இந்தியாவின் ஊரகப் பகுதிகள் ஏன் மாதவிடாய் சுகாதார முன்னேற்றத்தில் பின்தங்கி இருக்கின்றன? -ரிஷிகா பிரியதர்சி, ஆதித்யா அன்ஷ்

 நகர்ப்புற இந்தியாவில் மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துவரும் அதே வேளையில், இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் உள்ள பெண்கள் சுகாதாரமான பொருட்களை பெறுவதில் தொடர்ந்து சிரமப்படுகின்றனர். உடல்நலக் கோளாறுகள், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துதல் மற்றும் தொழில்துறையில் பங்கேற்பு இல்லாமைக்கு வழிவகுக்கிறது. இந்த இடைவெளியை விரைவாக சரிசெய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்


நகர்ப்புற இந்தியாவில் உள்ள பெண்களைப் போல் இல்லாமல், இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் பெண்கள் இன்னும் தொற்றுகள் மற்றும் சிகிச்சையளிக்கப்படாத பிரச்சினைகள் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை மோசமான மாதவிடாய் பராமரிப்பு காரணமாக எதிர்கொள்கின்றனர். இந்த சுகாதார சவால்கள் நகர்ப்புற மற்றும் இந்தியாவின் ஊரகப் பகுதிகளுக்கு இடையிலான சுகாதார அணுகலில் உள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை எடுத்துக்காட்டுகின்றன.


பீகாரில், 40 வயதான லலிதா என்ற பெண், பாதுகாப்பான மாற்று வழிகள் என்னவென்று தெரியாமல், கிழிந்த துணியை தனது மாதவிடாய் காலத்தை நிர்வகிக்க பல ஆண்டுகளாக செலவிட்டார். அவரது கதை அரிதானதோ புதியதோ அல்ல: இந்தியாவின் ஊரகப் பகுதியில்  மில்லியன் கணக்கான பெண்கள் இன்னும் சுகாதாரமான பொருட்கள் கிடைக்காமல் மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இனப்பெருக்க பாதை நோய்த்தொற்றுகள் முதல் மோசமான மாதவிடாய் பராமரிப்புடன் தொடர்புடைய சிகிச்சையளிக்கப்படாத மகளிர் மருத்துவ பிரச்சினைகள் வரை, நகர்ப்புற மற்றும் இந்தியாவின் ஊரகப் பகுதிகளுக்கு  இடையே வெளிப்படையான சுகாதார ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து நீடிக்கின்றன.


தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் - 5வது (National Family Health Survey (NFHS)) தரவுகளை பகுப்பாய்வு செய்த ஒரு ஆய்வில், இந்தியாவில் இளம் பருவப் பெண்களில் 42% மட்டுமே மாதவிடாய் காலத்தில் சுகாதார முறைகளைப் பயன்படுத்துவதாகவும், அவர்களின் பிரத்தியேகப் பயன்பாடு உத்தரபிரதேசத்தில் 23% முதல் தமிழ்நாட்டில் 85% வரை வேறுபடுவதாக கண்டறிந்துள்ளது. 2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, பீகாரில், பெரும்பாலான மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். ஆனால், ஊரகப் பகுதிகளில் உள்ள பெண்கள் 56% பேர் மட்டுமே தங்கள் மாதவிடாய் காலத்தில் சுத்தமான முறைகளைப் பயன்படுத்துகின்றனர். நகர்ப்புற பகுதிகளில் சுத்தமான முறைகளை 75%-ஆக உள்ளனர். இந்த ஏற்றத்தாழ்வுகள் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.


பல கிராமப்புற குடும்பங்கள் கடுமையான பணப் பிரச்சினைகளை எதிர்கொள்வதால், மாதவிடாய் காலத்தில் சுகாதாரப் பொருட்களைப் பயன்படுத்துவதில் நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிளுக்கு இடையிலான வேறுபாடு தொடர்கிறது என்று பஞ்சாபின் பிளாக்ஷா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கரண் பப்பர் கூறினார்.


விளிம்புநிலை சமூகங்களிடையே இந்தப் பாதிப்பு மேலும் அதிகரிக்கிறது: உதாரணமாக, ஒடிசாவின் கியோஞ்சர் மற்றும் அங்குல் மாவட்டங்களில் அதிகமாக வசிக்கும் ஜுவாங்ஸ் இனக்குழுவில், 85% பெண்கள் மாதவிடாயின்போது இன்னும் பழைய துணியையே நம்பியுள்ளனர். 2023-ஆம் மேற்கொள்ளபட்ட ஆய்வின்படி, சந்தைகளில் இருந்து நீண்டதூரம், விழிப்புணர்வு இல்லாமை மற்றும் அதிக செலவுகள் ஆகியவை பாதுகாப்பான மாற்றுகளுக்கு ஒரு தடையை உருவாக்குகின்றன. 71% பெண்கள் மாதவிடாய் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், மூன்றில் ஒருவருக்கு மட்டுமே சிகிச்சை கிடைக்கிறது. பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் மத அல்லது சமூக நிகழ்வுகளில் சேருவதைத் தடுக்கும் சமூகத் தடைகள் நிலைமையை மோசமாக்குகின்றன.


புறக்கணிப்பின் விலை


மோசமான மாதவிடாய் சுகாதாரம் என்பது தனியாக இல்லை. இது பள்ளி இடைநிற்றல் விகிதங்கள், பணியிடத்தில் பங்கேற்பு குறைதல் மற்றும் நாள்பட்ட இனப்பெருக்க சுகாதார பிரச்சினைகளுக்கு முக்கிய காரணியாக உள்ளது. மும்பையை தளமாகக் கொண்ட தன்னார்வ தொண்டு நிறுவனமான தஸ்ராவின் ஆய்வின்படி, இந்தியாவில் 23% பெண்கள் மாதவிடாய் காலம் தொடங்கியவுடன் பள்ளியைவிட்டு வெளியேறுகிறார்கள். போதுமான கழிப்பறைகள் அல்லது சுகாதாரப் பொருட்கள் இல்லாததே இதற்கு முக்கியக் காரணமாகும். இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் 4,00,000 கழிப்பறைகளைக் கட்டும் இலக்கை அரசாங்கம் அடைந்தாலும், இது ஒரு முழுமையான தீர்வை வழங்கவில்லை என்றும், முக்கிய நபர்கள் மற்றும் குழுக்கள் கழிப்பறைகளை தொடர்ந்து சுத்தம் செய்து, சரி செய்யப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அரசு சாரா நிறுவனத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


பொருளாதார காரணிகள் இந்த சவாலை மேலும் ஆழப்படுத்துகின்றன. "வரையறுக்கப்பட்ட, பெரும்பாலும் நிலையற்ற வருமானம் உள்ள ஒரு குடும்பத்திற்கு, தேர்வு இரண்டு வகையான மாதவிடாய் பட்டைகளுக்கு இடையில் இல்லை; அது ஒரு மாதவிடாய் பட்டை பொதியை வாங்குவதற்கும், காய்கறிகள் மற்றும் பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கும் இடையிலான தேர்வாகும். இது மாதவிடாய் பட்டைகளை அத்தியாவசியமற்ற ஆடம்பரப் பொருளாக ஆக்குகிறது," என்று பப்பர் கூறினார். பெண்களின் நிதி சுயாட்சியின்மை -- அவர்கள் பெரும்பாலும் குடும்பத்தில் உள்ள ஆண்களிடம் பணம் கேட்க வேண்டியிருக்கிறது -- வாங்குவதற்கு மேலும் சிரமங்களைச் சேர்க்கிறது.


கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவிற்கு இடையேயான வேறுபாடுகள் NFHS-5 (2019-21) அறிக்கையில் தெளிவாகத் தெரிகின்றன: இது, கிராமப்புற இந்தியாவில் இளம்பெண்களிடையே மாதவிடாய் காலத்தில் சுகாதாரமான பொருட்கள் (சானிட்டரி நாப்கின்கள், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட நாப்கின்கள், டாம்பான்கள் மற்றும் மென்ஸ்ட்ரூவல் கப்கள்) பயன்பாடு வெறும் 43% மட்டுமே இருப்பதாகவும், நகர்ப்புறங்களில் இது 68% ஆக இருப்பதாகவும், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையே குறிப்பிடத்தக்க இடைவெளியை வெளிப்படுத்துகிறது. சுகாதாரமான மாதவிடாய் பொருட்களைப் பயன்படுத்துவதில் கிராமப்புற-நகர்ப்புற இடைவெளி, மத்தியப் பிரதேசம் (36 சதவீத புள்ளிகள் இடைவெளி), ஒடிசா (26 சதவீத புள்ளிகள்), உத்தரப் பிரதேசம் (23 சதவீத புள்ளிகள்) மற்றும் ராஜஸ்தான் (21 சதவீத புள்ளிகள்) உள்ளிட்ட பல மாநிலங்களில் 20 சதவீத புள்ளிகளுக்கு மேல் உள்ளது, இது பிராந்திய வேறுபாடுகளை எடுத்துக்காட்டுகிறது.


மருத்துவக் கண்ணோட்டத்தில், கொச்சியிலுள்ள சன்ரைஸ் மருத்துவமனையில் கருத்தரிப்பு மருத்துவத்தில் நிபுணரும், மகப்பேறு மருத்துவருமான அபி கோஷி கூறுகையில், கேரளா போன்ற மாநிலங்களில், மாதவிடாய் சுகாதாரம் மோசமாக இருப்பது அரிதாக இருந்தாலும், உடல்நல அபாயங்கள் இன்னும் உள்ளன என்று குறிப்பிடுகிறார். "மகப்பேறு மருத்துவர்கள் அவ்வப்போது மட்டுமே பிறப்புறுப்பு ஒவ்வாமை [சானிட்டரி பேட்களால் ஏற்படக்கூடியவை] மற்றும் யோனி தொற்றுகள், பொதுவாக பாக்டீரியா அல்லது பூஞ்சை இயல்புடையவை, போன்றவற்றை எதிர்கொள்கின்றனர். இந்த இரண்டு வகையான தொற்றுகளை வேறுபடுத்துவது, சிகிச்சையின் தன்மையை தீர்மானிப்பதில் முக்கியமானது." மேலும், நீண்ட நேரம் சுத்தமில்லாத அல்லது ஈரமான துணியைப் பயன்படுத்துவது தீங்கு விளைவிக்கும் என்று அவர் கூறுகிறார். "இது ஒரு சூடான, ஈரப்பதமான சூழலை உருவாக்குகிறது, இது பூஞ்சைகள், குறிப்பாக ஈஸ்ட், அதிகமாக வளர சிறந்த நிலையை உருவாக்கி, பூஞ்சை தொற்றுக்கு வழிவகுக்கிறது."


செலவு, கிடைக்கும் தன்மை மற்றும் விழிப்புணர்வு போன்ற மூன்று தொடர்புடைய சிக்கல்களை பப்பர் எடுத்துக்காட்டுகிறார். இந்தப் பிரச்சினைகள் ஒன்றோடொன்று தொடர்புடையவை. மேலும், ஒன்றையொன்று மோசமாக்குகின்றன. குறைந்த விழிப்புணர்வு உணரப்பட்ட மதிப்பைக் குறைக்கிறது. இது தேவையைக் குறைக்கிறது. விநியோகத்தை பலவீனப்படுத்துகிறது மற்றும் அணுகலை இன்னும் கடினமாக்குகிறது.


மனித விலை மகத்தானது. தனி, செயல்பாட்டு கழிப்பறை இல்லாத, ஓடும் நீர்வசதி மற்றும் முறையான அப்புறப்படுத்தல் அமைப்பு இல்லாத பள்ளியில் மாதவிடாய் ஏற்பட்டால் ஒரு பெண் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கிறார். சிறிய பிரச்சனைகளுக்குக் கூட நம்பிக்கை இழக்கிறார். அந்தப் பெண்ணிற்கு எளிய தீர்வு வீட்டிலேயே இருப்பதுதான் என்று பப்பர் மேலும் கூறுகிறார்.


பெண்கள் ஒவ்வொரு மாதமும் 4 முதல் 5 நாட்கள் பள்ளிக்குச் செல்லத் தவறும்போது, அவர்கள் படிப்பில் 25% பின்தங்குகிறார்கள். மேலும், பலர் படிப்பை பாதியில் நிறுத்துகிறார்கள். இது அவர்களின் எதிர்கால வருமானத்தைப் பாதிக்கிறது மற்றும் அவர்களை வறுமையில் வைத்திருக்கிறது. தேசத்தைப் பொறுத்தவரை, இது நமது பெண் தொழிலாளர் பங்களிப்பை நசுக்குகிறது. மேலும், மனித மூலதனத்தின் ஒரு பெரிய தொகுப்பைப் பயன்படுத்தாமல் விட்டுவிடுகிறது. இது நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் குறைக்கிறது என்று பப்பர் கூறுகிறார்.



சுழற்சியை உடைத்தல்


மாதவிடாய் சுகாதாரம் (menstrual health) ஒரு பொதுப் பிரச்சினையாக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மனித உரிமைகள் பிரச்சினையாகவும், மாதவிடாய் வறுமை பொருளாதார இடைவெளிகளை விரிவுபடுத்துவதற்கும் பங்களிக்கிறது. 2011-ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம் மாதவிடாய் சுகாதாரத் திட்டத்தைத் தொடங்கியது. இதன் மூலம் மாதவிடாய் பட்டைகளை விநியோகிக்கவும், கல்வி விழிப்புணர்வுத் திட்டங்களை ஏற்பாடு செய்யவும், பட்டைகளை பாதுகாப்பாக அகற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவும் முடிந்தது. இருப்பினும், கோவிட்-19 தொற்றுநோயால் மாதவிடாய்ப் பொருட்களின் விநியோகம் கணிசமாகப் பாதிக்கப்பட்டது.


அசாம் மற்றும் திரிபுராவில் இந்தியாவின் மாதவிடாய் சுகாதாரத் திட்டத்தின் சமீபத்திய மதிப்பீட்டின்படி, 2017 முதல் 2021 வரை தொடர்ந்து மாதவிடாய் பட்டைகள் விநியோகம் செய்யப்பட்ட பகுதிகளில் சுகாதார நடைமுறைகள் அதிகரித்துள்ளன. 15–19 வயதுடைய பெண்கள் அதிகமாக இப்போது மாதவிடாய் பட்டைகளைப் பயன்படுத்துகின்றனர். மாதவிடாய் பட்டை பயன்பாடு 10.6% அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த பயன்பாடு 13.8% அதிகரித்துள்ளது.


இந்தியாவில் மாதவிடாய் சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் மாதவிடாய் பற்றிய தவறான எண்ணங்கள் பள்ளி மாணவிகளை வகுப்பறைகளுக்கு வரவிடாமல் எவ்வாறு தடுக்கிறது?


மாதவிடாய் குறித்த பொருட்களை வழங்கும் குஜராத்தை தளமாகக் கொண்ட தொடக்க நிறுவனமான மென்ஸ்ட்ரூபீடியாவின் நிர்வாக இயக்குநரும் இணை நிறுவனருமான அதிதி குப்தா, கல்வி மாற்றத்திற்கான மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் என்று கூறுகிறார். கல்வி மற்றும் விழிப்புணர்வுதான் இதைச் செய்வதற்கான வழியாகும். பெண் வளர்ந்து தாயாகும்போது, தன் குழந்தைகளுக்கு நன்றாகக் கல்வி கற்பித்து கொடுப்பாள். இது களங்கம் மாதவிடாய் பற்றிய தவறான எண்ணங்கள் மறைத்துவிடும் என்று அவர் கூறுகிறார். மென்ஸ்ட்ரூபீடியா அனைத்து இந்திய பிராந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட சித்திரக்கதை புத்தகங்களுடன் (comic books) 14 மில்லியன் சிறுமிகளைச் சென்றடைந்துள்ளது. இது அணுகலை உறுதி செய்கிறது.


காஷ்மீரின் தொலைதூரப் பகுதிகளில், பெண்களுக்கு மாதவிடாய் பற்றிக் கற்றுக்கொடுக்கவும், அவர்களுக்கு மாதவிடாய் பட்டைகள் வழங்கவும் We the Change என்ற அரசு சாரா நிறுவனத்துடன் நாங்கள் இணைந்து பணியாற்றுகிறோம்" என்கிறார் குப்தா. ஆனால், பட்டைகள் வழங்கல் இன்னும் பலவீனமாக உள்ளது என்றும், சமூகத் தடைகள் விரைவாக மாறாது என்றும் அவர் கூறுகிறார். பெண்களின் ஆரோக்கியம் இன்னும் ஒரு தடையாகவே உள்ளது. பருவக் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் தணிக்கை செய்யப்படுகின்றன. மேலும், அவை நன்றாக எழுதப்படவில்லை. இவை அனைத்தும் மனப்பான்மையை நேரடியாகப் பாதிக்கின்றன.


டாக்டர் கோஷி, நகர்ப்புற முன்னேற்றத்திலிருந்து பெறப்படும் பாடங்களை ஊரக பகுதிகளில் பயன்படுத்த முடியும் என்று கருதுகிறார். முதலாவதாக, பள்ளிகளில் மகளிர் மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார மருத்துவர்களால் நடத்தப்படும் வழக்கமான இளம் பருவத்தினர் மற்றும் பாலியல் சுகாதாரக் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும். இந்த அமர்வுகள் மாதவிடாய் ஆரோக்கியத்தைப் பற்றி விவாதிப்பதிலும் பொருத்தமான தீர்வுகளைத் தேடுவதிலும் பெண்கள் அதிக நம்பிக்கையுடன் உணரும் ஒரு ஆதரவான சூழலை உருவாக்க உதவுகின்றன. இரண்டாவதாக, சுகாதாரப் பட்டைகளை அகற்றுவதன் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த விழிப்புணர்வின் வளர்ச்சி, மக்கும் பட்டைகள், மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி பட்டைகள் மற்றும் மாதவிடாய் கோப்பைகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று வழிகளின் பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க உயர்வுக்கு வழிவகுத்துள்ளது.



Original article:

Share: