வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி வரி (AIDC) என்றால் என்ன? -ரோஷ்னி யாதவ், குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


— பருத்தி மீதான இறக்குமதி வரி மற்றும் வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி வரி (Agriculture Infrastructure and Development Cess (AIDC)) நீக்கம் ‘பொது நலனுக்கு அவசியம்’ என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த அறிவிப்பு ஆகஸ்ட் 19 முதல் நடைமுறைக்கு வந்து செப்டம்பர் 30 வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.


— அமெரிக்காவின் கடுமையான வரிகளால் நெசவுத் துறை மிகவும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், அமெரிக்கா இந்தியாவின் ஆயுத்த ஆடைகள் (Ready-Made Garments (RMG)) ஏற்றுமதிக்கு முக்கிய சந்தையாக உள்ளது. ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (Apparel Export Promotion Council (AEPC)) அறிக்கையின் படி, 2024ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த ஆடை ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு 33 சதவீதமாக இருந்தது.


— AEPC அறிக்கையின் படி, இந்தியா அமெரிக்காவிற்கு அதிகம் ஏற்றுமதி செய்யும் முதல் மூன்று பொருட்கள்: பருத்தி டி-ஷர்ட்கள் (9.71 சதவீதம்); பருத்தியால் செய்யப்பட்ட பெண்கள் அல்லது சிறுமிகளின் ஆடைகள் (6.52 சதவீதம்); பருத்தியால் செய்யப்பட்ட குழந்தை ஆடைகள் (5.46 சதவீதம்) போன்றவைகளாகும். 


இந்தியா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் முதல் மூன்று பொருட்கள் உலகளவில் அமெரிக்கா இறக்குமதி செய்யும் இந்தப் பொருட்களில் முறையே 10, 36 மற்றும் 20 சதவீத பங்கை கொண்டுள்ளன என்று ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.


— குறிப்பிடத்தக்க வகையில், வீட்டு ஜவுளிகள் மற்றும் கம்பளங்களும் முக்கியமான ஏற்றுமதி சார்ந்த துறைகளாக உள்ளன. இந்த துறைகளில் முறையே மொத்த விற்பனையில் 70-75 சதவீதம் மற்றும் 65-70 சதவீதம் ஏற்றுமதியை கொண்டுள்ளன. இதில், வீட்டிற்கு தேவையான துணிகள் ஏற்றுமதியில் அமெரிக்கா 60 சதவீதமும், கம்பள ஏற்றுமதியில் 50 சதவீதமும் பங்கு வகிக்கிறது.


— அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஜூலை 30ஆம் தேதி இந்தியப் பொருட்கள் மீது 25 சதவீத பரஸ்பர வரி விதிப்பை அறிவித்தார். தொழிலாளர் மிகுதியான துறைகளின் வேதனையை அதிகரிக்கும் வகையில், ட்ரம்ப் இந்தியா மீது மேலும், 25 சதவீத வரிகளை அறிவித்துள்ளார். இந்த கூடுதல் அமெரிக்க வரிகள் ஆகஸ்ட் 27 முதல் நடைமுறைக்கு வர உள்ளன.


— கடுமையான அமெரிக்க வரிகளுக்கு மத்தியில், மூலப்பொருட்கள் எளிதாக கிடைக்க அரசின் தலையீட்டை சிட்டிகுரூப் மற்றும் இந்திய நெசவுத் தொழில் கூட்டமைப்பு (Citigroup and Confederation of Indian Textile Industry (CITI)) கோரியுள்ளது. இந்தியாவுக்கான அமெரிக்க வரி விகிதம் 50 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், போட்டியாளர் நாடுகளான வங்கதேசத்துக்கு புதிய அமெரிக்க வரி விகிதம் 20 சதவீதம், இந்தோனேசியா மற்றும் கம்போடியாவுக்கு தலா 19 சதவீதம், வியட்நாமுக்கு 20 சதவீதம் என்று CITI சுட்டிக்காட்டியுள்ளது.


உங்களுக்குத் தெரியுமா ?


— இந்தியாவின் நெசவுத் தொழில் உலகின் மிகப்பெரிய தொழில்களில் ஒன்றாகும். பருத்தி சாகுபடி முதல் உயர்நிலை ஆடை உற்பத்தி வரை பரந்த மதிப்புச் சங்கிலியைக் கொண்டுள்ளது.


— இந்தியாவின் நெசவு மற்றும் ஆடைத் துறையின் அளவை குறைத்து மதிப்பிட முடியாது. இது தொழில்துறை உற்பத்தியில் 13 சதவீதம், ஏற்றுமதியில் 12 சதவீதம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product (GDP)) 2 சதவீதம் பங்களிக்கிறது.


— சீனாவுக்கு அடுத்து, இந்தியா பருத்தி உற்பத்தியில் 2-வது பெரிய நாடாக உள்ளது. உலக உற்பத்தியில் 24 சதவீத பங்கு வகிக்கிறது. பருத்தி (Cotton) சாகுபடியில் சுமார் 60 லட்சம் உழவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் குஜராத், மகாராஷ்ட்ரா மற்றும் தெலங்கானாவில் உள்ளனர்.


— பருத்தி  நெசவுத் தொழில் முழுவதும்  மூலப் பொருளான பருத்தியை நூலாக மாற்றுவது, துணி தயாரிப்பது, சாயமிடுதல் மற்றும் தையல் வரை  45 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது.



Original article:

Share: