மக்கள்தொகை கணக்கெடுப்பின் (Census) இரு கட்டங்கள் என்னென்ன? ஒன்றிய அரசின் கூற்றுப்படி, வரவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கீடு ஏன் சேர்க்கப்பட்டுள்ளது? ஓரங்கட்டப்பட்டவர்களை முக்கிய பணிகளுக்கு கொண்டுவர உதவும் தரவுகளை வழங்க மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் என்னென்ன?
ஒன்றிய அரசு அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ஆம் ஆண்டில் நடைபெறும் என்றும், அதில் சாதி பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இத்தகைய தரவு சேகரிப்பு பணியை, ஏற்கனவே உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு செயல்முறையை மறுசீரமைப்பதன் மூலம் மேலும் பயனுள்ளதாக மாற்ற முடியுமா?
மக்கள்தொகை கணக்கெடுப்பு எவ்வாறு நடத்தப்படுகிறது?
மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம், வீடுகளை பட்டியலிடுதல் (house-listing) என அழைக்கப்படுகிறது. இது 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடத்தப்படும். இந்த கட்டத்தில் நாட்டில் மக்கள் வசிக்கும் அனைத்து குடியிருப்பு அலகுகளும் பட்டியலிடப்படும். இந்த நிலை, நாட்டில் உள்ள அனைத்து குடியிருப்பு அலகுகளையும், வீடுகள் மற்றும் வீடுகளின் பல பண்புகளையும் பட்டியலிடுகிறது.
இரண்டாம் கட்டம் மக்கள்தொகை கணக்கீடு கட்டம் (population enumeration phase) என அழைக்கப்படுகிறது. இது 2027-ஆம் ஆண்டில் நடத்தப்படும். இந்த கட்டத்தில் மக்கள்தொகையின் பல முக்கிய சமூக-பொருளாதார சிறப்பியல்புகள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படும். சாதி பதிவு செய்யப்படுவதும் இந்த கட்டத்தில்தான்.
சாதி ஏன் பதிவு செய்யப்படுகிறது?
ஒரு நபரின் சாதியை பதிவு செய்வது கடைசியாக 1941-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் செய்யப்பட்டது. ஆனால், இரண்டாம் உலகப் போரின் பொருளாதார கட்டுப்பாடுகள் காரணமாக அந்த தரவுகளை செய்யல்பட்டிற்கு கொண்டு வரமுடியவில்லை. எனவே உண்மையில், சாதி பற்றிய தரவுகளை வழங்கிய கடைசி மக்கள்தொகை கணக்கெடுப்பு 1931-ஆம் ஆண்டில் நடந்தது. இது இப்போது எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்த முடியாத அளவுக்கு காலாவதியாகிவிட்டது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக சாதிவாரி கணக்கெடுப்பு என்பது, ஒவ்வொரு துறையிலும் ஒதுக்கப்பட்டவர்களையும் பின்தங்கியவர்களையும் முக்கிய பணிகளுக்குக் கொண்டுவர அரசாங்கம் எடுக்கும் ஒரு நடவடிக்கை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தரவு சேகரிப்புக்கான ஒரு முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பின் வரம்புகள் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு வினாத்தாளின் வடிவமைப்பைக் கருத்தில் கொண்டு, இந்த நோக்கத்தை நிறைவேற்ற முடியுமா என்பது சந்தேகமாக உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு கேள்வித்தாள்களை மறுசீரமைப்பதன் மூலம், மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ள நோக்கங்களை அடைய மிகவும் பயனுள்ள தரவுகளை எளிதாகக் கிடைக்கச் செய்ய முடியும்.
கேள்வித்தாள்களில் உள்ள பிரச்சனைகள் என்னவென்ன?
2021-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வரைவு கேள்வித்தாள்களில் சேர்க்கப்பட்ட கேள்விகள் 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அப்படியே இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 2021-ஆம் ஆண்டு வரைவு அறிக்கையில், முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்புகளைப் போலவே, சாதி பற்றிய கேள்வி பட்டியல் சாதியினரிடம் (Scheduled Castes) மட்டுமே கேட்கப்பட்டது.
இந்த கேள்வியை பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes) தவிர மற்ற அனைத்து சாதிகளுக்கும் பொருந்தும் வகையில் மாற்றுவதன் மூலமும், மின்னணு தரவு சேகரிப்புக்குப் பயன்படுத்தப்படும் வழிமுறைகள் மற்றும் மென்பொருளில் ஏற்படும் மாற்றங்களுடன், சாதிகள் பற்றிய தரவுகளைச் சேகரிக்க முடியும். சாதிகள் பற்றிய தரவு சேகரிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்கள் இந்த கட்டுரையின் எல்லைக்குள் இல்லை. குறிப்பிட்ட சாதிகள் பற்றிய தகவல்களை கல்வியறிவு நிலை; திருமண வயது; தாய்மொழி மற்றும் தெரிந்த பிற மொழிகள்; நபரின் நிலை முக்கிய தொழிலாளி, விளிம்பு தொழிலாளி அல்லது தொழிலற்றவர்; வேலை தேடுதல்/வேலைக்கு கிடைக்கக்கூடிய நிலை; தொழிலாளர்களின் தொழில்/தொழில் துறையின் பொதுவான வகைப்பாடு; பிறந்த இடம்/முந்தைய வசிப்பிடம்; மற்றும் குழந்தை பிறப்பு மற்றும் உயிர்வாழ்வு பற்றிய தரவுகள் ஆகியவற்றின் மூலம் கண்டறிய முடியும்.
'தாய்மொழி மற்றும் தெரிந்த பிற மொழிகள்' (mother tongue and other languages known) பற்றிய தரவு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லாவிட்டாலும், பொருளாதார நடவடிக்கைகளில் பங்கேற்பு மற்றும் அதன் பரந்த வகைப்பாடு பற்றிய தகவல்கள் பயனுள்ளதாக இருக்கலாம். ஆனால், "வேலை தேடுகிறாரா/வேலைக்கு கிடைக்கிறதா” எனும் கேள்விக்கான பதிலைப் பயன்படுத்தி பெறப்படும் வேலையின்மை பற்றிய தரவு கருத்தியல் பிரச்சனைகள் தரவு சேகரிப்பில் பாதிக்கப்படுகிறது. இருப்பினும், வேலையில்லாதவராக வகைப்படுத்தப்படுவதற்கு ஒருவர் எவ்வளவு காலம் வேலை தேட வேண்டும்/கிடைக்க வேண்டும் என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. 1981-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிலும் இந்தக் கேள்வி கேட்கப்பட்டாலும், அது ஒருபோதும் பயனுள்ள தரவை வழங்க முடியாது.
மக்கள்தொகை கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் 'குழந்தை பிறப்பு மற்றும் உயிர்வாழ்வு' (child births and survival) பற்றிய தகவல்கள் கடுமையான பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றன. 1981-ஆம் ஆண்டு முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்ட இந்த கேள்விகள் தங்கள் பயனை இழந்துவிட்டன. ஏனெனில், இதே போன்ற தகவல்கள் தேசிய குடும்ப நல ஆய்வுகள் (National Family Health Surveys) மூலம் சிறப்பாக சேகரிக்கப்படுகின்றன. இந்த கேள்விகளிலிருந்து நம்பகமான சாதி வாரியான தரவுகளைப் பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.
குடியேற்றம் (migration) பற்றிய தகவல் சில சாதியினர் குடியேற்றத்திற்கு அதிகம் ஆளாகிறார்களா என்பதை மதிப்பிடுவதற்கு முக்கியமான அம்சமாக இருக்கலாம். ஆனால், முந்தைய மக்கள்தொகை கணக்கெடுப்புகளின் தரவுகள் காட்டுவது என்னவென்றால், அதிகமான குடியேற்றவாசிகள் கணக்கிடப்படவில்லை அல்லது குடியேற்றவாசிகளாக பதிவு செய்யப்படவில்லை.
எனவே, சாதியை வகைப்படுத்த கிடைக்கும் ஒரே தகவல்கள் கல்வி, திருமண வயது மற்றும் பொருளாதார செயல்பாட்டில் பங்கேற்பு ஆகியவற்றில் மட்டுமே உள்ளன.
மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதியை சேர்ப்பதற்கு ஒன்றிய அரசு கூறிய நோக்கங்களை நோக்கி நகர்வதற்கு உதவும் பிற தகவல்களை மக்கள்தொகை கணக்கெடுப்பு சேகரிக்கிறது என்ற போதிலும், அதற்கு மக்கள்தொகை கணக்கெடுப்பு கேள்வித்தாள்கள் மற்றும் செயல்முறையில் சில கடுமையான மறுசீரமைப்புகள் தேவைப்படும்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு கேள்வித்தாள்கள் எவ்வாறு மறுசீரமைக்கப்பட வேண்டும்?
வீடுகள் பட்டியலிடுதல் கட்டத்தின் முக்கிய நோக்கம் மக்கள்தொகை கணக்கெடுப்பு நேரத்தில் மக்கள் வசித்து வரும் அல்லது வசிக்க வாய்ப்புள்ள அனைத்து குடியிருப்பு அலகுகளின் (units) பட்டியலைத் தயாரிப்பதாகும். இந்த கட்டமைப்பு தேவையின்படி புதிய கணக்கீட்டு தொகுதிகளை (enumeration blocks) உருவாக்க உதவுகிறது மற்றும் கணக்கெடுப்பாளர்களின் பணிச்சுமையை சமநிலைப்படுத்த உதவுகிறது. 1991-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு முதல் இந்த கட்டத்தில் வீட்டின் தரம், குடும்பங்களுக்கு கிடைக்கும் வசதிகள் மற்றும் சொந்தமான சொத்துக்கள் தொடர்பான பல கேள்விகள் கேட்கப்படுகின்றன.
ஆனால், 1981-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில், இந்த கேள்விகள் இரண்டாம் கட்டத்தில், அதாவது மக்கள்தொகை கணக்கீட்டு கட்டத்தில் நடத்தப்படும் குடும்ப அட்டவணையில் (household schedule) இருந்தன.
இந்த கேள்விகளை வீடுகள்-பட்டியல் அட்டவணையிலிருந்து குடும்ப அட்டவணைக்கு மாற்றுவது, வீட்டின் தரம், வசதிகள் மற்றும் சொத்துக்கள் பற்றிய தகவல்களை மக்கள்தொகையின் பிற அம்சங்களுடன் இணைப்பதை எளிதாக்கும். வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் மக்கள்தொகை கணக்கீட்டு கட்டங்களுக்கு இடையே ஆறு முதல் ஒன்பது மாதங்கள் வரை இடைவெளி இருப்பதால், வீட்டு எண், குடும்பத் தலைவரின் பெயர் போன்றவற்றின் அடிப்படையில் தகவல்களை இணைப்பது பிழைகளை ஏற்படுத்தலாம். இத்தகைய பிழைகள் தரவுகளின் நம்பகத்தன்மையை கடுமையாக பாதிக்கலாம். குறிப்பாக, சிறிய சமூகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
வீட்டுப் பட்டியல் அட்டவணையிலிருந்து இந்தக் கேள்விகளை நீக்குவது, கணக்கெடுப்பாளர்கள் குடியிருப்பு, பகுதி குடியிருப்பு அல்லது குடியிருப்பு அல்லாத அனைத்து வகையான கட்டிடங்களையும் பட்டியலிடுவதிலும், அவற்றில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதிலும் சிறப்பாக கவனம் செலுத்த அனுமதிக்கும். சிறந்த வீட்டுப் பட்டியல் தரவு மக்கள் தொகை கணக்கெடுப்பின் துல்லியத்தை மேம்படுத்தும். பெரும்பாலான மக்கள் தொகை கணக்கெடுப்புகளில் அதிக விடுபட்ட விகிதங்களைக் கொண்ட நகர்ப்புறங்களில் இது மிகவும் முக்கியமானது.
இத்தகைய இணைப்புகள் அல்லது கேள்விகளின் இடமாற்றம் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பிலும் அல்லது 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் திட்டமிடலிலும் (கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக) ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்தத் தரவு இல்லையென்றால், "மின்சாரம் இல்லாத குடிசை வீடுகளில் வசிக்கும் மக்களின் கல்வியறிவு விகிதம் என்ன, அது மற்றவர்களை விட மிகக் குறைவாக உள்ளதா?" அல்லது "நகரங்களில் எத்தனை சதவீத தொழிலாளர்கள் குடிசை வீடுகளில் வசிக்கிறார்கள்?" போன்ற கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க முடியாது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதி வாரியாக பிரிக்கப்பட்ட இந்தக் கேள்விகளுக்கான பதில்களை வழங்க வேண்டும். அப்போதுதான் தரவுகள் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களை அடையாளம் காணவும், அவற்றுக்கிடையேயான இடைவெளிகளை அளவிடவும் உதவும். இந்த புள்ளிகளில் பலவற்றில் துல்லியமான தரவுகளைச் சேகரிப்பது கடினமாக இருந்தாலும், தரம் சரியானதாக இல்லாவிட்டாலும், மக்கள் தொகை கணக்கெடுப்புதான் இப்போது கிடைக்கும் சிறந்த தேர்வாகும்.
சில கேள்விகள் தவிர்க்கப்பட வேண்டுமா?
தேவையற்ற கேள்விகளை நீக்குவதன் மூலம் மக்கள்தொகை கணக்கெடுப்பை எளிமையாக்க வேண்டும். குடும்பத்திற்கு கிடைக்கும் வசதிகள் அல்லது அவர்கள் சொந்தமாக வைத்திருக்கும் சொத்துக்கள் பற்றிய பல கேள்விகள் இப்போது தேவையற்றதாக இருக்கலாம். உதாரணமாக, கைபேசிகள் அல்லது கணினிகளின் உரிமை இப்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல முக்கியமானதாக இருக்காது. இதேபோல், வீடுகளின் வங்கிக் கணக்குகளை அணுகுவது குறித்த கேள்விகள் தவிர்க்கப்படலாம். குறுகிய கேள்வித்தாள் கணக்கெடுப்பாளர் கேள்விகளுக்கு மேலும் துல்லியமான பதில்களைப் பெறுவதில் கவனம் செலுத்த உதவும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பல்வேறு சமூக மற்றும் பொருளாதார காரணிகளின் அடிப்படையில் பல்வேறு சாதிகள் மற்றும் பழங்குடியினர் பற்றிய தரவுகளை சேகரித்து வருகிறது. இருப்பினும், இந்தத் தரவு கொள்கைகள் அல்லது திட்டங்களைத் திட்டமிடுவதற்கு மிகவும் பின்தங்கிய சாதிகள் அல்லது பழங்குடியினரை அடையாளம் காணப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருந்து சாதி வாரியான தரவு, இடஒதுக்கீடு சதவீதத்தை தீர்மானிப்பதற்கு மட்டுமல்லாமல், கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்குவதில் மிகவும் திறம்பட பயன்படுத்தப்படும் என்று நம்புகிறோம்.
ஆசிரியர் ஓய்வு பெற்ற இந்திய புள்ளியியல் சேவை அதிகாரி மற்றும் துணைப் பதிவாளர் ஜெனரலாகவும் இருந்துள்ளார்.