பொதுமக்கள் மற்றும் வாக்காளர் நம்பிக்கை இழப்பிற்கு இந்திய தேர்தல் ஆணையமே முழு பொறுப்பாகும்.
இந்தியாவின் முதல் தலைமைத் தேர்தல் ஆணையர் (Chief Election Commissioner (CEC)) சுகுமார் சென் (மார்ச் 21, 1950 முதல் டிசம்பர் 19, 1958 வரை) குறைவாகப் பேசியவர். ஆனால், அவர் ஒரு சிறந்த செயல்திறன் கொண்டவர். அவர் எந்த நினைவுக் குறிப்புகளை (memoirs) வெளியிடவில்லை.
இருப்பினும், உலகின் மிகப்பெரிய மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல்களில் ஒன்றை நடத்திய பெருமை அவருக்கு உண்டு. இப்போது பதவியில் இருப்பவர்களுக்கு அவரது வாழ்க்கை ஒரு பாடத்தைக் கற்பிக்கிறது. வரலாறு உங்கள் வார்த்தைகளையோ அல்லது கூறும் காரணத்தையோ அல்லாமல், உங்கள் பணியை நினைவில் கொள்கிறது.
ஆகஸ்ட் 14, 2025 அன்று உச்ச நீதிமன்றம் பீகாரின் வரைவுப் பட்டியலில் இருந்து 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கான பெயர்கள் மற்றும் காரணங்களை வெளியிடக் கேட்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்த பிறகும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பெரும் அம்பலப்படுத்தலுக்குப் பிறகும், இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) அதன் வரலாற்றில் மிகப்பெரிய நம்பகத்தன்மை நெருக்கடிகளில் ஒன்றை எதிர்கொள்கிறது. ஆகஸ்ட் 17 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்பிற்கு வந்த எதிர்வினைகளைப் பார்த்தால், நெருக்கடி மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.
தேர்தல் ஆணையம் இந்த பத்திரிகையாளர் சந்திப்பை ஏன் நடத்தியது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அது தன்னைத்தானே தெளிவற்ற முறையில் புகழ்ந்து பேசுவதற்கும், வாக்காளர் பட்டியலைப் பராமரிக்கும் பொறுப்பை அரசியல் கட்சிகள் மீது சுமத்துவதற்கும், எதிர்க்கட்சித் தலைவரை தவறான சட்டக் குறிப்புகள் மூலம் மறைமுகமாக தாக்குவதற்கும் மட்டுமே பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. அதில் தேர்தல் ஆணையம் தான் தெரிவிக்க விரும்பும் செய்தியை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
நம்பமுடியாத பதில்கள்
பீகாரில் நடந்து வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (Special Intensive Revision (SIR)) குறித்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவதே இதன் நோக்கமாக இருந்திருந்தால், அதைச் செய்யத் தவறிவிட்டது. வாக்காளர் பட்டியல்களின் துல்லியம் குறித்து வாக்காளர்களுக்கு உறுதியளிப்பதே இதன் நோக்கமாக இருந்திருந்தால், அதைச் செய்யத் தவறிவிட்டது. எதிர்க்கட்சிகள் மற்றும் சுயாதீன பத்திரிகையாளர்கள் எழுப்பும் வாக்காளர் முறைகேடுகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பதே இதன் நோக்கமாக இருந்திருந்தால், அதையும் செய்யத் தவறிவிட்டது.
இந்திய தேர்தல் ஆணையம் இறுதியில் பாரபட்சமற்றதாகவும் திறமையற்றதாகவும் இருப்பதாக கூறிய எதிர்க்கட்சியின் கூற்றை நிரூபித்தது. தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார், தீவிரமான கேள்விகளுக்கு பலவீனமான மற்றும் நம்பமுடியாத பதில்களை வழங்கியதன் பதிப்புகள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டன.
வீடியோ காட்சிகளைப் பகிராததற்கான தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்த காரணம் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இரட்டை வாக்குரிமையை அடையாளம் காண்பதற்கு இந்தக் காட்சிகள் அவசியமானது. ஆனால், அது பெண்களின் தனியுரிமையை மீறும் என்ற அடிப்படையில் இதைப் பகிர முடியாது என்று தேர்தல் ஆனணயம் கூறியது.
இது மிகவும் பலவீனமான வாதம். மற்றொரு உதாரணம், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல்வாதிகள் இந்தப் பிரச்சினைகளை ஏன் எழுப்புகிறார்கள் என்றும், தேர்தலுக்கு முன் வாக்குசாவடி நிலை முகவர்களுடன் (Booth Level Agents) வரைவு வாக்காளர் பட்டியல்கள் பகிரப்படும்போது அல்ல என்பதும் தலைமை தேர்தல் ஆணையரின் கேள்வியாக இருந்தது.
அதற்கான பதில் என்னவென்றால், வாக்களித்த பின்னரே தேர்தல் மோசடிகள் வெளிப்படுகிறது மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே போலி வாக்காளர் வடிவங்களைக் காண முடியும். இதை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் இதைப் புரிந்து கொள்ளாதது கவலை அளிக்கிறது.
மேலும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, தேர்தல் ஆணையம் தேர்தலுக்கு முன்பு வழங்கிய வாக்காளர் பட்டியல் தரவைப் பகிர்ந்து கொள்ள தொடர்ந்து மறுத்து வருகிறது என்பதை தலைமை ஆணையர் பொதுமக்களுக்குத் தெரிவிக்கவில்லை.
தரவு மறுப்பு
அனுபவத்திலிருந்து இன்னொரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். இந்தக் கட்டுரையின் முதல் எழுத்தாளர், இந்திய தேசிய காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி, டிசம்பர் 27, 2024 அன்று, மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவின் வாக்காளர் பட்டியலைக் கேட்டு ECIக்கு கடிதம் எழுதினார். ஜனவரி 17, 2025 அன்று மற்றொரு கடிதத்தை அனுப்பிய பிறகும், ECI கோரிக்கைகளை ஏற்கவில்லை.
தரவுகளைப் பகிர்ந்து கொள்ள மறுத்ததால், எழுத்தாளர் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகுவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. அரசியல் கட்சிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட தரவுகளை மறுப்பதற்கு எந்த நியாயமும் இருக்க முடியாது மற்றும் எந்த சட்டத்தின் கீழும் அதை நியாயப்படுத்தப்பட முடியாது.
இதன் விளைவாக, பிப்ரவரி 25, 2025 அன்று டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அதே நாளில், தேர்தல் ஆணையம் அந்தந்த தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு (CEOs) சட்டத்தின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் குறித்து முடிவு செய்ய தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு (CEO) அறிவுறுத்தியதாகக் கூறியது. உயர் நீதிமன்றம் இதை ஏற்றுக்கொண்டு, முடிவெடுக்க மூன்று மாத கால அவகாசத்தை நிர்ணயித்தது.
உத்தரவின்படி, இந்தக் கட்டுரையின் எழுத்தாளர்கள் மகாராஷ்டிராவில் தலைமைத் தேர்தல் அதிகாரி (CEO) முன் நேரில் ஆஜரானார்கள். அவர்களின் சகாக்கள் ஹரியானாவில் தலைமைத் தேர்தல் அதிகாரி முன் ஆஜரானார்கள். மே 22, 2025 அன்று, மகாராஷ்டிராவின் தலைமைத் தேர்தல் அதிகாரி தனது உத்தரவை பிறப்பித்தார். அதேபோல், ஹரியானாவின் தலைமைத் தேர்தல் அதிகாரியும் மே 24, 2025 அன்று தனது உத்தரவை பிறப்பித்தார்.
இரண்டு உத்தரவுகளும் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருந்தன. அவர்கள் எந்த வாக்காளர் பட்டியலையும் வழங்கவில்லை. அதற்கு பதிலாக, தேர்தலுக்கு முன்பே தரவு ஏற்கனவே வழங்கப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர். தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) தனது தனது பாதுகாப்பிற்காக அடிக்கடி மீண்டும் மீண்டும் கூறும் அதே வாதமாகும் இதில், சில தகவல்கள் இணையதளத்தில் இருப்பதாகவும், மேலும் அதே ஆவணங்கள் அல்லது தகவல்களின் கூடுதல் நகல்களைப் பெற, ஒருவர் விதிகளைப் பின்பற்றி அவற்றை முறையான அதிகாரிகளிடமிருந்து கோர வேண்டும் என்ற ஒரு வரியையும் அவர்கள் சேர்த்தனர்.
பதில் தெளிவாக உள்ளது. கோரிக்கை வைக்கப்பட்டு ஐந்து மாதங்களுக்குப் பிறகும், டிஜிட்டல் வாக்காளர் பட்டியல்களை வழங்குவதைத் தவிர்ப்பதற்கு ECI ஒவ்வொரு சாத்தியமான காரணங்களைப் பயன்படுத்தியது. இது அதிகாரத்துவ மொழியைப் பயன்படுத்தி சரியான ஆய்வைத். தடுக்கும் முயற்சியாகும்.
பீகார் SIR விஷயத்தில், ECI இதேபோன்ற உத்தியைப் பயன்படுத்தியது. ஆனால், அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. பெயர்கள் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் பற்றிய தரவைப் பகிர மறுத்ததற்கான காரணத்தை விளக்க வேண்டியிருந்தது மற்றும் ஆதார் உட்பட பல பொதுவான அடையாள ஆவணங்களை விலக்குவதற்கான அதன் முடிவையும் தேர்தல் ஆணையம் நியாயப்படுத்த வேண்டியிருந்தது.
உச்ச நீதிமன்றம், ஆகஸ்ட் 14 அன்று, வாக்காளர் தரவை மறுக்க ECI முன்வைத்த வாதங்களை நிராகரித்தது மற்றும் நீக்கப்பட்ட அனைவரின் பெயர்களையும் காரணங்களுடன் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், இவை அனைத்தும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையுடன் (Electors Photo Identification Card (EPIC)) தேடக்கூடிய பயன்முறையில் (searchable mode) இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆதாரை செல்லுபடியாகும் அடையாள அட்டையாக ஏற்றுக்கொள்ளவும் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
வாக்காளர்களின் நம்பிக்கையை இழக்கிறது
செய்தியாளர் சந்திப்பில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளின் வெளிப்படையான தன்மை மற்றும் வாக்காளர்களுக்கு அதன் அர்ப்பணிப்பு பற்றி குறிப்பிட தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) அதிக நேரத்தை செலவிட்டார். இருப்பினும், ECI அதன் அடிப்படைக் கடமையைச் செய்யச் சொல்லப்பட வேண்டியதற்கான எந்த விளக்கத்தையும் அவர் குறிப்பிடவில்லை.
இந்த நெருக்கடிக்கு இந்திய தேர்தல் ஆணையம் தான் பொறுப்பு. அதுவே இந்தப் பிரச்சினையை உருவாக்கியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் கட்சியைத் தவிர அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளின் நம்பிக்கையை இழந்துவிட்டது என்பது ஒரு குற்றச்சாட்டாக உள்ளது. தற்போது தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் நம்பிக்கையை இழந்து வருகிறது.
தேர்தல் ஆணையம் வாக்காளர்களுடன் மலைபோல் நிற்கிறது என்று கூறியதன் மூலம், தலைமைத் தேர்தல் ஆணையர் தனது பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தத் தொடர்பைக் காட்டினார்.
ஆனால், ஜனநாயகத்தில், மக்கள்தான் மலை, தேர்தல் ஆணையம் அல்ல என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.
ரந்தீப் சிங் சுர்ஜேவாலா காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஒரு வழக்கறிஞர் ஆவார். முகமது ஏ. கான் இந்திய உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞராகவும், ஏஐசிசி சட்டத் துறையின் செயலாளராகவும் உள்ளார்.