்குநரகத்தை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கண்டித்தது. மாநில நிறுவனத்திற்கு எதிரான ஒன்றிய நிறுவனத்தின் நடவடிக்கைகள் அரசியலமைப்பின் கூட்டாட்சி கட்டமைப்பை மீறுவதாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி B R கவாய் விவரித்தார்.
குறிப்பாக, TASMAC வழக்கில் உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறையை கடுமையாக கண்டிப்பது முதல் முறை அல்ல. இந்த மாத தொடக்கத்தில், சத்தீஸ்கரில் நடந்த மதுபான ஊழல் வழக்கில் "எதையும் குறிப்பிடாமல் குற்றச்சாட்டுகளை" சுமத்தியதற்காக நீதிமன்றம் அந்த அமைப்பை விமர்சித்தது. சத்தீஸ்கரில் நடந்த மற்றொரு வழக்கில், "குற்றம் சாட்டப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகள்" குறித்து அந்த அமைப்பு மிகக் குறைவாக கவனம் செலுத்தியதற்காக நீதிமன்றம் அதைக் கண்டித்திருந்தது.
இந்த முன்னேற்றங்கள் இந்தியாவின் பொருளாதார புலனாய்வு அமைப்பின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சி மற்றும் பொருளாதார சட்டங்களை அமல்படுத்துவதிலும் நிதி குற்றங்களை எதிர்த்துப் போராடுவதிலும் அதன் பங்கை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியத்தை உருவாக்குகின்றன.
இந்தியப் பொருளாதார புலனாய்வு அமைப்பின் பரிணாமம்
நிதி அமைச்சகத்தின் கீழ் 'அமலாக்கப் பிரிவாக' மே 1, 1956 அன்று அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate (ED)) அமைக்கப்பட்டது. அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டத்தின் (Foreign Exchange Regulation Act (FERA)) கீழ் அந்நியச் செலாவணி விதிகளை மீறுவதைக் கையாள்வதே இதன் முக்கிய வேலையாக இருந்தது. பின்னர், இது அமலாக்க இயக்குநரகம் என மறுபெயரிடப்பட்டு, வருவாய்த் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்டது. பின்னர் பரந்த அளவிலான நிதிச் சட்டங்களை அமல்படுத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
1999-ஆம் ஆண்டு அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டத்தை மாற்றியமைத்து அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டம் (Foreign Exchange Management Act (FEMA)) கொண்டு வரப்பட்டபோதும், 2000-ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் பணமோசடி தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act (PMLA)) அறிமுகப்படுத்தப்பட்டபோதும், அமலாக்க இயக்குநரகம் அதிக அதிகாரத்தைப் பெற்றது. இந்த மாற்றங்கள் நிதிக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய தரநிலைகளுக்கு ஏற்ப, குறிப்பாக நிதி நடவடிக்கை பணிக்குழு (Financial Action Task Force (FATF)) பரிந்துரைத்தவற்றுக்கு ஏற்ப அமலாக்க இயக்குநரகம் செயல்பட உதவியது.
உலகம் முழுவதும் பணமோசடி தடுப்பு முயற்சிகளை ஒருங்கிணைக்க 1989-ல் உருவாக்கப்பட்ட நிதி நடவடிக்கை பணிக்குழுவால் 2006-ஆம் ஆண்டில் இந்தியா பார்வையாளர் அங்கீகாரத்தைப் (observer status) பெற்றது. பின்னர், 2010-ஆம் ஆண்டில், இந்தியா FATF-ன் முழு நேர உறுப்பினரானது.
சட்டங்களை அமல்படுத்துவதற்கான ஆணை
பணமோசடி மற்றும் அந்நியச் செலாவணி மீறல்கள் தொடர்பான குற்றங்களை விசாரிப்பதற்கு ED ஒரு பரந்த ஆணையைக் கொண்டிருந்தாலும், பின்வரும் முக்கிய சட்டங்களைச் செயல்படுத்துவதற்கு அதிகாரம் பெற்றுள்ளது:
- பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 (Prevention of Money Laundering Act, 2002 (PMLA)): பணமோசடி நடவடிக்கைகளில் இருந்து சொத்துக்களைக் கண்டறிந்து, குற்றவாளிகள் மீது வழக்குத் தொடுப்பதை உறுதிசெய்வதற்கும், அத்தகைய சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கும் (பொதுவாக உரிமையை நிரந்தரமாகக் கைப்பற்றுவது) ED-யின் பொறுப்பாகும்.
- அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், 1999 (Foreign Exchange Management Act, (FEMA)): FEMA சட்டம் குற்றவாளிகள் மீது அபராதம் விதிப்பதற்கும், 1973-ஆம் ஆண்டின் அந்நிய செலாவணி ஒழுங்குமுறை சட்டத்தை (Foreign Exchange Regulation Act (FERA)) ரத்து செய்வதற்கு முன் பதிவுசெய்யப்பட்ட மீறல்கள் தொடர்பான வழக்குகளிலும் தண்டனைகளை விதிப்பதற்கு சட்ட அமலாக்க அமைப்பு பொறுப்பாகும். FERA வழக்குகளைக் கையாள்வதும் அவற்றின் பொறுப்பு ஆகும்.
- தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம், 2018 (Fugitive Economic Offenders Act, (FEOA)): வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதன் மூலம் இந்தியச் சட்டத்தைத் தவிர்க்கும் பொருளாதாரக் குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கும் (விற்பனையைத் தடுக்கும் வகையில் சொத்துக்களை தற்காலிகமாக பறிமுதல் செய்வதற்கும், பொதுவாக சோதனைக் கட்டத்தின்போதும்) சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கும் ED-க்கு அதிகாரம் உள்ளது.
- அந்நியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (Conservation of Foreign Exchange and Prevention of Smuggling Activities Act (COFEPOSA)), 1974: இயக்குநரக சட்டத்தின் கீழ் வழக்குகளுக்கு நிதியுதவி செய்கிறது மற்றும் COFEPOSA அடிப்படையில் அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்ட (Foreign Exchange Management Act (FEMA)) மீறல்களைத் தடுக்கும் தடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்கலாம்.
அமலாக்க இயக்குநரகத்தின் (Enforcement Directorate) அதிகாரம் மற்றும் கூட்டாட்சி அமைப்பு
பொருளாதாரச் சட்டங்களைச் செயல்படுத்துவதற்கான முதன்மை அமைப்பாக, பொருளாதாரக் குற்றங்களை விசாரிப்பதற்கும், கண்டறிவதற்கும், தடுப்பதற்கும் குறிப்பிடத்தக்க அதிகாரங்களை ED கொண்டுள்ளது. உதாரணமாக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act (PMLA)) கீழ், தனிநபர்களை வரவழைக்கவும், அவர்களின் வருகையை நடைமுறைப்படுத்தவும், அவர்களின் அறிக்கைகளை பதிவு செய்யவும் ஒன்றிய அரசின் அமைப்புகளுக்கு அதிகாரம் உள்ளது. அவை ஆதாரமாக செல்லுபடியாகும்.
'நம்புவதற்கான காரணம்' பதிவுசெய்யப்பட்டிருந்தால் மற்றும் சட்டப்பூர்வ முன்நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால், சோதனைகளை நடத்துவதற்கும், பணமோசடியுடன் தொடர்புடைய சொத்து அல்லது ஆவணங்களைக் கைப்பற்றுவதற்கும் ED-க்கு அதிகாரம் உள்ளது. ஆதாரங்கள் மற்றும் எழுத்துப்பூர்வ நியாயத்தின் அடிப்படையில் கைதுகளை மேற்கொள்ளலாம். ஆனால், கைது செய்வதற்கான காரணங்கள் குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தெரிவிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் நடவடிக்கைகளை செய்யவேண்டும். இது பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் (Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS)) கீழ் கைது செய்யப்படுவதைவிட அதிகமான வரம்பு ஆகும்.
விசாரணையின் போது அவற்றின் விற்பனையைத் தடுக்க 180 நாட்கள் வரை குற்றச் செயல்களின் வருமானம் என்று சந்தேகிக்கப்படும் சொத்துக்களை பறிமுதல் செய்யும் அதிகாரமும் ED-க்கு உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் என்பதை அரசாங்கம் நிரூபிக்க வேண்டியதற்குப் பதிலாக, பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் சட்டப்பூர்வமானவை என்பதைக் காட்டி அவர்கள் நிரபராதிகள் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பது PMLA-வில் உள்ள ஒரு சிறப்பு விதியாகும்.
அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (Foreign Exchange Management Act (FEMA)) கீழ், அந்நிய செலாவணி விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் நீதிமன்றத்தைப் போல ED செயல்பட முடியும். தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டம் (FEOA) இந்தியாவிலிருந்து தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகளின் சொத்துக்களை ED கையகப்படுத்தி வைத்திருக்க அனுமதிக்கிறது.
FEMA-ன் கீழ், ED தீர்ப்பு அதிகாரங்களைக் கொண்டுள்ளது மற்றும் அந்நிய செலாவணி ஒழுங்குமுறை மீறல்களுக்கு அபராதம் விதிக்க ஒரு அரை நீதி அமைப்பாக (quasi-judicial body) செயல்படுகிறது. மேலும், இந்தியாவில் இருந்து தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம் (FEOA) ED-க்கு அதிகாரங்களை வழங்குகிறது.
இருப்பினும், இந்த அதிகாரங்கள் கூட்டாட்சியில் வேரூன்றிய அரசியலமைப்பு வரம்புகளுக்கு உட்பட்டவை. மாநில சுயாட்சிக்கு மதிப்பளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், ஒன்றிய-மாநில சமநிலைக்கு இடையூறு விளைவிப்பதைத் தவிர்க்கவும், ED தனது அதிகார வரம்பை மீறுவது குறித்து உச்சநீதிமன்றம் பலமுறை எச்சரித்துள்ளது. இந்த அறிவுறுத்தல்கள் பொருத்தமானவை. குறிப்பாக, மாநில அதிகார வரம்பிற்கு உட்பட்ட விசாரணைகளில் தலையிட ED-ஐ ஒரு கருவியாகப் பயன்படுத்துவது குற்றச்சாட்டாக உள்ளது.
செயல்பாட்டு சுதந்திரம் பற்றிய கவலைகள்
இந்தியாவின் நிதி ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் ED ஒரு முக்கியப் பங்கைக் கொண்டிருந்தாலும், அதன் செயல்பாடுகள் தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு குறிப்பிடத்தக்க கவலைகளை எழுப்பியுள்ளன. இது TASMAC வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய விமர்சனத்தில் காணப்பட்டது. தலைமை நீதிபதி, ED அரசியலமைப்பின் கூட்டாட்சி கட்டமைப்பை மீறுவதாக சுட்டிக்காட்டினார். மேலும் அமைப்பின் சுதந்திரம் மற்றும் சாத்தியமான அரசியல் சார்பு குறித்து கவலைகளை எழுப்பினார். இது ED அதன் நடவடிக்கைகள் குறித்து சிந்திக்க வேண்டியதன் அவசியத்தைக் காட்டியது.
அமலாக்கக்த்துறையின் (ED) மீதான பெரிய விமர்சனம் PMLA-வின் கீழ் அதன் குறைந்த தண்டனை விகிதம் ஆகும். 2014 முதல் 2024 வரை, 5,297 வழக்குகளில், 40 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டது. இதன் காரணமாக, வலுவான ஆதாரங்கள் மற்றும் சிறந்த வழக்குத் தொடுப்புகளில் அதிக கவனம் செலுத்துமாறு ஆகஸ்ட் 2024-ல் அமலாக்கக்த்துறையிடம் உச்சநீதிமன்றம் கூறியது. இது வழக்குகளை விசாரித்து வெற்றி பெறுவதில் ED எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்று மக்களை கேள்வி எழுப்பியுள்ளது.
ED-க்கு வழங்கப்பட்டுள்ள விரிவான அதிகாரங்கள், குறிப்பாக PMLA -ன் கீழ், கைது செய்யும் அதிகாரம், சொத்துக்களை தற்காலிகமாக இணைத்தல் மற்றும் ஒரு தலைகீழ் சுமை ஆதாரம் ஆகியவற்றை உள்ளடக்கியது. அவை உரிய செயல்முறை மற்றும் குடிமை உரிமைகள் (civil liberties) மீதான தாக்கம் பற்றிய விவாதங்களுக்கு வழிவகுத்தன.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதி என்பதை நிரூபிக்கும் வகையில் சாட்சியச் சுமையை சுமத்துவது எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போதுமான ஆதாரங்கள் இல்லாமல் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும், ஆதாரங்கள் இல்லாததால் பல வழக்குகள் கைவிடப்பட்டதாகவும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இத்தகைய கவலைகளை அதை உறுதிப்படுத்துகின்றன.
ED-யின் செயல்பாட்டு சுதந்திரம் குறித்தும் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. அரசியல் செல்வாக்கு மற்றும் குறிப்பிட்ட தனிநபர்கள் அல்லது நிறுவனங்களை குறிவைப்பது தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளன. இது பொதுமக்களின் பார்வையையும் அந்த அமைப்பின் மீதான நம்பகத்தன்மையையும் பாதிக்கிறது. அதன் வழக்குத் தேர்வு செயல்முறை, விசாரணைகள் மற்றும் தண்டனை விகிதங்களில் அதிக வெளிப்படைத்தன்மையின் தேவை பரவலாக விவாதிக்கப்படுகிறது. கூடுதலாக, ED-யின் நடவடிக்கைகள் சில நேரங்களில் அதன் அதிகார வரம்பை மீறி, TASMAC வழக்கில் காணப்படுவது போல், மாநிலங்களின் வரம்பிற்குள் வரும் வழக்குகளை எடுத்துக்கொள்கின்றன. இது கூட்டாட்சி மோதலுக்கு (federal friction) வழிவகுக்கிறது.
முன்னோக்கி செல்லும் வழி என்ன?
அதன் செயல்திறனை அதிகரிப்பதையும், அதன் செயல்பாடு குறித்த பொதுமக்களின் கருத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட சில சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate) பயனடையும். அதிகார வரம்பை மீறுவதைத் தடுக்க, விசாரணை, கைது மற்றும் பறிமுதல் செயல்முறைகளை வலுவான நீதித்துறை மேற்பார்வையின் கீழ் அமைப்பை வைப்பது ஒரு முக்கிய படியாக இருக்கலாம்.
அரசியல் நலன்கள் (political interests) மற்றும் துன்புறுத்தல் (harassment) குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கு உரிய நடைமுறையை கண்டிப்பாக கடைபிடிப்பது மற்றொரு படியாகும். இது தெளிவான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை நிறுவுதல் மற்றும் ED அலுவர்களுக்கு பயனுள்ள பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு மூலம் ஆதரிக்கப்படலாம். புலனாய்வுகளை உளவுத்துறை சார்ந்ததாக மாற்ற ED-ன் செயல்பாட்டை மறுசீரமைத்தல் மற்றும் வலுவான சான்றுகள் மூலம் தண்டனைகளில் கவனம் செலுத்துதல் ஆகியவை சார்பு உணர்வை அகற்ற உதவும்.
முடிவாக, இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் நிதிக் குற்றங்களைத் தடுக்கவும் அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate) போன்ற ஒரு அமைப்பு முக்கியமானது. காலத்திற்கு ஏற்றவாறு சீர்திருத்தங்கள் மற்றும் உரிய நடைமுறைகள் மற்றும் அரசியலமைப்பு விதிமுறைகளை கடைபிடிப்பது அதன் நியாயமான மற்றும் பயனுள்ள செயல்பாட்டை உறுதி செய்வதற்கு முக்கியமானதாக இருக்கும்.
கண்ணன் கே ஹைதராபாத்தில் உள்ள பொருளாதார மற்றும் சமூக ஆய்வு மையத்தில் அரசியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.